Home Blog Page 2719

பௌத்த மதபீடங்களே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு தடையாக உள்ளன- மாவை

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்பட்டு இருக்கின்றமைக்கு மகாநாயக்க தேரர்களின் தலையீடே முழுக் காரணம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகளுக்கான அரச நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

நாட்டில் இரண்டு தேசியக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது.இந்த அரசின் ஊடாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

ஆனால் இந்த அரசில் அங்கம் வகித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த தரப்புடனும் கலந்தாலோசிக்காது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை திருட்டுத் தனமாக பிரதமராக்கி அரசியல் சூழ்ச்சியை மேற்கொண்டார்.

இதனால் பல வேலைத்திட்டங்கள் தடைப்பட்டன. அதிலும் முக்கியமாக இனப் பிரச்சினைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பு பின்னோக்கி நகர்ந்தது.அதுமட்டுமல்லாது மகாநாயக்க தேரர்கள் புதிய அரசியலமைப்புக்கு முழுக்க முழுக்க தடையாக இருந்தனர். இதனாலேயே அரசியலமைப்பு உருவாவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கில் அபிவிருத்தி பணிகள் பின்னோக்கி நகர்ந்தன.வேலை வாய்ப்பு,காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் காலதாமதமாகியுள்ளன. இந்த அரச நியமனங்கள் கூட உங்களுக்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதியின் செயற்பாட்டினால் காலதாமதம் ஆகிவிட்டது.

எனினும் தற்போது உங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு காரணம் மைத்திரியின் செயற்பாட்டுக்கு எதிராக போராடியாமையினால் தான் என்றார்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளில் வாய் திறக்காத கூட்டமைப்பு – ஜயசேகர எம்.பி

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் வாய்திறக்காது மௌனம் காக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதைச் செய்யப்போகிறதென? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொது வேட்பாளரையன்றி, தேசிய வேட்பாளரையே களமிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு கருத்துத் தெரிவித்த அவர்;

ஜனாதிபதி வேட்பாளர் நாட்டின் மீது பற்றுள்ளவராகவும் நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் பொறுப்புடன் செயற்படுபவராகவும், தேசிய வளங்களை விற்காதவராகவும் இருப்பது அவசியம்.

நிறுத்தப்படும் வேட்பாளர், அரசியல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவன்றி சகல கட்சிகளுக்கும் தலைமைத்துவம் வகிப்பவராகவும் சிறந்த நோக்கம் கொள்கையுடையவராக இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் தெரிவித்த அவர்: வட,கிழக்கு மக்களுக்காகவே மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டது. எனினும், வட, கிழக்கு மாகாண சபையின் காலம் நிறைவுற்றுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அது தொடர்பில் வாய் திறக்காமல் இருப்பது விந்தையாக உள்ளது என்றார்

வடக்கு ஆளுநர் – IOM பிரதிநிதிகள் சந்திப்பு; இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் பற்றி பேச்சு

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் சரத் டாஷ் மற்றும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது..

இந்த சந்திப்பின்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக 6.5 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் தமது அமைப்பிடம் உள்ளதாகவும், இதனை முன்னெடுக்கும்போது எதிர்பாராத தாமதங்கள் ஏற்படுவதால் அகதிகளை அழைத்து வருவதில் தாமதங்கள் தொடர்ந்தும் நிலவுவதாக தெரிவித்த திரு.சரத் டோஷ், இதற்கு உதவுமாறு ஆளுநர் அவர்களை கேட்டுக்கொண்டார்.

இதன்போது ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுடனும் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை IOM நிறுவனம் மேற்கொள்ள உதவிபுரிவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, அகதிகளாக இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் மீண்டும் தமது இடங்களுக்கு திரும்புவதற்கு முழுமையாக உரிமை உள்ளதென்றும் அவர்கள் மீண்டும் இலங்கை திரும்பும்போது அவர்களுக்கு தேவையான வசதிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த ஆளுநர், மீண்டும் இலங்கையில் அவர்கள் அகதிகளாக வாழ ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கில் விமான நிலையங்கள் தரமுயர்த்தப்படுகின்றன

பலாலி, மட்டக்களப்பு, இரத்மலானை விமான நிலையங்களை வணிக விமான சேவைகளை நடத்துவதற்காக அவற்றை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன்கீழ் மட்டக்களப்பு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யவும், இரத்மலானை விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக வசதி செய்வதற்கும், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, பலாலி விமான நிலையத்தில் இருந்து, இந்திய துணைக் கண்டத்துக்கான பிராந் திய விமான சேவைகளை வரும் செப்ரெம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்  சுமார் 70 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்களைத் தரையிறக்கும் வகையில், பலாலி விமான நிலைய ஓடுபாதை தரமுயர்த்தப்படும். இங்கிருந்து முதலாவது விமானம் செப்ரெம்பர் மாதம் சேவையை ஆரம்பிக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளோம்.

தென்னிந்தியாவில் சென்னை போன்ற இடங்களுக்கான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்காக நாம் பணியாற்றிக் கொண் டிருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.பலாலி விமான நிலையத்தை சுமார் 110 மில்லியன் டொலர் செலவில் தரமுயர்த்தும் பணிகள் கடந்த மாத தொடக்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தியின் மூலம் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளவும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை நீர்த்துப்போகச் செய்யவும் சிறீலங்கா அரசு எடுத்துவரும் முயற்சியில் இதுவும் ஒன்றாகும் என கருதப்படுகின்றது.

 

சிறைச்சாலை அதிகாரியை கைது செய்ய பிடியாணை

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது சிறைச்சாலையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரியாக இருந்த இமதுவகே இந்திக சம்பத் என்பவரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலப்பகுதியில் 8 கைதிகளை படுகொலை செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 2012ஆம் ஆண்டு நவம்பர் 09ஆம் திகதி இடம்பெற்ற மோதல் நிலையை கட்டுப்படுத்த 8 கைதிகளை சுட்டு படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ, முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா, சிறைச்சாலை புலனாய்வு அதிகாரி இமதுவகே இந்திக சம்பத் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறீலங்காவில் சிங்களக் கைதிகள் தமிழ் கைதிகள் மீது காலம் காலமாக சிறை அதிகாரிகளின் உதவிகளுடன் தாக்குதல்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1983 ஆம் ஆண்டும் வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இனப்படுகொலையில் 37 தமிழ் கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆனால் சிறுபான்மை மக்கள் கொல்லப்படும் போது சிறீலங்கா அரசு அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனல் தற்போது அனைத்துலக அழுத்தங்களை திசை திருப்ப சிறீலங்கா அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

வடபகுதியை குறிவைத்து சிங்களக் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை,  நகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் யாழ். அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

அங்கு நடைபெற்ற ஒன்றுகூடலில் உரையாற்றிய சுசில் பிரேமஜயந், மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இரணைமடு விலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், வடமாண முதலமைச்சராக இருந்த  விக்னேஸ்வரன் பதவிக்கு வந்த பின்னரே இது இடை நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். தற்போதுள்ள அரசாங்கம் ஹோட்டல்களையும், கட்டிடங்களையும் நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், வீதிகள் காப்பற் வீதிகளாக மாற்றப்பட்டதாகவும், மக்களுக்கான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா பேசும் போது, மகிந்த ராஜபக்ஸவின் காலத்திலேயே நாட்டில் உள்ள 25,000 கிராமங்களிலும் சென்று அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைப்போம் என தெரிவித்தார். அத்துடன் நாம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தது நமது கட்சி உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து மக்களுக்கான அடிப்படைப் பிரச்சினைகள், தேவைகள் குறித்து கலந்துரையாடுவதற்கேயாகும் என்றார்.

ppf jaffna 2 வடபகுதியை குறிவைத்து சிங்களக் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம்சிறிலங்கா பொதுஜன  முன்னணி யாழ். மாவட்ட காரியாலத்தில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில் மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என 200இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சிங்களக் கட்சிகளின் இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் தமிழ்க் கட்சிகளின் முக்கியத்துவத்தை குறைக்கும் தகமையுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிரான பொலிசாரின் வழக்கு தள்ளுபடி

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பிரதேச சபைக்கு சொந்தமான குழாய் கிணற்றிலிருந்து இராணுவத்தினர் நாளாந்தம் பல லட்சம் லீற்றர் நீரை இராணுவத்தினர் எடுத்துச் செல்கின்றனர். இதனால் அயலிலுள்ள கிணற்றிலுள்ள நீர் மாசடைவது மற்றும் குடிநீரில் மாற்றங்கள் ஏற்படுவது தொடர்பாக மக்கள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தவராசா அமலனிடம் மக்கள் முறையிட்டனர்.

இதனையடுத்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குறித்த பகுதியில் அமைதிக்கு பங்கம் விளைவிக்க முற்பட்டதாக தெரிவித்து பிரதேச சபை உறுப்பினர் தவராசா அமலன் மீது முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிசார் திட்டமிட்ட வகையில் வழக்கை பதிவு செய்து முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

31.07 முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ். லொனின்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகளான கணேஸ்வரன், பிரபல சட்டத்தரணி கங்காதரன் உட்பட பலரும் ஆஜராகியிருந்தனர்.

இந்த சட்டத்தரணிகள், இது மக்களுடைய குறைபாடுகள் தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட விடயமே தவிர இதில் எந்தவிதமான அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளும் இல்லை என்பதை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனால் நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

இது குறித்து கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தவராசா அமலன் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான திட்டமிட்ட இராணுவம் பொலிசாரின் அடக்குமுறை செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களிலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் தாங்கள் ஈடுபடும் போது ஏற்படுத்தக் கூடாது என்ற விடயத்தை தெரிவித்தார்.

 

 

 

 

 

 

இலங்கையில் உணவுப் பொருட்களில் போர்மலின்

இலங்கையில் பாவிக்கப்படும் உணவுப் பொருட்களில் சடலங்களுக்கு நறுமணமூட்டும் போர்மலின் பாவிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பாவனை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற்பயிற்சி திறனாற்றல் இராஜாங்க  அமைச்சர் புத்திஹபத்திரண தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் நாட்டிலுள்ள மலர்ச்சாலைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மலர்ச்சாலைகளுக்கு அளவாக போர்மலினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக போர்மலின் விநியோகிக்கப்படுமாயின், விநியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

 

இங்கிலாந்து இராணியை கடற் கொள்ளைக்காரியாக சித்தரிக்கும் ஓவியங்கள்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கலாசார மையத்தில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் 40 வகையான கேலி சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்றதாக கூறி ஈரானின் சரக்கு கப்பலை ஜிப்ரால்டர் ஜலசந்தி அருகே இங்கிலாந்து கடற்படை கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறைபிடித்தது.

இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஈரானின் எண்ணெய் கப்பலை கைப்பற்றிய இங்கிலாந்தை சாடும் விதமாக தலைநகர் டெஹ்ரானில் உள்ள கலாசார மையத்தில் ‘ராணி கடற்கொள்ளைக்காரர்’ (பைரேட்ஸ் ஆப் தி ராணி) என்ற தலைப்பில் கேலி சித்திரங்களுக்கான கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது.

இதில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் 40 வகையான கேலி சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. ஏராளமான மக்கள் இந்த காண்காட்சிக்கு வந்து, கேலி சித்திரங்களை பார்த்து ரசித்து செல்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏமனில் 40 படையினர் பலி

ஏமனில் ராணுவ தளம் மற்றும் காவல் நிலையத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அரசு படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதனால் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் அவ்வப்போது கார் குண்டு வெடிப்பு, ஏவுகணை தாக்குதல் போன்ற  செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அந்நாட்டின் ஏடேன் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் கிளர்ச்சியாளர்கள் திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் வீரர்கள் பலர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதே பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு நிரப்பிய காரை வெடிக்க செய்தனர். இந்த இரு பயங்கரவாத தாக்குதல்களிலும் சிக்கி மொத்தம் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.