இத் தேர்தல் சிங்கள தேசத்துக்கான தேர்தலாக இருக்கிறது. ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தின் மீது திணிக்கப்படுகின்ற ஒன்றாகவே இத் தேர்தல் காணப்படுகின்றது
சிறிலங்கா அதிபர் தேர்தல் களத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவை மட்டும் நாம் குற்றவாளியாகப் பார்க்கவில்லை. இனப்படுகொலைக் குற்றவாளியாக சிறிலங்கா அரசினையே(state) நாம் பார்க்கின்றோம். இனப்படுகொலை அரசின் முகமாக ஆட்சிபுரிந்தவர்கள் அனைவருமே இனப்படுகொலையாளிகளாக உள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைத்தீவில் சிறிலங்கா அதிபருக்கான தேர்தல் களம் பரப்பரப் படைந்துள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன எனக் கேள்வி எழுப்பியபோது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா அதிபருக்கான தேர்தல் என்பது சிங்கள தேசத்துக்கான தேர்தலாகவே இருக்கின்றது. ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தின் மீது திணிக்கப்படுகின்ற ஒன்றாகவே இத் தேர்தல் காணப்படுகின்றது. இப்பார்வைநிலையில் தான் தமிழர் தேசத்தின் இறைமையினை வென்றடைவதற்கான தந்திரோபாயங்களின் அடிப்படையில் சிறிலங்காவின் ஒவ்வொரு தேர்தல்களையும் நாம் அணுகி வருகின்றோம்.
உடனடி சலுகை அரசியலுக்கு அகப்பட்டு முடிவுகளை எடுக்காமல், நீண்ட காலத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு நன்மை தருகின்ற முடிவுகளை நோக்கியே நமது நிலைப்பாடுகள் அமைகின்றன எனவும் இவ் விடையத்தில் இறுதி நிலைப்பாட்டினை உரிய நேரத்தில் எமது அரசவை விவாதித்து முடிவெடுக்கும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் வெளியிட் டுள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,
போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபரை இராணுவத் தளபதியாக நியமித்தமை தமிழர்களை அவமதிப்பதாகும்.இது எங்களுக்கு அதிர்ச்சியை தருகிறது என்றுள்ளது.
சிறீலங்கா அரசு சில்வாவின் நியமனத்தை நிறுத்த வேண்டும் இல்லை எனில் சிறீலங்காவின் கூட்டணி நாடுகள் சில்வாவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான தடைகளை ஏற்படுத்த வேண்டும்.அவருக்கு நுளைவு அனுமதி வழங்குவதை தடை செய்ய வேண்டும் என அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான நடவடிக்கை அமைப்பு இன்று (19) வெளியிட்டுள்ள அதன்அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா அவர்கள் லெப். ஜெனரல் சவீந்திர சில்வாவை சிறீலங்கா இராணுவத் தளபதியாக நியமனம் செய்தது என்பது சிறீலங்காவின் பெயரை அதிகளவில் களங்கப்படுத்தும் செயல். இது அவர்மீதுள்ள போர்க்குற்றச் சாட்டுக்கள்மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யும் நிலையை இல்லாது செய்துவிடும்.
கடந்த ஜனவரி மாதம் நாம் 137 பக்க ஆவணம் ஒன்றை அவருக்கு எதிராக வெளியிட்டிருந்தோம் அதில் அவர் செய்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விபரங்கள் உள்ளன. அதில் உள்ளசான்றுகள் அவரைத் தண்டிக்கப் போதுமானவை.
ஆனால் சிறீலங்கா அரசு அதனை மதிக்காது அவருக்கு பதவி உயர்வு வழங்கியிருந்தது.
2009 ஆம் ஆண்டுமனித உரிமைகளை மதிக்காது பல நூறு தமிழ் மக்களை இராணுவத்தாக்குதல் மூலம் சில்வா படுகொலை செய்திருந்ததாக அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமானநடவடிக்கை அமைப்பின் பணிப்பாளர்ஜஸ்மின் சூக்கா தெரிவித்திருந்தார்.
1980 களில் தென்னிலங்கையில் இடம்பெற்ற ஜே.வி.பி கலவரத்தின் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் அன்றைய கஜபா படையணியின் தளபதியுமான கோத்தபாயா ராஜபக்சாவின் கீழ்பணியாற்றிய சவீந்திர சில்வா ஏராளமான சிங்கள இளைஞர்களை படுகொலை செய்திருந்தார்.
ஆனால் அவர் தண்டிக்கப்படவில்லை.ஆனால் இவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் சிறீலங்காவில் படுகொலைக் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கும் என ஜஸ்மின் மேலும் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த நியமனம் சிறீலங்காஇராணுவத்திற்கும் அமெரிக்கபடையினருக்கும் இடையில் உள்ள பயிற்சி நடவடிக்கைகளை பாதிப்பதுடன் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் தகமையையும் சிறீலங்கா இழக்கும்.
சிறீலங்கா அரசு சில்வாவின் நியமனத்தை நிறுத்த வேண்டும் இல்லை எனில் சிறீலங்காவின் கூட்டணி நாடுகள் சில்வாவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான தடைகளை ஏற்படுத்த வேண்டும்.அவருக்கு நுளைவு அனுமதி வழங்குவதை தடை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி-பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சி.சிவரூபன் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே சிறிலங்கா இராணுவத்தினர் இவரை இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபன், பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மருத்துவர் சின்னையா சிவரூபன் (வயது – 41) சாவகச் சேரியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா இராணுவத் தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப் பட்டுள்ளது குறித்து, ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் நம்பகமானவையாகும்.இந்த நியமனம் சிறிலங்காவின் அனைத்துலக நற்பெயர் மற்றும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமானது” என்று கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என, அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று ஓய்வுபெற்ற நிலையில், இன்று 23 ஆவது இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை, நடந்த நிகழ்வில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கான நியமனக் கடித்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.
இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, போர்க்குற்றங்களை இழைத்தார் என ஐ,நா மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளால், குற்றம்சாட்டப்பட்டு வருகின்ற நிலையில், அவர் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பாரிய இனப்படுகொலை நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நாம் இந்த பத்து வருடங்களில் எந்த நிலையை அடைந்துள்ளோம் என்ற மீள் ஆய்வுகளை தமிழ் மக்களும், அமைப்புக்களும் பல தளங்களில் மேற்கொண்டிருந்தன.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற ஆயுத மௌனப்பின் பின்னர் எமது போராட்டம் வேறு வடிவத்தில் பலம் கொண்டு நகரும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் இருந்தது.
ஒரு இனத்தின் பேரழிவு என்பது அந்த இனமக்களை ஒரு அணியில் இணைக்கும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்லாது, உலகத்தின் எதிர்பார்ப்பும் அவ்வாறானதாகவே இருந்தது. கிட்லரின் நடவடிக்கைக்கு பின்னர் யூதர்களின் ஒருங்கிணைவும், ஜேர்மனியின் ரஸ்யா நோக்கிய படை நகர்வின் பின்னர் இரும்புத்திரையாக மாறிய சோவியத்து ஒன்றியத்தின் ஒற்றுமையும் வரலாறு எமக்குத் தந்த பாடங்கள்.
ஆனால் நாம் எதிர்பார்த்தது இடம்பெறவில்லை, எதிரியின் எதிர்பார்ப்பே வெற்றிகரமாக நகர்ந்தது. புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கடந்த 10 ஆண்டுகள் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் ஆய்வுகளின் முடிவு இது. அதாவது தமிழ் இனம் சிதறிப்போயுள்ளது. புலத்திலும், தாயகத்திலும் அது நிகழ்ந்துள்ளது, அதன் விளைவாக நாம் பலவீனமடைந்துள்ளோம்.
எனவே எதிர்வரும் 10 ஆண்டுகளில் நாம் விரைவாக நகரவேண்டிய கட்டாயம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதற்கு தேவை சிறீலங்காவின் தேசிய அரசியலிலும், அனைத்துலக இராஜதந்திர நகர்வுகளிலும் தமிழ் இனம் மேற்கொள்ளும் முடிவுகளும் நகர்வுகளுமே.
இந்த நிலையில் தான் சிறீலங்காவில் நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டிய தீர்மானம் முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில் சிறீலங்காவின் அரசியலில் பூகோள அரசியல் நலன்சார் நாடுகளின் தலையீடுகள் அதிகம்.
இந்த பூகோள அரசியல் சக்திகளின் துணையுடன் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலையில் சிக்கிய தமிழ் இனம் தற்போது அதே வலையமைப்பின் ஊடாகத் தான் வெளிவரவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஏனெனில் போரின் போது மட்டுமல்லாது போரின் பின்னரும் மேற்குலகம் சிறீலங்காவில் தனது ஆதிக்கத்தை செலுத்த முற்பட்டு வருகின்றது.
போர் நிறைவடைந்தவுடன் பொன்சேக்காவை பயன்படுத்தி மேற்குலகம் ஒரு இராணுவப்புரட்சிக்கு திட்டமிட்டது ஆனால் அதனை அறிந்த இந்தியா மகிந்தாவை காப்பாற்ற தனது இராணுவத்தை நள்ளிரவில் தயார்படுத்தியதால் திட்டம் கைவிடப்பட்டது. சிங்களவர்களின் தலைகள் பல தப்பின.
அதேசயம், 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் மகிந்தா பெரு வெற்றியீட்டியதுடன், நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 18 ஆவது திருத்தச்சட்டத்தை 2010 ஆம் ஆண்டு ஏப்பிரலில் கொண்டு வந்து எத்தனை தடவை வேண்டுமானாலும் தான் அரச தலைவராக இருக்கலாம் எனவும், சுதந்திரமாக செயற்பட்ட அரச நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டிலும் கொண்டு வந்தார். பொருளாதார ரீதியாக சீனா தனக்கு பக்கபலமாக இருக்கும் என்பது அவரின் அசையாத நம்பிக்கை.
ஆனால் மேற்குலகம் ஓய்ந்துபோகவில்லை 2010 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரையிலுமான காலத்தில் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் என பல தகவல்கள் வெளிவரத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. பல தீர்மானங்கள் வந்தன, புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளையும், அதனை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் மேற்குலக வல்லுனர்களும் ஊடகவியலாளர்களுமே மேற்கொண்டு வந்தனர்.
உதாரணத்திற்கு சனல் 4 தொலைக்கட்சி, பிற்றர் சார்க்ஸ், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சன்டே ரைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றிய காலம் சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் மேரி கெல்வின் என நாம் இங்கு பலரைக் குறிப்பிடலாம்.
ஊடகப்பிரிவு பணியாளர் இசைப்பிரியா தொடர்பான போர்க்குற்ற ஆதாரங்களையும் சனல் 4 இன் ஆசிய பிரிவு ஊடகவியலாளர் ஜொனார்தன் மில்லர் 2013 ஆம் ஆண்டு வெளிக்கொண்டந்திருந்தார்.
போரின் பின்னரான தேடுதல் மற்றும் துப்பரவு என்ற போர்வையில் சிறீலங்கா படையினர் பரிய அளவிலான படுகொலைகளை மேற்கொண்டதாகவும், அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பலர் சரணடைந்தவர்களே எனவும் அனைத்துலக போர்க் குற்றவியல் வழக்கறிஞர் யூலியன் நோவல் தெரிவித்திருந்தார்.
மேலும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீதான தடையை கூட மகிந்தாவின் காலத்தில் நீக்க மறுத்த ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவின் பொருளாதாரத்தை ஒரு தேக்க நிலையில் தான் வைத்திருந்தது.
2015 ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்தாவின் கட்சியை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து உடைத்தன சிறீசேனா என்ற பகடைக்காய் உருவாக்கப்பட்டார்.
எனினும் தனது சகோதரர்களின் உதவியுடன் இராணுவப்புரட்சி ஒன்றிற்கு மகிந்தா தயாரானார், அதற்காக சிறிலங்கா இராணுவத்தின் கஜபா றெஜிமென்ட தயார்படுத்தப்பட்டது, அலரிமாளிகையை விட்டு வெளியேற மறுத்தார், ஆனாலும் அமெரிக்கா விடவில்லை, அப்போது அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளராக இருந்து ஜோன் ஹெரியிடம் இருந்து வந்த தொலைபேசி மிரட்டலைத் தொடர்ந்து மகிந்தா அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.
நல்லாட்சி என்ற போர்வையில் மைத்திரிபால சிறீசேனாவும், ரணிலும் கைகோர்த்தனர், மகிந்தாவின் 18 ஆம் திருத்தச்சட்டம் ஒழிக்கப்பட்டது, 19 ஆவது திருத்தச்சட்டம் 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
அதன் மூலம் அரச தலைவரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பிரதமரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன. ஒருவர் இரு தடவைகள் தான் அரச தலைவராக வர முடியும் என்ற சட்டமும் கொண்டுவரப்பட்டது.
இதன் முலம் முதலில் சீனாவை வெளியேற்றுவது பின்னர் தாம் பங்குபிரிப்பது என்பதே அமெரிக்க – இந்திய கூட்டு முன்னனியின் அன்றைய திட்டம். ஆனால் மகிந்தா சீனாவுடன் மேற்கொண்ட 99 ஆண்டு கால அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தம் சீனாவை வெளியேற்ற முடியாது என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்தியது.
அதற்கு இணையாக திருமலைத்துறைமுகத்தை அமெரிக்கா ரணிலிடம் கோரியது. திருமலைத்துறைமுகத்தை வைத்து சில நன்மைகளை அடைய சிங்களம் திட்டமிட்டது, எனவே அது சிங்களவர்களின் பிரதேசம் என காண்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை ரணில் அரசு முன்னனெடுத்தது.
எனவே கண்ணியா நீரூற்று நிலைகளை சிங்களம் ஆக்கிரமித்துக் கொண்டது. ஆனால் இதனை மேப்பம் பிடித்த இந்திய விழித்துக் கொண்டது.
அமெரிக்காவின் திருமலைத்துறைமுகக் திட்டத்தை தவிர்ப்பதற்கு மீண்டும் மகிந்தாவை பயன்படுத்தியது, அதன் தாக்கமே கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி. ஆனால் திட்டம் தோல்விகண்டது.
ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் தோல்வியை சீர் செய்ய இந்தியாவும், தனது படைத்துறை உடன்படிக்கையில் எற்பட்ட பின்னடைவுகளை சீர்செய்வதற்கு அமெரிக்காவும் தற்போது முயற்சிக்கின்றன. எனவே தான் கோத்தபாயா மீது அவசரமான வழக்குகள் தொடுக்கப்பட்டன, அவர் குடியுரிமையை இழந்துள்ளதாக அறிவித்துள்ள போதும், அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை திணைக்களம் அதனை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் போட்டியில் குதித்துள்ளார்.
கோத்தபாயா வெற்றியீட்டினால் அமெரிக்கா முதலில் நட்புக் கரத்தை நீட்டும், அதற்கான முன்முயற்சியாகவே அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இராஜதந்திரிகள் மகிந்தாவை சந்தித்துள்ளனர். அமெரிக்காவின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தால்?
போர்க்குற்ற ஆதாரங்களுடன் மேற்குலகம் களம் இறங்கும். கோத்தபாயாவை அடிபணிய வைப்பதற்கோ அல்லது தண்டிப்பதற்கோ அவர்களிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
அனைத்துலக மன்னிப்புச்சபை, அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு, அனைத்துலக எல்டேர்ஸ் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு என பல அமைப்புகள் மேற்குலகம் சார்பானவை. அவர்களை புறம்தள்ள சிறீலங்காவால் முடியாது.
எனவே பொருளாதாரத் தடையை ஏற்படுத்தவோ அல்லது போர்க்குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்கள் மீது பயணத்தடை விதிக்கவோ அவர்களால் முடியும். சீனா அல்லது ரஸ்யா தமது வீட்டோ அதிகாரம் மூலம் அதனை தடுக்கலாம் எனினும் அது சந்தேகமே ஏனெனில் முன்னாள் யூகோஸ்லாவாக்கிய அதிபரின் விடயத்தில் அவர்கள் அதனை பயன்படுத்தவில்லை.
அதற்கான காரணம் போர்க்குற்றம், ஜனநாயக விழுமியங்களை மீறும் செயற்பாடுகள் என வைக்கப்படும் சான்றுகளின் மீது பிரயோகிக்கப்படும் வீட்டோ அதிகாரம் அந்த நாடுகளின் நன்மதிப்பை குறைத்துவிடும்.
சரி அவ்வாறு அவர்கள் பயன்படுத்தி சிறீங்காவைக் காப்பாற்றினலும் அது அமெரிக்காவை மேலும் சீற்றம் கொள்ளவே செய்யும். எனவே கோத்தபாயாவின் வெற்றி என்பது பல திருப்பங்களுக்கு வழிவகுக்கும் என்பதுடன் சிங்கள மக்களுக்கு அனுகூலமானதல்ல.
ரஷ்யாவில், விமானத்தை சோளக்காட்டில் தரையிறக்கி அதிலிருந்த 233 பேரை பத்திரமாக மீட்ட விமானி மற்றும் துணை விமானிக்கு அந்நாட்டின் உயரிய விருதினை ரஷ்யாவின் சனாதிபதி விளாடிமிர் புதின் வழங்கினார்.
அண்மையில், மாஸ்கோ அருகிலுள்ள சுகோவ்ஸ்கி விமான நிலையத்திலிருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் நோக்கி புறப்பட்டு சென்ற விமானம் மேலெழும்பிய இரு நிமிடத்திலேயே, பறவைகள் கூட்டம் மோதி அதன் பொறியியல் பகுதி இரண்டும் அடுத்தடுத்து கோளாறானது.
இதனைத் தொடர்ந்து விமானத்திலிருந்து புகை வெளியேற தொடங்கவே, விமானிடமிர் யுசுபோவ், துணை விமானி உதவியுடன் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை சோளக்காட்டில் பத்திரமாக தரையிறக்கினார்.
இதில் விமானத்தில் பயணித்த சிறுவர்கள் உட்பட 70 பேர் லேசான காயமடை ந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், விமானத்திலிருந்த 7 விமான ஊழியர்கள் மற்றும் 226 பயணிகளின் உயிரை காத்த விமானியை பலரும் ரஷ்யாவின் ஹீரோ என பாராட்டினர், இருப்பினும் அவர் அதனை தன்னடக்கத்துடன் தவிர்த்தார்.
இந்நிலையில், பொறியியல் பகுதி பழுதான விமானத்தை புதிக்கூர்மையுடன் செயல்பட்டு சோளாக்காட்டில் தரையிறக்கி விபத்தை தவிர்த்த விமானி டமிர் யுசுபோவ் மற்றும் துணை விமானி ஜார்ஜி முர்சின் ஆகியோருக்கு ‘த ஹூரோ ஆப் ரஷ்யா’என்ற நாட்டின் உயரிய விருதினை சனாதிபதி விளாடிமிர் புதின் வழங்கி பாராட்டினார்.
மேலும் அவர்களுடன் பயணித்த விமான குழுவினர் 5 பேருக்கும் ‘ஆர்டர் ஆப் கரேஜ்’ என்ற விருதினை வழங்கி புதின் கவுரவித்தார்.
50 ஆண்டுகளாக நோம் சொம்ஸ்கி, எம்மை குத்தும் கேள்விகளை கேட்டு, அமெரிக்காவின் சோக்கிரடீஸ் ஆக இருந்து வருகிறார். வேதனையை அனுபவிக்கும், இப்போது பேராபத்தில் இருக்கும், உலகமென்னும் கிராமத்தையே இவர் கேள்வி கேட்கிறார்.
பிரச்சனைகளில் மூழ்கிய உலகம், பல ஆண்டுகளாக எம்மை எச்சரித்து வந்த சொம்ஸ்கியின் கதவையே தேடிப்போகிறது. இந்த உலகத்திற்கு சொம்ஸ்கியின் எச்சரிக்கைகளுக்கான தீர்வு தெரியவில்லை. நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை இவரை ”உலகிலே இன்று வாழும் புத்திசீவிகளில் மிகவும் முக்கியமானவர்” என்று விபரிக்கிறது.
ஆனால் இதே பத்திரிகை இவரின் கருத்துக்களை பிரசுரிப்பதில்லை அவற்றை விவாதிப்பதும் இல்லை. தொலைக்காட்சி நிகழ்வுகளும் இவரை கவனிப்பதில்லை. இருந்தும் தனது 89வது வயதிலும், இவர் உலகெங்கும் புகழ்பெற்றவராக மதிக்கப்படுபவராக உள்ளார்.
உலகெங்கும் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் இவர் சூப்பர் ஸ்டாராக போற்றப்படுகிறார். ஆனால் முடிவுகள் எடுக்கும் அதிகார மையங்களில் இவர் புறந்தள்ளப்படுகிறார். இவரது இடமான MITஇலோஇவர் எப்போதும் அணுகக் கூடிய பேராசிரியராக எல்லோருடைய மின்னஞ்சல்களுக்கும் பதிலளிப்பவராக எம்மை போன்றாரை எப்போதும் வரவேற்பராக உள்ளார். நாமும் அவரை தேடி போனோம்.
(இருபக்க அரசியலிலும் உள்ள மேல்மட்டத்தவர் எவ்வாறு எமது சமூக, அரசியல், சூழல் வளங்கள் பாதுகாப்பை பலவீனமாக்குகிறார்கள்.)
கேள்வி: எத்தனையோ மக்கள் ஏதோ ஒரு வரலாற்று விளிம்பில் நிற்கிறார்கள். இதற்கு ஒரு சொம்ஸ்கியின் சுருக்கம் இருக்கிறதா?
சொம்ஸ்கி: இரண்டாம் உலக போருக்கு பின்னரான வரலாற்றை கவனித்தீர்களானால், குறிப்பிடத்தக்க ஒன்றை அவதானிக்கலம். மனிதர்களின் புத்திசாலித்தனம் இரண்டு பேரழிவு தருக்கூடிய வேலைகளை செய்தது. இரண்டுமே இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவுகளாக வந்தவை.
ஒன்று நமக்கெல்லாம் தெரிந்தது தான் – அணுகுண்டு ஆயுதங்கள். இரண்டாம் உலக யுத்தமே அணுகுண்டு போட்டதுடன் முடிவுக்கு வந்தது. இது மேலும் விரிவடைந்து மனித குலத்தின் அழிவுக்கு வழி செய்யும் என்று அப்போதே விஞ்ஞானிகளுக்கு விளங்கி விட்டது.
1947ம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானிகளின் வெளியீடு ஒன்று அழிவுக்கால மணிக்கூடு (Doomsday Clock) ஒன்றை ஆரம்பித்து வைத்தது. அது அழிவுக்கு ஏழு நிமிடங்களில் அப்போது நின்றது. 1953ம் ஆண்டு அழிவுக்கு இரண்டு நிமிடங்களுக்கு வந்துவிட்டது.
அந்த வருடம் தான் ஐ-அமெரிக்காவும் சோவியத் குடியரசும் ஹைட்ரஜன் குண்டுகளை பரிசோதித்தன. நான் குறிப்பிட்ட இரண்டாவது பேரழிவு உலக சூழலையே மாற்றுகிறது. இந்த காலத்தை மானிடரால்-அழிவு என்றே நாம் குறிப்பிடலாம். அதாவது மானிடர்கள் சூழலில் ஏற்படுத்தும் பேரழிவு கொண்டு வரும் மாற்றங்கள். ஆக இரண்டு பேரழிவுக்கான வழிகளை எம்முடைய புத்திசாலித்தனத்தால் உருவாக்கியிருக்கிறோம்.
மூன்றாவதாக 1970களில் ஒன்று ஆரம்பித்து இருக்கிறது. மேலே விபரித்த இரண்டு பேரழிவு சாத்தியங்களுக்கும் தடையாக இருக்கக் கூடியவற்றை அது அழித்தது அல்லது பலவீனப்படுத்துகிறது. அது தான் நவதாராளவாதம். அதற்கு முன்னர், 50களிலும் 60களிலும் இடம்பெற்றது ”அரச முதலாளித்துவம்”. அது சமத்துவமான வளர்ச்சியையும், சமூக நீதியையும் கொண்டு வந்தது.
ஓம். சமூக சனநாயகம். நவீன முதலாளித்துவத்தின் பொற்காலம் என்றும் அதை அழைப்பார்கள். 70களில் நவதாராளவாதத்தின் தொடக்கத்துடன் இது மாற்றமடைகிறது. இன்றுவரை அந்த நவதாராளவாதத்தின் கீழேயே நாம் வாழ்கிறோம். அது என்ன என்று கேட்பீர்களானால், சமூக கூட்டொருமை, கொள்கை முடிகளில் வெகுசன பங்கு போன்றவற்றின் அடிப்டைகளை தகர்த்துவதே நவதாரவாதத்தின் முக்கிய கொள்கையாக இருக்கிறது. ஆனால் இது அப்பெயரால் அழைக்கப்படுவதில்லை.
இதை “சுதந்திரம்” என்றே அழைக்கிறார்கள். குவிமையப்படுத்தப்பட்ட தனியார் அதிகாரத்திற்கு கீழிருப்பதையே இங்கு ”சுதந்திரம்” என்கிறார்கள். முடிவுகள் எடுப்பதில் வெகுசன பங்கு இருப்பதற்கான கட்டமைப்புக்கள் திட்டமிட்டு பலவீனப்படுத்தப் படுகின்றன. இதையே ஒரு முன்னாள் பிரித்தானிய பிரதமர் மார்கரட் தச்சர் “சமூகம் என்ற ஒன்றில்லை. தனி நபர்கள் மட்டும் தான்” என்று விபரித்தார்.
அதாவது இரண்டாம் உலக போருக்கு பின்னர், நாம் இரண்டு பேரழிவு வழிகளை உருவாக்கியிருக்கிறோம். நவதாராளவாதத்தை தொடர்ந்து இவற்றை கையாளும் வழிகளையும் அழித்துக் கொண்டு வருகிறோம்.
மார்கரட் தச்சர் தன்னையறியமாலேயே கார்ல் மார்க்ஸ் சொன்னதை சொல்லியிருக்கிறார். கார்ல் மார்க்ஸ் பிரான்ஸ் நாட்டின் அடக்குமுறையை பற்றி, “அடக்குமுறை சமூகத்தை சாக்கிலுள்ள கிழங்குகள் போலாக்குகிறது. அங்கு தனி நபர்கள் மட்டும் தான். இவர்கள் கூட்டாக இயங்க முடியாது” என்று தாக்கினார்.
அது மார்க்சின் கண்டனம். இதையே மார்கரட் தச்சர் சிறப்பென்கிறார். அதுதான் நவதாரளவாதம். மக்கள் ஒன்றாக பங்குபற்ற கூடிய ஆட்சிமுறைகளை பலவீனப்படுத்துவது. தொழிற்சங்கங்களையும், ஏனைய மக்கள் கூட்டுக்களையும் பலவீனப்படுத்தி அவர்களை சாக்கு கிழங்குகளாக்குவது. அதே நேரம் சுதந்திரம் என்ற சொல்லிணியின் பின்னால் முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை தனியாருக்கு விட்டுவிடுவது.
இதனால் என்ன நடக்கும். பேரழிவுகளுக்கு தடையாக இருக்ககூடிய, மக்கள் கூட்டாக இயங்குதல் வேண்டுமென்றே அழிக்கப்படுகிறது.
70களிலிருந்து இன்னுமொரு பெரும் மாற்றம் நடந்தது. நிதிசார் அமைப்புக்கள் (Financial Institutions) பெருமளவு அதிகரித்தன. 2007இல் கார்பரேசன்களின் ஒட்டுமொத்த இலாபத்தில் 40 வீதம் இந்த நிதிசார் அமைப்புக்களுக்கே சென்றன. ஆனால் இவ்வமைப்புக்கள் உண்மையான பொருளாதாரத்துடன் இணைந்தவை இல்லை.
கேள்வி: அப்டியானால். இந்த சமூக முறைகள் நன்மையானவை அல்ல என்று மக்கள் உணரும் தறுவாயில், இதை மாற்றுவதற்கான செயற்பாடுகளை எடுக்கும் வல்லமை மானிட இனத்திற்கு இருக்கிறதா?
சொம்ஸ்கி: மானுட இனத்தின் விதியே அப்படி ஒரு செயற்பாட்டில் தான் தங்கியிருக்கிறது. நாம் ஒரு பெரும் புயலை உருவாக்கி விட்டோம். தலைப்பு செய்திகளாக வர வேண்டியவை இவை. இரண்டாம் உலக போருக்கு பின்னர் அழிவுக்கான இரண்டு வழிகளை உருவாக்கியிருக்கிறோம். நவதாராளவாதம் ஆரம்பித்ததில் இருந்து இவற்றை கையாளுவதற்கான வழிகளையும் அடைத்து விட்டோம். இவைதான் எமது குரல்வளையை அழுத்துகின்றன. இதுவே பிரச்சனை. இதற்கு தீர்வு காணாவிட்டால் நாம் அழிவது நிச்சயம்.
60களில் வளர்ந்த மக்கள் போராட்டங்கள் பற்றி, 70களில் மேல்மட்டத்தவர் மத்தியில் ஒரு கவலை வளர்ந்தது. “பிரச்சனைகளின் காலம்” என்று அவர்கள் இதை விபரித்தார்கள். மக்கள் போராட்டங்கள் நாட்டை நல்வழியில் இட்டு சென்றன. அது இவர்களுக்கு அபாயமாக தெரிந்தது.
அன்று வரை செயற்பாடுகள் அற்று இருந்த மக்கள் பிரிவுகள் தங்கள் கரிசனைகளுக்கு தீர்வு தேடி ஏதோ ஒரு வழியில் அரசியலில் நுழைந்தார்கள். இதை ”விசேட கரிசனைகள்” என்றார்கள் மேல்மட்டத்தவர். அதாவது இளையோர், வயோதிபர், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் ஆகிய சிறுபான்மையினர். உண்மையில் மக்கள். மக்களின் கரிசனைகள் “விசேட கரிசனைகள்” ஆக்கப்பட்டு, மக்கள் செயற்பாடுகள் இல்லாமல் அமைதியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் எண்ணம்.
இதற்கு சனநாயகத்தை மட்டுப்படுத்த வேண்டும். எங்கும் உள்ள சர்வதேச தாராளவாதிகளும் தொழில் மயமாக்கப்பட்ட மூன்று நாடுகளும் இதை ஆமோதித்தார்கள். அவர்களின் வார்த்தைகளில் சொல்வதானால் “இளையோருக்கு போதிக்கும் நிறுவனங்கள்” – பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், வழிபாட்டு மையங்கள் போன்றவை – தங்கள் பொறுப்பை சரியாக செய்யவில்லை. அதாவது இளையோரை அமைதியாக செயற்பாடுகள் அற்று இருப்பதற்கான போதனைகளை இந்த நிறுவனங்கள் செய்யவில்லை.
இதனுடன் தொடர்புடைய ஒரு விடயம் உண்டு. 60களின் மக்கள் செயற்பாடுகளாலும் தொழிலாளர் போராட்டங்களாலும் இலாபம் குறைந்து கொண்டு வந்தது. இது ஏற்க முடியாதது. குறைந்து வரும் இலாபத்தை மீண்டும் அதிகரிக்க செய்ய வேண்டும். மக்களின் சனநாய செயற்பாடுகளை பலமிழக்க செய்ய வேண்டும். இதை எப்படி செய்வது. நவதாராளவாதம் இதை செய்கிறது.
மொழியாக்கியவரின் குறிப்பு – உலகெங்கும் இடம்பெறும் சூழல், மக்கள் இயக்கங்கள் போன்றவை அழிக்கப்படுவதை சொம்ஸ்கியின் விளக்கத்துடன் பொருத்தி பார்த்தால் இவ்வழிவுகளின் பின்னாலுள்ள சக்திகளை பற்றிய புரிதல் ஏற்படும். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதை புரிந்து கொள்வதற்கும் இந்த நவதாராளவாத விளக்கம் அவசியம்.
பொது ஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
பிரஜைகள் அமைப்பின் இணை அமைப்பாளர்களான காமினி வியங்கொட, பேராசிரியர் சந்திர குப்த தேநுவர ஆகியோரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர். கடந்த 15 ந் திகதி பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாடு நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வெளிநாட்டுக் கடவுச் சீட்டுகள் இருப்பதாகவும், 2004ஆம் ஆண்டில் அவர் இலங்கைப் பிரஜையாக இல்லாத நிலையில் 2005ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் அவரது பெயர் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் இந்த குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
இம் முறைப்பாட்டில் 2003 ஜனவரி மாதம் 31ஆம் திகதி கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை பிரஜாவுரிமையிலிருந்து விலகி ஐக்கிய அமெரிக்காவின் பிரஜாவுரிமையை பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் நான்காம் திகதி கோத்தாபய ராஜபக்ஷ ON Arrival எனும் நாட்டுக்குள் பிரவேசிக்கும் விஸா மூலம் இலங்கை வந்துள்ளார்.
இதன் போது அவர் நீதிமன்றத்துக்கு வழங்கிய சத்தியக் கடிதத்தில் தனது சகோதரரின் தேர்தல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பதற்காக இங்கு வந்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். அதன் பின்னர் கோத்தாபய ராஜபக்ஷ, அமெரிக்கப் பிரஜையாக இருக்கும் நிலையில் இலங்கையின் தேசிய அடையாள அட்டையொன்றை ஒரே நாள் சேவையின் மூலம் பெற்றுக் கொண்டதோடு மற்றொரு கடவுச் சீட்டையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதனிடையே 2004ஆம் ஆண்டில் 2005ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலிலும் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார். இது எப்படி நடந்தது? என்பது குறித்து முழு அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டு மென இந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை பதில் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்கிரமரட்ண, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்து மனு தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளதா? என்பதை கண்டறிந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளாரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.