சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?

இத் தேர்தல் சிங்கள தேசத்துக்கான தேர்தலாக இருக்கிறது. ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தின் மீது திணிக்கப்படுகின்ற ஒன்றாகவே இத் தேர்தல் காணப்படுகின்றது

சிறிலங்கா அதிபர் தேர்தல் களத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவை மட்டும் நாம் குற்றவாளியாகப் பார்க்கவில்லை. இனப்படுகொலைக் குற்றவாளியாக சிறிலங்கா அரசினையே(state) நாம் பார்க்கின்றோம். இனப்படுகொலை அரசின் முகமாக ஆட்சிபுரிந்தவர்கள் அனைவருமே இனப்படுகொலையாளிகளாக உள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைத்தீவில் சிறிலங்கா அதிபருக்கான தேர்தல் களம் பரப்பரப் படைந்துள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன எனக் கேள்வி எழுப்பியபோது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அதிபருக்கான தேர்தல் என்பது சிங்கள தேசத்துக்கான தேர்தலாகவே இருக்கின்றது. ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தின் மீது திணிக்கப்படுகின்ற ஒன்றாகவே இத் தேர்தல் காணப்படுகின்றது. இப்பார்வைநிலையில் தான் தமிழர் தேசத்தின் இறைமையினை வென்றடைவதற்கான தந்திரோபாயங்களின் அடிப்படையில் சிறிலங்காவின் ஒவ்வொரு தேர்தல்களையும் நாம் அணுகி வருகின்றோம்.

உடனடி சலுகை அரசியலுக்கு அகப்பட்டு முடிவுகளை எடுக்காமல், நீண்ட காலத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு நன்மை தருகின்ற முடிவுகளை நோக்கியே நமது நிலைப்பாடுகள் அமைகின்றன எனவும் இவ் விடையத்தில் இறுதி நிலைப்பாட்டினை உரிய நேரத்தில் எமது அரசவை விவாதித்து முடிவெடுக்கும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.