தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -3) – ந.மாலதி

நவதாராளவாதம் சனநாயகத்தை அழிக்கிறது நோம் சொம்ஸ்கி நேர்காணல்

 50 ஆண்டுகளாக நோம் சொம்ஸ்கி, எம்மை குத்தும் கேள்விகளை கேட்டு, அமெரிக்காவின் சோக்கிரடீஸ் ஆக இருந்து வருகிறார். வேதனையை அனுபவிக்கும், இப்போது பேராபத்தில் இருக்கும்உலகமென்னும் கிராமத்தையே இவர் கேள்வி கேட்கிறார்.

பிரச்சனைகளில் மூழ்கிய உலகம், பல ஆண்டுகளாக எம்மை எச்சரித்து வந்த சொம்ஸ்கியின் கதவையே தேடிப்போகிறது. இந்த உலகத்திற்கு சொம்ஸ்கியின் எச்சரிக்கைகளுக்கான தீர்வு தெரியவில்லை. நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை இவரை உலகிலே இன்று வாழும் புத்திசீவிகளில் மிகவும் முக்கியமானவர்என்று விபரிக்கிறது.

ஆனால் இதே பத்திரிகை இவரின் கருத்துக்களை பிரசுரிப்பதில்லை அவற்றை விவாதிப்பதும் இல்லை. தொலைக்காட்சி நிகழ்வுகளும் இவரை கவனிப்பதில்லை. இருந்தும் தனது 89வது வயதிலும், இவர் உலகெங்கும் புகழ்பெற்றவராக மதிக்கப்படுபவராக உள்ளார்.

 உலகெங்கும் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் இவர் சூப்பர் ஸ்டாராக போற்றப்படுகிறார். ஆனால் முடிவுகள் எடுக்கும் அதிகார மையங்களில் இவர் புறந்தள்ளப்படுகிறார். இவரது இடமான MITஇலோ இவர் எப்போதும் அணுகக் கூடிய பேராசிரியராக எல்லோருடைய மின்னஞ்சல்களுக்கும் பதிலளிப்பவராக எம்மை போன்றாரை எப்போதும் வரவேற்பராக உள்ளார். நாமும் அவரை தேடி போனோம்.

(இருபக்க அரசியலிலும் உள்ள மேல்மட்டத்தவர் எவ்வாறு எமது சமூக, அரசியல், சூழல் வளங்கள் பாதுகாப்பை பலவீனமாக்குகிறார்கள்.)

கேள்வி: எத்தனையோ மக்கள் ஏதோ ஒரு வரலாற்று விளிம்பில் நிற்கிறார்கள். இதற்கு ஒரு சொம்ஸ்கியின் சுருக்கம் இருக்கிறதா?

 சொம்ஸ்கி: இரண்டாம் உலக போருக்கு பின்னரான வரலாற்றை கவனித்தீர்களானால், குறிப்பிடத்தக்க ஒன்றை அவதானிக்கலம். மனிதர்களின் புத்திசாலித்தனம் இரண்டு பேரழிவு தருக்கூடிய வேலைகளை செய்தது. இரண்டுமே இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவுகளாக வந்தவை.

ஒன்று நமக்கெல்லாம் தெரிந்தது தான் – அணுகுண்டு ஆயுதங்கள். இரண்டாம் உலக யுத்தமே அணுகுண்டு போட்டதுடன் முடிவுக்கு வந்தது. இது மேலும் விரிவடைந்து மனித குலத்தின் அழிவுக்கு வழி செய்யும் என்று அப்போதே விஞ்ஞானிகளுக்கு விளங்கி விட்டது.

1947ம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானிகளின் வெளியீடு ஒன்று அழிவுக்கால மணிக்கூடு (Doomsday Clock) ஒன்றை ஆரம்பித்து வைத்தது. அது அழிவுக்கு ஏழு நிமிடங்களில் அப்போது நின்றது. 1953ம் ஆண்டு அழிவுக்கு இரண்டு நிமிடங்களுக்கு வந்துவிட்டது.nuclear weapon factsheet 2 தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -3) – ந.மாலதி

அந்த வருடம் தான் ஐ-அமெரிக்காவும் சோவியத் குடியரசும் ஹைட்ரஜன் குண்டுகளை பரிசோதித்தன. நான் குறிப்பிட்ட இரண்டாவது பேரழிவு உலக சூழலையே மாற்றுகிறது. இந்த காலத்தை மானிடரால்-அழிவு என்றே நாம் குறிப்பிடலாம். அதாவது மானிடர்கள் சூழலில் ஏற்படுத்தும் பேரழிவு கொண்டு வரும் மாற்றங்கள். ஆக இரண்டு பேரழிவுக்கான வழிகளை எம்முடைய புத்திசாலித்தனத்தால் உருவாக்கியிருக்கிறோம்.

மூன்றாவதாக 1970களில் ஒன்று ஆரம்பித்து இருக்கிறது. மேலே விபரித்த இரண்டு பேரழிவு சாத்தியங்களுக்கும் தடையாக இருக்கக் கூடியவற்றை அது அழித்தது அல்லது பலவீனப்படுத்துகிறது. அது தான் நவதாராளவாதம். அதற்கு முன்னர், 50களிலும் 60களிலும் இடம்பெற்றது ”அரச முதலாளித்துவம்”. அது சமத்துவமான வளர்ச்சியையும், சமூக நீதியையும் கொண்டு வந்தது.

ஓம். சமூக சனநாயகம். நவீன முதலாளித்துவத்தின் பொற்காலம் என்றும் அதை அழைப்பார்கள். 70களில் நவதாராளவாதத்தின் தொடக்கத்துடன் இது மாற்றமடைகிறது. இன்றுவரை அந்த நவதாராளவாதத்தின் கீழேயே நாம் வாழ்கிறோம். அது என்ன என்று கேட்பீர்களானால், சமூக கூட்டொருமை, கொள்கை முடிகளில் வெகுசன பங்கு போன்றவற்றின் அடிப்டைகளை தகர்த்துவதே நவதாரவாதத்தின் முக்கிய கொள்கையாக இருக்கிறது. ஆனால் இது அப்பெயரால் அழைக்கப்படுவதில்லை.

இதை “சுதந்திரம்” என்றே அழைக்கிறார்கள். குவிமையப்படுத்தப்பட்ட தனியார் அதிகாரத்திற்கு கீழிருப்பதையே இங்கு ”சுதந்திரம்” என்கிறார்கள். முடிவுகள் எடுப்பதில் வெகுசன பங்கு இருப்பதற்கான கட்டமைப்புக்கள் திட்டமிட்டு பலவீனப்படுத்தப் படுகின்றன. இதையே ஒரு முன்னாள் பிரித்தானிய பிரதமர் மார்கரட் தச்சர் “சமூகம் என்ற ஒன்றில்லை. தனி நபர்கள் மட்டும் தான்” என்று விபரித்தார்.

அதாவது இரண்டாம் உலக போருக்கு பின்னர், நாம் இரண்டு பேரழிவு வழிகளை உருவாக்கியிருக்கிறோம். நவதாராளவாதத்தை தொடர்ந்து இவற்றை கையாளும் வழிகளையும் அழித்துக் கொண்டு வருகிறோம்.

மார்கரட் தச்சர் தன்னையறியமாலேயே கார்ல் மார்க்ஸ் சொன்னதை சொல்லியிருக்கிறார். கார்ல் மார்க்ஸ் பிரான்ஸ் நாட்டின் அடக்குமுறையை பற்றி, “அடக்குமுறை சமூகத்தை சாக்கிலுள்ள கிழங்குகள் போலாக்குகிறது. அங்கு தனி நபர்கள் மட்டும் தான். இவர்கள் கூட்டாக இயங்க முடியாது” என்று தாக்கினார்.

அது மார்க்சின் கண்டனம். இதையே மார்கரட் தச்சர் சிறப்பென்கிறார். அதுதான் நவதாரளவாதம். மக்கள் ஒன்றாக பங்குபற்ற கூடிய ஆட்சிமுறைகளை பலவீனப்படுத்துவது. தொழிற்சங்கங்களையும், ஏனைய மக்கள் கூட்டுக்களையும் பலவீனப்படுத்தி அவர்களை சாக்கு கிழங்குகளாக்குவது. அதே நேரம் சுதந்திரம் என்ற சொல்லிணியின் பின்னால் முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை தனியாருக்கு விட்டுவிடுவது.

இதனால் என்ன நடக்கும். பேரழிவுகளுக்கு தடையாக இருக்ககூடிய, மக்கள் கூட்டாக இயங்குதல் வேண்டுமென்றே அழிக்கப்படுகிறது.

70களிலிருந்து இன்னுமொரு பெரும் மாற்றம் நடந்தது. நிதிசார் அமைப்புக்கள் (Financial Institutions) பெருமளவு அதிகரித்தன. 2007இல் கார்பரேசன்களின் ஒட்டுமொத்த இலாபத்தில் 40 வீதம் இந்த நிதிசார் அமைப்புக்களுக்கே சென்றன. ஆனால் இவ்வமைப்புக்கள் உண்மையான பொருளாதாரத்துடன் இணைந்தவை இல்லை.

கேள்வி: அப்டியானால். இந்த சமூக முறைகள் நன்மையானவை அல்ல என்று மக்கள் உணரும் தறுவாயில், இதை மாற்றுவதற்கான செயற்பாடுகளை எடுக்கும் வல்லமை மானிட இனத்திற்கு இருக்கிறதா?

சொம்ஸ்கி: மானுட இனத்தின் விதியே அப்படி ஒரு செயற்பாட்டில் தான் தங்கியிருக்கிறது. நாம் ஒரு பெரும் புயலை உருவாக்கி விட்டோம். தலைப்பு செய்திகளாக வர வேண்டியவை இவை. இரண்டாம் உலக போருக்கு பின்னர் அழிவுக்கான இரண்டு வழிகளை உருவாக்கியிருக்கிறோம். நவதாராளவாதம் ஆரம்பித்ததில் இருந்து இவற்றை கையாளுவதற்கான வழிகளையும் அடைத்து விட்டோம். இவைதான் எமது குரல்வளையை அழுத்துகின்றன. இதுவே பிரச்சனை. இதற்கு தீர்வு காணாவிட்டால் நாம் அழிவது நிச்சயம்.

60களில் வளர்ந்த மக்கள் போராட்டங்கள் பற்றி, 70களில் மேல்மட்டத்தவர் மத்தியில் ஒரு கவலை வளர்ந்தது. “பிரச்சனைகளின் காலம்” என்று அவர்கள் இதை விபரித்தார்கள். மக்கள் போராட்டங்கள் நாட்டை நல்வழியில் இட்டு சென்றன. அது இவர்களுக்கு அபாயமாக தெரிந்தது.activism main தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -3) – ந.மாலதி

அன்று வரை செயற்பாடுகள் அற்று இருந்த மக்கள் பிரிவுகள் தங்கள் கரிசனைகளுக்கு தீர்வு தேடி ஏதோ ஒரு வழியில் அரசியலில் நுழைந்தார்கள். இதை ”விசேட கரிசனைகள்” என்றார்கள் மேல்மட்டத்தவர். அதாவது இளையோர், வயோதிபர், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் ஆகிய சிறுபான்மையினர். உண்மையில் மக்கள். மக்களின் கரிசனைகள் “விசேட கரிசனைகள்” ஆக்கப்பட்டு, மக்கள் செயற்பாடுகள் இல்லாமல் அமைதியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் எண்ணம்.

இதற்கு சனநாயகத்தை மட்டுப்படுத்த வேண்டும். எங்கும் உள்ள சர்வதேச தாராளவாதிகளும் தொழில் மயமாக்கப்பட்ட மூன்று நாடுகளும் இதை ஆமோதித்தார்கள். அவர்களின் வார்த்தைகளில் சொல்வதானால் “இளையோருக்கு போதிக்கும் நிறுவனங்கள்” – பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், வழிபாட்டு மையங்கள் போன்றவை – தங்கள் பொறுப்பை சரியாக செய்யவில்லை. அதாவது இளையோரை அமைதியாக செயற்பாடுகள் அற்று இருப்பதற்கான போதனைகளை இந்த நிறுவனங்கள் செய்யவில்லை.

இதனுடன் தொடர்புடைய ஒரு விடயம் உண்டு. 60களின் மக்கள் செயற்பாடுகளாலும் தொழிலாளர் போராட்டங்களாலும் இலாபம் குறைந்து கொண்டு வந்தது. இது ஏற்க முடியாதது. குறைந்து வரும் இலாபத்தை மீண்டும் அதிகரிக்க செய்ய வேண்டும். மக்களின் சனநாய செயற்பாடுகளை பலமிழக்க செய்ய வேண்டும். இதை எப்படி செய்வது. நவதாராளவாதம் இதை செய்கிறது.

மொழியாக்கியவரின் குறிப்பு உலகெங்கும் இடம்பெறும் சூழல், மக்கள் இயக்கங்கள் போன்றவை அழிக்கப்படுவதை சொம்ஸ்கியின் விளக்கத்துடன் பொருத்தி பார்த்தால் இவ்வழிவுகளின் பின்னாலுள்ள சக்திகளை பற்றிய புரிதல் ஏற்படும். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதை புரிந்து கொள்வதற்கும் இந்த நவதாராளவாத விளக்கம் அவசியம்.

 

மூலம் கிறிஸ்தோபர் லின்டன்

https://www.thenation.com/article/noam-chomsky-neoliberalism-destroying-democracy/