Home Blog Page 2450

சீனாவில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் படைமுகாமுக்கு

சீனாவின் இருந்து இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களும் தியத்தலாவை படைமுகாமிற்க்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.இன்று (01) காலை சிறப்பு விமானம் மூலம் குறித்த மாணவர்கள் சீனாவின் வுஹான் நகரில் இருந்து மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பின்னர், மத்தல விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் சிறப்பு பஸ் மூலம் தியத்தலாவை இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள 32 அறைகளுடன் கூடிய வைத்திய முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அங்கு இவர்கள் இரண்டு வாரக்காலம் தடுத்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்கள் மூலமாக பரவும் கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் கண்கள் ஊடாகத் தொற்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் தொற்றுவதைத் தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர் தும்மினால், இருமினால் அல்லது எச்சில் துப்பினால் ஆரோக்கியமாக இருக்கும் நபரொருவரின் கண் ஊடாக உடலுக்குள் செல்லும் ஆபத்து காணப்படுகின்றது.

இதனால் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் பயன்படுத்துவதும் பயனற்ற ஒன்றாக மாறி வருகின்றது.

இதனால் மக்கள் அனைவரும் தங்களது ஆரோக்கியம் தொடர்பாக மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசால் ஒதுக்கப்படுகின்ற நிதி போதாது ஆளுநருக்கு தெரியப்படுத்திய கூட்டமைப்பு எம்.பி

உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசால் ஒதுக்கப்படுகின்ற நிதி மிக குறைவாக இருப்பதால் உள்ளூராட்சி மன்றங்கள் சரியான முறையில் இயங்க முடியாத நிலையில் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னார் நானாட்டான் பிரதேச சபையின் உப அலுவலகம் வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

நன்கு ஆளுமைகொண்ட வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் விஷேட நிதியை வடக்குக்கு கொண்டுவந்து அபிவிருத்திக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

வட மாகாண அமைச்சுகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி மிக சொற்பமே.

வட மாகாண பிரதம செயலாளரினால் முன்வைக்கப்படுகின்ற திட்டத்தில் பத்தில் ஒரு பங்கே வட மாகாணத்துக்கு ஒதுக்கப்படுகின்றது.

வட மாகாணத்தைப் பொறுத்தமட்டில் பலதரப்பட்ட தேவைகள் அதிகம் இருக்கின்றது.

மத்திய அரசால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி மிக குறைவாக இருப்பதால் உள்ளூராட்சி மன்றங்கள் சரியான முறையில் இயங்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.

ஆகவே நான் ஆளுநரிடம் வேண்டி நிற்பது நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்ற வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படுகின்ற விஷேட நிதியில் கணிசமான நிதியை வடக்கு மாகாணத்துக்கும் கொண்டு வருவதற்கான முயற்சியை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இலங்கையிலுள்ள சீனப் பிரஜைகளுக்கு புதிய கட்டுப்பாடு

வதிவிட விசா விநியோகிக்கப்பட்டுள்ள பணியிடங்களிலுள்ள சீன பிரஜைகளுக்கு ஆலோசனைகள் அடங்கிய கடிதமொன்றை அனுப்புவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் தங்கியுள்ள சீன பிரஜைகள் மற்றும் அண்மையில் சீனாவிற்கு சென்று திரும்பிய ஊழியர்களை அவர்கள் தொழில் செய்யும் இடங்கள் மற்றும் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்தார்.

அனைத்து ஆலோசனைகளையும் நாளைய தினம் சீன நிறுவனங்களுக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது

நீண்ட இழுபறிக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து நேற்றிரவு (வெள்ளிக் கிழமை) வெளியேறியது.

இங்கிலாந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில. இருந்து வெளியேற முடிவு எடுத்தது. இது ‘பிரெக்ஸிட்’ என்று அழைக்கப்படுகிறது. ஆனால் “பிரெக்ஸிட்’ அவ்வளவு எளிதாக அமையவில்லை. “பிரெக்ஸிட்’ விவகாரத்தில் 2 பிரதமர்கள் ராஜினாமா செய்தார்கள்.

அதன் பிறகு பிரதமர் பதவிக்கு வந்த போரிஸ் ஜோன்சன் “பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற தீவிர முனைப்புக் காட்டினார். ஆனால் ஆரம்பத்தில் அவருக்கும் அது சாத்தியமாகவில்லை. “பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அவருக்குப் பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலை அறிவித்தார்.

அந்தத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றார். அதன் பிறகு மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நாடாளுமன்றத்தில் “பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை தாக்கல் செய்து ஒப்புதலை பெற்றார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறியது.

இந்த நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் “பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்புக்கு முன்னதாக பிரேரணை மீது உணர்ச்சிகரமான விவாதம் நடந்தது. இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய உறுப்பினர்கள் சிலர் கண் கலங்கியவாறு பேசினர்.

அப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் இங்கிலாந்துக்குப் பல்வேறு உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதே சமயம், இங்கிலாந்தின் எதிர்கால உறவுகள், வர்த்தகம் தொடர்பான பேச்சு ஆகியவை குறித்து சில உறுப்பினர்கள் எச்சரித்தனர். அதனை தொடர்ந்து, வாக்கெடுப்பு நடந்தது. ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 621 உறுப்பினர்களும், எதிராக 49 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் நீண்ட இழுபறிக்கு பின் இங்கிலாந்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து முறைப்படி வெளியேறியது.

அந்த நாட்டு நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு (இலங்கை நேரப்படி இன்று விடிகாலை) வெளியேற்றம் நடக்க இருந்தது. அத்துடன் “பிரெக்ஸிட்’ முடிவுக்கு வருகிறது. இருப்பினும், பொருளாதார ரீதியில் எந்தவொரு கொள்கையும் வகுக்கப்படாததால், பொருளாதாரம், வர்த்தகம் தொடர்பான விவகாரங்களில் இந்த ஆண்டு இறுதிவரை ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து இணைந்திருக்கும்.

இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பிறகு கீழ்கண்ட மாற்றங்கள் ஏற்படும்:-

0 இங்கிலாந்து சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 73 பேர் தங்களது பதவியை இழப்பார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாடுகளில் இங்கிலாந்து பிரதமர் மற்றும் மந்திரிகள் பங்கேற்க வேண்டிய கட்டாயம் இல்லை.

0 பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் புதிய விதிகளை அமைப்பது குறித்து உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் இங்கிலாந்து பேச ஆரம்பிக்க முடியும்.

0 இங்கிலாந்து பாஸ்போர்ட்டின் நிறம் மாற்றப்படும். 30 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த நீல நிறத்துக்கு இங்கிலாந்து பாஸ்போர்ட்டுகள் மாறும். “பிரெக்ஸிட்’ நினைவாக “ஜனவரி 31′ திகதியைத் தாங்கிய 50 பென்ஸ் நாணயங்கள் ( அரைப்பவுண்ட்) நேற்றுப் புழக்கத்துக்கு வந்தது.

தோல்வியடையும் கூட்டணிக்குத் தலைமைதாங்க தயாரில்லை: ரணில்

சஜித் ஆதரவாளர்கள் இணைந்து ஏற்படுத்தப் போகும் கூட்டணி தோல்வியைச் சந்திக்கப்போவதை நான் அறிவேன்.தோல்வியடையும் கூட்டணிக்கு தலைமை வகிக்க நான் விரும்பவில்லை. அதனால் தான் அதனை விட்டுக்கொடுத்தேன்.

இவ்வாறு தனது நெருக்கமான சகாக்கள் பலருடன் மனம்விட்டுப் பேசும்போது தெரிவித்துள்ளாராம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைவது குறித்து தனது நெருக்கமான சிலருடன் பேசிய ரணில் மேலும் கூறியவை வருமாறு:-

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நிதானமாக ஒரு முடிவை எடுக்காமல் வெளியாரின் அழுத்தங்களால் முடிவுகள் எடுக்கப்பட்டமையால் தோல்வியைச் சந்தித்தோம்.இம்முறையும் அது தொடர்கிறது. எனவேதான் தோற்கப்போகும் கூட்டணிக்குத் தலைமை வகிக்க நான் விரும்பவில்லை.

அந்த கூட்டணி தோற்றால் அது அஸ்தமனமாகிவிடும். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் வேட்புமனுக் குழுவின் தலைவர் பதவியையும் சஜித்துக்கு கொடுத்துள்ளேன். அவர்கள் அநீதியாக தீர்மானங்களை எடுத்தால் நானும் அப்போது தீர்மானங்களை எடுப்பேன். கூட்டணியின் முக்கிய பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால் அதன் செயலாளராக ரவி கருணாநாயக்கவை நியமிக்க நான் கோரிக்கை விடுத்துள்ளேன்” என்றார்.
இதற்கிடையில் பெளத்த வாக்குகளை குறிவைத்து
களமிறங்கவுள்ள சஜித் பிரேமதாஸ அணி, வரும்
தேர்தலில் தென் பகுதிகளில் நடைபெறும் எந்தக்
கூட்டங்களுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்
களை மேடையேற்றாதிருக்கத் தீர்மானித்துள்ளதாக
அறியமுடிந்தது.

பகிஷ்கரித்தமை மக்கள் விரோதச் செயல்: அங்கஜன் கடும் சீற்றம்

எதிர்ப்புக்கள், புறக்கணிப்புக்கள் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், இவ்வாறு எதிர்ப்பு அல்லது புறக்கணிப்பைச் செய்பவர்கள் மக்களுக்கு விரோதமாகச் செயற்படுபவர்களே என்றும் சாடினார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் சமுகமளித்திருக்கவில்லை.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தைப் புறக்கணிக்கின்றனர் என அறிவித்தனர். ஆனால் அந்தக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலாவின் பிரதிநிதி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறான நிலைமையில் கூட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நாடாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதமை அல்லது புறக்கணித்தமை தொடர்பில் கடும் விசனம் வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்-

“யாழ்.மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்துக்கு இங்குள்ள மக்களின் பிரதிநிதிகள் சமுகமளிக்கவில்லை. அவ்வாறு சமுகமளிக்காது எதிர்ப்புத் தெரிவிப்பதென்பது அல்லது கூட்டத்தைப் புறக்கணிப்பதென்பது மக்களுக்கு விரோதமான ஒரு நடவடிக்கையாகவே அமைகிறது.

இவ்வாறான எதிர்ப்புக்கள் அல்லது புறக்கணிப்புக்கள் ஊடாக எதனையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியாது. மக்கள் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் கலந்து பேசி ஒரு தீர்மானம் எடுத்தே செயற்படவேண்டும். அவ்வாறு பேசுவதனூடாகத்தான் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கவும் முடியும்.”

புதிய பெயரை ஈ பி ஆர் எல் எப் தெரிவு செய்ய மத்தியகுழுவே தீர்மானித்தது

கட்சியினுடைய பெயரையும் சின்னத்தையும் மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய மத்திய குழுவினுடைய தீர்மானம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற சிறந்த விவசாயிகள் பண்ணையாளர் கெளரவிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது,

வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்க இருக்கிறது.
எவ்வாறு தேர்தலிற்கு முகம் கொடுக்க தீர்மானித்துள்ளீர்கள்?

உண்மையிலே இந்த பாராளுமன்ற தேர்தலிலே எங்களுடைய கட்சியான ஈழ மக்கள் விடுதலை முன்னணி, விக்னேஷ்வரன் ஐயாவுடைய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி, அதேமாதிரி ஸ்ரீகாந்தா ,சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ் தேசிய கட்சி, அனந்தி தலைமையிலான தமிழர் சுயாட்சி கழகம் உட்பட இன்னும் பல கட்சிகளும் அதே போல மத தலைவர்கள், தமிழ் மக்கள் பேரவை, வடக்கு கிழக்கிலே இருக்கக்கூடிய நூற்றிற்கு மேற்பட்ட சிவில் அமைப்புகள் அனைவரும் இணைந்து ஒரு புதிய சின்னம் ஒரு புதிய கூட்டமைப்பாக நாங்கள் எதிர்வரும் தேர்தலில் நாங்கள் போட்டியிட இருக்கின்றோம்.

விடுதலை முன்னணி தமிழர் ஐக்கிய முன்னணி என்கின்ற பெயரோடு தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கு முனைப்பு காட்டி இருப்பதாக அறிகின்றோம். இது என்ன காரணத்திற்காக ஈழமக்கள் என்ற பெயர் வரக்கூடாது என்ற ஒரு காரணத்திற்காகவா?

கடந்த பல வருடகாலமாக எங்களுடைய கட்சிக்குள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியாகவே அது தொடர்ந்து இருக்கும். அதே நேரத்தில் எங்களுடைய கட்சியினுடைய பெயர் ,சின்னம் மாற்றப்பட வேண்டுமென்று நாங்கள் எங்களுடைய கட்சியினுடைய மத்திய குழு அரசியல் உயர்பீடம் உட்பட நீண்ட காலமாக இது சம்பந்தமாக எங்களுக்குள்ளே நாங்கள் விவாதித்து வந்திருக்கிறோம்.

ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகவே இருக்கும் . அதே நேரத்தில் தேர்தலை நாங்கள் போட்டியிடுவதற்காக எங்களுடைய கட்சியினுடைய பெயரையும், கட்சியினுடைய சின்னத்தையும் மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய மத்திய குழுவினுடைய தீர்மானம்.

ஆகவே அந்த தீர்மானத்தின் படி எங்களுடைய பெயர் நாங்கள் தேர்தல் களத்திலே நாங்கள் மாற்றம் செய்வதற்காக கொடுத்திருக்கிறோம். அதை எதிர்வரும் தேர்தல் காலத்திலே எங்களுடைய கட்சியின் சின்னமும் தேவைப்படுகிற பட்சத்திலே பாவிக்கிறதுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாங்கள் உண்மையிலேயே நிறைகுடம் சின்னம் தேவையென்பதை கொடுத்திருக்கிறோம். ஆனால் அதனுடைய இறுதி முடிவு தேர்தல் திணைக்களம் தான் எடுக்கும்.

தமிழர் ஐக்கிய முன்னணியின் ஊடாக ஒரு கூட்டத்தை உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்கிறீர்களா?

நாங்கள் எங்களுடைய இந்த கட்சிகளினுடைய கூட்டு அதனுடைய சின்னம் என்பது தொடர்பாக இன்னும் நாங்கள் நிரந்தரமான ஒரு சரியான முடிவு எடுக்கவில்லை. ஆனால் நாங்கள் தேவைப்படும் பட்சத்தில் நாங்கள் எங்களுடைய கட்சியையும் சின்னத்தையும் இந்த பொதுவான எங்களுடைய கூட்டணிக்காக நாங்கள் வழங்கவும் தயாராக இருக்கிறோம்.

தற்போது பாராளுமன்ற தேர்தல் எப்போது இடம்பெறும் என்கின்ற ஒரு எதிர்பார்ப்புக்கள் பாராளுமன்றத்திலே காணப்படுகிறது?

உண்மையிலேயே மாசி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதியின் நான்கரை வருடங்கள் நிறைவடைகின்ற இந்த காலகட்டத்திலே இந்த பாராளுமன்றத்தை கலைத்து ஒரு பொதுத்தேர்தலுக்கு போகக்கூடிய நிலைமை இருக்கிறது.

ஆனால் இன்றைய ஒரு செய்தி ஒன்று பார்க்கும் போது பசில் ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கவிற்கு சொல்லப்பட்டதாக அதாவது ஓகஸ்ற் மாதம் வரையும் இந்த பாராளுமன்ற தேர்தலை நீடிப்பதாக ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

ஆகவே ஐந்து வருட காலத்திற்கு பிற்பாடு பாராளுமன்றம் கலைக்கிறதாக இருந்தால் அது வரையும் இருக்கும் நான்கரை வருடத்திற்கு உள்ளே கலைப்பதாக இருந்தால் பங்குனி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி இதை கலைக்கிறதற்கான சூழ்நிலை இருக்கிறது‌.

ஆகவே இந்த முடிவு நான்கரை வருடத்தில் கலைக்க போகிறார்களா? அல்லது ஐந்து வருட காலம் நிறைவடைகின்ற காலத்திலே கலைக்க போகிறார்களா என்பது தொடர்பாக இன்னும் சரியாக தெரியவரவில்லையென மேலும் தெரிவித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை புறக்கணித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று (31) ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கான அழைப்பு மாவட்டச் செயலாளர் ஊடாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்தக் கூட்டத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர். கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2015ஆம் ஆண்டு முதல் அந்த அரசில் அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

மேலும் அமைச்சராக இருந்த காலங்களில் கூடடத்தை தலைமை தாங்கி நடத்திய ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் ஆட்சி மாற்றத்தின் பின்னராக நடைபெற்ற இக்கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்திருந்தார்.

இவ்வாறான நிலையில் தற்போது புதிய அரசாங்கம் வந்திருக்கின்ற நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கமைய மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது.

எனினும் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – சீனர்களுக்கு உணவு வழங்க மறுக்கும் கொழும்பு உணவு விடுதிகள்

கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மற்ற நாடுகளில் உள்ள சீனர்களுக்கு உணவு வழங்கப்படுவது இல்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது.

சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 20இற்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸால் சீனாவில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் சீனாவிலிருந்து தங்கள் நாட்டு மக்களை மற்ற நாடுகள் விமானங்களை அனுப்பி அழைத்துச் செல்கின்றன. இந்நிலையில் இலங்கையில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலக நாடுகள் பலவற்றில் சீனர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள உணவகங்கள் சிலவற்றில் சீனர்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்புக்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கை பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாடுகளில் விடுதிகள் முதற்கொண்டு பொது மக்கள் நடமாடும் பகுதிகளில் சீனர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.