Home Blog Page 2444

மக்கள் பணியை நிறைவேற்ற வலுவான நாடளுமன்றம் அவசியம்: பஸில் ராஜபக்‌ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் நிறுவுனர் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ஷ சுமார் 3 மாதங்களின் பின்னர் நேற்று முன் தினம் நாடு திரும்பினார். இதையடுத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர்,

“மார்ச் மாதத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் கூறியுள்ளனர். மக்களுக்கான பணிகளை இந்த அரசு நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மையைக் கொண்ட ஒரு வலுவான நாடாளுமன்றம் அவசியம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சியை இணைத்து பொதுஜன பெரமுன போட்டியிட்ட நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற, பொருத்தமான சின்னம் பயன்படுத்தப்படும்” என்றார்.

தமிழில் தேசியகீதம் பாட சிறீலங்கா மறுப்பு – அசோசியட் பிரஸ்

இன்று (04) இடம்பெற்ற சுதந்திரதின விழாவில் தமிழில் தேசியகீதம் பாடுவதை சிறீலங்கா அரசு புறக்கணித்துள்ளதாக அசோசியட் பிராஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவின் இரண்டாவது தேசிய மொழியான தமிழ் மொழியில் தேசியகீதம் பாடுவதை சிறீலங்கா அரசு புறக்கணித்துள்ளது. முன்னைய அரசு இரு மொழிகளிலும் தேசியகீதம் பாடப்படுவதை அனுமதித்திருந்தது.

கடந்த வருடம் புதிய அரச தலைவராக தெரிவுசெய்யப்பட்ட கோத்தபாயா ராஜபக்சா தான் எல்லா இன மக்களுக்கும் தலைவர் என தெரிவித்திருந்தார். ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை.

2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த போரை அவரே வழிநடத்தியவர். இந்த போரில் பெருமளவான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தன. பெருமளவான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் இருந்தனர்.

தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்பட வேண்டும் என பல தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது – மனோ கணேசன்

தேசிய சுதந்திர தின நிகழ்வில் அரசாங்கம், தமிழில் தேசிய கீதத்தை, சர்வதேச, உள்ளூர் சமூகங்களுக்கு எதிரில், நிராகரித்து, பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தி, தேசபக்தர்களை ஏமாற்றியுள்ளது. ஒரு இலங்கையனாக வெட்கமும், கவலையும் அடைகிறேன் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தன் டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

தமது சமூக தள செய்தி பற்றி மேலதிக விளக்கம் கேட்ட போது, இந்த அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது என்பதை தவிர வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை என மனோ கணேசன் எம்பி கூறினார்.

இன்றைய சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படவில்லை. கடந்த ஆட்சியில் 2016ம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் ஆரம்பிக்கபட்ட தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை பாடும் வழமை, இவ்வருட சுதந்திர தின நிகழ்வில் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் விவகாரம் என்ற முறையில் மனோ கணேசன், அமைச்சரவை உபகுழு மூலம் முன்னெடுத்திருந்தார்.

இவ்வருட சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாது என்ற செய்தி பரவிய நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் கவனத்துக்கு இதை பலமுறை மனோ கணேசன் கொண்டு வந்தார். நேற்று மனோ கணேசன், “இந்த கடைசி தருணத்திலாவது, நல்ல முடிவை எடுங்கள்” என ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் புதைத்தது நீங்களா?- சுரேந்திரன் கேள்வி.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தோண்டி எடுப்பதாயின் அவர்களை மண்ணுக்குள் புதைத்தது தொடர்பில் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமது உறவுகளை தொலைத்துவிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனவேதனைகளோடு வீதியோரங்களில் வருடக்கணக்கில் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை நோக்கி அமைச்சர் விமல் வீரவன்ஸ காணாமல் போனவர்களை மண்ணிற்குள்தான் தோண்டி எடுக்க வேண்டும் என கூறியிருப்பது ஒரு கொடிய இனவாத கருத்தையும் விஞ்சிய ஒரு மனிதநேயமற்ற கருத்தாகும்.

மனித மனம் படைத்த அல்லது மனித நேயமுள்ள ஒருவன் எதிரியைக்கூட இவ்வாறு கூறமாட்டான். வெறும் தேர்தல் வெற்றிக்காக சிறுபான்மை இனத்தவர்கள் மீது தனது கொடூர முகத்தை காட்டும் விமல் வீரவன்ஸ போன்றவர்களை வன்மையாக கண்டிப்பதோடு இவ்வாறானவர்களை மனித இயல்புள்ள அனைவரும் நிராகரிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணிற்குள்தான் தோண்டி எடுக்கவேண்டுமென கூறும் நீங்களா எமது உறவுகளை மண்ணிற்குள் புதைத்தீர்கள் ? என்ற சந்தேகம் தற்போது எமக்கு எழுந்துள்ளது. எமது மக்கள் உங்களிடம் கோரிநிற்பது யுத்தத்தின்போது ஆயுதமேந்தி போராடி காணாமல் போனவர்களை அல்ல பெரும்பாலும் சர்வதேச யுத்த நியமங்களுக்கு அமைய சரணடைந்தவர்களையும் பெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களையுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும் அவர்களை நீங்கள் மண்ணுக்குள் புதைத்திருந்தால் நீங்கள்தான்
குற்றவாளிகள் என்பதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.

சம்பிரதாயத்தற்கு கூடிக் கலையும் சபையாக மாறிவருகின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அவையில் இவ்வாறனவர்களின் கருத்துக்களை ஆதாரங்களாகவும் வாக்குமூலங்களாகவும் சமர்ப்பித்து உறவுகளை இழந்து வாடும் எமது மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க நாம்
அனைவரும் முன்வரவேண்டும் .

ஒரு நாட்டில் வாழும் ஒரு இனக்குழுமத்தை சார்ந்த மக்களை விசாரணைக்கென அழைத்துச் சென்றுவிட்டு அவர்களை மண்ணிற்குள் தேடிப்பாருங்கள் என்று சொல்வது ஒட்டுமொத்த மனித உரிமையின் அடிப்படைகளையும் கேள்விக்குட்படுத்தும் மிலேட்சைத்தனமான செயலாகவே சர்வதேசம் நோக்கவேண்டும் இன்று இவ்வாறு சொல்லத் துணிந்தவர்கள் நாளை என்ன செய்யப்போகிறார்கள் என்பதையும் மனித உரிமை அமைப்புக்களும் ஐக்கிய நாடுகள் சபையும் ஊகித்துக்கொள்ளவேண்டும்.

சமத்துவத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் இவ்வுலகில் தொடர்ந்தும் அடிப்படைவாதம் பேசும் விமல்வீரவன்ஸ போன்றவர்களை நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் கண்டும் காணாமல் இருப்பதும் இந்த நாட்டினது எதிர் காலத்திற்கு உகந்ததாக அமையாது என மேலும் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தன்று கிளிநொச்சியில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணி

இன்றைய சிறீலங்காவின் சுதந்திர தினத்தன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் கிளிநொச்சியில் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் காலை பத்து மணியளவில் ஆரம்பமான பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கிளிநொச்சி தமிழரசுக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

பேரணியில் இலங்கை அரசைக் கண்டித்து எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர். அதில் “காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காத நாட்டில் சுதந்திர தினம் எதற்கு?”, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில்கூறு” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டத்தரணி சுகாஸ், மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட மற்றுமோர் பேரணியும் கிளிநொச்சியில் நடந்தது.

பேரணியில் கலந்து கொண்டோர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் பங்கு கொண்டிருந்ததுடன், ”சிறீலங்காவிற்கு சுதந்திர நாள் அது தமிழ் மக்களுக்கு கரிநாள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளக விசாரணைகள் மூலம் நீதி கிடைக்காது”, நாட்டின் சுதந்திரம் சிங்களவர்களுக்கு மட்டும் தானா?” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இவர்களின் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்திவரை சென்றது.

சிறிலங்கா சுதந்திர நாளுக்கு எதிராக மட்டக்களப்பில் பேரணி

கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பினால் மட்டக்களப்பில்  கவன ஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் நடைபெற்றது.

இந்த பேரணியில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த காணாமல்போனவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.IMG 0373 சிறிலங்கா சுதந்திர நாளுக்கு எதிராக மட்டக்களப்பில் பேரணி

இலங்கையின் சுதந்திர தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) ‘வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படும் நாட்டில் சுதந்திர தினம் எதற்கு என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி பதாகையை ஏற்தியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திர தினம் பெப்ரவரி 04 அது தமிழ் மக்களின் கரி நாள் போன்ற பதாகைகளையும் கறுப்புக்கொடிகளையும் ஏந்தியவாறு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.IMG 0454 சிறிலங்கா சுதந்திர நாளுக்கு எதிராக மட்டக்களப்பில் பேரணி

பிரபாகரன் சட்டகம்:விடுதலைப்புலிகளின் உத்திகள்(பகுதி-2)-சேதுராமலிங்கம்

ஒரு இயக்கம் தேர்தலில் போட்டியிடுவதால் மட்டுமே அது சனநாயகப் பண்புகள் கொண்ட இயக்கமாகாது. அதுபோல போரிடுவதால் ஒரு அமைப்பு சர்வாதிகார இயக்கமாக ஆவதும் கிடையாது. ஒரு இயக்கம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, எவ்வாறு அதிகாரம் பகிரப்படுகிறது என்பதே சனநாயகப் பண்புகளைத் தீர்மானிக்கிறது.

  1. புலிகள் தேசியச் சிக்கலை ஒரு இராணுவ உத்தி என்று ஒற்றைப் பார்வையில் பார்க்கவில்லை. மாறாக அதனை சமூகப் பண்பாட்டிலிருந்து உலக அரசியல் வரை தொடர்பு கொண்டு ஒரு சிக்கலான அமைப்பாகவே (complex System) பார்த்தனர். அதனால் இராணுவ அமைப்பு மட்டும் என்றில்லாமல், பண்பாடு, ஊடகம், மொழி, அரசியல் கட்சிகள், உலகளாவிய தமிழர் அமைப்புகள், பொருளாதாரம், மற்ற நாடுகளுடனான உறவுகள் என அனைத்தையும் கட்டி ஆளும்  அளவிற்கு அமைப்புகளை உருவாக்கினார்கள்.  இவ்வாறு பல்வேறு அமைப்புகளைக் கட்டியெழுப்பி வெற்றி வாய்ப்புகளைப் பெருக்கினார்கள். அடிப்படையில்  அவர்கள், ஒரு உத்தி  என்றில்லாமல் அனைத்து உத்திகளையும் பயன்படுத்தினார்கள். இதுதான் அவர்கள் கூறாமல் செயல்படுத்திய பெருந்திட்டம்.

அவர்கள் எங்கெங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கிறதோ, அங்கங்கெல்லாம் உத்திகளைப் பெருக்கினார்கள். அவ்வாறான செயற்பாடு படைத்துறையில் மிக அதிகம். பீரங்கிப்படை, கடற்படை, வான்படை,  என்று படைத்துறைக் கட்டுமானங்கள் வளர்ந்து கொண்டே சென்றன. இன்று இருந்தால் அவர்கள் விண்ணையும் கைப்பற்றி இருப்பார்கள்.

அவர்களின் பெருந்திட்டம் என்பது தொடர்ந்து கற்று, புதுப்புது அமைப்புகளைக் கட்டமைத்து வெற்றி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டே செல்வதுதான். அதை படைத்துறை என்றில்லாமல்  அனைத்து துறைகளிலும் செய்தார்கள், ஈழத்திலிருந்து உலகம் வரை உருவாக்கினார்கள். இவை எல்லாம் சாத்தியமானதற்கு முக்கிய காரணம், அவர்கள் தங்களை குழுக்களின் குழுவாகக் கட்டமைத்ததே. ஒரு தலைவர் திட்டமிட்டு அனைத்தையும் சர்வாதிகார முறையில்  உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் அது முடியாத காரியம்.

7.அவர்கள் எதிரும் புதிருமான உத்திகளைத் தாராளமாகப் பயன்படுத்தினார்கள். ஆயுதப் போராட்டம் செய்தாலும், திலீபன் உண்ணாவிரதம் இருந்த அமைதிப் போராட்டமும் நடந்தது. அரசியல் கட்சிகளையும் இணைத்து  ஒரே குறிக்கோளை நோக்கி பயணித்தனர். ஆயுதப் போராட்டம் என்பதால், அவர்கள் அரசியலை நிராகரிக்கவில்லை. அரசியல் அமைப்புகளையும் வெற்றிக்குத் தேவையான கருவிகளாகப் பார்த்தனர். எப்பொழுது   அரசியல் கட்சிகள் ஒரே குறிக்கோளில் இணைந்து பயணிக்கவில்லையோ, அப்பொழுதே  முறுகல் நிலை ஏற்பட்டது. அடிப்படையில் அவர்கள் அனைத்து உத்திகளையும் சூழலுக்குத் தகுந்து  பயன்படுத்தினர். ஆனால் குறிக்கோளில் எந்த மாற்றமும் இருக்காது.

8.அவர்கள் அதிவேகமாக அமைப்புகளை உருவாக்கி, சோதனைகள் செய்து கற்று அதிவேகமாக வளர்ந்தார்கள். ஒற்றைத்  துப்பாக்கியில் ஆரம்பித்த இயக்கம் வான்படை வரை வளர்வது கற்றல் இல்லாமல் சாத்தியமில்லை.air wing1 பிரபாகரன் சட்டகம்:விடுதலைப்புலிகளின் உத்திகள்(பகுதி-2)-சேதுராமலிங்கம்

9.புலிகள் இயக்கம் மீளெழும்பும் (Resilient) இயக்கம், உடையக்கூடிய (fragile) இயக்கம் அல்ல. காலப் போக்கில் எத்தனையோ மிகச்சிறந்த தளபதிகளை இழந்தாலும், புலிகள் இயக்கம் சரியவில்லை. மேலும் அதிகமாக புதிய தளபதிகள் வளர்த்தெடுக்கப்பட்டு, இயக்கம் முன்னேறிச் சென்றது. பிரபாகரன் இல்லாவிட்டாலும் அவ்வியக்கம் தொடர்ந்திருக்கும் என்று ஆய்வாளர் தராகி சிவராம் குறிப்பிட்டுள்ளார்.

இது ஏனென்றால் குறிக்கோளை அனைவரும் ஏற்றுக் கொண்டு இறுக்கமான நம்பிக்கையுடன் ஒரு பண்பாட்டின் மூலம் செயற்படுவார்கள். தலைவர் குறிக்கோளை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலும், குழுக்கள் விடமாட்டார்கள். அவ்வாறான தலைவரை நம்பிக்கைத் துரோகியாகவே பார்த்து தலைமையை மாற்றிவிடுவார்கள். குழுக்களின் குழுவில் பிரபாகரன் போன்று “குறிக்கோளிலிருந்து நான் விலகினால் என்னை  சுட்டு விடுங்கள்” என்று கூறுபவர்தான் தலைவராகவே இருக்க முடியும்.

தலைவர் என்பவர் அவ்வாறான குழுக்களை உருவாக்கத்தான் தேவை. அதன் பின்பு அது தனக்கென்று ஒரு உயிர் பெற்று விடும். அதை எந்த ஒரு தனி ஒருவானாலும் திசைமாற்ற முடியாது. நமது உடலில் காயம் பட்டால் எவ்வாறு உடல் சரிசெய்து கொள்கிறதோ, அதுபோல ஏற்படும் பிழைகளை, இழப்புகளை அதுவே சரிசெய்து கொள்ளும். குறிக்கோளை விடாப்பிடியாக நிற்காமல் துரத்தும்.

பொருளாதார உத்திகள்

10 . புலிகள் இயக்கத்திற்கான பொருளாதாரம் என்பது மக்களிடமிருந்தும் தங்களது செயற்பாடுகளில் இருந்தும் மட்டுமே வந்தது. பொருளாதாரத்திற்கு என்று உலகளாவிய அமைப்புகளைக் கட்டி எழுப்பினார்கள்.  அந்நிய உதவிகள் என்பது இலவசமல்ல,  அவர்களின் கட்டளைகளை கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் இயக்கத்தின் பொருளாதாரம் என்பது வெளியார் யாரையும் நம்பி கட்டமைக்கப்படவில்லை.unnamed 1 பிரபாகரன் சட்டகம்:விடுதலைப்புலிகளின் உத்திகள்(பகுதி-2)-சேதுராமலிங்கம்

11.இருக்கும் பொருளாதாரத்தை மிகச் சிக்கனமாகப் (efficient) பயன்படுத்தினர். பல்வேறு ஆயுதங்களை தாங்களே உற்பத்தியும் செய்தார்கள். உதாரணமாக சிறிய விமானங்களை வாங்கி போர் விமானங்களாக மாற்றினார்கள்.

12 .எதிரியின் ஆற்றலை வீணடித்தனர் உறிஞ்சினர். பல ஆயுத தளபாடங்கள் எதிரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.   சிறு படைகளைக் கொண்டு பெரு நட்டத்தை எதிரிக்கு உருவாக்குவதில் அவர்கள் கைதேந்தவர்கள். சிறிலங்காவின் பொருளாதாரத்தை சிதைத்தார்கள்.

அறிவுசார் உத்திகள்:

13 .அவர்கள் போர் உத்திகளில் மட்டுமில்லாமல், அமைப்புகளைக் கட்டமைக்கும் முறைகளிலும் உலகில் முன்னோடியாக இருந்தார்கள். அவர்கள்தான் முதன் முதலில் குழுக்களின் குழு முறையில் செயற்பட்டு மாபெரும் வெற்றிகளைப் பெற்றவர்கள். அவ்வாறில்லாமல், இந்தியப் படைகளையும் உலக இராணுவங்கள் பயிற்சியளித்த சிறிலங்கா படைகளையும் பலமுறை தோற்கடித்தது சாத்தியப்பட்டிருக்காது. அவர்களின் அறிவு கற்றலின் மூலமும், அனுபவங்களின் மூலமும் படிப்படியாக பரிணமித்து வந்தவை.

போரில் எதிரியின் நிலைகளைப் பற்றிய அறிவு உளவு மூலம் வருவதால், மிகச்சிறந்த உளவுப்படையைக் கட்டமைத்தார்கள். அதே நேரம் தங்களின் நிலைகளைப் பற்றி இரகசியம் காத்தார்கள்.

மொத்தத்தில் புலிகள் சிறிலங்காவைவிட அறிவிலும், ஆற்றலிலும், வேறுபட்ட உத்திகளிலும் உயர்ந்திருந்தனர். போர் உத்திகளிலும் அமைப்பு முறைகளிலும் உலகிற்கே முன்னோடியாக இருந்தனர். மாறாக சிறிலங்கா காலாவதியான போர்  உத்திகளைப் பயன்படுத்தினார்கள்.

அவர்களின் பொருளாதாரத்தை புலிகள் கடுமையாக சேதப்படுத்தினர், பொருளாதாரம் ஒற்றைக்காலில் உலகநாடுகள் அளித்த கடன்களில் நொண்டிக் கொண்டிருந்தது. இதன் விளைவாக  மூன்றாம்  ஈழப்போரில் உலகம் வியக்கும் சாதனைகளைப் படைத்தனர். அப்படி இருந்தும் ஏன் 2009இல் பின்னடைவு ஏற்பட்டது என்று கேள்வி எழும். புலிகள் சிறிலங்காவை எப்பொழுதோ தோற்கடித்து விட்டனர். unnamed 1 1 பிரபாகரன் சட்டகம்:விடுதலைப்புலிகளின் உத்திகள்(பகுதி-2)-சேதுராமலிங்கம்

அவர்கள் 2009இல் பின்னடைவை சந்தித்தது உலகத்திடம், சிறிலங்காவிடம் அல்ல.  2001ஆம் ஆண்டு இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின் உலகில் அனைத்து போராடும் குழுக்களுக்கும் எதிரான நிலை ஏற்பட்டது. புலிகளின் பொருளாதாரம் முடக்கப்பட்டது, ஆயுத வரவு முடக்கப்பட்டது, காட்டிக் கொடுக்கப்பட்டது; ஆனால் அதே நேரம் சிறிலங்காவிற்கு பல கோடிகள் கடன் அளிக்கப்பட்டது, ஆயுதங்கள் கொட்டப்பட்டது, புலிகளுக்கு எதிரான புதிய போர் வியூகங்களை உலக இராணுவங்கள் கற்பித்தன, பல உலகத்தமிழர் அமைப்புகள் தடை செய்யப்பட்டன, உலக ஆதரவு சிறிலங்காவின் பக்கம் சென்றது.

இவை போன்று அனைத்தையும் புலிகளுக்கு எதிராக உலகம் செய்தது. இந்த நிலைமையில் யார்தான் போரிட முடியும்? இத்தனைக்கும் 2001இல் நடந்த நிகழ்வுக்கும் புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு பூலோக அரசியல் சுனாமி, அனைத்து தேசிய  போராட்டங்களையும் தாக்கியது. இது போன்ற முற்றிலும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எப்படி திட்டமிட முடியும்?  புலிகளுக்கு 2009இல் பின்னடைவு ஏற்பட்டாலும் புலிகள் மீண்டெழுந்திருப்பார்கள், ஆனால் புலிப் பண்பாடு இல்லாதபடி குழுக்களின் குழு ஈழத்தில் முற்றிலும் அழிக்கப்பட்டது  அதனால்தான் அவர்கள் மீளெழ முடியாமல் போனது.

புலிகளை  அழிப்பது அவ்வளவு எளிதானது  அல்ல. அது  இந்தியாவாலோ சிங்களத்தாலோ முடியாத காரியம்.  புலிகள் எதிரிகளைவிட மிகச்சிக்கலான அமைப்பு.   ஒரு உலக வலைப்பின்னலை உடைக்க இன்னொரு உலக வலைப் பின்னலால் மட்டுமே  முடியும்.   முடிவில் ஒரு பெரிய உலக நாடுகளின் கூட்டு சதியால் உருவாக்கிய வலைப் பின்னலே  புலிகளை அழித்தது.

புலிகளின் ஒட்டுமொத்த பெருந் திட்டத்தில் எந்தப் பிழையும் இல்லை. அதை நடைமுறைப்படுத்துவதில்  சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம், அதற்காக அவர்களின் பெருந்திட்டமே தவறு என்பது ஆதாரமற்றது. இவ்வுலகில் நாம் உறுதியாக வெல்வதற்கென்று எந்த திட்டத்தையும் நம்மால் தீட்ட முடியாது. நமது வெற்றி வாய்ப்புகளைக் கூட்டுவதற்கு ஒட்டுமொத்தப் பார்வை கொண்டு பல்வேறு அமைப்புகளை உருவாக்கி பரிணமித்துக் கொண்டே செல்ல வேண்டும்.

வாய்ப்பு அமையும் பொழுது வெற்றி பெறுவோம். அது எப்பொழுது அமையும், எப்படி அமையும் என்று கணிக்க முடியாது. நாம் எதிர்காலத்தை நம்பிக்கயுடனே அணுக முடியும். புலிகள் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன் அணுகினார்கள். வெற்றிக்கான முழுப் பாதை தெரிந்தால்தான் செயல்படுவேன் என்றால். பிரபாகரன் ஒன்றைத் துப்பாக்கியைத் தூக்கியே இருக்க முடியாது. நாம் முடிந்த அளவு நமது செயற்பாடுகளை அறிவு பூர்வமாக முடுக்கி, நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்.  இது தான் பிரபாகாரனின் பெருந் திட்டம்.

 

 

தமிழ் கட்சிளை ஒருங்கிணைப்பது சாத்தியமில்லை(நேர்காணல்)-பபிலராஜ்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு, காணாமல் போனோர் விவகாரம், சிறீலங்கா அரச தலைவர் கோத்தபயா ராஜபக்ஸவின் அறிவிப்பு, தற்போதைய நாட்டு நிலைமைகள் என்பன தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் எட்வேட் பபிலராஜ் அவர்கள் இலக்கு இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.

கேள்வி:- எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் எவ்வாறு செயற்பட வேண்டுமென பல்கலைக்கழக சமூகம் எதிர்பார்க்கின்றது?

நாங்கள் முன்னர் ஆறு தமிழ்க் கட்சிகளையும் ஒருங்கிணைத்து பேசியதை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதென்பது சாத்தியமற்றது. ஏனெனில், ஆசனப் பங்கீடு தொடர்பான விடயங்களில் அவர்கள் உடன்பாட்டிற்கு வரமாட்டார்கள்.

தமிழ்க் கட்சிகள் மூன்று பிரிவாக பிரிந்து நிற்பதைவிட குறைந்தது இரண்டு பிரிவாகவாவது நிற்பது சிறந்தது என எதிர்பார்க்கின்றோம். தமிழர்களுக்கான ஆசனங்கள் குறைவாகவே உள்ளன. எனவே தமிழ்க் கட்சிகள் மூன்றாக பிரிந்து நின்றால், தேசியக் கட்சிகளுக்கு வசதியாக இருக்கும் என்பதால் இரண்டாக நிற்பதை தான் அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள். அப்படியான நிலை உருவாகுமா என்பது கேள்விக்குறியே.

கேள்வி:- தற்போதைய காலகட்டத்தில் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் உங்கள் பணி எவ்வாறு இருக்கின்றது?

தற்போது நாங்கள் இந்த முயற்சியில் ஈடுபடவில்லை. ஏனெனில், எங்கள் ஒன்றியத்தின் காலம் முடிவடையும் நேரம் வந்து விட்டது . இனி புதிதாக வரும் ஒன்றியம் தான் இந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கேள்வி:-காணாமல் போனோர் தொடர்பான போராட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை காணாமல் போனோர் அனைவரும் இறந்து விட்டார்கள் என அரசாங்கம் கூறியுள்ளது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

காணாமல் போனோர் இறந்து விட்டார்கள் என்பது காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பெரும்பாலும் தெரியும். ஆனால் அவர்கள் எவ்வாறு இறந்தார்கள்? மேலும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கான நியாயமான நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் தான் நாங்கள் அடுத்த கட்டமாக நகரவேண்டிய நிலையில் உள்ளோம்.

அரசாங்கம் இப்போது தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் காணாமல் போனோர் இறந்து விட்டார்கள் என்றும் அவர்களுக்குரிய நீதியைப் பெற்றுக் கொள்வதே சரியானது என்பது அவர்களுக்கு முன்னரே தெரிந்திருந்தது.unnamed 2 தமிழ் கட்சிளை ஒருங்கிணைப்பது சாத்தியமில்லை(நேர்காணல்)-பபிலராஜ்

கேள்வி:-காணாமல் போனோர் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கும் பொறுப்பற்ற அறிவித்தல் தொடர்பில் என்ன கருதுகிறீர்கள்?

அவர்களின் பொறுப்பற்ற பதில் மக்களை ஒரு விரக்தி நிலைக்கே இட்டுச் செல்லும். ஆனால் இன்றைய அரசாங்கம் தாங்கள் எல்லாவற்றிலும் வெளிப்படையாக செயற்படுகின்றோம் என்ற போர்வையில் இவ்வாறு கூறி சிலவிடயங்களிலிருந்து தாங்கள் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

கேள்வி:-ஐந்து தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் உங்களுக்கு சவால்கள் ஏதாவது இருந்ததா?

வர்களை ஓரிடத்தில் ஒன்று சேர்த்து பேசுகின்ற போது, பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் இருந்தது. அவர்களை தொடர்ச்சியாக ஒன்று சேர்ப்பது என்பதே ஒரு சவாலாகவே இருந்தது. ஏனெனில் ஒவ்வொருவரினதும் பாதைகள் வேறு வேறாக இருக்கும் போது அவர்களை ஒரே பாதையில் இணைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாக காணப்பட்டது.

கேள்வி:-எதிர்வரும் பொதுத் தேர்தலில், புலம்பெயர் சமூகம் மற்றும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தமிழ் மக்களின் நலன்களுக்காக எவ்வாறு செயற்பட வேண்டும் என பல்கலைக்கழக சமூகம் சார்பாக நினைக்கின்றீர்கள்?

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை தமிழ்க் கட்சிகள் முற்றாக நிறைவேற்றியது என்று கூறமுடியாது. இன்றிருக்கும் சூழ்நிலையில் ஆசனங்கள் குறையும் வாய்ப்புக்கள் உள்ளன. அவர்கள் ஆசனங்களுக்காக போட்டியிடும் நிலையில் உள்ளனர். மக்களுக்காக – அவர்களின் உரிமைக்காக அவர்கள் அனைவரும் ஒன்று சேர்வதற்காக, புலம்பெயர் சமூகம் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். சில புலம்பெயர் அமைப்புக்கள் தான் இங்கு இருக்கும் அமைப்புக்களை உடைத்து விட்டதாக கருதப்படும் சூழ்நிலையில், தமிழ்க் கட்சிகள் தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்பது தொடர்பாக எங்களிடம் ஒரு விரக்தியான நிலையே காணப்படுகின்றது.

கேள்வி:-தமிழ் அரசியலிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளிலும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கு மிகப் பெரியளவில் இருக்கின்றது. புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசின் மூலம் உங்களுக்கு என்ன பாதகமான அல்லது சாதகமான நிலைகள் காணப்படுகின்றது?

சாதகமான விடயங்கள் இல்லை. ஆனால் பல விடயங்களில் சவால்கள் உள்ளன. இவ்வளவு நாளாக மக்களுக்கான போராட்டங்களில் பங்கு பற்றும் போது எதிர் நோக்கும் சவால்களைவிட தற்போது இன்னும் அதிக சவால்களை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு முகம் கொடுக்கின்றோம்.

கேள்வி:-நீங்கள் கட்சிகளை ஒருங்கிணைக்கும் போது இராணுவ புலனாய்வு அமைப்புகளாலோ அல்லது பெயர் குறிப்பிடப்படாத குழுக்களினாலோ உங்களுக்கோ அல்லது பல்கலைக்கழக சமூகத்திற்கோ ஏதாவது அச்சுறுத்தல்கள் உள்ளதா?

கட்சிகளை ஒருங்கிணைக்கும் விவகாரத்தில் அப்படியான அச்சுறுத்தல்கள் எதுவும் வரவில்லை.

கேள்வி:-தற்போதிருக்கும் நிலைமைகள் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?

எங்களைவிட மக்கள் தெளிவாக உள்ளனர். தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களிக்காது, கடந்தகால நிலைமைகளை மனதில் வைத்து வாக்களித்து, பாராளுமன்றத்திற்கு சரியானவர்களை அனுப்ப வேண்டும். யார் யார் தேர்தலில் நிற்பது என்று கட்சிகளிடையே முரண்பாடுகள் இருக்கின்றது. எனவே மக்கள் சரியாக உணர்ந்து வாக்களிப்பதே சரியானது.

கேள்வி:-பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாகவும், வறுமையில் வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர். தற்போதைய நிலையில் அரசியலுக்கு அப்பால் இவர்களுக்கு என்ன உதவிகள் அல்லது எந்தவிதமான ஊக்குவிப்புகள் தேவை என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

வன்னியிலிருந்து வந்து விடுதிகளில் தங்கியிருந்து கல்வி கற்கும் மாணவர்களில் ஒரு சிலருக்கே போதுமான நிதியுதவி கிடைக்கின்றது. பெரும்பாலானவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் கல்வியை தொடர்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றார்கள். நிதி நெருக்கடிகளினால் இரவில் வேலைக்கு சென்று படிக்கும் மாணவர்களும் இருக்கின்றார்கள். பல மாணவர்கள் மதிய உணவிற்கே வசதியில்லாது இருக்கின்றார்கள். இவ்வாறு பலவகையான இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் நிலையில் மாணவர்கள் உள்ளனர்.

கேள்வி:-அவர்களின் கல்வியை தொடர அரசியல் பிரமுகர்கள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களிடையே எவ்வாறான உதவிகளை இவர்களுக்காக எதிர்பார்க்கின்றீர்கள்?

புலம்பெயர் தேசத்திலுள்ளவர்கள் இவ்வாறான மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கான நிதியுதவிகளை வழங்குமிடத்து அவர்கள் கல்வியை தொடர முடியும்.

 

அமெரிக்க அதிபரின் மத்திய கிழக்கிற்கான அமைதித்திட்டம் – இஸ்ரேலின் இறையான்மைக்குள் சென்றது பலஸ்தீனம்

கடந்த செவ்வாய்க்கிழமை (28) அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்ப் மத்திய கிழக்குக்கான அமைத்தித் திட்டத்தை அறிவித்தார். அவர் அறிவித்த திட்டம் அவர் கையில் இருந்த காகிதத்தை விட பெறுமதியற்றது.

தனது கையில் இருந்த காகிதத்தில் காணப்பட்ட எழுத்துப் பிழைகளையும் ரம்ப் கவனிக்கவில்லை என்பது அவருக்கு மத்திய கிழக்கு தொடர்பில் எந்த அறிவும் இல்லை என்பதைக் காட்டுகின்றது என தெரிவிககின்றனர் ஆய்வாளர்கள். இந்த அறிவிப்பின் பிரதான நோக்கம் ரம்ப் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு ஆகியவர்களின் அரசியல் பலத்தை அதிகரிப்பதே ஆகும்.

எதுவுமற்ற இந்த அமைதித் திட்டத்தின் பிரதான நோக்கம் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதிகளை சட்டபூர்வமாக இஸ்ரேலுக்கு மாற்றுவதே. இது ஒரு இறந்த திட்டம் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

5 மில்லியன் பலஸ்தீன அகதிகளுக்கு ஐ.நா ஊடாக வழங்கப்படும் 360 மில்லியன் நிதியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு எந்த ஒரு பலஸ்தீன மக்களும் ஆதரவு தரவில்லை என்பதுடன், மேற்குலக ஆதரவு அரபு நாடுகள் அமைதித் திட்டத்தை வரவேற்றபோதிலும் திட்டத்தின் நோக்கத்தை ஆதரிக்கவில்லை. துருக்கியும், ஈரானும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

பலஸ்தீன பிரதமர் மகமூட் அப்பாஸ் இந்த திட்டத்தை எதிர்த்ததுடன், ஜெருசலத்தையோ எமது உரிமைகளையோ யாரும் விற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அதாவது பலஸ்தீன மக்களிடம் எஞ்சியுள்ள நிலத்தையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்க முற்பட்டுள்ளது. 1917 ஆம் ஆண்டு பிரித்தானியா மேற்கொண்டது போன்ற ஒரு செயல் இது. 1947 ஆம் ஆண்டு பாரபட்சமாக நடந்துகொண்ட ஐ.நா 30 விகித மக்கள் தொகையை கொண்ட இஸ்ரேலுக்கு 55 விகித நிலத்தையும் 67 சத விகிதம் கொண்ட பலஸ்தீன மக்களுக்கு 45 விகித நிலத்தையும் வழங்கியிருந்தது.

Palestine அமெரிக்க அதிபரின் மத்திய கிழக்கிற்கான அமைதித்திட்டம் - இஸ்ரேலின் இறையான்மைக்குள் சென்றது பலஸ்தீனம்ஆனால் தற்போதைய அமெரிக்காவின் திட்டம் 15 விகித நிலத்தையே பலஸ்தீன மக்களுக்கு வழங்கியுள்ளதுடன், 85 விகித பலஸ்தீனப் பிரதேசம் இஸ்ரேலின் இறையான்மையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜெருசலம் இஸ்ரேலின் பிரிக்க முடியாத தலைநகரம் என்று 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா அங்கீகரித்திருந்தது.

அமெரிக்காவின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு பலஸ்தீன பிரதமருக்கு அழுத்தம் கொடுத்துவரும் சவுதி அரேபியா, ஜெருசலமுக்கு பதிலாக அபு டிஸ் என்னும் அருகில் உள்ள நகரத்தை தலைநகராக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுள்ளது.

அமெரிக்காவின் திட்டம் என்பது அனைத்துலக விதிகள் ஐ.நா தீர்மானங்கள், நீதிமன்ற உத்தரவுகள் எல்லாவற்றையும் புறம்தள்ளியுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். பலஸ்தீனத்தின் நண்பன் என்று கூறும் சிறீலங்கா அமெரிக்காவின் திட்டத்தை ஆதரரிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

 

 

பிரித்தானியாவில் கொல்லப்பட்டவருக்கு சிறீலங்காவில் குடும்பம் உண்டு

கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) பிரித்தானியாவில் பொதுமக்களை கத்தியால் தாக்கியபோது பிரித்தானியா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவருக்கு சிறீலங்காவில் குடும்பம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்திருந்தனர், அவர்களில் ஒருவர் தற்போதும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலை மேற்கொண்டவர் சுரேஸ் மாமூர் பராஸ் அம்மான் எனப்படும் 20 வயது இளைஞர் என்றும் அவருக்கு சிறீலங்காவில் குடும்ப உறவினர்கள் உள்ளனர் எனவும் பிரித்தானியா காவல்துறை தெரிவித்துள்ளது.

ஐ.எஸ்.ஜ.எஸ் எனப்படும் அமைப்பின் தீவிர ஆதரவாளராக செயற்பட்ட இவர் அந்த அமைப்பின் பிராச்சார ஆவணங்களை வைத்திருந்த குற்றத்திற்காக 2018 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். எனினும் இரு தினங்களுக்கு முன்னர் விடுதலையான அவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

விடுதலையான அவரை காவல்துறையினர் சாதாரண உடைகளில் பின்தொடர்ந்து சென்றதால் அவர் தாக்குதல் மேற்கொண்ட சமயம் சாதாரண உடையில் இருந்த காவல்துறையினர் உடனடியாகவே தமது கைத்துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

தாக்குதலாளி தற்கொலைதாரிகள் அணியும் உடை அணிந்திருந்தபோதும், அது போலியானது என தெரிவிக்கப்படுகின்றது.