தமிழ் கட்சிளை ஒருங்கிணைப்பது சாத்தியமில்லை(நேர்காணல்)-பபிலராஜ்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு, காணாமல் போனோர் விவகாரம், சிறீலங்கா அரச தலைவர் கோத்தபயா ராஜபக்ஸவின் அறிவிப்பு, தற்போதைய நாட்டு நிலைமைகள் என்பன தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் எட்வேட் பபிலராஜ் அவர்கள் இலக்கு இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.

கேள்வி:- எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் எவ்வாறு செயற்பட வேண்டுமென பல்கலைக்கழக சமூகம் எதிர்பார்க்கின்றது?

நாங்கள் முன்னர் ஆறு தமிழ்க் கட்சிகளையும் ஒருங்கிணைத்து பேசியதை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதென்பது சாத்தியமற்றது. ஏனெனில், ஆசனப் பங்கீடு தொடர்பான விடயங்களில் அவர்கள் உடன்பாட்டிற்கு வரமாட்டார்கள்.

தமிழ்க் கட்சிகள் மூன்று பிரிவாக பிரிந்து நிற்பதைவிட குறைந்தது இரண்டு பிரிவாகவாவது நிற்பது சிறந்தது என எதிர்பார்க்கின்றோம். தமிழர்களுக்கான ஆசனங்கள் குறைவாகவே உள்ளன. எனவே தமிழ்க் கட்சிகள் மூன்றாக பிரிந்து நின்றால், தேசியக் கட்சிகளுக்கு வசதியாக இருக்கும் என்பதால் இரண்டாக நிற்பதை தான் அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள். அப்படியான நிலை உருவாகுமா என்பது கேள்விக்குறியே.

கேள்வி:- தற்போதைய காலகட்டத்தில் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் உங்கள் பணி எவ்வாறு இருக்கின்றது?

தற்போது நாங்கள் இந்த முயற்சியில் ஈடுபடவில்லை. ஏனெனில், எங்கள் ஒன்றியத்தின் காலம் முடிவடையும் நேரம் வந்து விட்டது . இனி புதிதாக வரும் ஒன்றியம் தான் இந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கேள்வி:-காணாமல் போனோர் தொடர்பான போராட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை காணாமல் போனோர் அனைவரும் இறந்து விட்டார்கள் என அரசாங்கம் கூறியுள்ளது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

காணாமல் போனோர் இறந்து விட்டார்கள் என்பது காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பெரும்பாலும் தெரியும். ஆனால் அவர்கள் எவ்வாறு இறந்தார்கள்? மேலும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கான நியாயமான நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் தான் நாங்கள் அடுத்த கட்டமாக நகரவேண்டிய நிலையில் உள்ளோம்.

அரசாங்கம் இப்போது தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் காணாமல் போனோர் இறந்து விட்டார்கள் என்றும் அவர்களுக்குரிய நீதியைப் பெற்றுக் கொள்வதே சரியானது என்பது அவர்களுக்கு முன்னரே தெரிந்திருந்தது.unnamed 2 தமிழ் கட்சிளை ஒருங்கிணைப்பது சாத்தியமில்லை(நேர்காணல்)-பபிலராஜ்

கேள்வி:-காணாமல் போனோர் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கும் பொறுப்பற்ற அறிவித்தல் தொடர்பில் என்ன கருதுகிறீர்கள்?

அவர்களின் பொறுப்பற்ற பதில் மக்களை ஒரு விரக்தி நிலைக்கே இட்டுச் செல்லும். ஆனால் இன்றைய அரசாங்கம் தாங்கள் எல்லாவற்றிலும் வெளிப்படையாக செயற்படுகின்றோம் என்ற போர்வையில் இவ்வாறு கூறி சிலவிடயங்களிலிருந்து தாங்கள் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

கேள்வி:-ஐந்து தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் உங்களுக்கு சவால்கள் ஏதாவது இருந்ததா?

வர்களை ஓரிடத்தில் ஒன்று சேர்த்து பேசுகின்ற போது, பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் இருந்தது. அவர்களை தொடர்ச்சியாக ஒன்று சேர்ப்பது என்பதே ஒரு சவாலாகவே இருந்தது. ஏனெனில் ஒவ்வொருவரினதும் பாதைகள் வேறு வேறாக இருக்கும் போது அவர்களை ஒரே பாதையில் இணைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாக காணப்பட்டது.

கேள்வி:-எதிர்வரும் பொதுத் தேர்தலில், புலம்பெயர் சமூகம் மற்றும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தமிழ் மக்களின் நலன்களுக்காக எவ்வாறு செயற்பட வேண்டும் என பல்கலைக்கழக சமூகம் சார்பாக நினைக்கின்றீர்கள்?

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை தமிழ்க் கட்சிகள் முற்றாக நிறைவேற்றியது என்று கூறமுடியாது. இன்றிருக்கும் சூழ்நிலையில் ஆசனங்கள் குறையும் வாய்ப்புக்கள் உள்ளன. அவர்கள் ஆசனங்களுக்காக போட்டியிடும் நிலையில் உள்ளனர். மக்களுக்காக – அவர்களின் உரிமைக்காக அவர்கள் அனைவரும் ஒன்று சேர்வதற்காக, புலம்பெயர் சமூகம் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். சில புலம்பெயர் அமைப்புக்கள் தான் இங்கு இருக்கும் அமைப்புக்களை உடைத்து விட்டதாக கருதப்படும் சூழ்நிலையில், தமிழ்க் கட்சிகள் தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்பது தொடர்பாக எங்களிடம் ஒரு விரக்தியான நிலையே காணப்படுகின்றது.

கேள்வி:-தமிழ் அரசியலிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளிலும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கு மிகப் பெரியளவில் இருக்கின்றது. புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசின் மூலம் உங்களுக்கு என்ன பாதகமான அல்லது சாதகமான நிலைகள் காணப்படுகின்றது?

சாதகமான விடயங்கள் இல்லை. ஆனால் பல விடயங்களில் சவால்கள் உள்ளன. இவ்வளவு நாளாக மக்களுக்கான போராட்டங்களில் பங்கு பற்றும் போது எதிர் நோக்கும் சவால்களைவிட தற்போது இன்னும் அதிக சவால்களை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு முகம் கொடுக்கின்றோம்.

கேள்வி:-நீங்கள் கட்சிகளை ஒருங்கிணைக்கும் போது இராணுவ புலனாய்வு அமைப்புகளாலோ அல்லது பெயர் குறிப்பிடப்படாத குழுக்களினாலோ உங்களுக்கோ அல்லது பல்கலைக்கழக சமூகத்திற்கோ ஏதாவது அச்சுறுத்தல்கள் உள்ளதா?

கட்சிகளை ஒருங்கிணைக்கும் விவகாரத்தில் அப்படியான அச்சுறுத்தல்கள் எதுவும் வரவில்லை.

கேள்வி:-தற்போதிருக்கும் நிலைமைகள் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?

எங்களைவிட மக்கள் தெளிவாக உள்ளனர். தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களிக்காது, கடந்தகால நிலைமைகளை மனதில் வைத்து வாக்களித்து, பாராளுமன்றத்திற்கு சரியானவர்களை அனுப்ப வேண்டும். யார் யார் தேர்தலில் நிற்பது என்று கட்சிகளிடையே முரண்பாடுகள் இருக்கின்றது. எனவே மக்கள் சரியாக உணர்ந்து வாக்களிப்பதே சரியானது.

கேள்வி:-பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாகவும், வறுமையில் வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர். தற்போதைய நிலையில் அரசியலுக்கு அப்பால் இவர்களுக்கு என்ன உதவிகள் அல்லது எந்தவிதமான ஊக்குவிப்புகள் தேவை என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

வன்னியிலிருந்து வந்து விடுதிகளில் தங்கியிருந்து கல்வி கற்கும் மாணவர்களில் ஒரு சிலருக்கே போதுமான நிதியுதவி கிடைக்கின்றது. பெரும்பாலானவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் கல்வியை தொடர்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றார்கள். நிதி நெருக்கடிகளினால் இரவில் வேலைக்கு சென்று படிக்கும் மாணவர்களும் இருக்கின்றார்கள். பல மாணவர்கள் மதிய உணவிற்கே வசதியில்லாது இருக்கின்றார்கள். இவ்வாறு பலவகையான இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் நிலையில் மாணவர்கள் உள்ளனர்.

கேள்வி:-அவர்களின் கல்வியை தொடர அரசியல் பிரமுகர்கள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களிடையே எவ்வாறான உதவிகளை இவர்களுக்காக எதிர்பார்க்கின்றீர்கள்?

புலம்பெயர் தேசத்திலுள்ளவர்கள் இவ்வாறான மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கான நிதியுதவிகளை வழங்குமிடத்து அவர்கள் கல்வியை தொடர முடியும்.