சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி வரிச்சலுகை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரையிலும் நடைமுறையில் இருக்கும் ஆனால் சிறீலங்கா அரசின் செயற்பாடுகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என சிறீலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை (04) ஏற்றுமதியாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
27 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வரிச்சலுகை 2017 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்காவின் அரசு ஆட்சியில் இருந்தபோது வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த வரிச்சலுகையை பெறும் நாடுகளின் மனித உரிமை செயற்பாடுகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சூழல் பாதுகாப்பு போன்றவை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும், இந்த நிபந்தனைகள் மீறப்படும் சமயத்தில் சலுகை நிறுத்தப்படும் எனவும் டெனிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று(05) காலை நடிகர் ரஜனிகாந் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தார். அதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கையில், ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான வழங்கப்பட முடியாது என்று கூறியிருக்கின்றார்.
இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜனிகாந்த், குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி பத்திரிகையாளர்கள் வினவிய போது ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தான் நல்லது. அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வசிக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு இப்படியான ஒரு சலுகையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதற்கு ஒரு மணிநேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். அவர் தனது பதிலில் அரசியலமைப்பின் பிரிவு 9இன் கீழ் இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது என்றும் இது தொடர்பாக சிறீலங்கா அரசுடன் ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்பும் இல்லை என்று கூறியிருக்கின்றார்.
மேலும் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் கோகுலகிருஸ்ணன், லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கு, ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை என்று மத்திய அரசின் இணை அமைச்சர் ஒருவர் பதிலளித்திருந்தார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஈழத் தமிழர்களின் நிலை பற்றி இதுவரை மத்திய அரசு எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. முதன்முறையாக இந்த அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கைவிடப்பட்ட வயற்காணிகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளல்’ நிகழ்வின் வவுனியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ நிகழ்வானது வெங்கலச் செட்டிக்குள பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அருவித்தோட்டம் கிராமத்தில் இன்று நடைபெற்றது.
கைவிடப்பட்ட வயற் காணிகளை விவசாய காணிகளாக மாற்றி பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் திட்டம் நாடு பூராகவும்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்திற்கான நிகழ்வானது கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் செட்டிகுளம் கம நலசேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் அருவித் தோட்டம் பகுதியில் சிறப்பாகஇடம்பெற்றது.
இந்நிகழ்வில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன், வவுனியா நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர் கே.இமாஷலன், திணைக்கள உத்தியோகத்தர்கள்,கமக்கார அமைப்பினர், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டு கைவிடப்பட்ட நிலத்தில் பயிற்செய்கை நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தனர்.
வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற இளம் தாய் மரணமடைந்ததுடன் மாணவன் உட்பட இருவர் படு காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்…
குறித்த பகுதியில் அமைந்துள்ள வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் நின்ற வாகனம் ஒன்றினை அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பின்புறமாக நோக்கி செலுத்தியுள்ளார்.
இதன் போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வேகமாக பின்புறமாக நோக்கிசென்று வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இரு துவிச்சக்கர வண்டியுடன் மோதி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தின் வேலியையும் சோதமாக்கியது.
விபத்தில் துவிச்சக்கர வண்டியில் தனது 7 வயது பாடசாலை மாணவனை ஏற்றிச்சென்ற இளம் தாய் உட்பட பாடசாலை மாணவனும் மற்றுமொரு பெண்ணும் படு காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இதன் போது ச. புஸ்பராணி வயது 36 என்ற 3 பிள்ளைகளின் தாய் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையில் ஒரு நூற்றாண்டு கால தமிழர் கல்வியை ஆராய்ந்து பார்த்தால், கல்வியின் போக்கானது எல்லாச் சமூக மட்டங்களிலும் பரவி, சமூகப் பிரிவினையை மாற்றி,எல்லா மட்டத்திலும் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான காரணியாகத் திகழ்ந்துள்ளது. தமிழர் சமுதாயமானது கல்விக்கு முன்னுரிமை காட்டுகின்ற இயல்பைக் கொண்டதாகையால், சமூக ஏற்றத் தாழ்வுகளை ஊடறுத்து கல்வியானது அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்து சமத்துவத்தை நோக்கிய நிலைக்கு பங்களிப்புச் செய்கின்றது. இது இன்றைய அறிவுசார் தொழில்நுட்ப யுகத்திலே இலகுவானதாகவும் வேகமானதாகவும் அமையப் பெறுகின்றது.
ஆங்கிலேயரின்காலம்
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக் காலங்களிலும்,அதற்கு முந்தைய காலத்தில் காணப்பட்ட தமிழரின் மரபுவழிக் கல்வி முறையிலும், கல்வி வாய்ப்புக்கள் சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குச் சார்பானதாகவே இருந்தது.
அனாலும், ஆங்கிலேயர் காலத்தில் கல்விக்கான வாய்ப்புகள் பரந்துபட்டதாகவே காணப்பட்டது. அவர்களது சமய நிறுவனங்கள் கல்வியை வழங்குவதில் பெரிதும் ஈடுபட்டன. தமது சமயத்தை வளர்க்கும் நோக்கம் அவர்களுக்குப் பிரதான காரணமாக இருந்தது. அவர்களது அரசாங்கம் இச்சமய நிறுவனங்களுக்கு பெரிதும் உதவியது. இது இந்து சமயத்தில் ஏற்படுத்திய பின்னடைவான நிலையின் காரணமாக இந்து சமயம் சார்பான ஒரு எழுச்சிக்கும் அதன் மறுமலர்ச்சிக்கும் வித்திட்டது.
இக்காலத்திலேயே ஆங்கில மொழி மூலமானகல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கு முன்னுரிமையும் வழங்கப்பட்டிருந்தது. அரசாங்கத் தொழில் பெற்று, பொருளாதாரத்தில் உயர்ச்சி பெறுவதற்கு ஆங்கில மொழிக் கல்வி உதவியாக இருந்தது. ஆங்கில மொழியில் கற்பதற்குப் போட்டியும் நிலவியது. ஆங்கில மொழிக் கல்வி மத்திய மற்றும் உயர்தர வகுப்பினருக்கு வாய்ப்பாக இருந்தது. வசதி படைத்தவர்கள் ஆங்கிலத்தில் தரமான ஆரம்பக் கல்வியையும் பெற்றார்கள்.
சுயமொழிக் கல்வியானது அவர்களது சமய வளர்ச்சிக்குபக்கபலமாக அமையும் என்கின்ற கொள்கைக்கு அமைவாக சுயமொழிக் கல்விக்கும் ஆங்கிலேயர் ஆதரவு வழங்கினார்கள். ஆனால் வசதி குறைந்த பாமர மக்களே சுயமொழியில் தரம் குறைந்த ஆரம்பக் கல்வியைப் பெற்றார்கள்.
1929இன் நிலவரப்படி இலங்கையில் ஏறத்தாழ 5000 பாடசாலைகள் மொத்தமாகக் காணப்பட்டன. இதில், 18%மானவையே ஆங்கில மொழிமூலப் பாடசாலைகள் ஆகும், ஏனைய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் சுயமொழிப் பாடசாலைகளே ஆகும். இருப்பினும் சுயமொழி மூலமான கல்வியின் மூலம் பொருளாதாரம், உயர் பதவியினைப் பெறமுடியாது என்ற எண்ணம் அன்றும் இருந்தது. ஆங்கிலக் கல்வியின் மோகம் அதிகரித்து, வீடுகளில் அங்கிலம் பேசும் மொழியாகவும், சுயமொழியானது வீடுகளில் பணிபுரியும் வேலையாட்களுடன் தொடர்பாடவுமே பயன்பட்டது. எனவே எல்லோருக்கும் தரமான கல்வி கிடைக்கப் பெறாமல் சமூக பொருளாதார சமத்துவமின்மையை உருவாக்கியிருந்தது.
19ஆம் நூற்றாண்டிலேஉயர் கல்வி வாய்ப்புக்கள் பிரித்தானியாவிலே தோன்றியிருந்தது. அது குடியேற்ற நாடாகிய இலங்கையிலும் மூன்றாம் நிலைக் கல்விக்கு வழிகோலியிருந்தது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பட்டப்படிப்பு நெறி காணப்பட்டதும், ஆங்கில மருத்துவப் படிப்பு யாழ்ப்பாணம் மானிப்பாயில் கிரீன் ஞாபகார்த்த(Green Memorial) வைத்தியசாலையில் வழங்கியதையும் உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இலங்கையில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட 1942ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மாணவர்கள் திறமைச் சித்தி மூலம் அதிக அனுமதியைப் பெற்றார்கள். அவ்வாண்டின் மொத்த மாணவர் தொகையில் 32% மாணவர்கள் தமிழ் மாணவர்களாகவே காணப்பட்டார்கள். ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னரான காலகட்டத்தில் இத்தொகையானது குறைந்து சென்றுள்ளது.
ஆங்கிலேயரின் வெளியேற்றத்துக்குச் சற்று முன்னதாக, 1945இல் இலவசக் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது. இது வசதி குறைந்தோரும் ஆங்கிலக் கல்வியைப் பெறுவதற்கு உதவியது. அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் தாய் மொழிக் கல்வி எல்லா ஆரம்ப வகுப்புகளுக்கும்கட்டாயமாக்கப்பட்டது. ஆங்கிலமானது மூன்றாம் வகுப்பில் இருந்து கட்டாய இரண்டாம் மொழிப் பாடமாக்கப்பட்டது. எனவே இலங்கை ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கு முன்னதாக, தமிழர் கல்வியில் ஆங்கிலம் சேர்ந்து கொண்டதானது எதிர்காலத்தை நோக்கிய கல்விப் பரிமாணத்தில் ஒரு சிறந்த விடயமாகவும், இந்து சமயம் சார்ந்த எழுச்சி உருவானது, தமிழர்களின் மொழி, சமய மற்றும் கலாச்சாரத்தின் பற்றுறிதியையும் காட்டுகின்றது.
ஆங்கிலேயருக்குப்பிற்பட்டகாலம்
இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் 1953ஆம் ஆண்டு தொடக்கம் 1960 வரையான காலப்பகுதியில் தாய்மொழிக் கல்வியானது ஆறாம் வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழகம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் 1960ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டமதசார்புடைய கல்வி நிறுவனங்கள் யாவும் அரசுடமையாக்கப்பட்டது. இது இலவசமான அரச கல்வியை அனைவரும் பெறுவதற்கான வசதியைப் பெற்றுக் கொடுத்தது.
மாணவர்களின் பாடசாலைத் தேவையினை நிறைவு செய்யும் நோக்குடன் 1964இன் வெள்ளை அறிக்கையின் அடிப்படையில் பாடசாலைகள் அமைப்பதற்கான வழிகாட்டல் தோன்றியது. இதன் பிரகாரம், இரண்டு மைல்கள் சுற்றளவில் உள்ள மாணவர்களுக்கு ஒரு ஆரம்பப் பாடசாலைகள் எனும் அடிப்படையில், பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. இலவசக் கல்வி, தாய் மொழிக் கல்வி, பொருத்தமான கல்விக் கொள்கை மற்றும் பாடசாலைகளின் அதிகரிப்பு என்பன பாடசாலைகளில் மாணவர்கள் அதிகமாக இணைந்து கொள்ள உதவிய காரணிகளாகக் கொள்ளலாம். இந்நிலைமை தமிழ் மாணவர்களுக்கும் அதிக எண்ணிக்கையில் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்கியது என்று கூறலாம்.
தமிழர்களின் பல்கலைக்கழகக் கல்வியைப் பொறுத்தவரையில், யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்தே அதிகளவான மாணவர்கள் அனுமதிபெறுகின்றார்கள். மலையகத்தில் இது மிகவும் குறைவு. பல்கலைக் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து மாணவர்கள் திறமைச் சித்தியில் பெற்ற மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
இது அதிகளவான தமிழ் மாணவர்கள் அனுமதி பெறும் வாய்ப்பை உருவாக்கி இருந்தது, .குறிப்பாக விஞ்ஞான அடிப்படையிலான போதனைப் பீடங்களுக்கு அதிக தமிழ் மாணவர்களின் அனுமதியானது, இன விகிதாசாரத்திலும் பார்க்க அதிகமாகக் காணப்பட்டமையினால் 1971இல் மொழி அடிப்படையிலான தரப்படுத்தலும், 1977இல் மாவட்ட பங்கீட்டு முறைமையும் கொண்டு வரப்பட்டு தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இது திறமைச் சித்தி பெற்றும் உயர் கல்வியைத் தவற விட்ட மாணவர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியிருந்தது. பின்வரும் நாட்களில் நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைக்கு இதுவும் ஒரு காரணியாக அமையப் பெற்றிருந்தது என்பதில் ஐயமில்லை.
இங்கே கவனிக்க வேண்டிய விடையம் யாதெனில், மத்திய ஆட்சியாளர்களின் கைகளிலே உள்ள கல்விக் கொள்கையானது தேவைக்கு ஏற்றவாறு உருவாக்கவும் நடைமுறைப்படுத்தவும் அதிகாரமளிக்கின்றது. அதன் மூலமாக பிரதேச எதிர்பார்ப்பை உள்வாங்கிக் கொள்ள முடியாது. மாறாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆறுமுக நாவலரால் இந்து சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு இந்துப் பாடசாலைகளை உருவாக்க முடிந்துள்ளது, அவற்றினை நிர்வகிக்க சபையும் அரச ஆதரவுடன் உருவாக்க முடிந்துள்ளது. அதாவது பிரதேச ரீதியில் கல்விக் கொள்கை வகுக்கவும் நடைமுறைப்படுத்தவும் முடிந்துள்ளது என்பதையே அது காட்டுகின்றது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் வகை தொகையின்றி காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதற்கு விமல் வீரவன்சவே சாட்சி என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் காணாமல் போனவர்களை மண்ணுக்குள் தோண்டி பார்க்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர்களின் ஆறாத வடுவாக உள்ள காணாமால் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வு காணாமல் தொடர்ந்துவரும் அரசாங்கங்கள் ஏமாற்றி வருகின்றது.
இந் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விதியொரங்களில் இன்றும் வலிகளை சுமந்து கண்ணீர் மல்க போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமது பிள்ளைகள் என்றோ ஒரு நாள் தம்மிடம் வந்து சேராதா என்ற ஏக்கத்துடனோயே அந்த தேடலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான உறவுகளை புலனாய்வு விசாரணைகள் என்றும் சந்தேகப்பார்வையுடனும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வரும் அரசு தற்போது வெந்த புண்ணில் வேலைப்பாச்சுவது போல் காணாமல் போனோரை மண்ணுக்குள் தோண்டிப்பார்க்குமாறு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சரான விமல் வீரவன்சவின் இக்கருத்தானது அரசாங்கத்தின் கருத்தாகவே பார்க்க முடிகின்றது.
மகிந்த ஆட்சிக்காலத்தில் போர் முடிவுக்கு வந்தபோது வட்டுவாகல் பாலத்திலும் ஓமந்தை இராணுவ சோதனை சாவடியிலும் நலன்புரி முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் வைத்து காணாமல் ஆக்கப்பட்டோரையே இந்த உறவுகள் தேடி அலையும் போது இவ்வாறான கருத்தை விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமையானது அரசாங்கத்தின் உண்மை முகத்தை காட்டியுள்ளது.
எனவே மகிந்த ஆட்சிக்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதனை தனது வாக்குமூலமாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமையினால் அவரை உடன் கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன் இவ்விடயம் தொடர்பில் சர்வதேசமும் கவனம் செலுத்த வேண்டியதுடன் அடுத்து வரும் ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டில் விமல் வீரவன்சவின் கருத்தினை அவதானித்திற்கு கொண்டு செல்ல நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர் அமைப்புக்களிடையே ஒற்றுமை என்ற விடயத்தில் சிலர் தங்களுடைய இருப்பினை தக்கவைப்பதற்காக, ஒற்றுமையினை நிராகரித்து வருவதாகவே கருத வேண்டியுள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
காணொளிவாயிலாக ஜேர்மன் டோர்ட்முன்ட் நகரில், இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, தமிழ்ஊடகங்களுக்கு இக்கருத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ஊடகர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமிழர் அமைப்புக்களிடையே ஒற்றுமை என்ற விடயத்தில் மக்களின் எதிர்பார்ப்பு என்பது புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. நாம் அதனை நிராகரிக்கவில்லை. எல்லோருடனும் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம். முனைகின்றோம். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் ஒற்றுமைக்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன.
என்னைப் பொறுத்தவரை, அன்று பல இயக்கங்கள் காணப்பட்டிருந்தன. அப்போதும் இந்த ஒற்றுமை என்ற விடயம் பேசப்பட்டுத்தான் இருந்தது. ஆனால் ஒற்றுமை வரும் என்று காத்திருக்காமல், தெளிவானதொரு நிகழ்ச்சி நிரலுடன் தமது செயற்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்தனர். மக்கள் அவர்கள் அங்கீகரித்து அவர்களின் பின்னால் நின்றனர்.
அந்த வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில், ஒற்றுமை வரும் வரை காத்திருக்காமல், எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
குறிப்பாக புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையினை மையப்படுத்திய நீதிக்கான செயற்பாடாகட்டும், அரசியல் தீர்வுக்கான பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கமாகட்டும், விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கையாகட்டும் நாம் அனைத்து செயற்பாடுகளையும், அனைவரும் இணைந்ததாகவே முன்னெடுக்க விரும்புகின்றோம். இதன் அடிப்படையில் பல அமைப்புக்களுடன் பேசியிருந்தோம். சில விடயங்களில் ஒன்றாக செயற்பட்டிருந்தாலும் அது நீடிப்பதில்லை.
தமிழீழம் என்ற இலக்கிலோ, அதனை அடைவதற்கான வழியிலோ தெளிவான பார்வை அமைப்புகளிடத்தில் காணப்படும் நிலையில், இணைந்து கொள்வதில் எங்கே தடை இருக்கின்றது என்பதில்தான் கேள்வியாக இருக்கின்றது.
என்னைப் பொறுத்தவரை தங்களுடைய இருப்பினை தக்கவைப்பதற்காக, ஏதோவொரு காரணங்களை முன்வைத்து சிலர் ஒற்றுமையினை நிராகரித்து வருவதாகவே கருத வேண்டியுள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் ஊடகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில்,
– அபிவிருத்தி என்ற பெயரில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையொன்று தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வருகின்றது. இது தமிழர்களின் அடையாள அரசியலை, பண்பாட்டு உரிமைகளை இல்லாது செய்கின்றது. அபிவிருத்தி என்ற கவர்ச்சிகரமான சொல் மூலம் சர்வதேசத்தினை கவர்ந்திழுக்கின்ற உத்தியினை சிறிலங்கா கையாளுகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த தந்திரத்துக்குள் சர்வதேசம் அகப்பட்டு செல்கின்ற நிலைதான் காணப்படுகின்றது. இது நமக்குள்ள பெரும் சவாலான விடயம்.
– சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் செல்லவோ, அதன் செயற்பாட்டுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டோ இருக்க முடியாது. நமக்கான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே நம்து செயற்பாடுகள் இருக்க முடியும். அதன் அடிப்படையில்தான் எமக்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றினை அமைக்கும் முனைப்பில் நாம் உள்ளோம்.
குறிப்பாக சர்வதேச சக்திகள் கொழும்புடன் மட்டும் தமது தொடர்புகளை பேணுவருகின்றனர். ஆனால் இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தியப் பெருங்கடல்சார் அரசியலில் தமிழர் தேசம் கேந்திர முக்கியத்துவம் உள்ள ஒன்று என்ற வகையில், சர்வதேச சக்திகள் எம்முடனும் தொடர்புகளை பேண வேண்டிய நிலையே தேவையானது. அவ்வாறான நிலையினை எட்டுவதற்கான ஒரு முனைப்பாக இந்த நாம் உருவாக்குகின்ற வெளிவிவகாரக் கொள்கை அமையும் என நம்புகின்றோம்.
தமிழர்களை ஒரு தேசிய இனமாகவோ, சிறுபான்மை இனமாகவோ ஏற்றுக் கொள்கின்ற நிலையில் சிறிலங்கா அரசு இல்லை என்பதனைதான் அதன் செயற்பாடுகள் காண்பிக்கின்றன. குறிப்பாக தமிழர் அரசியலையோ, தமிழர் அரசியல் தவைர்களையோ சிறிலங்கா அரசு நிராகரித்து வருகின்றமை. இது இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான ஒரு அரசியல் வெளி இல்லை என்பதனையே வெளிக்காட்டுகின்றது.
இந்நிலையில்தான் நாங்கள் இலங்கைத்தீவுக்கு வெளியே சர்வதேச வெளியில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற வடிவத்தின் ஊடாக ஈழத்தமிழர்களின் அரசியலை முன்னெடுத்து வருகின்றோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.
முல்லைத்தீவு – நாயாற்று பகுதியில், நேற்று முன்தினம் இரவு, கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் கடற்றொழிலாளர் ஒருவரின் வாடிகள், இனந்தெரியாத 2 நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
நாயாற்று பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர், வாடி அமைத்து கடற்றொழிலுக்காக புத்தளத்தில் இருந்து வேலைக்கு ஆட்களை வைத்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளையிலேயே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வாடிகள் இரண்டும், அதில் இருந்த கடற்றொழிலுக்குப் பயன்படும் இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் எரிந்து சாம்பாராகியுள்ளதுடன் படகு ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவில் உருவாகி உலகம் எங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் இன் தாக்கத்திற்கு இதுவரையில் 490 பேர் மரணமடைந்துள்ளதாக சீனா தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் பெரும்பாலானோர் சீனாவிலும், ஒருவர் கொங்கொங் இலும் மற்றுமொருவர் பிலிப்பைன்ஸ் இலும் மரணமடைந்துள்ளனர்.
அதேசமயம், 24,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24,292 பேர் சீனாவிலும் ஏனையவர்கள் ஏனைய நாடுகளிலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனிடையே, சுற்றுலாப் பயணக் கப்பலில் யப்பானுக்கு சென்றவர்களை பரிசோதனை செய்ததில் 10 பயணிகளுக்கு வைரஸ் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கப்பலில் சென்ற 3700 பேரில் 272 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். தொற்று நோய் கண்டறியப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.