இலங்கையில் தமிழர் கல்வியின் நிலை -அ.ஸ்ரீஸ்கந்தராஜா

இலங்கையில் ஒரு நூற்றாண்டு கால தமிழர் கல்வியை ஆராய்ந்து பார்த்தால், கல்வியின் போக்கானது எல்லாச் சமூக மட்டங்களிலும் பரவி, சமூகப் பிரிவினையை மாற்றி,எல்லா மட்டத்திலும் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான காரணியாகத் திகழ்ந்துள்ளது. தமிழர் சமுதாயமானது கல்விக்கு முன்னுரிமை காட்டுகின்ற இயல்பைக் கொண்டதாகையால், சமூக ஏற்றத் தாழ்வுகளை ஊடறுத்து கல்வியானது அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்து சமத்துவத்தை நோக்கிய நிலைக்கு பங்களிப்புச் செய்கின்றது. இது இன்றைய அறிவுசார் தொழில்நுட்ப யுகத்திலே இலகுவானதாகவும் வேகமானதாகவும் அமையப் பெறுகின்றது.

ஆங்கிலேயரின் காலம்

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக் காலங்களிலும்,அதற்கு முந்தைய காலத்தில் காணப்பட்ட தமிழரின் மரபுவழிக் கல்வி முறையிலும், கல்வி வாய்ப்புக்கள் சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குச் சார்பானதாகவே இருந்தது.1 C87LCz1nKogoMaALpnn mw இலங்கையில் தமிழர் கல்வியின் நிலை -அ.ஸ்ரீஸ்கந்தராஜா

அனாலும், ஆங்கிலேயர் காலத்தில் கல்விக்கான வாய்ப்புகள் பரந்துபட்டதாகவே காணப்பட்டது. அவர்களது சமய நிறுவனங்கள் கல்வியை வழங்குவதில் பெரிதும் ஈடுபட்டன. தமது சமயத்தை வளர்க்கும் நோக்கம் அவர்களுக்குப் பிரதான காரணமாக இருந்தது. அவர்களது அரசாங்கம் இச்சமய நிறுவனங்களுக்கு பெரிதும் உதவியது. இது இந்து சமயத்தில் ஏற்படுத்திய பின்னடைவான நிலையின் காரணமாக இந்து சமயம் சார்பான ஒரு எழுச்சிக்கும் அதன் மறுமலர்ச்சிக்கும் வித்திட்டது.

இக்காலத்திலேயே ஆங்கில மொழி மூலமானகல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கு முன்னுரிமையும் வழங்கப்பட்டிருந்தது. அரசாங்கத் தொழில் பெற்று, பொருளாதாரத்தில் உயர்ச்சி பெறுவதற்கு ஆங்கில மொழிக் கல்வி உதவியாக இருந்தது. ஆங்கில மொழியில் கற்பதற்குப் போட்டியும் நிலவியது. ஆங்கில மொழிக் கல்வி மத்திய மற்றும் உயர்தர வகுப்பினருக்கு வாய்ப்பாக இருந்தது. வசதி படைத்தவர்கள் ஆங்கிலத்தில் தரமான ஆரம்பக் கல்வியையும் பெற்றார்கள்.

சுயமொழிக் கல்வியானது அவர்களது சமய வளர்ச்சிக்குபக்கபலமாக அமையும் என்கின்ற கொள்கைக்கு அமைவாக சுயமொழிக் கல்விக்கும் ஆங்கிலேயர் ஆதரவு வழங்கினார்கள். ஆனால் வசதி குறைந்த பாமர மக்களே சுயமொழியில் தரம் குறைந்த ஆரம்பக் கல்வியைப் பெற்றார்கள்.

1929இன் நிலவரப்படி இலங்கையில் ஏறத்தாழ 5000 பாடசாலைகள் மொத்தமாகக் காணப்பட்டன. இதில், 18%மானவையே ஆங்கில மொழிமூலப் பாடசாலைகள் ஆகும், ஏனைய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் சுயமொழிப் பாடசாலைகளே ஆகும். இருப்பினும் சுயமொழி மூலமான கல்வியின் மூலம் பொருளாதாரம், உயர் பதவியினைப் பெறமுடியாது என்ற எண்ணம் அன்றும் இருந்தது. ஆங்கிலக் கல்வியின் மோகம் அதிகரித்து, வீடுகளில் அங்கிலம் பேசும் மொழியாகவும், சுயமொழியானது வீடுகளில் பணிபுரியும் வேலையாட்களுடன் தொடர்பாடவுமே பயன்பட்டது. எனவே எல்லோருக்கும் தரமான கல்வி கிடைக்கப் பெறாமல் சமூக பொருளாதார சமத்துவமின்மையை உருவாக்கியிருந்தது.

19ஆம் நூற்றாண்டிலேஉயர் கல்வி வாய்ப்புக்கள் பிரித்தானியாவிலே தோன்றியிருந்தது. அது குடியேற்ற நாடாகிய இலங்கையிலும் மூன்றாம் நிலைக் கல்விக்கு வழிகோலியிருந்தது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பட்டப்படிப்பு நெறி காணப்பட்டதும், ஆங்கில மருத்துவப் படிப்பு யாழ்ப்பாணம் மானிப்பாயில் கிரீன் ஞாபகார்த்த(Green Memorial) வைத்தியசாலையில் வழங்கியதையும் உதாரணமாகக் குறிப்பிடலாம்.Jaffna central College 1825 இலங்கையில் தமிழர் கல்வியின் நிலை -அ.ஸ்ரீஸ்கந்தராஜா

இலங்கையில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட 1942ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மாணவர்கள் திறமைச் சித்தி மூலம் அதிக அனுமதியைப் பெற்றார்கள். அவ்வாண்டின் மொத்த மாணவர் தொகையில் 32% மாணவர்கள் தமிழ் மாணவர்களாகவே காணப்பட்டார்கள். ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னரான காலகட்டத்தில் இத்தொகையானது குறைந்து சென்றுள்ளது.

ஆங்கிலேயரின் வெளியேற்றத்துக்குச் சற்று முன்னதாக, 1945இல் இலவசக் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது. இது வசதி குறைந்தோரும் ஆங்கிலக் கல்வியைப் பெறுவதற்கு உதவியது. அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் தாய் மொழிக் கல்வி எல்லா ஆரம்ப வகுப்புகளுக்கும்கட்டாயமாக்கப்பட்டது. ஆங்கிலமானது மூன்றாம் வகுப்பில் இருந்து கட்டாய இரண்டாம் மொழிப் பாடமாக்கப்பட்டது. எனவே இலங்கை ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கு முன்னதாக, தமிழர் கல்வியில் ஆங்கிலம் சேர்ந்து கொண்டதானது எதிர்காலத்தை நோக்கிய கல்விப் பரிமாணத்தில் ஒரு சிறந்த விடயமாகவும், இந்து சமயம் சார்ந்த எழுச்சி உருவானது, தமிழர்களின் மொழி, சமய மற்றும் கலாச்சாரத்தின் பற்றுறிதியையும் காட்டுகின்றது.

ஆங்கிலேயருக்குப் பிற்பட்ட காலம்

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் 1953ஆம் ஆண்டு தொடக்கம் 1960 வரையான காலப்பகுதியில் தாய்மொழிக் கல்வியானது ஆறாம் வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழகம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் 1960ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டமதசார்புடைய கல்வி நிறுவனங்கள் யாவும் அரசுடமையாக்கப்பட்டது. இது இலவசமான அரச கல்வியை அனைவரும் பெறுவதற்கான வசதியைப் பெற்றுக் கொடுத்தது.

மாணவர்களின் பாடசாலைத் தேவையினை நிறைவு செய்யும் நோக்குடன் 1964இன் வெள்ளை அறிக்கையின் அடிப்படையில் பாடசாலைகள் அமைப்பதற்கான வழிகாட்டல் தோன்றியது. இதன் பிரகாரம், இரண்டு மைல்கள் சுற்றளவில் உள்ள மாணவர்களுக்கு ஒரு ஆரம்பப் பாடசாலைகள் எனும் அடிப்படையில், பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. இலவசக் கல்வி, தாய் மொழிக் கல்வி, பொருத்தமான கல்விக் கொள்கை மற்றும் பாடசாலைகளின் அதிகரிப்பு என்பன பாடசாலைகளில் மாணவர்கள் அதிகமாக இணைந்து கொள்ள உதவிய காரணிகளாகக் கொள்ளலாம். இந்நிலைமை தமிழ் மாணவர்களுக்கும் அதிக எண்ணிக்கையில் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான  சந்தர்ப்பங்களை  வழங்கியது என்று கூறலாம்.

தமிழர்களின் பல்கலைக்கழகக் கல்வியைப் பொறுத்தவரையில், யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்தே அதிகளவான மாணவர்கள் அனுமதிபெறுகின்றார்கள். மலையகத்தில் இது மிகவும் குறைவு. பல்கலைக் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து மாணவர்கள் திறமைச் சித்தியில் பெற்ற மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

இது அதிகளவான தமிழ் மாணவர்கள் அனுமதி பெறும் வாய்ப்பை உருவாக்கி இருந்தது, .குறிப்பாக விஞ்ஞான அடிப்படையிலான போதனைப் பீடங்களுக்கு அதிக தமிழ் மாணவர்களின் அனுமதியானது, இன விகிதாசாரத்திலும் பார்க்க அதிகமாகக் காணப்பட்டமையினால்  1971இல் மொழி அடிப்படையிலான தரப்படுத்தலும், 1977இல் மாவட்ட பங்கீட்டு முறைமையும் கொண்டு வரப்பட்டு தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.cut off1 இலங்கையில் தமிழர் கல்வியின் நிலை -அ.ஸ்ரீஸ்கந்தராஜா

இது திறமைச் சித்தி பெற்றும் உயர் கல்வியைத் தவற விட்ட மாணவர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியிருந்தது. பின்வரும் நாட்களில் நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைக்கு இதுவும் ஒரு காரணியாக அமையப் பெற்றிருந்தது என்பதில் ஐயமில்லை.

இங்கே கவனிக்க வேண்டிய விடையம் யாதெனில், மத்திய ஆட்சியாளர்களின் கைகளிலே உள்ள கல்விக் கொள்கையானது தேவைக்கு ஏற்றவாறு உருவாக்கவும் நடைமுறைப்படுத்தவும் அதிகாரமளிக்கின்றது. அதன் மூலமாக பிரதேச எதிர்பார்ப்பை உள்வாங்கிக் கொள்ள முடியாது. மாறாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆறுமுக நாவலரால் இந்து சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு இந்துப் பாடசாலைகளை உருவாக்க முடிந்துள்ளது, அவற்றினை நிர்வகிக்க சபையும் அரச ஆதரவுடன் உருவாக்க முடிந்துள்ளது. அதாவது பிரதேச ரீதியில் கல்விக் கொள்கை வகுக்கவும் நடைமுறைப்படுத்தவும் முடிந்துள்ளது என்பதையே அது காட்டுகின்றது.

தொடரும்……………