இரத்தினபுரி – கஹவத்தை நீலகாமம் பெருந்தோட்டத்தில் தொழிலாளர் ஒருவர் அமைத்த தற்காலிக குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஒரு தனிப்பட்ட சம்பவமாக ஆரம்பித்திருந்தாலும், அது இன்று முழு மலையக சமூகத்தின் உரிமைப் போராட்டமாக மாறியுள்ளது. கருப்பு ஆடை அணிந்த குண்டர் குழுவொன்று குடியிருப்பை சேதப்படுத்தி, தொழிலாளியை தாக்கிய சம்பவம், பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு, காணி உரிமை, அடிப்படை மரியாதை மற்றும் வாழ்வுரிமை குறித்த கேள்விகளை மீண்டும் தீவிரமாக எழுப்பியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு எதிராக “நாம் நீலகாமம்” என்ற மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டதோடு, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து நீதிக்கான குரலை உயர்த்தின. குறிப்பாக, கொழும்பில் கடந்த 5ஆம் திகதி நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் அதற்கு வலு சேர்க்கும் வகையில் 3ஆம் திகதி ஹட்டனில் நடைபெற்ற மக்கள் ஆர்ப்பாட்டம், இந்த பிரச்சினையை தேசிய அளவி லான விவாதமாக மாற்றியது. இந்தப் போராட்டம் பாரிய அரசியல் அழுத்தங்களையும் உருவாக்கியுள்ளது.
நீலகாமம் சம்பவம் ஆரம்பத்தில் ஒரு உள்ளூர் பிரச்சினையாகவே கருதப்பட்டது. ஆனால், “நாம் மலையகம்” என்ற அமைப்பு தொடர்ந்து முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக, அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் இதை புறக்கணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நீலகாமம் பிரகடனம் வெளியிடப்பட்ட பின்னர், சம்பவம் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. அதன் பின்னர் அரசியல் தலைவர்கள் நேரடியாக சம்பவ இடத்துக்குச் சென்று மக்களை சந்திக்கத் தொடங்கினர்.
அத்துடன், கொழும்பில் நடைபெற்ற போராட் டத்துக்கு முன்பாகவே பாதிக்கப்பட்ட மக்களை நாடாளு மன்றத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கத்தின் பிரதிநிதிகள் முனைந்தனர். இதுவே போராட்டம் அரசியல் மற்றும் நிர்வாக மட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை வெளிப்படுத்தியது. இந்த போராட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இது ஒரே ஒரு குடும்பத்துக்கான நீதிக்கான போராட்டமாக மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த மலையக மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான போராட்டமாக மாற்றப்பட்டது. குறிப்பாக ஹட்டனில் நடைபெற்ற போராட்டத்தில் உரை யாற்றிய மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன் ராஜாராம், மலையக மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இனி அமைதியாக ஏற்கப்படமாட்டாது என எச்சரித்தார்.
“மலையக மக்களை யாராவது சீண்டினால் அது பெருந்தோட்டம் முழுவதும் உணர்வுகளைத் தட்டியெழுப்பும்,” என்ற அவரது கருத்து, போராட்டத்தின் உணர்ச்சி மற்றும் அரசியல் திசையை வெளிப்படுத்தியது. இதன் போது எழுப்பப்பட்ட கேள்விகள் மலையக மக்களிடம் நீண்டகாலமாக தேங்கியிருந்த ஏமாற்றம் மற்றும் கோபத்தை பிரதிபலித்திருந்தது.
நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த நீலகாமம்
நீலகாமம் மற்றும் பிற பெருந்தோட்டப் பகுதிகளில் இடம் பெற்ற தாக்குதல்கள் குறித்து நாடாளுமன்றத்திலும் கடும் விவாதம் எழுந்தது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மனோ கணேஷன், நாமல் ராஜபக்ச மற்றும் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக இடம்பெறும் தாக்குதல்களை சுட்டிக் காட்டினர். இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, “தாக்குதல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. சட்டம் அனைவருக்கும் சமம்” என்று தெரிவித்தார். நீலகாமம் சம்பவம் தொடர்பில் 11 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாகவும், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் அறிவித்தார்.
இதன் மூலம், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினை தேசிய அரசியல் அரங்கில் விவாதிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது. இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கைக ளில் ஒன்று, பெருந்தோட்டப் பகுதிகளில் செயல்படும் முன்னாள் இராணுவத்தினரை உள்ளடக்கிய தனியார் பாதுகாப்பு குழுக்களை அகற்ற வேண்டும் என்பதாகும். இந்த குண்டர் குழுக்கள் தொழிலாளர்களிடம் அச்சம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றன.
இதனை ஜனாதிபதி செயலகத்திலும் எடுத்துரைத் ததாகவும், 21 நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் சர்வதேச மட்டத்தில் பிரச்சினையை கொண்டு செல்லத் தயார் எனவும் போராட்ட அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நீலகாமம் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடை பெற்ற போராட்டங்கள், மலையக சமூகத்தில் புதிய அரசியல் மற்றும் சமூக எழுச்சிக்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றன.
முன்னதாக தனித்தனியாக பேசப் பட்ட பிரச்சினைகள், தற்போது ஒன்றுபட்ட மக்கள் இயக்கமாக மாறியுள்ளன. ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் தரப்புகள் இணைந்து செயற்படத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்க மாற்ற மாகும். இந்த போராட்டங்கள் உடனடி நீதியை மட்டுமல்ல, நீண்டகால பாதுகாப்பு, காணி உரிமை மற்றும் அரசியல் அங்கீகாரம் ஆகியவற்றையும் கோருகின்றன. தேசிய மட்டத்தில் இவ்வாறான போராட்டங்கள் மற்றும் நாடாளு மன்றத்தில் அழுத்தம் உள்ளிட்ட பல விதமான எதிர்ப்புகள் இடம் பெறுகின்ற போதிலும் இந்தப் போராட்டங்கள் மீதான மலையக மக்களின் ஈர்ப்பு குறித்த கேள்வியும் வெகுவாக எழுந்துள்ளது.
மலையக சமூகத்துக்கான போராட்டம் இடம் பெற்ற அதே நாளில் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இனிப்புகள் வழங்கப்பட்டு கேளிக்கை வெடிகளுடன் இடம்பெற்ற இவ்வாறான கொண்டாட்டங்கள் மலையக மக்களின் உரிமைக்கான போராட்டங்களில் மறைமுகமாக தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
எது எவ்வாறாயினும் நீலகாமம் சம்பவம் என்பது ஒரு குடியிருப்பு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் மட்டுமல்லாது. அது மலையக மக்களின் பல தசாப்தங்களாகக் குவிந்து கிடக்கும் வேதனை, பாதுகாப்பின்மை, காணியற்ற வாழ்க்கை, அரசியல் புறக்கணிப்புக்கான போராட்டத்தின் வெளிப் பாடாக மாறியுள்ளது. இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய பெருந்தோட்ட தொழிலாளர் சமூகம் இன் னும் அடிப்படை உரிமைகளுக்காக வீதிகளில் இறங்கி குரல் கொடுக்க வேண்டிய நிலை தொடர்வது, இலங்கையின் ஜனநாயக அமைப்புக்கு ஒரு பெரும் சவாலாகும்.
இந்த போராட்டத்தின் முக்கிய வெற்றி என்ன வென்றால், நீண்டகாலமாக கவனிக்கப்படாமல் இருந்த ஒரு பிரச்சினையை தேசிய விவாதமாக மாற்றியிருப்பதே ஆகும். நீலகாமம் முதல் ஹட்டன், அங்கிருந்து கொழும்பு மற்றும் நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் பேசப்பட்டது. அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்புகள் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதுவே ஜனநாயக போராட்டத்தின் உண்மையான சக்தியாகும். மேலும், இந்த போராட்டங்கள் மலையக சமூகத்தில் புதிய ஒற்றுமை உணர்வை உருவாக்கியுள்ளது. அரசியல் கட்சிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற் பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் நிற்பது, மலையக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறது.
“நாம் தனியாக இல்லை” என்ற நம்பிக்கையை இது மக்களிடம் உருவாக்கியுள்ளது. அதேசமயம், இந்த போராட்டம் ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் முன்வைக்கிறது. நீதி மறுக்கப்பட்டு, அடக்குமுறைகள் தொடர்ந்தால், மக்களிடையே ஏமாற்றமும் கோபமும் அதிகரிக்கும். ஆகவே, இந்த தருணத்தை அரசாங்கமும் பெருந்தோட்ட நிறுவனங்களும் சாதாரண எதிர்ப்பாக அல்லாது, ஒரு சமூகத்தின் வாழ்வுரிமை கோரிக்கையாக புரிந்துகொள்ள வேண்டும். பெருந்தோட்ட பகுதிகளில் செயற்படும் தனியார் பாதுகாப்பு குழுக்கள் குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அரசியல் அல்லது பொருளாதார செல்வாக்கை பொருட்படுத்தாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மேலும், பெருந் தோட்ட மக்களின் காணி உரிமை, வீட்டு வசதி, பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். அமைதியான ஜனநாயக போராட்டங்கள் இன்னும் இந்த நாட்டில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை நீலகாமம் நிரூபித்துள்ளது. அந்த வகையில் இந்த சம்பவம் எதிர்கால உரிமைப் போராட்டங்களின் ஒரு தொடக்கக் குரலாக வரலாற்றில் நினைவுகூரப்படும்.



