தனது தனிப்பட்ட தொலைபேசி உரையாடலைத் திரிபுப்படுத்தியமை மற்றும் பகிரங்கப்படுத்தியமை சம்பந்தமாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தாம் செய்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தப்படாமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை தவிர ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் எழுத்து மூலமும் அறிவித்துள்ளார். இந்தத் தொலைபேசி உரையாடல் பகிரங்கப்படுத்தப்பட்டமையால், தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அசெளகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் தனக்கு சமூக ஊடகங்கள் வாயிலாகக் கொலை அச்சுறுத்தல் கூடவிடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹிருணிகா தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி ஹிருணிகா இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்திருந்தார்.
வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனது மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி – பூஜாப்பிடிய பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சுதந்திர கட்சியுடன் பொதுஜன முன்னணி கூட்டணி அமைத்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் எனப் பலரும் தெரிவிக்கின்றனர். எனினும், தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ கூட்டணி அமைக்கலாம். எவ்வாறாயினும், மொட்டுச் சின்னத் திலேயே போட்டியிடுவோம் என்று நாமல் ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலைத் தடுக்கத் தவறினார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த சில மாதங்களாகச் சிறையிலிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜிதஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேஸ்ரீ பெர்னாண்டோ ஆகியோர் பிணையில் விடுலையாகியுள்ள நிலையில், குண்டுத் தாக்குதல் தொடர்பான விசேட ஆவணங்கள் சிலவற்றை வெளியிடஅவர்கள் தீர்மானித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இந்த இருவரும் சில இரகசிய ஆவணங்களை ஒப்படைத்துள்ள நிலையில் அந்த ஆவணங்களைப் பகிரங்கப்படுத்த அவர்கள் முடிவெடுத்துள்ளனராம்.
குண்டுத்தாக்குதல் தொடர்பில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூலம் தாம் அறிவித்த ஆவணங்களையே இந்த இருவரும் பகிரங்கப்படுத்தவுள்ளனர் என அறிய முடிகிறது
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மற்றொரு சிரேஷ்ட மாணவருக்கும் மறு அறிவித்தல் வரை, பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ முடியாதவாறு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் முதுநிலை மாணவர்கள் சிலர், புதுமுக மாணவிகள் சிலர் மீது பகிடிவதையில் ஈடுபட்டனர் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்றுக்குழு விசாரணைகளின் அடிப்படையிலேயே இரண்டாவது மாணவருக்கும் உள்நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் விசாரணைகளில் தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவுமே, பல்கலைக்கழக எல்லைக்குள் நுழைவதற்கான இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக, யாழ்.பல்கலைக் கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பகிடிவதை தொடர்பில் சான்றாதாரங்கள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் மேலும் சில மாணவர்களுக்கு உள்நுழைவதற்கான தடை விதிக்கப்படும் என்றும், பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாற்றுத் தலைமையானது தமிழ் மக்களுக்குச் சரியான பாதையை வகுத்துக் கொடுக்கும். நாம் சரியான பாதையில் பயணித்து தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்போம் எனத் தெரிவித்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரன், வெளியில் இருந்து ஐக்கியம் பேசுகின்ற யாரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ரில்கோ விருந்தினர் விடுதியில் நேற்றுக் காலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
“தமிழ் மக்களின் இன விடுதலைக்காகப் பல தரப்புக்கள் போராடியுள்ளனர். தங்களின் உயிர்களைப் பொருட்படுத்தாது போராடிய அனைவரையும் எமது கூட்டணியில் இணையுமாறு இந்தச் சாந்தர்ப்பத்திலே அழைப்பு விடுக்கின்றேன். எமது கூட்டணி அமைக்கப்பட்டதன் நோக்கம் தமிழ் மக்கள் இத்தனை ஆண்டுகளாக கோரி வந்த இனப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வான தீர்வு கிடைக்க வேண்டும்.
எனவே தற்போது எமக்கு எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும், தமிழரின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் ஆகிய அடிப்படையான விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்த வேண்டும். எமது கட்சிக்கு என்று நாற்பது ஆண்டுகால வரலாறு உள்ளது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் நாம் நடாளுமன்ற ஜனநாயக முறைமையை ஏற்று செயற்பட்டிருக்கின்றோம்.
அதற்கு முன்னர் ஆயுதப்போராட்டம் நடத்தியிருக்கின்றோம். நாம் பல தரப்புக்கள் இணைந்து புதிய கூட்டணி அமைத்து இருக்கின்றோம். ஆகவே வெளியில் இருந்து ஐக்கியம் பேசுகின்ற யாரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம். தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க மிகப்பெரிய போராட்டங்களை செய்திருக்கின்றோம். பாரிய அழிவுகளை சந்தித்திருக்கின்றோம். எமது உரிமைக்காக அனைத்தையும் இழந்துள்ளோம். இழக்கக்கூடாத பல இழப்புக்களைச் சந்தித்துள்ளோம்.
ஆகவே வெளியில் நின்று வெறுமனே ஐக்கியத்தைப் பேசுவதை விட, நாங்கள் ஒன்றாக சேர்ந்து செயற்பட வேண்டும். சிங்கள, பெளத்த அரசு எதுவாக இருந்தாலும் அவர்களைப் பாதுகாப்பதை விடுத்து, இன்று இருக்கக் கூடிய அகப் புறச் சூழ்நிலைகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்து நாம் எவ்வாறு செயற்பட வேண்டும், அதன் ஊடாக தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என நாம்ப்சிந்திக்க வேண்டும்.
அதற்காக நாம் இது தொடர்பில் அனைத்துத் தரப்புகளும் இணைந்து இது தொடர்பில் விவாதித்து, நாம் ஆக்கபூர்வமாகச் செயற்படுவோம். தற்போது உருவாக்கப்பட்டுள்ள மாற்றுத் தலைமையானது தமிழ் மக்களுக்குச்சரியான பாதையை வகுத்து கொடுக்கும். நாம் சரியான பாதையில் பயணித்துத் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்போம்” என்றார்.
இந்திய விஜயத்தைமேற்கொண்டுள்ள சிறீலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பரிவாரப் பட்டாளத்தில் தமது அரசுத் தரப்பு எம்.பியான பிரசன்ன ரணவீரவையும் அழைத்துச் சென்றிருந்தார். புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்புக்களின் பின்னர் தனது முகநூல் பக்கத்தில் அவர் போட்ட சில பதிவுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியில் அஇவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“மஹிந்தவின் 52 நாள் ஆட்சி அமளியின் போது நாடாளுமன்றத்தில் அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்த சமயத்தில் நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டதல்லவா? அப்போது ஐ.தே. முன்னணி எம்.பிக்கள் மீது சபைக்குள் மிளகாய்த்தூள் கலந்த தண்ணீரை வீசி “நாடாளுமன்றச் சம்பிரதாயத்தை” மேன்மையுறவைத்தவர் இவர்தான்.
அவருக்கு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி,சஞ்சய் காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எல்லாம் யார் என்று தெரியவில்லை. அவ்வளவு தூரம் இந்தியாவைப் பற்றிய அறிவு அந்த இலங்கை எம்.பிக்கு.
இவர்தான் ராகுலை சந்தித்த பிரசன்ன
புதுடில்லியில் மகாத்மா காந்தியின் நினைவு நிகழ்வின் போது ராகுல் காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கின்றது. பார்த்தார், மகாத்மா காந்தி வயதானவராக இருக்கின்றார். இவர் ராகுல் காந்தி இளைஞர். அவரும் காந்தி, இவரும் காந்தி.
பிறகென்ன? தமது முகப்புத்தகத்தில் “மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவரின் பேரனான ராகுல் காந்தியை சந்தித்தேன்” என்று பதிவிட்டாராம். நல்ல அறிவுஜீவியைத்தான் மஹிந்தர் தன்னுடன் புதுடில்லிக்குக் கூட்டிக் போய் இருக்கின்றார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பலரும் சுட்டிக்காட்டியதையடுத்து அவர் தனது பதிவை திருத்திக்கொண்டுள்ளார்.
சிறீலங்காவில் போர் இடம்பெற்றபோது சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்களை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட தமிழ் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
பொதுலநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்திடம் இந்த கோரிக்கை தொடர்பான கடிதத்தை கொன்சவேட்டிக் கட்சிக்கான பிரித்தானியா தமிழர், இனப்படுகொலையை தடுப்பதற்கான அனைத்துலக மையம், பேர்ள், தமிழர் கல்விசார் ஜேர்னல், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தொழிலாளர் கட்சிக்கான தமிழர், தமிழ் தகவல் மையம், தமிழ் இளையோர் அமைப்பு, நாடுகடந்த தமிழீழ அரசு, இனஅழிப்புக்கு எதிரான அமைப்பு, உலகத் தமிழர் வரலாற்று அமைப்பு ஆகிய அமைப்புக்கள் இணைந்து கையளித்துள்ளன.
1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் சிறீலங்கா அரசுடன் இணைந்து பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட கினி மினி என்ற தனியார் அமைப்பு தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர். அதற்கான ஆவணங்களை பில் மில்லர் வெளியிட்டுள்ளார்.
வைன் குவளைகளில் வைத்து கைக்குண்டுகளை பொதுமக்கள் மீது வீசியதாக சிறீலங்காவுக்கான பிரித்தானியாவின் தூதரக பாதுகாப்பு ஆலோசகராக இருந்த லெப். கேணல் றிச்சாட் கொல்வோர்தி மில்லருக்கு தெரிவித்துள்ளதாக த கார்டியன் நாளேடு தெரிவித்துள்ளது.
பிரித்தானியா நிறுவனம் இவ்வாறான போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளது. எனவே இது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் பிரித்தானியா அலுவலகம் தாமதமின்றி நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் அமைப்புக்கள் தமது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 24 ஆம் நாளில் இருந்து மார்ச் மாதம் 20 ஆம் நாள் வரையிலும் ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் சிறீலங்கா அரசு மீது முன்னர் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஆராயப்படுமா? என்ற கேள்விக்கான விடை தெளிவற்றதாகவே உள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு 2015 ஆம் ஆண்டு சிறீலங்கா மீது கொண்டுவந்த தீர்மானம் தொடர்பில் முன்னைய அரசு நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தற்போதைய அரசு அதனை கைவிடத் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில் இந்த தீர்மானம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்போகின்றது என்ற கேள்விகள் தமிழ் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.
இந்த தடவை தலைவருக்கான வாய்ப்பு மேற்கு ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அது ஒஸ்ரியாவின் ஐ.நாவுக்கான ஜெனீவா பிரதிநிதி திருமதி எலிசபத் றிசி பிஸ்பேர்க்கிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
47 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இந்த சபையில் 13 ஆசிய நாடுகளும்,13 ஆபிரிக்க நாடுகளும், 8 லந்தீன் அமெரிக்க நாடுகளும், 7 மேற்கு ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.
வழமைபோல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஜெனீவாவை நோக்கி நீதிக்கான போராட்டங்களை ஆரம்பித்துள்ளபோதிலும் அவர்கள் இராஜதந்திர ரீதியாக என்ன அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது தொடர்பில் தமிழ் மக்களிடம் தெளிவற்ற தன்மையே காணப்படுவதாக ஐரோப்பாவை தளமாகக் கொண்ட இராஜதந்திர அவதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்க நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறீலங்கா பிரதமரும் சிறீலங்கா அரச தலைவரின் சகோதரருமான மகிந்த ராஜபக்சாவிடம் தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் பயணமாக புதுடில்லி சென்றுள்ள சிறீலங்கா பிரதமர் இந்திய தலைவர்களுடன் பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த பேச்சுக்களின் போது தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்பரப்பில் மீன் பிடிப்பது தொடர்பில் சிறீலங்கா பிரதமர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆனால் சிறீலங்கா அரசு தமிழ் மக்களுடன் இன நல்லிணக்கப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்சா தமிழ் மக்களின் விவகாரம் தொடர்பில் பரந்துபட்ட பேச்சுக்களை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டும் தெரிவித்து இந்திய பிரதமரின் கோரிக்கையை புறம்தள்ளியுள்ளார்.
இதனிடையே, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் தமக்கான ஆதரவுகளை தேடுவதே மகிந்தாவின் இந்திய பயணத்தின் நோக்கம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் வூகன் மாகாணத்தில் இருந்து ஆரம்பமாகி வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இன் தாக்கத்திற்கு இதுவரையில் 780 பேர் பலியாகியுள்ளதுடன், 38,000 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வைரஸின் பாதிப்பானது 2000 ஆம் ஆண்டுகளில் பரவிய சார்ஸ் எனப்படும் வைரஸ் இன் பாதிப்பபை விட அதிகமானது.
சீனாவின் குபேய் மாகாணத்தில் 81 பேர் நேற்று (08) இறந்துள்ளனர். அதேசமயம் யப்பான் மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்களும் தலா ஒருவர் இந்த நோயின் தாக்கத்தால் இறந்துள்ளனர்.
சார்ஸ் வைரசின் தாக்கத்தால் 774 பேர் ஒரு வருட காலப்பகுதியில் பலியாகியிருந்தனர், ஆனால் கொரோனா வைரஸ் இன் தாக்கத்தால் குறுகிய காலத்தில் 780 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.