போர்க்குற்றங்களை மேற்கொண்ட பிரித்தானியா நிறுவனம் தண்டிக்கப்பட வேண்டும் – பிரித்தானியா தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை

சிறீலங்காவில் போர் இடம்பெற்றபோது சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்களை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட தமிழ் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

பொதுலநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்திடம் இந்த கோரிக்கை தொடர்பான கடிதத்தை கொன்சவேட்டிக் கட்சிக்கான பிரித்தானியா தமிழர், இனப்படுகொலையை தடுப்பதற்கான அனைத்துலக மையம், பேர்ள், தமிழர் கல்விசார் ஜேர்னல், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தொழிலாளர் கட்சிக்கான தமிழர், தமிழ் தகவல் மையம், தமிழ் இளையோர் அமைப்பு, நாடுகடந்த தமிழீழ அரசு, இனஅழிப்புக்கு எதிரான அமைப்பு, உலகத் தமிழர் வரலாற்று அமைப்பு ஆகிய அமைப்புக்கள் இணைந்து கையளித்துள்ளன.

1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் சிறீலங்கா அரசுடன் இணைந்து பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட கினி மினி என்ற தனியார் அமைப்பு தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர். அதற்கான ஆவணங்களை பில் மில்லர் வெளியிட்டுள்ளார்.

வைன் குவளைகளில் வைத்து கைக்குண்டுகளை பொதுமக்கள் மீது வீசியதாக சிறீலங்காவுக்கான பிரித்தானியாவின் தூதரக பாதுகாப்பு ஆலோசகராக இருந்த லெப். கேணல் றிச்சாட் கொல்வோர்தி மில்லருக்கு தெரிவித்துள்ளதாக த கார்டியன் நாளேடு தெரிவித்துள்ளது.

பிரித்தானியா நிறுவனம் இவ்வாறான போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளது. எனவே இது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் பிரித்தானியா அலுவலகம் தாமதமின்றி நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் அமைப்புக்கள் தமது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளன.