மீண்டும் 13 ஆவது திருத்தம் தொடர்பில் மகிந்தா – மோடி பேச்சு

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்க நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறீலங்கா பிரதமரும் சிறீலங்கா அரச தலைவரின் சகோதரருமான மகிந்த ராஜபக்சாவிடம் தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் பயணமாக புதுடில்லி சென்றுள்ள சிறீலங்கா பிரதமர் இந்திய தலைவர்களுடன் பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த பேச்சுக்களின் போது தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்பரப்பில் மீன் பிடிப்பது தொடர்பில் சிறீலங்கா பிரதமர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனால் சிறீலங்கா அரசு தமிழ் மக்களுடன் இன நல்லிணக்கப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்சா தமிழ் மக்களின் விவகாரம் தொடர்பில் பரந்துபட்ட பேச்சுக்களை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டும் தெரிவித்து இந்திய பிரதமரின் கோரிக்கையை புறம்தள்ளியுள்ளார்.

இதனிடையே, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் தமக்கான ஆதரவுகளை தேடுவதே மகிந்தாவின் இந்திய பயணத்தின் நோக்கம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.