எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பிளட்டின் வன்னிமாவட்ட வேட்பாளர்களாக முன்னாள்மாகாணசபை உறுப்பினர் ஜி,ரி.லிங்கநாதனும், முல்லைத்தீவு வித்தியானந்தா பாடசாலையின் முன்னாள் அதிபர் கந்தையா சிவலிங்கமும் நிறுத்தப்படவுள்ளதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.
வன்னிமாவட்டத்தில் முல்லைதீவு மற்றும் வவுனியாவில் எமது கட்சி சார்பில் இரு வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளோம். இன்னும் ஓரிரு வாரங்களில் அந்தந்த மாவட்டகுழு திர்மானித்து அந்த வேட்பாளர்கள் யார் என்பதை இறுதி செய்து அறிவிப்போம்.என பிளட்டின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அண்மையில் வவுனியாவில் வைத்து தெரிவித்திருந்தார்.
அதற்கமைய முன்னாள் வவுனியா நகரபிதாவும், வடமாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், மற்றும் முல்லைத்தீவு வித்தியானந்தா பாடசாலையின் முன்னாள் அதிபரும் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசனின் சகோதரருமான க.சிவலிங்கம் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்துவதாக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதுடன், விரைவில் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரவிக்கின்றன.
யாழ் இந்துக் கல்லூரி மாணவன் சர்வதேச ரீதியில் சாதனை படைத்து யாழிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
யாழ் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் நித்தியானந்தன் மாதவன் சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட Google Code-In 2019 போட்டியில் Grand Prize Winner பட்டத்தை வென்றுள்ளார்.
இவருக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் ஜூன் மாதம் கலிபோர்னியாவில் உள்ள Google தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
மாற்று அணி உருவாக்கத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தலைவலியைச் சந்தித்துள்ளன என ஈ.பி.ஆர். எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் -கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் வழங்கிய ஆணைகளில் இருந்து விலகி, வேறு வழியில் தடம்மாறி சென்றதன் காரணமாகவே, புதிய கூட்டணி உருவாகியது. புதிய கூட்டணி மூலம், தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் களம் அமைத்துள்ளோம்” என்றார்.
“வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிஎன்ற பெயரில்உருவாக்கப்பட்டுள்ளபுதிய கூட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் “பி” அணி. கூட்டமைப்புக்கும் இந்தக் கூட்டணிக்கும் கொள்கையில் வித்தியாசமில்லை. தமிழ் மக்களின் உண்மையான நேர்மையான-தலைமைத்துவமாக எங்கள் தலைமைத்துவம் வந்துவிடக்கூடாதென்பதற்காகவே இந்தப் புதிய கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது.”
இப்படித்தெரிவித்திருக்கின்றார்தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழ்ப்பாணத்தில் உள்ள அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நேற்றுத் தாம் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கை யில் –
“நான்கு நபர்கள் கூடி,நான்கு கட்சிகள் கூட்டுச் சேர்ந்தன எனச் செய்திகள் வெளிவந்து இருக்கின்றன. எம்மைப் பொறுத்த வரை அது நான்கோ, பத்தோ, பதினைந்தோ என்பதல்ல, உண்மையில் எந்த அடிப்படையில் அரசியல் ரீதியாகச் செயற்படுகின்றனர் என்பதே முக்கியமானது.
நாம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – கூட்டமைப்பில் இருந்து விலகிய நாளில் இருந்து நாங்கள் கொள்கை ரீதியாக அந்தக் கூட்டமைப்பு பிழை விடுகிறது, ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குகின்ற அளவுக்கு விலை போயிருக்கிறது என்ற குற்றச்சாட்டைப் பத்து வருடங்களாக முன்வைத்து வருகின்றோம்.
அந்த அடிப்படையில் ஒரு புதிய தலைமைத்துவம் – நேர்மையான தலைமைத்துவம் அவசியமென்ற வகையில் இந்தப் பத்து வருடங்களாக இயங்கிவந்த நிலையில் இன்று இரண்டாம் பெரும் கட்சியாக வடக்குகிழக்கில் இருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு நிலைமை இருக்கையில் எங்கள் வளர்ச்சியைத் தடுப்பதற்காக கொள்கை ரீதியாக எந்தவிதமான-அதாவது கூட்டமைப்பிலிருந்து எந்தவிதமான- வித்தியாசமும் இல்லாமல் இன்னுமொரு மாற்று அமைப்பு என்று கூறிக் கொண்டு ஒரு சிலர் ஒன்று சேர்ந்து இந்தத் தேர்தலில் எங்களுக்கு வரக் கூடிய அங்கீகாரத்தை ஏதோவொரு வகையில் குழப்புவதற்குச் செயற்பட முயற்சிக்கின்றார்கள். அந்த வகையில் தான் இந்தப் புதிய கூட்டு முயற்சிகளை பார்க்கின்றோம்.
எம்மைப் பொறுத்தவரை இன்றைக்கு நேர்மையான அரசியலை – கொள்கை சார்ந்த அரசியலைக் கொண்டு போகக் கூடிய ஒரே ஒரு தரப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். இந்த முன்னணியுடன் இணைந்து செயற்படுகின்ற சிவில் சமூகம், புத்திஜீவிகள் இந்த இனத்துக்குத் தலைமை தாங்கக் கூடாது என்ற சிந்தனையில் பலரும் செயற்படுகின்றனர். ஏனென்றால் எங்கள் தரப்பினர்கள் நேர்மையானவர்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்ற சிந்தனை அவர்களுக்கு இருக்கின்றதென்றால் தமிழ் மக்களை எவருமே தங்களின் தேவைக்காகப் பாவித்து நடுத்தெருவில் விட முடியாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடாக இருப்பதே காரணமாக அமைகின்றது.
தமிழ் மக்கள் ஒரு புதிய தலைமைத்தவத்தைத் தேடிக் கொண்டிருக்கின்ற நிலைமையில் -அந்தப் புதிய தலைமைத்துவம் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் – முன்னணி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெறக்கூடாதென்பதற்காக எங்களிடம் வரக்கூடிய மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏதோ வொரு வகையில் உடைப் பதற்குவாக்குப் பலத்தைக் குறைப்பதற்கு எடுக்கின்ற ஒரு முயற்சியாகத்தான் நாங்கள் இதைப் பார்க்கின்றோம். எல்லாவற்றையும் தாண்டி தமிழ்த் தேசியமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இந்தக் கூட்டணி நிச்சயமாக எங்களது வாக்கு வங்கியை சரிக்காது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கூட எங்கள் வாக்கு வங்கியைக் கடைசிநேரத்தில் சரிப்பதற்காக இந்தியாவின் ஆதரவோடு இன்னொரு கூட்டு என்ற பெயரில் சுரேஷ் பிறேமச்சந்திரனும் ஆனந்தசங்கரி போன்றவர்களும் கூட்டச் சேர்ந்துத் தாங்கள்தான் உண்மையான மாற்று என்று சொல்லித் தேர்தலில் போட்டியிட்டார்கள். அந்த நேரத்தில் விக்னேஸ்வரனும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம். அப்படியிருக்கவும் அந்தக்கூட்டுக்கு மக்கள் எந்தவித அங்கீகாரத்தையும் கொடுக்கவில்லை. மாறாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குத்தான் அங்கீகாரத்தைக் கொடுத்திருந்தனர்.
அன்றைக்கு கூட எங்களுக்கு எதிராக முன்வைத்த விமர்சனம் என்னவென்றால் நாங்கள் ஒரு தனிப்போக்கு என்றும், நாங்கள் யாருடனும் கூட்டுச் சேர விருப்பமில்லை, ஒரு நாளும் மக்களால் அங்கீகரிக்கக் கூடிய தரப்பு இல்லை என்ற வகையில்தான் அனைத்துத் தரப்புக்களும் எங்களை விமர்சித்தார்கள். ஆனால் மக்கள் அப்படிப் பார்க்கவில்லை. மக்கள் மிகத் தெளிவாக எங்களுக்குத்தான் புதிய தலைமைத்துவம் என்ற விடயத்தில் விருப்பத்தை தெரிவித்திருக்கின்றார்கள். அதில் அறுதிப் பெரும்பான்மையை ஈட்டி சபைகளைக் கைப்பற்றாவிட்டாலும் ஊழலுக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறோம்.நேர்மையான கலாசாரத்தை வெளிப்படுத்தி வருகின்றோம் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
வரப் போகின்ற தேர்தல் ஒரு நாடாளுமன்ற தேர்தலாக இருக்கிறது. ஒட்டுமொத்த தலைமைத்துவத்தை தீர்மானிக்கின்ற ஒரு தேர்தலாக பார்க்கப்படுகின்ற போது தமிழ் மக்கள் எங்களுக்கான அங்கீகாரத்தை நிச்சயம் கொடுப்பார்கள் என்று தான் நம்பு கின்றோம். கடந்த உள்ளுராட்சித் தேர்தலையும் விட பல மடங்கு மேலாக நாங்கள் பலப்பட்டு நிச்சயமாக தனிப்பெரும் கட்சி என்பதை இந்தத் தேர்தலில் நாங்கள் நிரூபித்துக் காட்டுவோம்” என்றார்.
சஜித் பிரேமதாஸ தலைமையில் அமையவுள்ள அரசியல் கூட்டணியான சமகி ஜாதிக்க பலவேகய என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது United National Power என்று வருவதால் அது யு.என்.பி. என்று அர்த்தப்படுவதாகவும் இதனால் யு.என்.பி. என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தனித்துவத்திற்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டச் செயலாளர் இதனை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளமையுடன் – இதன் காரணமாக சம்பந்தப்பட்ட கூட்டணியை இவ்வாறு பதிவு செய்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுள்ளார்.
தான் முதலமைச்சராக இருந்த காலத்தில் வட மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மீள அனுப்பப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் சென்று கூறியிருப்பது விந்தையான செயல் என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் மேற்படி கருத்துக்கு பதிலளித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு இன்று (11) அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தனது தலைமையிலான வட மாகாண சபையின் ஆயூட்காலம் முடிந்த பின்னரும் மத்திய அரசாங்கத்தால் வட மாகாணத்திற்கு வழங்க வேண்டிய ஒரு தொகை நிதி இதுவரை நிலுவையில் உள்ளதாகவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் பிறநாடுகளில் கருத்து தெரிவிக்கும் போது உண்மையை அறிந்து பேச வேண்டியது முக்கியம் எனவும் இலங்கையின் அரசியல் மேடைகளில் பேசுவது போல் பேசக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனூடாக 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கம் தமக்கென ஒரு பிரத்தியேக அதிகாரப் பகிர்வை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி பலியானவர்களின் எண்ணிக்கை 1000ஐயும் தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
கொரோனா காரணமாக சீனாவில் தொடர்ந்து பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. மொத்தம் 22 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் இந்த வைரசை கட்டுப்படுத்தத் தவறியதால் மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த வைரசிற்கு எதிராக சீன அரசு தோல்வியடைந்து விட்டது என்றுதான் கூறவேண்டும். அவர்கள் மற்ற உலக நாடுகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவிடமும், இந்தியாவிடமும் ஏற்கனவே சீன அதிபர் ஜி ஜிங்பிங் உதவி கேட்டு விட்டார்.
டிசம்பர் மாத இறுதியிலேயே இந்த வைரசின் தாக்குதல் குறித்து அந்நாட்டு அரசிற்குத் தெரிந்திருந்தது. ஆனால் அந்த விடயத்தை வெளியே தெரிவிக்காமல் அரசு மறைத்து விட்டது. இதனால் அந்நாட்டு அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். சமூகவலைத்தளங்களில் இந்த அரசை கவிழ்க்க வேண்டும், உடனடியாக அரசை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றார்கள். நாளுக்கு நாள் அரசிற்கு எதிராக அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1016ஐ எட்டியுள்ளது. 1000 பேருக்கு அதிகமாக பலியானது அந்த நாட்டையே உலுக்கியுள்ளது. நேற்று (10) மட்டும் 104பேர் பலியானார்கள். இதனால் அந்நாட்டு அரசு பெரியளவில் அதிர்ச்சியடைந்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 2146 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 42638பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது குிறப்பிடத்தக்கது.
முன்பு வுஹன் நகரத்தில் தான் இந்த வைரஸ் அதிகமாகப் பரவியது. இதனால் அந்நகரம் மொத்தமாக மூடப்பட்டது. ஆனால் தற்போது ஹுபே நகரத்தில் இந்த வைரஸ் வேகமாகப் பரவி பரவி வருகின்றது. நேற்று மட்டும் இந்த வைரஸ் தாக்கத்தினால் ஹுபே நகரத்தில் 92பேர் பலியாகியுள்ளனர். அந்த நகரத்தையே இந்த வைரஸ் முடக்கிப் போட்டுள்ளது.
மாத்தள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இதற்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வேலைத் திட்டத்திற்குரிய பிரிவினரின் ஒத்துழைப்பைப் பெறுவது தொடர்பாக சகல விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். அத்தோடு சர்வதேச விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த நான்கரை ஆண்டு காலப்பகுதியில் மாத்தள விமான நிலையத்தின் மீது உரிய கவனம் செலுத்தப்படவில்லை என எடுத்துக் காட்டிய அவர், ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஸ மற்றும் விமான சேவைகள் அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் இந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சிறீலங்காவில் தினமும் 60 தொடக்கம் 70 வரையிலானவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என உலக புற்றுநோயாளர் தினம் தொடர்பில் இடம்பெற்ற மாநாட்டில் பேசும் போது வைத்தியர் நயனா டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்காவிலும், உலகிலும் மக்கள் அதிகளவில் இறக்கும் நோய்களில் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகில் மரணிக்கும் ஆறு போரில் ஒருவர் புற்றுநோயினால் இறக்கின்றனர்.
மார்புப் புற்றுநோய் மற்றும் வாய் புற்றுநோய் என்பன சிறீலங்காவில் ஆண்கள் மற்றும் பெண்களை அதிகமாக பாதிக்கின்றது. அவற்றை நாம் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும்.
புற்றுநோயை ஏற்படுத்துவதில் ஐந்து காரணிகள் முக்கியமானவை, உணவுப் பழக்கம், அதிக உடல் எடை, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உடகொள்ளாமை, குறைவான உடற்பயிற்சி, மது மற்றும் புகைப்பிடித்தல் என்பனவாகும்.
புற்றுநோயாளிகளில் 22 விகிதமானவர்கள் புகையிலை பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டவர்கள். 25 விகிதமான நோய் எச்.பி.வி என்னும் வைரசினால் உருவாகின்றது, 29 விகிதமான புற்றுநோய் அசுத்தமான காற்றினால் உருவாக்கிறது.
தினமும் 30 நிமிட உடற்பயிற்சி செய்தால் உங்கள் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இது சில வகையான புற்றுநோய்களை எதிர்க்கும் திறன் கொண்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார பலவீனம் சிறீலங்காவின் படை ஆக்கிரமிப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் இன் தாக்கம் சீனாவின் பொருளாதாரத்திற்கு பலத்த பின்னடைவைக் கொடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.உலகின் இரண்டாவது பெரும் பொருளாதார வல்லரசான சீனாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சிறீலங்காவை கடுமையாக பாதிக்கும்.
ஏனெனில் சிறீலங்காவின் பிராதான அபிவிருத்தி நடவடிக்கைகள் சீனாவின் முதலீடுகளிலும், சீனா சுற்றுலாப் பயணிகளிலும் தான் தங்கியுள்ளது.சீனாவின் சரிவு பல நாடுகளை பாதித்து வருகின்ற போதும், சிறீலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுக ஏற்றுமதி வலையத்தின் செயற்பாட்டிலும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சியாக 4 விகித வளர்ச்சியை அடைவதை குறிக்கோளாக கொண்டு செயற்பட்டு வருகின்றது புதிய சிறீலங்கா அரசு. அதற்கு ஏதுவாக வரிச்சலுகைகளை அறிவித்துள்ளது. கடந்த 20 வருடங்களாக நிமிர்த்த முடியாத பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் தான் தற்போதைய அரசின் ஆயுட்காலம் தங்கியுள்ளது.
அதேசமயம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்காக பல சலுகைகளை பொது மக்களுக்கு அறிவித்து வருகின்றது சிறீலங்கா அரசு. தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை எதிர்வரும் மார்ச் மாதத்தில் இருந்து 1000 ரூபாய்களாக அதிகரிக்கவுள்ளதாக சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதைய கடன் மீள் செலுத்தும் தொகை மற்றும் முன்னைய அரசு விட்டுச் சென்ற கடன்களின் கொடுப்பனவுகள் என 2167 பில்லியன் ரூபாய்கள் தேவையெனவும் அவர் தெரிவிக்கத் தவறவில்லை.
2018 ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் 340 சபைகளில் 230 சபைகளை கைப்பற்றியதும், பின்னர் அரச தலைவர் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளைக் கைப்பற்றியதும், கோத்தபாயா அரசுக்கு சாதகமாக நிலையே தென்னிலங்கையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையை தக்கவைத்து பலமாற்றங்களை கொண்டு வந்து குடும்ப அரசியலை தக்கவைக்க போராடுகின்றது தற்போதைய அரசு.
புதிய அரசு பதவிக்கு வந்ததும் புலம்பெயர் தமிழ் மக்கள் குறிப்பாக கனடாவில் வசிக்கும் தமிழ் மக்கள் சிறீலங்காவில் முதலீடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்திருந்தது.ஆனால் சிங்கள தேசத்தின் பொருளாதாரத்தை தக்கவைத்து அதன் இனஅழிப்புக்கு துணைபோக தமிழ் மக்கள் விரும்பப் போவதில்லை. என்பது ஒருபுறமிருக்க சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தலாம் என்ற அச்சங்களும் புதிய அரசுக்கு உண்டு.
ஆனால் தாம் அதனை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரையிலும் நிறுத்தப் போவதில்லை எனவும் எனினும் சிறீலங்கா அரசின் செயற்பாடுகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் எனவும் சிறீலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் 2023 ஆம் ஆண்டு வரையில் தனது சலுகையை வழங்கினாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது இந்த வரிச்சலுகை மூலம் சிறீலங்கா பெறும் நன்மைகளை குறைக்கும் என நம்பப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளும் திட்டங்களை அல்லது ஆலோசனைகளை பல தரப்பினரிடம் இருந்தும் அரசு எதிர்பார்த்து வரும் இந்த நிலையில், சிறீலங்கா அரசு தனது படையினரின் செலவீனங்களை குறைக்க வேண்டும் என்ற ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், சிறீலங்கா அரசு தனது பாதுகாப்புச் செலவீனத்தை குறைக்கவில்லை என்ற தகவல்களை முன்வைத்துள்ளர் சிறீலங்கா அரசின் பொருளாதார ஆலோசகர் டானியல் அல்போன்ஸ்.
2017 ஆம் ஆண்டின் செலவீனத்தில் 11 விகிதம் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. போர் நிறைவடைந்த பின்னர் சிறீலங்கா அரசு தனது பாதுகாப்பு செலவீனம் தொடர்பில் மீளாய்வு செய்யவில்லை, படையினரின் தொழில் நுட்பம் விரிவாக்கம் பெறவில்லை, மாறாக தரைப்படையும், ஆட்லறிப்படையினரும், கவசப் படையினரும் அதிக நிதிகளை உள்வாங்கி வருகின்றனர்.அது மட்டுமல்லாது, சிறீலங்கா அரசு தனது படையினரை உட்கட்டுமானப் பணிகளில் அதாவது வர்த்தக நடவடிக்கைகள், கட்டிடங்களைக் கட்டுதல், நாட்டை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடுத்தி வருவதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
போர் இடம்பெற்ற 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 1987 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியின் செலவீனம் சாராசரியாக 421 மில்லியன் டொலர்கள். ஆனால் இந்த தொகை 2007 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரையில் 1716 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த காலப் பகுதியில் போர் நிறைவடைந்த பின்னரான 8 வருடங்களும் அடக்கம்.
அதாவது போர் நிறைவடைந்த பின்னரே அதிகளவு நிதி ஒதுக்கப்படுகின்றது. சிறீலங்காவின் படைத்துறைச் செலவீனம் 50 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட மியான்மார், 100 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் செலவீனங்களை ஒத்தது. அதாவது படையினரின் எண்ணிக்கையே அதிகளவு நிதியை உள்வாங்குகின்றது. இதன் தொகை 40 விகிதமாகும்.
தற்போது சிறீலங்கா படையினரின் எண்ணிக்கை 254,000 ஆகவும் பின்னிருக்கை படையினரின் எண்ணிக்கை 33,000 ஆகவும் உள்ளது. இந்த படையினரின் எண்ணிக்கை 30,000 ஆகவும், பின்னிருக்கை படையினரின் எண்ணிக்கை 170,000 ஆகவும் குறைக்கப்பட வேண்டும் என அறிக்கை கூறுகின்றது.ஆனால் சிறீலங்கா அரசு ஏன் தனது படையினரின் எண்ணிக்கையை அதிகமாக வைத்துள்ளது? ஏன் பாதுகாப்புக்கு அதிகளவு நிதியை செலவிடுகின்றது என்பதன் உள்நோக்கங்களை இந்த ஆய்வு தவறவிட்டுள்ளது.
சிறீலங்கா அரசின் உண்மையான நோக்கம் அதிகளவான படையினர் மூலம் நில ஆக்கிரமிப்பு, மத ஆக்கிரமிப்பு, காலாச்சார ஆக்கிரமிப்பு என்ற நடவடிக்கைகளின் ஊடாக தமிழ் மக்களின் தாயகத்தை சிதைத்து அவர்களின் தாயகக் கோட்பாட்டை அழிப்பதேயாகும்.
அதாவது 2009 ஆண்டுக்கு முன்னர் நேரிடையாக படையினர் மூலம் மேற்கொள்ளப் பட்ட இனப்படுகொலை என்ற இன அழிப்பு தற்போது அதே படையினர் மூலம் மறைமுகமாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாக மேற்கொள்ளப்படுகின்றது. அதாவது சிறீலங்கா அரசின் நோக்கமும், செயலும் ஒன்று என்பதுடன், அது போரின் போதும், போரின் பின்னரும் மாறவில்லை.
எனவே தான் பாதுகாப்புச் செலவீனமும் மாறவில்லை.ஆனால் சிறீலங்கா அரசின் இந்த நோக்கத்திற்கு தற்போது தடையாக உள்ளது பொருளாதார சிக்கல் தான். அதில் இருந்து சிறீலங்கா மீண்டு விட்டால், தமிழினம் மிகப்பெரும் அழிவை சந்திக்கும் என்பதுடன், தமிழர்களின் தாயகமும் முற்றாக பறிபோகும் நிலையேற்படும், அதற்கு சிறந்த அண்மைய உதாரணமாக பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும், அதற்கான அமெரிக்காவின் அங்கீகாரத்தையும் கூறலாம்.