Home Blog Page 2431

இலங்கை குறித்து ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் விரைவில்: சம்பந்தனிடம் உறுதி

இலங்கை தொடர்பில் தமது நிலைப்பாடு மிக விரைவில் வெளிப்படுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வாக்குறுதியளித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக்பிராந்தியத்தின் நிர்வாக இயக்குநர் பவோலா பம்பலோனி தலைமையிலான குழுவினரே மேற்படி வாக்குறுதியைச் சம்பந்தனிடம் தெரிவித்தனர் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நேற்றிரவு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடைமுறைகள் தொடர்பில் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தினார். இலங்கை அரசானது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்த காலத்தின்போது இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசு வழங்கியிருந்த போதும் அவற்றை நிறைவேற்றத் தவறியுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக இந்த வாக்குறுதிகள் கைவிடப்படலாகாது என்றும், போராட்டம் தமிழ் மக்களினுடையது, எனவே, ஒன்றிணைந்த, பிரிக்கமுடியாத, பிளவுபடாத நாட்டினுள் அதிகாரப் பரவலாக்கல் என்ற தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும் என்றும் – இந்தச் சந்திப்பின் போது இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

இலங்கை அரசு கொடுத்த இந்த வாக்குறுதிகளை சர்வதேச சமூகம் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும், இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அமைதியானது இலங்கை அரசு இந்த வாக்குறுதிகளில் இருந்து விலகிச் செல்வதற்கு இன்னும் ஊக்கத்தைக் கொடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் தீர்மானங்களை இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றுவதை சர்வதேச சமூகம் உறுதிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திய இரா.சம்பந்தன், விசேடமாக இறுதிக்கட்டப் போரின்போது பாதுகாப்புத் தரப்பினரிடமும் அரச அதிகாரிகளிடமும் தங்கள் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்னும் உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அப்படியானவர்கள் காணாமல் போயிருந்தால் அதற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு உண்மை உறுதி செய்யப்படல் வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். எமது மக்கள் இந்த உண்மையைக் கண்டுகொள்வதற்காக ஏங்கித் தவிக்கிறார்கள் என்றும், சர்வதேச சமூகம் இந்தக் கருமத்தில் உறுதியாகச் செயற்பட்டு உண்மையைக் கண்டறிய உதவ முன்வரவேண்டும் எனவும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கருமங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகள் மிக விரைவில் தாம் எடுக்கும் தீர்மானங்கள் மூலம் வெளிப்படும் என ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இதன்போது வாக்குறுதியளித்தனர்” என இந்தச் சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நெடுங்கேணி காட்டு பகுதியில் கஞ்சா தோட்டம் முற்றுகை!

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதிக்குட்பட்ட காட்டுபகுதியில் கஞ்சாசெடிகள்
பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்று அதிரடி படையினரால் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது அரை ஏக்கர் அளவிலான குறுகியநாட்களுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரத்திறகும் மேற்பட்ட கஞ்சா செடிகளை கைப்பற்றினர்.

வவுனியாவில் இருந்து சென்ற விசேட அதிரடிப்படையினரே குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் கைப்பற்றபட்ட கஞ்சா செடிகளை போகஸ்வெவ பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

jkjk நெடுங்கேணி காட்டு பகுதியில் கஞ்சா தோட்டம் முற்றுகை!

viber image 2020 02 12 05 14 14 நெடுங்கேணி காட்டு பகுதியில் கஞ்சா தோட்டம் முற்றுகை!

சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் போகஸ்வெவ பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தாயகத்தில் சிதைவடைந்த நிலையில் மனித எச்சங்கள் மீட்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக புனர்வாழ்வு வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில் குறித்த வைத்தியசாலை கட்டடங்களை அமைப்பதற்காக காணி துப்புரவு பணிகள் இடம்பெற்று வந்தன.

இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக தெரிவித்து அந்த பகுதி மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களினால் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் குறித்த கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டதை அவதானித்த பணியாளர்கள் மாங்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்
DSC05733 தாயகத்தில் சிதைவடைந்த நிலையில் மனித எச்சங்கள் மீட்பு.

DSC05743 தாயகத்தில் சிதைவடைந்த நிலையில் மனித எச்சங்கள் மீட்பு.

DSC05813 தாயகத்தில் சிதைவடைந்த நிலையில் மனித எச்சங்கள் மீட்பு.

DSC05824 தாயகத்தில் சிதைவடைந்த நிலையில் மனித எச்சங்கள் மீட்பு.

மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது
சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் அவர்கள் குறித்த இடத்தை பார்வையிட்டார்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அவர்கள் வருகை தந்த நிலையில் குறித்த பகுதியில் புகைப்படம் வீடியோ எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடைவிதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊழலில் ஈடுபடும் பாடசாலையின் அதிபரையும் ஆசிரியரையும் நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வவுணதீவு,கொத்தியாப்புலை கலைவாணி வித்தியாலய முன்பாக இன்று(12) காலை பாடசாலையின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையில் ஊழலில் ஈடுபடும் பாடசாலையின் அதிபரையும் ஆசிரியரையும் நீக்குமாறு கோரியும் பாடசாலையில் இயங்கிவரும் உயர்தர பிரிவினை நீக்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையினை நிறுத்துமாறு வலியுறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறித்த பாடசாலையின் அதிபரும் ஆசிரியர் ஒருவரும் நீண்டகாலமாக ஊழலில் ஈடுபட்டுவருவதாகவும் பாடசாலையின் கணக்கறிக்கைகள் எதுவும் காட்டப்படுவதில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் 25மாணவர்களுடன் பாடசாலையில் உயர்தர பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதிலும் அவற்றினை நீக்கிவிட்டு குறைந்த மாணவர்கள் உயர்தரம் கற்கும் பகுதிக்கு குறித்த உயர்தர பிரிவினை கொண்டுசெல்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவற்றினை உடனடியாக நிறுத்துமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.IMG 0008 ஊழலில் ஈடுபடும் பாடசாலையின் அதிபரையும் ஆசிரியரையும் நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாடசாலையின் மாணவர்கள்,பெற்றோர்கள் ,பழைய மாணவர்கள்,கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

குறித்த இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் வருகை தந்திருந்ததுடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்.

அரசியலை கல்விக்குள் புகுத்த வேண்டாம்ää இது ஒரு அரசியல் பழிவாங்கல் கொத்தியார்லை மக்கள் இதில் விழிப்படையவேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.IMG 0010 1 ஊழலில் ஈடுபடும் பாடசாலையின் அதிபரையும் ஆசிரியரையும் நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

இப் பாடசாலையின் உயர்தரத்தில் மாற்றம் செய்ய முனைந்தால் ஜனாதிபதி, பிரதமர்,ஆளுனர் அலுவலகம் முன் அமரத்தயாராக உள்ளோம், தங்களது வங்குரோத்து அரசியலை செய்ய அதிகாரிகளை இடமாற்றம் செய்வது அதிகாரிகள் மீது ஆதிக்கம் செலுத்துவது என தேவையற்ற விடயங்களை சிலர் மேற்கொண்டுவருவதாகவும் இதன்போது குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் இதன்போது கைவிடப்பட்டது.

போர்க் குற்றவாளியை ஒப்படைக்க தயாராகின்றது சூடான்

இனப்படுகொலையில் ஈடுபட்ட சூடானின் முன்னாள் அரச தலைவர் ஓமார் அல் புசீரை அனைத்துலக நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு சூடான் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

2003 ஆம் ஆண்டில் டார்பூரில் 3 இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் புசீர் மீது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. அதில் தொடர்புடைய அனைவரையும் நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

சூடான் அரசுக்கும் டார்பூர் பிரதேச போராளிகள் குழுக்களுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னாள் அரச தலைவரையும், ஏனைய மூன்று நபர்களையும் ஒப்படைப்போம் என சூடான் அரசின் பேச்சாளர் முகமது அல்டேஸ் பி.பி.சி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் மக்கள் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக தங்கள் உதவிகளை வழங்க வேண்டும்(நேர்காணல்) வீடியோ இணைப்பு

வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும், புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் உதவிகளை எவ்வாறு சரியான முறையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது  தொடர்பாகவும் வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவன  இணையத்தின் தலைவர் ஜெயராஜா ஜெயதீபன் அவர்கள் இலக்கு இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக  நேர்காணல்.

கேள்வி– போர்க் காலத்திலும், போர்க் காலத்திற்கு பின்னரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள்  எவ்வாறு உள்ளது?

போர்க் காலங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களின்  அநேக விடயங்களில் ஈடுபட்டு வந்தவை. குறிப்பாக அரசாங்கத்துடன் இணைந்து, அரசாங்கத்திற்கு பக்கபலமாக  பல பங்களிப்பை செய்து வந்திருக்கின்றன. போர் முடிவடைந்து மக்கள் மீள்குடியேற்றப்பட்டுக் கொண்டிருந்த சமயம்  பெரும் சவால்களுக்கு மத்தியில் பாரிய  நடவடிக்கைகள் அரச சார்பற்ற நிறவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தன.

போர்க் காலத்தில் இரண்டு தரப்பினருக்குமிடையில் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. போர் முடிவடைந்த பின்னர் முற்றுமுழுதாக அரசாங்கத்தின் துணையுடன், அரசாங்கத்தின் வழிகாட்டலில்  அரசாங்கத்திற்கு பக்கபலமாக அநேக வேலைத் திட்டங்களை மேற்கொண்டது என்பதை கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

கேள்வி- தற்போதைய காலகட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் எந்தப் பாதையை நோக்கி செல்கின்றது?

போர் முடிவடைந்த பின்னர் மக்கள் மீளக் குடியேறி ஓரளவு அடிப்படை வசதிகள் என்றாலும் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. ஆனால் அரச சார்பற்ற நிறுவனங்கள் தனித்து நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியை நோக்கி செல்லக்கூடிய வேலைத் திட்டங்களை கட்டாயம் மேற்கொள்ள  வேண்டிய நிலைப்பாட்டில் இருக்கின்றன.

அரசாங்கத்துடன் இணைந்து தங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தாலும் இன்னும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு  வேலை செய்ய வேண்டிய ஒரு நிலைப்பாடும் அதே நேரம் உரிமைகள் சம்பந்தமாக  வேலை செய்ய வேண்டிய கடப்பாடும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இருக்கின்றது.

கேள்வி- அரசியற் கைதிகளின் நிலவரம், காணாமற் போனோர் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

காணாமல் போனவர்கள் விடயம் தொடர்பாக அவர்களின் உறவினர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நல்ல நோக்கமாக இருந்தாலும், அவர்களின் போக்கு சரியான இலக்கிற்கு செல்லாது என்று அரச சார்பற்ற நிறுவனத்தினர்களாகிய நாங்கள் கருதுகின்றோம். வவுனியா மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்கு அதில் இருப்பதாக நான் கருதவில்லை.

கேள்வி-போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்குத்  தேவையான அடிப்படைத் தேவைகள், வாழ்வாதாரத் தேவைகள்  தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள்  எவ்வாறான வேலைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்?

அரச சார்பற்ற நிறுவனங்கள் பல வாழ்வாதாரத் திட்டங்களை மேற்கொள்கின்றன. இருந்தாலும் அது சரியான வகையில் பயன்படுத்தப்படாத ஒரு நிலைப்பாடு, எல்லா மாவட்டங்களிலும் காணப்படுகின்றது. நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி சார்ந்த ஒரு வேலைத் திட்டத்தை மேற்கொள்வதென்பது அரச சார்பற்ற நிறுவனத்தின் ஒரு பணி என்பதை   கூற விரும்புகின்றேன்.

கேள்வி- யுத்தம் முடிவடைந்த பிற்பாடு அதிகளவான புதிய அரச சார்பற்ற நிறுவனங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதேபோல புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்களும் தங்கள் உறவுகள் அல்லது ஒரு பெயர்களை வைத்து அரச சார்பற்ற நிறுவனங்களை  உருவாக்கி நேரடியாக மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த உதவித் திட்டங்கள் சரியாக போய் சேருகின்றனவா?

அரச சார்பற்ற நிறுவனம் என்பது அரசாங்கத்தின்  சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் கீழும்,  அரச சார்பற்ற நிறுவன செயலகத்திலும் பதிவு செய்யப்பட்டு, அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஊடாக வரும் நிதிகள்  சீரான முறையில் செலவு செய்யப்படுகின்றது.

அது திட்டமிட்ட மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்றது என்பது உறுதி செய்யப்படுகின்றது. ஏனெனில் அரசாங்கமும் அதனை மேற்பார்வை செய்கின்றது. அரையாண்டிற்கு ஒருமுறை அதற்குரிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதற்குரிய அனுமதி பெறப்பட்டு, அரசாங்க அதிபரிடம்  அனுமதி பெறப்பட்டு அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியான ஒரு ஒழுங்கு முறையில் மேற்கொள்ளப்படுகின்றது.

வெளிநாடுகளிலிருந்து செரற்றீஸ் என்ற அமைப்பு மூலம் வரும் பணங்கள் உதவி செய்யப்படுவதாக பத்திரிகையில் செய்திகள் வெளியாகின்றன. எவ்வளவு பணம் வருகின்றது, யாரிடமிருந்து வருகின்றது, எங்கே வருகின்றது, எந்த வகையில் அது செலவு செய்யப்படுகின்றது என்பது தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களாகிய எங்களுக்கு எந்தக் கருத்துக்களும் இல்லை. இவை தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தொடர்புகளும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கேள்வி-புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கப்படும் இவ்வாறான செரற்றீஸ் என்ற அமைப்பு  சீரான முறையில் இயங்க வேண்டுமாயின் அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

செரற்றீஸ் என்று வரும் அமைப்புகள் அரசாங்கத்தின் சமூக சேவைகள் திணைக்களத்தில் இலாப நோக்கற்ற நிறுவனமாக பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யப்படுமிடத்து, அவர்களை நாங்களும் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஓர் அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்வோம். மாதாந்தம் அரச சார்பற்ற நிறுவனத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு அவர்களை அழைத்துக் கொள்வோம். அரசாங்க முன்னேற்றக் கூட்டங்கள், அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுமிடத்து வரும் நிதிகள் சரியான முறையில் செலவிடப்படும், அல்லது பங்கிடப்படும் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்..

கேள்வி-போர் முடிந்த காலப் பகுதியில் புலம்பெயர் தேசங்களில் இருந்து வரும் நிதி மக்களின் வாழ்வாதாரத்திலும் சரி சுய நிர்ணயத்திலும், அரசியலிலும் பெரும் செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. அந்த நிதியை இங்குள்ள அமைப்புகள் எவ்வாறு கையாள வேண்டும்?

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாகவே இங்கு கருத்தைத் தெரிவிக்கலாம். செரற்றீஸ் எங்களுடன் இணைந்து செயற்படாத காரணத்தினால், அவர்களுக்கு வரும் நிதி பற்றி கருத்துத் தெரிவிக்க முடியாது. ஆனால் அரச சார்பற்ற நிறுவனத்திற்கு வரும் நிதிகள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றது என்பதை உறுதியாக கூறமுடியும்.

கேள்வி-புலம்பெயர் தேசத்திலுள்ள மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் சார்பாகவும் அவர்களின் மக்கள் நலத் திட்டங்கள் பற்றியும் நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

புலம்பெயர்ந்த மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிறைய உதவி புரிவதாக பத்திரிகைகள் வாயிலாகவும், செய்திகள் வாயிலாகவும் அறிகின்றோம். அதை பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ஊடாக  மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் விபரங்களை இணையத்தளத்தில் நீங்கள் பார்வையிடலாம். எந்தெந்த நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோ  அந்த நிறுவனங்கள் ஊடாக நீங்கள் நிதியை வழங்கினால், நீங்கள் வழங்கும் நிதியும், நிதி வழங்கும் நோக்கமும் சரியான வகையில் இருக்கும் என்பதை  தெரிவித்துக் கொள்கின்றேன்.

கேள்வி-அரச சார்பற்ற நிறுவன ஒன்றியத்தின் சார்பாக நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா?

வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவன ஒன்றியத்தின் வயது 20 வருடத்திற்கும் மேல். வவுனியாவில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் எமது அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள்.   உங்களால் வழங்கப்படும் எந்த நிதியாக இருந்தாலும், அது அரச சார்பற்ற நிறுவனத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டும் என்பதை  நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதை புலம்பெயர் மக்களுக்கும் நாம் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.

 

மட்டக்களப்பில் காட்டு யானைத் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் தரவை காட்டுப் பகுதியில் யானையின் தாக்குதலில் உயிரிழந்த நபரின் சடலம் இரண்டு நாட்களுக்கு  மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொம்மாதுறை வீதி செங்கலடியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சவேந்திரன் (வயது 39) என்ற நபரே யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

கடந்த 9ம் திகதி வயல் காவலுக்காக தரவை பகுதிக்கு மூன்று மோட்டார் வண்டியில் ஐந்து நபர்கள் சென்று கொண்டிருந்த வேளையில் தரவை காட்டுப் பகுதியில் இருந்து வந்த யானை குறித்த நபர்களை துரத்திய போது ஐந்து பேரும் திசை மாறி ஓடிய நிலையில் ஒருவரை தாக்கி காட்டுப் பகுதிக்கும் தூக்கி எறிந்துள்ளது. இதனால் இவரோடு சென்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான நபரினை மீட்பதற்கு பொதுமக்களால் தரவை யானை காட்டுப் பகுதிகளுக்கு செல்ல முடியாது இருந்த நிலையில் நேற்று இரவு பலரது உதவிகள் மூலம் உடல் கண்டெடுக்கப்பட்டு இன்று காலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் இழப்புகள்;அநாதரவாய் மக்கள்- கிருஷ்னா

கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளில் பெரும் வேதனைகளையும் சோதனைகளையும் சுமந்த மக்களாக உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேச மக்கள் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் யானைகளின் தாக்குதலிலும் இழப்புகளை எதிர் நோக்குகின்றனர்.

போரதீவுப் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் ஏனையவர்களைப் போல் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. என்றாலும் தானும் தனது குடும்பமும் என அன்றாடம் உழைத்தே வாழ்நாளைக் கடத்துகின்றனர்.

பல்வேறு வளங்களைக் கொண்டிருந்தாலும், வேளாண்மைச் செய்கைக்கு பெயர்போன இந்தப் பிரதேசம் வரலாறு காணாத பேரழிவுகளை சந்தித்திருக்கின்றது. இவற்றை எல்லாம் கடந்து தற்போதைய சூழ்நிலையில் காட்டு யானைகளின் அட்டகாசங்களும் அழிவுகளும் இவர்களை விட்டபாடில்லை.

எல்லையோரக் கிராமங்களான பாலையடிவட்டை, காக்காச்சிவட்டை, நெல்லிக்காடு 35ஆம், 37ஆம், 38ஆம், 39ஆம், 40ஆம் கிராமங்கள், விவேகானந்தபுரம், திக்கோடை, தும்பங்கேணி, இளைஞர் விவசாயத் திட்டம், களுமுந்தன்வெளி புன்னக்குளம், இறாணமடு போன்ற கிராமங்களிலேயே யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

யுத்த காலத்தில் எதுவித யானைப் பிரச்சினையையும் எதிர் கொள்ளாத இப்பகுதிகள் யுத்தம் முடிவடைந்த காலப் பகுதியில் இருந்து தொடர்ச்சியான யானை பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.

போரதீவுபற்று பிரதேச செயலகப் பகுதிகளில் யானையின் தாக்குதல்கள் காரணமாக சுமார் 1000ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 15ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன்  20ற்கும் மேற்பட்டவர்கள் தமது அவயங்களை இழந்துள்ளனர்.IMG 3343 அதிகரித்து வரும் இழப்புகள்;அநாதரவாய் மக்கள்- கிருஷ்னா

போரதீவுபற்று பிரதேசத்தில் 43 கிராமசேவையாளார் பிரிவுகளில் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். விவசாயத்தினையும் கால்நடை வளர்ப்புகளையும் பிரதான தொழிலாகக் கொண்டுள்ள இங்குள்ள மக்கள், வீட்டுத் தோட்டம், கைத்தொழில், கோழி வளர்ப்பு, செங்கல் அரிதல், கூலிவேலை செய்தல் போன்ற இதர தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐப்பசி தொடக்கம் மாசி மாதம் வரையான காலப் பகுதிகளில் பெரும்போக வேளாண்மைச் செய்கை, தோட்டச் செய்கை என்பனவற்றை பரந்த அளவிலும் , சித்திரை தொடக்கம் ஆடி மாத காலப் பகுதிகளில் சிறுபோக வேளாண்மைச் செய்கையை குறைந்த அளவிலும் இந்தப் பிரதேச மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மேற்கொள்ளும்  அவர்களின் வாழ்வாதாரத்திற்கு காட்டு யானைகளால் தற்போது பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இங்குள்ள சிங்கள பகுதிகளில் யானைகளின் பிரச்சினைகளினால் அப்பகுதி சிங்கள மக்கள் பாதிக்கப்படாத நிலையில், தமிழ் பகுதிகளே யானையின் தாக்குதல்களினால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் 35ஆம் கிராமத்தினைச் சேர்ந்த ஆலய பரிபாலன சபையின் செயலாளர் ரஞ்சன் என்பவர் இவ்வாறு கூறுகின்றார்.

“நாங்கள் எமது கிராமத்திலிருந்து சுமார் 10 தடவைகளுக்கு மேல் இடம் பெயர்ந்து பற்பல இடங்களில் வாழ்ந்து இறுதியாக கடந்த 2007ஆம் ஆண்டு மீளக் குடியமர்ந்துள்ளோம். பெருமளவிலான உயிர், உடமை இழப்புகளை எதிர் கொண்டுள்ளோம். தற்போது நாம் காட்டு யானைகளால் அவ்வாறான இழப்புகளை சந்தித்து வருகிறோம்.IMG 1594 அதிகரித்து வரும் இழப்புகள்;அநாதரவாய் மக்கள்- கிருஷ்னா

இதுவரை எமது பகுதியில்  12 நபர்களை காட்டு யானைகள் அடித்துக் கொன்று இருக்கின்றன. 50இற்கு மேற்பட்ட வீடுகள் யானைகளினால் முற்றாக உடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலமை தொடருமாக இருந்தால், நாங்கள் யுத்த காலத்தில் எவ்வாறு இடம் பெயர்ந்தோமோ அது போல் காட்டு யானகளுக்கும் பயந்து இடம் பெயர வேண்டிய  நிலை  ஏற்படும்” என தனது மன ஆதங்கத்தை மிகவும் தெளிவாக  எடுத்துரைத்தார்.

அப்பகுதியைச் சேர்ந்த கோ.பிரசாத் இவ்வாறு கூறுகின்றார்.

“நாங்கள் தற்போது யானைகளின் அட்டகாசத்தினால் படும் பாடுகளைப் பற்றி பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தலைவர், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வனஜீவராசிகள் திணைக்களம், அரசாங்க அதிபர் போன்ற பலருக்கும் அறிவித்தும் எமக்குரிய பயன் இதுவரை  கிட்டவில்லை.

நாங்கள் கோருவது யானைகள் கிராமத்திற்குள் உட்புகும் மையப் பகுதிகளைச் சுற்றி மின் வேலிகள் அமைத்துத் தர வேண்டும் என்பதுவேயாகும். ஆனால் வனஜீவராசிகள் திணைக்களம் இங்கு வந்து எம்மிடம் நான்கு ஜந்து யானை வெடிகளைத் தந்து விட்டுச் செல்கின்றார்கள். இவவற்றை நாங்கள் பயன்படுத்தினாலும் யானைகள்   எந்த பிரதிபலிப்பையும் காட்டுவதில்லை.  இவற்றால் எந்த பயனுமில்லை.

இது இவ்வாறிருக்க, இப்பிரதேசம் வேளாண்மைச் செய்கைக்குப் பெயர் போனது. இங்குள்ளவர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர் மரக்கறி தோட்டங்கள், வாழைத் தோட்டங்கள், தென்னைகள் என்பனவும் நெல் வயல்களும் மட்டுமன்றி விவசாயிகள் சேமித்து வைக்கும் நெல் மூட்டைகளையும் கூட யானைகள் அழித்து வருகின்றன.IMG 1275 அதிகரித்து வரும் இழப்புகள்;அநாதரவாய் மக்கள்- கிருஷ்னா

காட்டு யானைகளின்  தாக்குதல்களை இன்று ஏந்திக் கொண்டு நிற்கும் போரதீவுப் பற்றுப் பிரதேச மக்கள் கடந்த காலங்களில் பெரிய வெள்ளம் அதனைத் தொடர்து சூறாவளி பின் யுத்தம் இவைகளனைத்திற்கும் முகம் கொடுத்து தற்பொழுது மெல்லமெல்ல மீண்டெழுந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், “மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல” தற்பொழுது யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களின் உயிர்களையும், உடமைகளையும், குடியிருக்கும் வீடுகளையும் அழித்து வருவது மிகவும் வேதனையான விடயமே.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அதே காலப் பகுதியில் 10 யானைகளும் இறந்துள்ளன எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன என சுட்டிக்காட்டிய அவர், 2019ஆம் ஆண்டு யானைகளால் தாக்கப்பட்டு 10பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், இவ்வாண்டு முதல் மாதத்தில் இருவர் யானைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.elephent அதிகரித்து வரும் இழப்புகள்;அநாதரவாய் மக்கள்- கிருஷ்னா

குறித்த மனித – யானை மோதலைத் தடுக்கும் பொருட்டு, யானைகள் வரும் வீதிகளில் மின்விளக்குகள் பொருத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். யானை வேலிகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன் பெரும்பாலான பகுதிகளுக்கு அமைக்கப் பட்டுள்ளதாகவும், மிகுதி பகுதிகளுக்கும் இந்த ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எது எப்படி இருப்பினும் இந்த அழிவு நடவடிக்கைகளை தடுப்பதற்கு உரிய கதியில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றே மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது சாமானிய மக்களின் உயிர் பிரச்சனை. அவர்களின் வாழ்வாதரப் பிரச்சனை. வனவிலங்குகளின் வாழ்வுக்கான பிரச்சனையும் கூட. எனவே உரிய அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக அக்கறை கொண்டோர் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை உடன் முன்னெடுப்பது அவசியம்.

 

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நினைவுகள்…

தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் தமிழ்மக்களுக்கு மிகவும் அறிமுகமான ஊடகர் சத்தியமூர்த்தியின் நினைவுநாள்…..இந்தநாளில் அவர் எம்மோடு வாழ்ந்த நினைவுகள் முன்னெழுகின்றன…

அழிக்கமுடியாத அந்த நினைவுகள் எம்மை என்றும் வருத்துவனவாக இருக்கும் நிலையில் அவர்பற்றி பதிவிடுவது அவசியமாகிறது. எங்களுடன் சேர்ந்து அன்பும் அரவணைப்புமாக வாழ்ந்து…அன்பை விதைத்துவிட்டு எறிகணையின் தாக்குதலில் சத்தமின்றி உயிர்பிரிந்துவிட்ட அவரின் நினைவுகள் எம்முள் மெலெழுகின்றன.

சத்தியமூர்த்தி என்றவுடன் ஆங்கிலமும் தமிழும் கலந்த அந்த பேச்சு….வியர்வையை துடைத்தபடியே சிரிக்கும் அந்த சிரிப்பு…….எப்போதும் துருவித்துருவி கேட்கும் ஊடகனுக்கேயுரிய இயல்பு… எவ்வளவு நெருக்கமான நட்பெனினும் தன்கருத்தை விட்டுக்கொடுக்காமல் விவாதிக்கும் நுண்ணறிவு…..என எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

சத்தியமூர்த்தி ஊடகத்துறையின் சொத்து என்றால் மிகையல்ல. ஊடகத்துறையில் நிறைய சாதிக்கவேண்டிய வயதில் காலம் அவரைப்பிரித்துவிட்ட சோகம் இன்னமும் எம்மை வருத்தியபடிதான் உள்ளது.

1972 இல் யாழ்மாவட்டதில் இணுவில் எனும் ஊரில் பிறந்தவர். தாத்தா, அம்மம்மாவின் அரவணைப்பில் மண்டைதீவில் வாழ்ந்து, மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் தரம் ஐந்தாம் வகுப்புவரை கல்விகற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ். இந்துக்கல்லூரிக்கு சென்று படித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்தே எழுதும் பணியில் ஆர்வமுற்றிருந்தவர் சத்தியமூர்த்தி. விளையும் பயிரை முளையிற் தெரியும் என்ற முதுமொழிக்கிணங்க சிறுவயதிலேயே இனங்காணப்பட்டவர். வாசிப்பதில் சிறுவயதில் இருந்தே ஈடுபாடு கொண்டிருந்தவர்.

1995இல் சிறிலங்கா இராணுவபடையெடுப்பின் காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு இடம் பெயர்ந்த பின் வன்னியில் கால்பதித்து ஊடகங்களில் பல்வேறு எழுத்துப்பக்கங்களில் பங்களித்து தன்திறமையினை வெளிக்காட்டினார். ஆரம்பத்தில் ஈழநாடு பத்திரிகையிலும், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதாரம் சஞ்சிகையிலும் இவரது திறமைகள் பல்வேறு விதமாக வெளிவந்தன.sathiyamoorthi ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நினைவுகள்...

தொடர்ந்து தன்னுடைய நற்பண்புகளாலும் இன்முகத்தினாலும் ஊடகஅறிமுகங்களை பெற்று அவர் அதன் மூலமும் ஊடகச் செயற்பாட்டில் முனைப்பு பெற்று முன்னேறினார். வன்னியில் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதனை ஆலோசகராக கொண்டு செயற்பட்ட ‘எழுகலை இலக்கியப் பேரவையில்’ முக்கிய இடம் வகித்தார். பேரவையின் செயற்பாடுகளுக்கு ஏனைய நண்பர்களுடன் இணைந்து பாடுபட்டார். இளம் படைப்பாளர்களினதும், ஆர்வலர்களினதும் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று அந்த அமைப்பின் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெற்றார்.

வன்னிமண்ணில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட சத்தியமூர்த்தி வெளிச்சம் கலை இலக்கிய சஞ்சிகை, மற்றும் ஈழநாடு, ஈழநாதம் உட்பட்ட ஊடகங்களில் தன்னுடைய கதைகளை கட்டுரைகளை விமர்சனங்களை எழுதிவந்தார். அதேவேளை அரசசுகாதார திணைக்களத்திலும் அவருக்கான பணி அமைந்தது.

ஆனால் அவரின் ஆர்வமும் ஈடுபாடும் ஊடகப் பணியிலேயே இருந்தன. அவரிடம் காணப்பட்ட திறமையும் ஆர்வமும் அவரை புலம் பெயர்நாட்டு மக்களுக்கான செய்தியாளனாக்கியது. புலத்து மக்களுக்காக ரீ.ரீ.என், தரிசனம் தொலைக்காட்சிகளுக்கான நாளாந்த செய்திப்பார்வைத் தொகுப்பு, அரசியல் கலந்துரையாடல்கள், உள்ளுர் நடப்புக்கள் உட்பட்ட நிகழ்ச்சிகளை அவர் செய்தார். தனது செய்திமுறையில் தனக்கென தனிமுத்திரை பதித்து, அதனூடாக சத்தியமூர்த்தி உலகத்தமிழர்களின் விருப்பத்துக்குரிய செய்தியாளராக தன்னை தகவமைத்துக்கொண்டார். குறிப்பாக பரிஸ் ஈழமுரசு, எரிமலை சஞ்சிகை, கனடாவின் உலகத்தமிழர் பத்திரிகை உட்பட்ட பல ஊடகங்களில் இவரது பல்வேறு படைப்புக்கள் இடம்பெற்றிருந்தன. அவரது அறிவும் ஆளுமையும் புலம்பெயர் ஊடகங்களையும் அழகுசெய்தன.

கிளிநொச்சியில் இயங்கிய தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் தோற்றம் முதல் அதன் செயற்பாட்டுக் காலம் வரையில் பங்களிப்பு செய்ததில் சத்தியமூர்த்திக்கு மனநிறைவு இருந்தது. எப்போதும் ஒரு செய்தியாளனுக்குரிய துடிப்போடும் சிந்தனையோடும் காலத்தை நகர்த்தியவர்…தன்னுடைய மிதிவண்டியில் எப்போதும் திரிந்து செய்தியை சேகரித்தவர். ஊடகப்பணியை தவிர எதுவும் நினைத்ததுகூட இல்லை. சிறந்த நேர்மையான விமர்சகன்….

மூத்தோரையும் இளையோரையும் ஒன்றாக அரவணைத்துச் செல்லும் கலையில் கைதேர்ந்தவர்….தன்னுடைய கருத்தை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் கெட்டித்தனம் கொண்ட சத்தியமூர்த்தி தத்துவார்த்தரீதியாக வாதாடும் திறமைகொண்டவர்.

திட்டமிட்டவகையில் சிறிலங்கா அரசினால் தமிழ்மக்கள்மீதான போர் முடுக்கிவிடப்பட்ட நாட்களில் போகுமிடம் தெரியாமல் அலைந்துகொண்டிருந்த மக்கள் கூட்டத்தினரிடையே அவரும் தன் குடும்பத்தினருடன் அலைந்தார். தன் மிதிவண்டியில் மகளையும் அத்தியாவசிய பொருட்களையும் சுமந்தபடி சென்றார்.

கிளிநொச்சி முதல் உடையார்கட்டு ஈறாக நாளும் பொழுதுமாய் எம்முடன் இடம் பெயர்ந்துதிரிந்த அவர் 12.02.2009 அன்று தேவிபுரம் பகுதியில் அவருக்கெனக் காத்திருந்ததுபோல….எங்கோ வெடித்த எறிகணையின் சிதறிய இரும்புத்துண்டு ஒன்று அவரை சாய்த்தது. ஒரேமூச்சில் அவரது உயிர்பிரிந்தது….sathy anna ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நினைவுகள்...

நாட்டை நேசித்து…செய்தியாளனாக வாழ்ந்த சத்தியமூர்த்தி தமிழ் மக்களுக்கு அன்றொரு செய்தியானார்….காலம் அவரை கணக்கில்லாமல் கவர்ந்துகொண்டது.

தன் பெண்குழந்தை பற்றி சத்தியமூர்த்தி பல கனவுகளைக்கொண்டிருந்தார். பனிபொழியும் அதி காலையில் ஆஸ்மா நோயையும் பொருட்படுத்தாது….”கைவீசம்மா கைவீசு….” என்று மகளுக்கு பாட்டுப்பாடி ஊஞ்சலாட்டும் அன்புத்தந்தையாகவும் மகளுக்கு அறிவுசார் புத்தகங்களையே பரிசளிக்கவேண்டும் என ஆசைப்பட்ட ஒரு தந்தையாகவும் விளங்கியவர்.

சத்தியமூர்த்தியின் கனவுகளை சுமந்த அவரது மகள் சிந்து….இன்று 13 வயதுப்பிள்ளையாய் எம்முன் வளர்ந்து நிற்கிறாள். அதே சாயலுடன். எங்களை காணும்போதெல்லாம் தன் தந்தையைப்பற்றி கேட்பதுடன் அவர் குறித்த பழைய நினைவுகளையும் மீட்டிக்கொள்வாள்.

போர்க்கொடூரத்தில் தந்தையை இழந்த பல ஆயிரக்கணக்கான குழந்தைகளில் அவளும் ஒருத்தி. அப்பாவைப்போலவே அனைவரிடமும் அன்புகாட்டுவதில் ஆர்வமாயிருக்கின்றாள் சிந்து.

‘சத்தியமூர்த்தியின் நினைவுடன்…’ – ஆதிலட்சுமி

இலங்கையில் இன்று 5.4 ரிக்டர் அளவில் நிலடடுக்கம்.!

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாலை 2 மணியளவில் இந்த நிலநடுக்கம்சி உணரப்பட்டுள்ளது. கொழும்பிலும் சுமார் 3 செக்கன்களுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர, குடுகலஹேன மற்றும் தெய்யன்தர பிரதேசத்திலும் அம்பலன்கொட பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 2.33 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சில நொடிகள் இந்த அதிர்வு உணரப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக காலி மாவட்டத்தின் மெதகீம்பிய பிரதேசத்திலும் இவ்வாறான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

எனினும் எவ்வித சேதங்களும் ஆபத்துக்களும் பதிவாகாமையினால் பொது மக்களை அச்சமடைய வேண்டாம். இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாதி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்கு திசையின் இந்து சமுத்திரத்தில் இன்று அதிகாலை 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து 240 கிலோமீற்றர்ருக்கு தொலைவில், தென்கிழக்கு கடற்பிராந்தியந்தில் நில அதிர்வு பதிவாகியதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது​.