புலம்பெயர் மக்கள் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக தங்கள் உதவிகளை வழங்க வேண்டும்(நேர்காணல்) வீடியோ இணைப்பு

வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும், புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் உதவிகளை எவ்வாறு சரியான முறையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது  தொடர்பாகவும் வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவன  இணையத்தின் தலைவர் ஜெயராஜா ஜெயதீபன் அவர்கள் இலக்கு இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக  நேர்காணல்.

கேள்வி– போர்க் காலத்திலும், போர்க் காலத்திற்கு பின்னரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள்  எவ்வாறு உள்ளது?

போர்க் காலங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களின்  அநேக விடயங்களில் ஈடுபட்டு வந்தவை. குறிப்பாக அரசாங்கத்துடன் இணைந்து, அரசாங்கத்திற்கு பக்கபலமாக  பல பங்களிப்பை செய்து வந்திருக்கின்றன. போர் முடிவடைந்து மக்கள் மீள்குடியேற்றப்பட்டுக் கொண்டிருந்த சமயம்  பெரும் சவால்களுக்கு மத்தியில் பாரிய  நடவடிக்கைகள் அரச சார்பற்ற நிறவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தன.

போர்க் காலத்தில் இரண்டு தரப்பினருக்குமிடையில் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. போர் முடிவடைந்த பின்னர் முற்றுமுழுதாக அரசாங்கத்தின் துணையுடன், அரசாங்கத்தின் வழிகாட்டலில்  அரசாங்கத்திற்கு பக்கபலமாக அநேக வேலைத் திட்டங்களை மேற்கொண்டது என்பதை கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

கேள்வி- தற்போதைய காலகட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் எந்தப் பாதையை நோக்கி செல்கின்றது?

போர் முடிவடைந்த பின்னர் மக்கள் மீளக் குடியேறி ஓரளவு அடிப்படை வசதிகள் என்றாலும் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. ஆனால் அரச சார்பற்ற நிறுவனங்கள் தனித்து நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியை நோக்கி செல்லக்கூடிய வேலைத் திட்டங்களை கட்டாயம் மேற்கொள்ள  வேண்டிய நிலைப்பாட்டில் இருக்கின்றன.

அரசாங்கத்துடன் இணைந்து தங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தாலும் இன்னும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு  வேலை செய்ய வேண்டிய ஒரு நிலைப்பாடும் அதே நேரம் உரிமைகள் சம்பந்தமாக  வேலை செய்ய வேண்டிய கடப்பாடும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இருக்கின்றது.

கேள்வி- அரசியற் கைதிகளின் நிலவரம், காணாமற் போனோர் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

காணாமல் போனவர்கள் விடயம் தொடர்பாக அவர்களின் உறவினர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நல்ல நோக்கமாக இருந்தாலும், அவர்களின் போக்கு சரியான இலக்கிற்கு செல்லாது என்று அரச சார்பற்ற நிறுவனத்தினர்களாகிய நாங்கள் கருதுகின்றோம். வவுனியா மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்கு அதில் இருப்பதாக நான் கருதவில்லை.

கேள்வி-போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்குத்  தேவையான அடிப்படைத் தேவைகள், வாழ்வாதாரத் தேவைகள்  தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள்  எவ்வாறான வேலைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்?

அரச சார்பற்ற நிறுவனங்கள் பல வாழ்வாதாரத் திட்டங்களை மேற்கொள்கின்றன. இருந்தாலும் அது சரியான வகையில் பயன்படுத்தப்படாத ஒரு நிலைப்பாடு, எல்லா மாவட்டங்களிலும் காணப்படுகின்றது. நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி சார்ந்த ஒரு வேலைத் திட்டத்தை மேற்கொள்வதென்பது அரச சார்பற்ற நிறுவனத்தின் ஒரு பணி என்பதை   கூற விரும்புகின்றேன்.

கேள்வி- யுத்தம் முடிவடைந்த பிற்பாடு அதிகளவான புதிய அரச சார்பற்ற நிறுவனங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதேபோல புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்களும் தங்கள் உறவுகள் அல்லது ஒரு பெயர்களை வைத்து அரச சார்பற்ற நிறுவனங்களை  உருவாக்கி நேரடியாக மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த உதவித் திட்டங்கள் சரியாக போய் சேருகின்றனவா?

அரச சார்பற்ற நிறுவனம் என்பது அரசாங்கத்தின்  சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் கீழும்,  அரச சார்பற்ற நிறுவன செயலகத்திலும் பதிவு செய்யப்பட்டு, அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஊடாக வரும் நிதிகள்  சீரான முறையில் செலவு செய்யப்படுகின்றது.

அது திட்டமிட்ட மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்றது என்பது உறுதி செய்யப்படுகின்றது. ஏனெனில் அரசாங்கமும் அதனை மேற்பார்வை செய்கின்றது. அரையாண்டிற்கு ஒருமுறை அதற்குரிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதற்குரிய அனுமதி பெறப்பட்டு, அரசாங்க அதிபரிடம்  அனுமதி பெறப்பட்டு அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியான ஒரு ஒழுங்கு முறையில் மேற்கொள்ளப்படுகின்றது.

வெளிநாடுகளிலிருந்து செரற்றீஸ் என்ற அமைப்பு மூலம் வரும் பணங்கள் உதவி செய்யப்படுவதாக பத்திரிகையில் செய்திகள் வெளியாகின்றன. எவ்வளவு பணம் வருகின்றது, யாரிடமிருந்து வருகின்றது, எங்கே வருகின்றது, எந்த வகையில் அது செலவு செய்யப்படுகின்றது என்பது தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களாகிய எங்களுக்கு எந்தக் கருத்துக்களும் இல்லை. இவை தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தொடர்புகளும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கேள்வி-புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கப்படும் இவ்வாறான செரற்றீஸ் என்ற அமைப்பு  சீரான முறையில் இயங்க வேண்டுமாயின் அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

செரற்றீஸ் என்று வரும் அமைப்புகள் அரசாங்கத்தின் சமூக சேவைகள் திணைக்களத்தில் இலாப நோக்கற்ற நிறுவனமாக பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யப்படுமிடத்து, அவர்களை நாங்களும் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஓர் அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்வோம். மாதாந்தம் அரச சார்பற்ற நிறுவனத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு அவர்களை அழைத்துக் கொள்வோம். அரசாங்க முன்னேற்றக் கூட்டங்கள், அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுமிடத்து வரும் நிதிகள் சரியான முறையில் செலவிடப்படும், அல்லது பங்கிடப்படும் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்..

கேள்வி-போர் முடிந்த காலப் பகுதியில் புலம்பெயர் தேசங்களில் இருந்து வரும் நிதி மக்களின் வாழ்வாதாரத்திலும் சரி சுய நிர்ணயத்திலும், அரசியலிலும் பெரும் செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. அந்த நிதியை இங்குள்ள அமைப்புகள் எவ்வாறு கையாள வேண்டும்?

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாகவே இங்கு கருத்தைத் தெரிவிக்கலாம். செரற்றீஸ் எங்களுடன் இணைந்து செயற்படாத காரணத்தினால், அவர்களுக்கு வரும் நிதி பற்றி கருத்துத் தெரிவிக்க முடியாது. ஆனால் அரச சார்பற்ற நிறுவனத்திற்கு வரும் நிதிகள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றது என்பதை உறுதியாக கூறமுடியும்.

கேள்வி-புலம்பெயர் தேசத்திலுள்ள மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் சார்பாகவும் அவர்களின் மக்கள் நலத் திட்டங்கள் பற்றியும் நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

புலம்பெயர்ந்த மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிறைய உதவி புரிவதாக பத்திரிகைகள் வாயிலாகவும், செய்திகள் வாயிலாகவும் அறிகின்றோம். அதை பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ஊடாக  மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் விபரங்களை இணையத்தளத்தில் நீங்கள் பார்வையிடலாம். எந்தெந்த நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோ  அந்த நிறுவனங்கள் ஊடாக நீங்கள் நிதியை வழங்கினால், நீங்கள் வழங்கும் நிதியும், நிதி வழங்கும் நோக்கமும் சரியான வகையில் இருக்கும் என்பதை  தெரிவித்துக் கொள்கின்றேன்.

கேள்வி-அரச சார்பற்ற நிறுவன ஒன்றியத்தின் சார்பாக நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா?

வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவன ஒன்றியத்தின் வயது 20 வருடத்திற்கும் மேல். வவுனியாவில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் எமது அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள்.   உங்களால் வழங்கப்படும் எந்த நிதியாக இருந்தாலும், அது அரச சார்பற்ற நிறுவனத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டும் என்பதை  நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதை புலம்பெயர் மக்களுக்கும் நாம் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.