இலங்கையிலுள்ள சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை கைதிகளுக்கு இடையே கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கடந்த சனிக்கிழமை முதல் கைதிகளைப் பார்வையிடுவதற்கு ஒருவருக்கு மாத்திரமே அனுமதி வழக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தரைத் தளத்திலும், காற்றிலும் பல மணிநேரங்கள் முதல் நாட்கள் வரை உயிருடன் இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1.80 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நோயை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள சுயசுத்தம், கைகளை அடிக்கடி சவர்க்காரம் அல்லது சுத்திகரிப்பான் கொண்டு கழுவுதல் போன்றவை அவசியம் என்று வலியுறுத்தப்படுகின்றது.
இதேவேளை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். இந்தக் கட்டுரை “நியூஇங்கிலாந்து ஜேர்னல் ஒப் மெடிசன்“ இதழில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதாக அறிகுறிகள் தெரிவதில்லை. சாதாரண மனிதர்களைப் போலத்தான் அவர்கள் இருப்பார்கள். அவர்கள் மூலமாகத் தான் கொரோனா வைரஸ் அதிகமாக மற்றவர்களுக்கு பரவுகின்றது.
கொரோனா வைரஸ், சார்ஸ்-சிஓவி-2 (SARS-CoV-2) ஆகியவை காற்றிலும் பரவக்கூடியது. சுத்தம் இல்லாத பகுதிகளிலும், தரைத்தளத்திலும் 3 மணிநேரம் முதல் பல நாட்கள் வரை வாழக்கூடியது.
செப்புப் பாத்திரங்கள், பொருட்களில் கொரோனா வைரஸ் 4 மணிநேரம் வரை உயிர் வாழும்.
அட்டைகள், காட்போட் போன்றவற்றில் 24 மணிநேரம் வரை உயிர் வாழும்.
பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களில் 2 முதல் 3 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர் வாழும்.
இதில் சார்ஸ் சிஓவி-2 மற்றும் சார்ஸ் சிஓவி-1 ஆகிய இரு வைரஸ்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான தன்மை கொண்டவை. இந்த வைரஸ்கள் அதிகமான உயிரிழப்பை உண்டாக்குபவை. இந்த இரு வைரஸ்களும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆனால், கோவிட் -19 வைரஸ் அதாவது கொரோனா வைரஸ குடும்பத்தில் இருக்கும் இந்த வைரஸ் மிகப் பெரிய அளவில் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை விளக்க முடியவில்லை.
இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் நாள்தோறும் ஒவ்வொரு இடத்தைத் தொடும் போதும், இருமல் செய்யும் போதும், பொருட்களைத் தொடும் போதும் மற்றவர்களுக்குப் பரப்புகிறார். இவ்வாறு பரவும் கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உயிர் வாழும் என்பதைத்தான் இந்தக் கட்டுரையில் தெரிவித்துள்ளோம் என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் கட்சிகள் தமது வேட்பு மனுக்களை இன்று (18) தாக்கல் செய்தனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.00 மணிமுதல் கட்சி தலைவர்களுடன் வருகை தந்து தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அந்தவகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக, முதன்மை வேட்பாளர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன், எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், இம்மானுவேல் ஆர்னோல்ட், திருமதி ரவிராஜ் உள்ளிட்ட வேட்பாளர்களும் வருகை தந்திருந்தனர்.
ஐக்கிய தேசிய முன்னணியில், முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில், வேட்பாளர்களும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பாக, முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், க.பிரேமசந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட வேட்பாளர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக, முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், செல்வராசா கஜேந்திரன், மற்றும் திருமதி, வாசுகி உள்ளிட்டவர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக, அங்கஜன் இராமநாதன் தலைமையில், சங்கரப்பிள்ளை பத்மராஜா, கந்தையா தியாகலிங்கம், பரணிரூபசிங்கம் வரதராஜசிங்கம், உள்ளிட்ட வேட்பாளர்கள் வருகை தந்ததுடன், ஏனைய கட்சிகள், சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை இன்று தாக்கல் செய்தது.இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இன்று வேட்பு முன தாக்கல்செய்யப்பட்டது
மட்டக்களப்ப மாவட்டத்தில் கொரணா அச்சுறுத்தல் நிலவும் நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் பங்காளி கட்சிகளின் வேட்பாளர்கள் சகிதம் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இன்று மாவட்ட செயலகத்தில் உள்ள வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதியில் கொரணா தடுக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யபவருவோருக்கும் கொரணா தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமை வேட்பாளராக கொண்டு கொண்டு எட்டு உறுப்பினர்கள் கட்சியில் போட்டியிடுகின்றனர்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் ஐந்து பேரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் மூன்று பேரும் புளோட் சார்பில் ஒருவரும் வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுத்தாக்கல் முடிந்த பின்னர் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவு இன்று (18) காலை 9.30 மணியளவில் வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆறு கட்டில்கள் , கைகழுவும் இடம் , சிகிச்சை பிரிவுடன் இணைந்த மலசல கூடம் , ஒட்சிசன் வசதிகள் கொண்டதாக இப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதுடன் சிகிச்சைப் பிரிவில் 24 மணி நேரமும் கடமையாற்றக்கூடிய வகையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.மகேந்திரன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் , ஊழியர்கள், வைத்தியர்கள் , பிராந்திய சுகாதார திணைக்கள ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வாகன வருமான அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் மூலம் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும். இருப்பினும் இணையத்தளத்தின் ஊடாக இந்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு முடியும் என்று அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதிக்கு கொடுப்பனவு அல்லது தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட வருமான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதத்தை எதிர்கொள்ளும் நபர்களுக்கு வீதி பரிசோதனையின் போது நிவாரணம் வழங்குமாறு பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது
வாழ்வதற்கு ஏதுவான வசதிகள் எதுவும் இன்றி குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து கப்பாச்சி கிராம மக்கள் கிராமத்தில் இருந்து வெளியேறி செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவில் முகத்தான்குளத்தின் குளக்கட்டினை பிரதான வீதியாக கொண்டு அமைந்துள்ள கப்பாச்சி கிராமம் கவனிப்பாரற்ற வாழ்விடமாக மாறி வருகின்றது.
95 குடும்பங்களைக் கொண்ட இக் கிராமத்தில் மக்கள் 1977ஆம் ஆண்டு குடியேறியிருந்த போதிலும், அக்காலப் பகுதியில் மக்கள் செறிவுத் தன்மை காரணமாக வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். 1990ஆம் ஆண்டு எற்பட்ட நாட்டின் ஸ்திரமற்ற தன்மையினால், இக் கிராம மக்கள் வெளியேறி மடு பிரதேசத்திற்கு சென்றிருந்தனர்.
எனினும் மடு பிரதேசத்தில் இருந்த குறிப்பிட்ட குடும்பத்தினர் மீண்டும் அங்கிருந்து இந்தியாவிற்கு அகிகளாக சென்றுவிட மிகுதியாக இருந்த சுமார் 40 குடும்பங்கள் வரையில் மீளவும் தமது கிராமத்தில் குடியேற விரும்பியிருந்தனர்.
இந் நிலையிலேயே முகத்தான்குளத்தை அண்டிய பகுதியில் தாம் குடியேறினால் நீர் வசதியுடன் வாழலாம் என்ற எண்ணத்தில் இருந்த சமயம், 1994ஆம் ஆண்டு காலப் பகுதியில் அப் பிரதேசத்தின் செயலாளர் கப்பாச்சி கிராமத்தின் மேட்டுப் பிரதேசத்தில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினை அமைத்து அதனை சூழ மக்களை குடியேற்றுமாறு உத்தரவிட்டிருந்தாக அக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரச அதிகாரிகளின் உத்தரவிற்கமைய அப்பிரதேசத்தில் தாம் குடியேறிய போதிலும், குடிநீர் வசதிகளோ ஏனைய போக்குவரத்து வசதிகளோ இன்றி தாம் வாழ்ந்ததாகவும், 6 குழாய் கிணறுகள் அமைக்கப்பட்ட போதிலும் அவற்றில் 1 கிணற்று நீரை மாத்திரமே குடிப்பதற்கு பயன்படுத்த முடியும் எனவும், ஏனையவை குடிநீருக்கு உகந்தது இன்மையால் நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நீர் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளதால் கிராம மக்கள் குடிநீருக்கு பெரும் அல்லல்படும் நிலை இன்றும் காணப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் திறந்த கிணறுகளை அமைப்பதென்பது எட்டாக்கனியாகியுள்ள இக் கிராமத்தில், சுமார் 150 அடி ஆழமான ஒரு கிணறு வெட்டப்பட்டுள்ள போதிலும் அதிலும் கோடை காலத்தில் நீர் இன்றியே காணப்படும் என்கின்றனர் ஊர்வாசிகள். இது மாத்திரமின்றி குளக்கட்டினை மாத்திரம் பிரதான வீதியாக கொண்டமைந்த இக் கிராமத்தில் போக்குவரத்து வசதிகள் ஏதுமின்மையால், பொது மக்கள் சுமார் 3 கிலோ மீற்றர்கள் நடந்தும் துவிச்சக்கர வண்டிகளிலுமே பயணத்தை மேற்கொள்கின்றனர்.
இருந்த போதிலும் பாடசாலை மாணவர்கள் பலர் துவிச்சக்கர வண்டிகள் இன்மையால் சுமார் 35 மாணவர்கள் நடைபவனியாகவே வெயிலிலும் மழையிலும் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறான நிலையில் இக் கிராம மக்களின் உயிரை காவு கொள்ளும் வகையில் யானைகளின் நடமாட்டமும் தற்போது கிராமத்திற்குள் காணப்படுதுடன், மின் கம்பங்களை உடைப்பதும் வீடுகளின் சுவர்களை தள்ளுவதுமாக யானைகள் அட்டசகாசம் புரிவதனால் இக் கிராமத்தில் மக்கள் வாழ முடியாதுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றர்.
இந் நிலையில் இக் கிராமத்தில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு முக்கிய காரணியாக இருந்த பல நோக்கு கூட்டறவுச் சங்கம் பல ஆண்டுகளாக மூடப்பட்டு விட்டமையினால் பல நோக்கு கூட்டுறவுச் சங்க கட்டிடம் பாழடைந்து கவனிப்பாரற்று காணப்படுவதுடன் கிராம மக்களும் தமது அன்றாட பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கப்பாச்சி கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள முதலியார்குளம் கிராமத்திற்கே செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இக் கிராமத்திற்கு கிராம சேவகரோ சமுர்த்தி உத்தியோகத்தரோ வராமையினால் தமது நிலைமைகளை அரச அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறுவதற்கு கூட எவரும் அற்ற மக்களாக தாம் உள்ளதாக ஆதங்கத்தை வெளியிடும் இக் கிராம மக்கள், தமது கிராமத்தில் இருந்து மெல்ல மெல்ல மக்கள் வெளியேறி வருவதனால் பல வீடுகள் தற்போது பற்றைகள் மூடி காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே தமது கிராமத்தை அழிவில் இருந்து காக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் கப்பாச்சி கிராம மக்கள்.
கொரோனா விசேட சிகிச்சை பிரிவொன்று வெலிகந்தை வைத்தியசாலையில் நிறுவப்பட்டது.
இதன் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு, சிகிச்சை வழங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் குறித்த பிரிவில் நிறுவப்ப்படுவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.
அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில், இட வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்படுமாயின், தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சை வழங்குவதற்காக வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் விசேட பிரிவு நிறுவப்படுகின்றது.