Home Blog Page 2370

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் அரசுக்கு முன்னாள் எம்.பி சிவமோகன் கோரிக்கை

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பாதுகாப்பு கோரி ஏற்பட்டுத்தப்பட்ட முரண்பாட்டை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று மாலை அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரனா வைரஸ் தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சில கைதிகள் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந் நிலையில் ஏனைய கைதிகள் தமக்கான மருத்துவ பாதுகாப்பை கருத்தில் கொண்டு தம்மை விடுவிக்குமாறு கோரி சிறைக்காவலர்களுடன் முரண்பட்டதாக அறியமுடிகின்றது.
இதன் காரணத்தினால் கைதிகள் சிறைக்கூடங்களின் கதவுகளை உடைத்து பிரதான கதவினை உடைக்க முற்பட்டபோது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் காரணமாக மூன்று கைதிகள் படுகாயமடைந்த நிலையில் உயிர் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இச் சூழலில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உடனடியாக உறுதிப்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பை வழங்க ஆவன செய்ய வேண்டும்.
அத்துடன் சிறைச்சாலைக்குள் கண்ணீர்ப்புகைக்குண்டுகளும் வீசப்படுவதால் அங்குள்ள கைதிகள் அனைவரும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே கண்ணீர்ப்புகைக்குண்டுகளால் மூச்சு திணறல் மற்றும் பல்வேறு சௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ள கைதிகள் அனைவரையும் மனிதர்களாக எண்ணி மனிதாபிமானமாக இந்த அரசு நடத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 130 பேர் கைது

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 31 பொலிஸ் பிரிவுகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

அனுராதபுரம் சிறையில் கைதிகள் சிறையுடைப்பு முயற்சி: துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கைதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இதில் மூன்று கைதிகள் பலியாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரனா காய்ச்சல் என்ற சந்தேகத்தில் 4 பேரை அனுராதபுரம் வைத்தியசாலையில் சிறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

இதன் பின்னர் சிறையில் உள்ள கைதிகள் தம்மை வெளியில் செல்ல அனுமதிக்க கோரி அதிகாரிகளுடன் முரண்பட்டநிலையில் முரண்பாடு உச்சம் பெற்றுள்ளது. ஆயுள் கைதிகள் அரசியல் கைதிகளுடன் சிறை வைத்திருந்த நிலையில் ஆயுள் கைதிகள் அவர்களை அடைத்து வைத்த சிறையை உடைத்து சிறைச்சாலை உள் வளாகப்பகுதிக்கு வந்துள்ளனர். இதனையடுத்து கைதிகள் சிறையின் முன் வாயிலை உடைக்க முயற்சித்த நிலையில் அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும் நிலைமை கட்டுக்கடங்காமையால் கைதிகளை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவருவதுடன் மூவர் பலியாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அனுராதபுரம் சிறையில் 11 அரசியல் கைதிகள் உள்ளதையும் குறிப்பிடத்தக்கது.

வடக்கில் மூன்று கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள்; கேப்பாபிலவுக்கு கொண்டுவரப்பட்ட தென்பகுதி மக்கள்

கேப்பாப்பிலவு,இரணைமடு மற்றும் பலாலியில் கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் சிறிலங்கா விமானப்படையினரால் அமைக்கப் பட்டுள்ளன.இவற்றில் ஒன்றான கேப்பாப்பிலவில் இந்தியாவிலிருந்து திரும்பிய சிங்கள யாத்தீரிக்கர்கள் தங்கவைக்காட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளம் கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒரு தொகுதியினர் இங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களில் 29 பெண்களும் 12 ஆண்களும் ஆக 41 பேர் நேற்று (20) மாலை அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொட்பில் மேலும் தெரியவருகையில்,

இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களை 14 நாட்களுக்கு தனிமைப் படுத்துவதற்காக முல்லைத்தீவு கேப்பாபிலவில் விமானப்படை தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு இவர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.200320 SLAF coronavirus centre north2 வடக்கில் மூன்று கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள்; கேப்பாபிலவுக்கு கொண்டுவரப்பட்ட தென்பகுதி மக்கள்
வடக்கு கிழக்கில் கொரோனா பரிசோதனை நிலையங்கள் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வந்த நிலையிலும் தற்போது வடக்கு கிழக்கை இலக்காக வைத்து இவ்வாறானவர்கள் கொண்டுவரப்படுதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கியூபாவிலிருந்து பிரித்தானியாவுக்கு புறப்பட்ட விமானங்கள்

தற்போது கியூபாவில் தரித்து நிற்கும் எம்.எஸ். பிரெய்மர் கப்பலில் உள்ள சுமார் 700 பிரித்தானிய பயணிகள் பயணிகள் நான்கு தனித்தனி விமானங்களில் தமது நாட்டுக்கு பயணமாகின்றனர்.

கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட காரணத்தால் பலநாடுகளாலும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 1000 போர் கொண்ட குறித்த கப்பலை தனது துறைமுகத்தில் கரைதட்ட கியூபா அனுமதிவழங்கியி ருந்தது.

இந்த நிலையில், அங்கிருந்து பிரித்தானிய பயணிகள் தரம் பிரியப்பட்டு இன்று நான்கு விமானங்களில் பிரித்தானியா புறப்பட்டுள்ளனர் என குறித்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.1200px BREAMAR 36487157951 கியூபாவிலிருந்து பிரித்தானியாவுக்கு புறப்பட்ட விமானங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் கண்காணிப்பில் என தரம்பிரிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு விமானங்களில் பயணப்பட்டுள்ளனர்.

விமானப் பயணத்துக்கு ஏற்ற உடல்நிலை கொண்டிராதவர்கள் என கருதப் படுவோருக்கு கியூபா உதவிகளையும் மருத்துவ சிகிச்சையையும் அளிக்கும் என கூறப்படுகிறது. ஆயினும் இவ்வாறு எத்தனைபேர் உள்ளனர் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

இது இவ்வாறிருக்க இன்றுவரை கியூபாவில் உறுதிப்படுத்தப்பட்ட 11 கொரோனா வைரஸ் நோயாளர்கள் இருப்பதாகவும் இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் கியூப அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆப்கானில் உள்ளிருந்து தாக்குதல்;24 படையினர் பலி

தலிபான்களுடன் தொடர்புடைய வீரர்கள் தாக்கியதில் ஆப்கானிஸ் தான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்தனர்.ஆப்கானிஸ்தானில் அமை தியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கப் படைகள் அங்குநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் படைகளை விலக்கிக் கொள்ளஅமெரிக்கா முடிவு செய்து ஒரு மாதமான நிலையில் நேற்று தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியிலுள்ள ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தெற்கு ஆப்கானிஸ்தான் மாகாணத்தின் கலாத் பகுதியில்உள்ள ராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்தனர். அப்போது ராணுவத்தில் பாதுகாப்புப் படையினராக ஊடுருவியிருந்த சில வீரர்கள், தூங்கிக் கொண்டிருந்த பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர்.

இதில் 14 பாதுகாப்புப் படையினர், 10 போலீஸார் என மொத்தம் 24 பேர் உயிரிழந்தனர். 4 பேரைக் காணவில்லை. இத்தகவலை மாகாண ஆளுநர் ரஹ்மத்துல்லா யர்மால் தெரிவித்தார்.

துப்பாக்கியால் சுட்ட அனைவரும், தலிபான் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். பாதுகாப்புப் படையினர் போல ராணுவத்தில் ஊடுருவியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்திய பிறகு அவர்கள் ஆயுதங்களுடன் தப்பிச் சென்றுள்ளனர்.

ஆனால் இந்த சம்பவம் குறித்து தலிபான் அமைப்பினர் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை

யாழில் மதபோதனை செய்த சுவிஸ் போதகருக்கு கொரோனா;கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல்

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர் அவர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சுவிஸ் நாட்டில் சிகிச்சை பெறுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை குறித்த ஆராதனையில் கலந்து கொண்ட இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இவ் ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது.

குறித்த ஆராதனையில் கலந்துகொண்ட மக்களை யாழ்ப்பாண பிராந்திய சேவைகள் பணிமனையின் தொடர்பிலக்கத்திற்கு (0212227278) உடனடியாக தொடர்புகொண்டு தங்களது விபரங்களை தெரிவிப்பதன் மூலம் மருத்துவ அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக அவர்களது இடங்களுக்கு செல்வதன் மூலமாகவும் பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஒழுங்குகள் செய்யப்படும் என்றும் இவ்வாறு தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான ஒழுங்குகளை செய்வது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் பிராந்தியத்திலுள்ள இதர மக்களுக்கும் தற்கால கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலத்தில் அவசியமானதும் பாதுகாப்பானதுமாகும் என்றும் தெரிவிக்கபட்டிருக்கும் அதேவேளை மருத்துவ அதிகாரிகளின் தொடர்புகள் கிடைக்கும் வரை தங்களை இயன்ற அளவில் பாதுகாப்பாக தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தும் படியும் கோரப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டத்தையும் பொருட்படுத்தாமல் தொடரும் போராட்டம்.

வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் ஊரடங்கு சட்டத்தையும் பொறுட்படுத்தாமல் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனோ தொற்றை தடுக்கும் ரீதியில் இலங்கை பூராகவும் நேற்று மாலை 06.00 மணி தொடக்கம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இவ் ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியாவில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் இன்றி வவுனியா நகரே வெறிச்சோடி காணப்படுகின்றது.
இந்நிலையிலும் வடக்கு கிழக்கு தாயகத்தில் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியறியும் சங்கத்தினால் வவுனியா தபால் திணைக்களத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட கொட்டகையில் 1127வது நாளாக சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் காயம்.

இன்றுகாலை வவுனியா வேப்பங்குளம் பகுதியில் தென்னை மரத்தில் இருந்து தவறிவிழுந்து ஒருவர் காயமடைந்துள்ளார்.

தேங்காய்பறிக்க முற்பட்டபோதே குறித்த நபர் தவறி வீழ்ந்துகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கபட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.

சம்பவத்தில் உதயரூபன் வயது30 என்ற நபரே காயமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

மட்டக்களப்பில் ஊரடங்கு;மீறல்கள் இல்லை

கொரனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்குச்சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வைத்தியசாலைகள் தவிர்ந்த அனைத்து பிரிவுகளும் முடங்கியுள்ளதுடன் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸாரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டுவருவதுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்கிவருகின்றனர்.IMG 0457 மட்டக்களப்பில் ஊரடங்கு;மீறல்கள் இல்லை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கியுள்ளதையும் காணமுடிகின்றது.

ஊரடங்கு சட்டத்தினை மீறிய வகையில் செயற்பட்ட எவரும் மட்டக்களப்பில் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.IMG 0463 மட்டக்களப்பில் ஊரடங்கு;மீறல்கள் இல்லை