ஆப்கானில் உள்ளிருந்து தாக்குதல்;24 படையினர் பலி

தலிபான்களுடன் தொடர்புடைய வீரர்கள் தாக்கியதில் ஆப்கானிஸ் தான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்தனர்.ஆப்கானிஸ்தானில் அமை தியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கப் படைகள் அங்குநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் படைகளை விலக்கிக் கொள்ளஅமெரிக்கா முடிவு செய்து ஒரு மாதமான நிலையில் நேற்று தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியிலுள்ள ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தெற்கு ஆப்கானிஸ்தான் மாகாணத்தின் கலாத் பகுதியில்உள்ள ராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்தனர். அப்போது ராணுவத்தில் பாதுகாப்புப் படையினராக ஊடுருவியிருந்த சில வீரர்கள், தூங்கிக் கொண்டிருந்த பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர்.

இதில் 14 பாதுகாப்புப் படையினர், 10 போலீஸார் என மொத்தம் 24 பேர் உயிரிழந்தனர். 4 பேரைக் காணவில்லை. இத்தகவலை மாகாண ஆளுநர் ரஹ்மத்துல்லா யர்மால் தெரிவித்தார்.

துப்பாக்கியால் சுட்ட அனைவரும், தலிபான் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். பாதுகாப்புப் படையினர் போல ராணுவத்தில் ஊடுருவியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்திய பிறகு அவர்கள் ஆயுதங்களுடன் தப்பிச் சென்றுள்ளனர்.

ஆனால் இந்த சம்பவம் குறித்து தலிபான் அமைப்பினர் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை