Home Blog Page 2338

கடற்படையின் வெறியாட்டம்! மூவரை பற்களால் கடித்து குதறிய கொடூரம்

கடற்பகுதியில், சிறிலங்கா கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலில் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (07/04/2020) கிராஞ்சியில் உள்ள கடற்படை காவலரணில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, கடற்தொழிலுக்காக சென்றிருந்த வேளை, இரவு 07:00 மணியளவில் அவ்விடத்திற்கு சென்று கடற்படையினர், அம்மீனவர்களை கைதுசெய்து, நீருக்குள் மூழ்கடித்து, ஆயுதங்களால் தாக்கியதுடன், பற்களினாலும் கடித்துக் குதறியுள்ளனர்.

இவ் வெறியாட்டத்தில் ஈடுபட்ட கடற்படையினரில் சிலர் சீருடை அணியாமல் நிர்வாணமாக நின்றதாகவும், அதிகளவு மதுபோதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடுகள் எதனையும் செய்யக்கூடாது எனவும், மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லக்கூடாது எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனால் அச்சமுற்று வீடுகளில் இருந்த மீனவர்கள், தற்போது தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட வேதனை தாங்க முடியாமல் தகவலை வெளியிட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

ஆனையிறவு ஊடாக யாழிற்கு வந்த நபர்! தகவல் கோரும் பிரதேச செயலகம்.

ஆனையிறவு சோதனை மையம் ஊடாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ்.திரும்பிய நபர் ஒருவர் பற்றிய தகவல்களை கரவெட்டி பிரதேச செயலகம் கோரியுள்ளது.

படையினரது சோதனை சாவடியில் தனது பெயராக இராசா மாணிக்கம் (தேசிய அடையாள அட்டை இல-527452530V) எனவும் முகவரியாக இல81, கரவெட்டி வடக்கினையும் அவர் பதிவு செய்துள்ளார்.

எனினும் குறித்த முகவரியில் அவரை இனங்காண முடியாத நிலையில் கரவெட்டி பிரதேச செயலகம் அவரது தகவல்களை கோரியுள்ளது.

தகவல் தெரிந்தோர் கரவெட்டி பிரதேச செயலக தொலைபேசி இலக்கமான 0212263258 இற்கு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

அரிசிக்கான சில்லறை விலை நிர்ணயம்.

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபாவாகவும் வெள்ளை அரிசி, சிகப்பரிசி ஆகியவை 55 ரூபாவாகவும் நாட்டரிசி 90 ரூபாவாகவும் சம்பா, வெள்ளை மற்றும் சிகப்பு அரிசி 90 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபாயகரமான மழை பெய்யக் கூடிய சாத்தியம்.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மாகாணத்திலும் அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 05ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (11ஆம் திகதி) பலகத்துறை, எஹெட்டுவெவ, கதுருகஸ்தமன மற்றும் தாமரைவில்லு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

மழை நிலைமை:
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகளில் கிழக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது சாதாரண முதல் மிதமான கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஸ்ரீலங்காவில் மேலும் ஏழுபேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான மருத்துவர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜா-எல சுதுவெல்ல பகுதியில் 6 பேரும், தெஹிவளையில் ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 197 ஆக அதரிகரித்துள்ளது.

20 ஆயிரம் பரிசோதனை உபகரணங்களை இலங்கைக்கு கொண்டுவர தீர்மானம்.

நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறிவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேடமருத்துவர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுறுதியான மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்தது மருத்துவமனையில் இருந்து நேற்றைய தினம் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், 7 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், தொற்றுறுதியான 129 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றுறுதியான முதலாவது இலங்கையர் கடந்த மாதம் 11 ஆம் திகதி முதன் முதலாக அடையாளம் காணப்பட்டார்.

கடந்த 31 ஆம் திகதி அதிகபட்சமாக 21 கொரோனா தொற்றுறதியானோர் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த நிலையில், நாட்டின் 14 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதற்கமைய, கொழும்பில் 44 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.

புத்தளத்தில், 34 பேரும், களுத்துறையில் 27 பேரும், கம்பஹாவில் 16 பேரும், யாழ்ப்பாணம் மற்றும் கண்டியில் தலா 7 பேரும் கொரோனா தொற்றுறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரியில் 5 பேரும், குரநாகலில் 3 பேரும், மாத்தறையில் இரண்டு பேரும், மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும், தனிமைப்படுத்தல் மையங்களில் 37 பேரும், வெளிநாட்டவர்களு; மூவரும் இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், கொரோனா தொற்றை கண்டறிவதற்கான 20 ஆயிரத்து 64 பரிசோதனை உபகரணங்களுடன், விசேட பொருட்கள் சேவை வானூர்தி ஒன்று நேற்று சீனாவின் ஷங்காய் நகரிருலிந்து நாட்டை வந்தடைந்தது.

இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள பீ.சீ.ஆர் எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றை உறுதிப்படுத்த கூடிய உபகரணங்களின் பெறுமதி ஒரு இலட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த வாரம் மேலும் 20 ஆயிரம் பரிசோதனை உபகரணங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.

கடல் எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், இலங்கையின் கடல் எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கொரோனா தொற்றுடையவர்கள், நாட்டுக்கு வருவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி அட்மிரல் பியல்டி சில்வா தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் வடமேல் கடற்பரப்பு எல்லைகளில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்து கரையோர பகுதிகளில் உள்ள மீன்பிடி சங்கங்கள் மற்றும் பொறுப்புவாய்ந்தவர்கள் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்தி, பாதுகாப்புடன் செயற்பட வேண்டும்.

அத்துடன், சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் கப்பல்கள் அவதானிக்கப்படுமாயின், விரைவாக கடற்படையினருக்கு அறியப்படுத்துமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி அட்மிரல் பியல்டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச எல்லைகள் ஊடாக ஏதிலிகள் பிரவேசிப்பதை தவிர்ப்பதற்கான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு இந்திய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு வகையில், இவ்வாறு ஏதிலிகள் அடங்கிய கப்பல் கடற்பரப்பில் அவதானிக்கப்படுமாயின், அந்த கப்பல், பயணத்தை ஆரம்பித்த இடத்திற்கே அதனை பாதுகாப்பான முறையில் அனுப்பிவைப்பதற்கு கடற்படையினால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கு மேல் உயர்ந்தது

கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகில் உள்ள நாடுகள் அதிக உயிர் மற்றும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருவது நாம் அறிந்ததே இந்த நிலையில், இதுவரையில் 100,371 பேர் பலியாகியுள்ளதுடன், 1,652,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 339,937 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரித்தானியா ஆகியவை அடங்கும்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 980 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் 605 பேர் பலியாகியுள்ளதுடன், இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 570 பேர் மரணித்துள்ளனர். அமெரிக்காவில் சராசரியாக 2000 பேர் நாள் ஒன்றிற்கு மரணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமேசான் பழங்குடி மக்களிடையே முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவுகை

பிரேசில் யானோமாமி என்னும் அமேசான் பழங்குடி மக்களிடையே முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பொதுவாக வெளியுலகத் தொடர்பற்று வாழ்ந்துவரும் இவர்கள் வேறிடங்களில் இருந்து பரவும் நோய்களால் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்கள் என அறியப்படுகிறது.

நோயாளியான 15 வயது சிறுவன், வடக்கு மாநிலமான ரொரைமாவின் தலைநகரான போவா விஸ்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“யானோமாமி மக்களின் மத்தியில் ஒரு தொற்றை இன்று நாங்கள் உறுதிப்படுத்தினோம், இது ஒரு மிகவும் கவலைக்குரிய விடையம் .நாங்கள் பழங்குடி சமூகங்களுடன்,குறிப்பாக வெளி உலகத்துடன் மிகக் குறைந்த தொடர்பில் உள்ளவர்களுடன் மும்மடங்கு எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.”என்று சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹென்ரிக் மண்டேட்டா புதன்கிழமை ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

குளோபோ என்ற செய்தித்தாள் படி, பிரேசில் பழங்குடி மக்களிடையே இப்போது குறைந்தது ஏழு கொரோனா வைரஸ் தொற்றுக்களை உறுதிப்படுத்தியுள்ளது.

முதலாவது கோகாமா இனத்தைச் சேர்ந்த 20 வயது பெண், ஒரு வாரத்திற்கு முன்பு காரோண வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரேசில் 300 க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த 800,000 பழங்குடியின மக்களைக் கொண்டுள்ளது.

முக வண்ணப்பூச்சு மற்றும் சிக்கலான துளையிடல்களுக்கு பெயர் பெற்ற யனோமாமி மக்கள் சுமார் 27,000 பெயர் உள்ளனர்.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வெளி உலகத்திலிருந்து பெரிதும் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் 1970 களில் அம்மை மற்றும் மலேரியா போன்ற நோய்களால் பேரழிவிற்கு ஆளானார்கள்.

அமேசான் மழைக்காடுகளில் உள்ள பழங்குடியினர் வெளியிலிருந்து பரவுகின்ற நோய்களால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் ஏனெனில், அவர்கள் வரலாற்று ரீதியாக நோய்க்கிருமிகளில் இருந்து விலகிவாழ்கின்றனர்.இதனால், உலகிலுள்ள பெரும்பாலான மக்களைப்போல் இவர்களிடம் மேம்பட்ட நோய்யெதிர்ப்புச் சக்தி காணப்படுவதில்லை.

மன்னார் தாரபுரத்தில் 8 பேர் மருத்துவ பரிசோதனைகளுக்கு..!

மன்னார் – தாராபுரம் பகுதி முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு குடும்பங்கள் இன்று காலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் டீ.வினோதன் தலைமையில் இன்று காலை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர்கள் குறிப்பிட்டனர்.

இதனடிப்படையில் 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் பகுதிக்கு அண்மையில் புத்தளத்திலிருந்து சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தாராபுரம் பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புத்தளத்தில் கொரோனா தொற்று உறுதியானவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இரண்டு குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டன.

இந்தநிலையில் குறித்த குடும்ப உறுப்பினர்களுக்;கு மருத்துவ பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் தாராபுரம் பகுதியில் கிருமி நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தி தொரடர்பாளர் குறிப்பிட்டார்.
தாராபுரம் கிராமத்தை சுற்றி இராணுவத்தினரும், காவல்துறையினரும்; இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது