20 ஆயிரம் பரிசோதனை உபகரணங்களை இலங்கைக்கு கொண்டுவர தீர்மானம்.

நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறிவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேடமருத்துவர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுறுதியான மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்தது மருத்துவமனையில் இருந்து நேற்றைய தினம் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், 7 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், தொற்றுறுதியான 129 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றுறுதியான முதலாவது இலங்கையர் கடந்த மாதம் 11 ஆம் திகதி முதன் முதலாக அடையாளம் காணப்பட்டார்.

கடந்த 31 ஆம் திகதி அதிகபட்சமாக 21 கொரோனா தொற்றுறதியானோர் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த நிலையில், நாட்டின் 14 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதற்கமைய, கொழும்பில் 44 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.

புத்தளத்தில், 34 பேரும், களுத்துறையில் 27 பேரும், கம்பஹாவில் 16 பேரும், யாழ்ப்பாணம் மற்றும் கண்டியில் தலா 7 பேரும் கொரோனா தொற்றுறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரியில் 5 பேரும், குரநாகலில் 3 பேரும், மாத்தறையில் இரண்டு பேரும், மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும், தனிமைப்படுத்தல் மையங்களில் 37 பேரும், வெளிநாட்டவர்களு; மூவரும் இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், கொரோனா தொற்றை கண்டறிவதற்கான 20 ஆயிரத்து 64 பரிசோதனை உபகரணங்களுடன், விசேட பொருட்கள் சேவை வானூர்தி ஒன்று நேற்று சீனாவின் ஷங்காய் நகரிருலிந்து நாட்டை வந்தடைந்தது.

இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள பீ.சீ.ஆர் எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றை உறுதிப்படுத்த கூடிய உபகரணங்களின் பெறுமதி ஒரு இலட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த வாரம் மேலும் 20 ஆயிரம் பரிசோதனை உபகரணங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.