சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் : அரசாங்கம் அறிவிப்பு

அநுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட நபர் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமிக்கு அவதூறு ஏற்படும் வகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம கருத்து வெளியிட்டிருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் வினவியிருந்தனர்.

இதற்கு பதில் அளித்த அவர், குறித்த சம்பவம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இவ்விடயத்தில் சட்டம் நியாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பௌத்த பிக்குகளாக இருந்தாலும் நாட்டின் சட்டத்துக்கு முரணாகச் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பௌத்த பிக்குகளாக இருந்தாலும், அவர்கள் நாட்டிலுள்ள நடைமுறைச் சட்டத்துக்கு முரணான வகையில் செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக எவ்வித பாகுபாடுமின்றி நிச்சயம் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அவ்வாறு சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக எந்தவொரு தடையுமின்றி சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அநுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியைப் பாலியல் தொழிலாளி என மிக மோசமாக விமர்சித்தமை மற்றும் அவதூறு பரப்பியமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

காவல்துறையினர் இது குறித்த விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விசாரணைகளின் போது வெளிவரும் உண்மைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே, அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும்.

எவ்வாறாயினும், சமூக ஊடகங்களிலோ அல்லது ஏனைய வழிகளிலோ அவ்வாறு பொறுப்பற்ற முறையில் அவதூறு தெரிவிக்கப்பட்டமையால், பாதிக்கப்பட்ட குறித்த சிறுமிக்கும் அவரது தாய் உள்ளடங்கலான ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய கடுமையான மன உளைச்சல்களுக்கும் சமூகப் பாதிப்புக்களுக்கும், அவ்வாறு கருத்து வெளியிட்ட நபர் சட்டரீதியாகப் பொறுப்பு கூற வேண்டும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதனை மிகச் சாதாரணமான ஒரு விடயமாகக் கருதி, எவரும் இலகுவாகக் கடந்து சென்றுவிட முடியாது.

இந்தச் சம்பவம் மற்றும் அதன் பின்னணி தொடர்பில் இதுவரையிலான காலப்பகுதிக்குள் 15 இற்கும் மேற்பட்ட நபர்களிடம் மிக விரிவான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்றத் தன்மைக்கு அமைவாக, அடுத்தடுத்து மேலதிக சாட்சிப் பதிவுகளும் இடம்பெறும் என்று அமைச்சரவை பேச்சாளர் கூறியுள்ளார்.