மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார ஊழியர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனால் இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
கொரனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார பகுதி ஊழியர்களின் அர்ப்பணிப்பினை கௌரவப்படுத்தும் வகையில் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கொரனா அச்சுறுத்தலில் இருந்து மட்டக்களப்பு மக்களை பாதுகாப்பதற்காக தினமும் தொற்று நீக்குதல்ääகழிவுகள் அகற்றல் என பல்வேறு அர்ப்பணிப்புமிக்க சேவையினை சுகாதார ஊழியர்கள் வழங்கிவருகின்றனர்.
அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபையில் தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக கடமையாற்றும் 250 சுகாதார ஊழியர்களுக்கு இதன்போது நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி தக்ஷஜானந்தர் மகராஜ்,சுவாமி நீலமாதவானந்த மகராஜ், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,சுகாதார குழுவின் தலைவர் சிவம்பாக்கியநாதன்,மாநகர ஆணையாளர் க.சித்திரவேல்,பிரதி ஆணையாளர் சிவராஜா,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கொழும்பு ,களுத்துறை ,கம்பஹா, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா ஆபத்து காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 19 மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 4 மணிக்கு அமுலுக்குவரும்.
குறித்த மாவட்டங்களுக்கு மீண்டும் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம், கொழும்பு, புத்தளம், களுத்துறை, ஹம்பகா உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரும்வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டம் மயிலங்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தையார் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
ஆசிகுளம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று மீன்பிடிக்கச் சென்ற அவர் நீரில் மூழ்கியபோது அவதானித்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பியிருக்கின்றனர்.
இருப்பினும் வைத்தியசாலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஈழத்தமிழர் முகாம்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
“தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஈழத்தமிழர் முகாம்களில் கொரோனா நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக சுகாதாரத்துறையின் மூலம் அனைத்து முகாம்களையும் ஆய்வுசெய்து ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் உடல்நலனை பரிசோதித்து, கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
அனைத்து முகாம்களிலும் கொரோனாவைத் தடுக்க போதிய பாதுகாப்பு வசதிகளை உருவாக்கித் தருவதுடன் முன்பரிசோதனை வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும். மத்திய, மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து துயர்துடைப்பு உதவிகளும் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.”
என அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க,இன்று 15.4.2020 சிவகங்கை தொகுதிக்குட்பட்ட காளையார்கோவில் ஒன்றிய நாம் தமிழர் உறவுகள் சார்பாக நாட்டரசன் கோட்டை கிராமம் கெளரிபட்டி பஞ்சாயத்தில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் 120 குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் மற்றும் கபசுரக் குடிநீர் நாம்தமிழர் கட்சியினரால் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 12 பேரில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது.
12 பேரில் தந்தை மற்றும் 11, 7 வயதுகளையுடைய மகள்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். மற்றும் 5பேர் ஆண்களாவர். 7 பேர் அரியாலையைச் சேர்ந்தவர்கள், மற்றும் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர்.
அரியாலை மதபோதகரின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என தெரிவித்து பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட சோதனையில் மேற்படி நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது சேவையை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நிறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பறப்பை மேற்கொள்ளும் இடங்களுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டப்பாடுகளை கருத்திற் கொண்டு அதன் திட்டமிடப்பட்ட பயணிகள் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் விமான நிறுவனங்களின் காகோ சேவைகள் தேவைப்படும் போது தொடர்ந்து இயங்கும். இது தொடர்பான மேலதிக தகவலுக்கு, பயணிகள் தங்கள் பயண வெளியீட்டு முகவர், அருகிலுள்ள சிறீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது சிறீலங்கன் எயார்லைன்ஸ் 24 மணிநேர தொடர்பு மையத்தை +94117771979 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் றம்ப் நேற்று (14) தெரிவித்துள்ள கருத்துக்கு எதிராக உலகத் தலைவர்களும், அறிஞர்களும் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நோய் எவ்வாறு உருவாகியது எப்படி பரவியது என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்கு இது நேரமல்ல, அதேபோல உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்துவதற்கும் இது நேரமல்ல என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்ரொனியோ குற்றெரஸ் தெரிவித்துள்ளார்.
எமக்கு தற்போது ஆலோசனைகளையும் வழிநடத்தல்களும் தேவைப்படுகின்றன அதனை உலக சுகாதார நிறுவனம் செய்து வருகின்றது. எனவே அவர்கள் எமக்கு தேவை என நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அடேன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் நிலமை மோசமாகி வருகின்றது ஆனால் அமெரிக்க அதிபர் அரசியல் விளையாட்டை விளையாடி வருகின்றார். அவர் சீனாவை, உலக சுகாதார நிறுவனத்தை, அரசியல் எதிரிகளை, அவருக்கு ஆலோசனை வழங்கபவர்களை குற்றம் சுமத்தி வருகின்றார் என அமெரிக்காவின் வெளிவிவகார சபையின் தலைவர் எலியட் எஜெல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்த முடிவு பாரதூரமானது, தற்போது தான் அதிக நிதி தேவையான காலம் என மைக்ரோ சொப்ற் கணணி மென்பொருள் நிறுவனத்தின் நிறுவுனரான பில் கேட்ஸ் மற்றும் அவரின் மனைவி மெலின்டா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது தவறான முடிவு, தவறான திசையில் எடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்க மருத்துவ சபையின் தலைவர் வைத்தியர் பற்றிஸ் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
உங்கள் தீர்மானங்களை கொண்டுவருவதற்கு இது சரியான நேரமல்ல என ஜோன் கொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் ஆய்வாளர் கலாநிதி அமேஸ் அடல்ஜா தெரிவித்துள்ளார்.
வைரஸ்களுக்கு கடவுச்சீட்டு தேவையில்லை அவை விரைவாக பரவிவிடும் எனவே கூட்டு முயற்சியின் மூலமே அதனை முறியடிக்க முடியும் என வன்டெர்பிற் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி வில்லியம் செப்னர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்கள் பொய்களை நம்புவதை நிறுத்த வேண்டும், விஞ்ஞானிகளையும் ஏனைய நிபுணர்களின் கருத்துக்களை கேட்கவேண்டும். நாம் உண்மைகளை உணரத் தவறினால் அதிக இழப்புக்களை மேலும் சந்திப்போம் என அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் பேச்சாளர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
கொரோணா வைரஸ் தாக்கம் குறித்த அறிவும்,ஆராய்ச்சி முடிவுகளும் அதற்கான பரிகாரம் மற்றும் மருந்தின் பாவனையும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளதனால் பாதிப்பின் கனமும் அதிகமானதாகவே இருக்கும். இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்களில் இவ்வைரஸ் தொற்று ஏற்படுத்தும் பாதிப்பும் சிகிச்சை முறை குறித்தும் கவனிக்கவேண்டியுள்ளது.
கொவிட் 19 வைரஸ் தாக்கம் உலகம் முழுமையையும் தலைகீழாகப் புரட்டி வதைத்துக் கொண்டிருப்பதனை கடந்த சில மாதங்களாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். மக்களது இயல்பு வாழ்க்கை முற்றாகவே பாதிப்படைந்தும், தொழிற்துறைகள் ஸ்தம்பிதமடைந்தும் உள்ளதுடன் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியும் உள்ளனர். பொதுப்போக்குவரத்து வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்னும் பல சமூக, பொருளாதார மற்றும் ஆன்மீக விடயங்களுக்கும் தடை நடைமுறையில் உள்ளது.
இருப்பினும் எமது நாடு உட்பட பெரும்பாலான நாடுகளில் நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டியிருக்கும் வேளையில் இறப்போரின் எண்ணிக்கை1,25 000 த்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் தற்போது தாக்கியுள்ள கொரோனா வைரஸானது புதிய பிரிவினதாகவிருப்பதனால் இவ்வைரஸ் தாக்கம் குறித்த அறிவும், ஆராய்ச்சி முடிவுகளும் அதற்கான பரிகாரம் மற்றும் மருந்தின் பாவனையும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளதனால் பாதிப்பின் கனமும் அதிகமானதாகவே இருக்கும். இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்களில் இவ்வைரஸ் தொற்று ஏற்படுத்தும் பாதிப்பும் சிகிச்சை முறை குறித்தும் கவனிக்கவேண்டியுள்ளது.
இலங்கையில் குறிப்பாக கொழும்பு மாநகரில் காசல்வீதி பெண்கள் வைத்தியசாலை இத்தகைய வைரஸ் நோய்த்தாக்கத்திற்குள்ளாகும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை நிலையமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொரோனா நோயாளிகளைக் கையாளுகின்ற வைத்தியசாலைகளும் இத்தகைய தாய்மாருக்கான சிகிச்சை நிலையங்களாகும் வாய்ப்பும் உள்ளது.
பொதுமக்கள் கூடுவதனை தவிர்க்கும் பொருட்டு கர்ப்பவதிகளுக்கான சாய்சாலைக் கவனிப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெறுகின்றதாயினும், சுகாதாரசேவை அதிகாரி பிரிவில் கடமையாற்றுகின்ற பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள், மருத்துவ மாதுக்கள் தங்கள் வழமையான நடைமுறைகளை கடைப்பிடித்து கர்ப்பவதிகளுக்கான கவனிப்பினை செய்து வர ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இருதயநோய் போன்ற இன்னோரன்ன நோய்நிலை கொண்ட தாய்மாருக்கான விசேட நிபுணத்துவ கவனிப்பு கிரமமாக இடம்பெறுவதற்கான ஒழுங்குகள் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுகின்றன. சிறிய வைத்தியசாலைகளிலிருந்து விசேட நிபுணத்துவ கவனிப்பிற்காக கர்ப்பவதிகளை அம்பியுலன்ஸ் வாகனம் மூலம் மாற்றுகின்ற நடைமுறையும் வழமைபோல் நடைபெறுகின்றது.
இவ்வாறான நிலையில் காய்ச்சல், சளிச்சுரம் போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் கர்ப்பவதித் தாய்மார் உடனடியாக வைத்திய கவனிப்பிற்குள் உட்படுவதுடன் ஏனையோர் முடிந்தவரையில் வீட்டில் தங்கியிருத்தலும் இந்நோய்த்தாக்கத்தின் பாதிப்பிலிருந்து விடுபட எமக்கு உதவியாக இருக்கும். மேலும் பொது இடங்களுக்குச் செல்லாதிருத்தல், தன் சுத்தம் பேணல் போன்ற அறிவுறுத்தல் நடைமுறைகளை கர்ப்பவதிகள் கடைப்படிப்பதுவும் அவசியமாகின்றது.
உலகளாவிய ரீதியில் இதுவரையில் ஒருசில கர்ப்பிணித் தாய்மார்களே கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவ்வாறான 34 தாய்மாரில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புக்களின் பிரகாரம் இவர்கள் எவருக்கும் பாரதூரமான நோய்த் தாக்கம் காணப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தாய்மாருக்கான பிரத்தியேக கவனிப்பு ஏனைய தொற்றாளர்களுக்கு உள்ளவாறாகவே கடைப்பிடிக்கப்படல் வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.
இவர்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன் தங்கள் பிரதேச சுகாதாரசேவைப் பணியாளர்கள், பிரசவம் செய்யவிருக்கும் வைத்தியசாலை மற்றும் மகப்பேற்றியல் நிபுணர் ஆகியோருக்கும் அறிவிக்கப்படல் வேண்டும். இதன்மூலம் இத்தாய்மார் ‘எத்தகைய வைத்தியசாலையில் பிரசவிக்க வேண்டும்’ என்பதனை முன்கூட்டியே தீர்மானித்து அங்கு அனுப்பிவைக்கப்படல் அவசியமாகின்றது.
இது முக்கியமானது. ஏனெனில் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்ட பெரும்பாலான தாய்மாரில் குறைமாதப் பிரசவம் நடைபெற்றுள்ளதனை அவதானிக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் முன்கூட்டிய நடவடிக்கை அவசியமாகின்றது.
பிரசவம்:
இவர்கள் சாதாரண பிரசவம் நடைபெற அனுமதிக்கப்படுவர். இவர்களது பிரசவம் விசேட கவனிப்பின் கீழ் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட பிரசவ அறையிலே இடம்பெறுவதுடன் பணியாளர்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவினராகவிருப்பர். சிசேரியன் சத்திரசிகிக்கை மேர்கொள்ளவேண்டியிருப்பின் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள சத்திரசிகிச்சை கூடத்திலே நடைபெறும். அத்துடன் பிரசவமாகும் குழந்தையும்; ‘கொவிட் 19 வைரஸ் தொற்றுக்காகப் பரிசோதிக்கப்பட வேண்டியவர்’ என கணிக்கப்பட்டு பராமரிப்பில் வைக்கப்படுவார். மேலும் கருப்பையில் சிசுவைச் சூழவிருக்கும் அம்னியோன் திரவத்திலும் இவ்வைரசு இனங்காணப்படவில்லை. இக்காரணத்தினால் கர்ப்பத்தில் சிசுவிற்குத் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைந்தளவிலேயே உள்ளது.
தாய்ப்பாலூட்டல்: பிறந்த குழந்தைக்கான தாய்ப்பாலூட்டலில் எந்தவித தடையும் இதுவரையில் விதிக்கப்படவில்லை. ஆகவே தாயும் சேயும் ஒன்றாக இருக்க அனுமதிக்கப்படுவர். அத்துடன்,தாய்ப்பாலில் கொவிட் வைரஸ் கிருமி இனம்காணப்படவில்லை.
அத்துடன் தாய்ப்பாலில் பிறந்த குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களுடன் நோய் எதிர்ப்பு பதார்த்தங்களும், ஓமோன்களும் அடங்கியிருப்பதால் தாய்ப்பாலூட்டல் ஊக்குவிக்கப்படுகின்றது.
மேலும் தாயிலிருந்து சேய்க்கு வைரஸ் தொற்றாமலிருப்பதற்கு தன்சுத்தம் பேணுதல், கைகளை சவர்க்காரமிட்டு கழுவுதல், குழந்தையை கையாள்வதை மட்டுப்படுத்துதல், பாலூட்டும் போது முகக்கவசம் அணிந்துகொள்ளல் முதலான நடைமுறைகளைத் தாய் கடைப்பிடிப்பது அவசியம்.
பிரசவத்தின் பின்: சகல கவனிப்பின் பின்னர் அவர்களது இல்லத்திலும் முடிந்தவரை நம்பிக்கையுள்ள ஒருசிலர் மாத்திரம் தாய் சேய் இருவரையும் பராமரிப்பது சாலச்சிறந்தது. நாட்டிலிருந்து கொவிட் பிரச்சனை நீங்கும் வரை வெளியாரின் வரவு மட்டுப்படுத்தப்படுவதும் தாய் சேய் நலனுக்கு மிக அவசியமாகின்றது.
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இல்லத்தில் பாதுகாப்பாக இருப்போம்’
வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன்,
மகப்பேற்றியல்,பெண்நோயியல் நிபுணர்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை