அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புக்கள்

உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் றம்ப் நேற்று (14) தெரிவித்துள்ள கருத்துக்கு எதிராக உலகத் தலைவர்களும், அறிஞர்களும் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நோய் எவ்வாறு உருவாகியது எப்படி பரவியது என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்கு இது நேரமல்ல, அதேபோல உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்துவதற்கும் இது நேரமல்ல என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்ரொனியோ குற்றெரஸ் தெரிவித்துள்ளார்.

எமக்கு தற்போது ஆலோசனைகளையும் வழிநடத்தல்களும் தேவைப்படுகின்றன அதனை உலக சுகாதார நிறுவனம் செய்து வருகின்றது. எனவே அவர்கள் எமக்கு தேவை என நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அடேன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் நிலமை மோசமாகி வருகின்றது ஆனால் அமெரிக்க அதிபர் அரசியல் விளையாட்டை விளையாடி வருகின்றார். அவர் சீனாவை, உலக சுகாதார நிறுவனத்தை, அரசியல் எதிரிகளை, அவருக்கு ஆலோசனை வழங்கபவர்களை குற்றம் சுமத்தி வருகின்றார் என அமெரிக்காவின் வெளிவிவகார சபையின் தலைவர் எலியட் எஜெல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்த முடிவு பாரதூரமானது, தற்போது தான் அதிக நிதி தேவையான காலம் என மைக்ரோ சொப்ற் கணணி மென்பொருள் நிறுவனத்தின் நிறுவுனரான பில் கேட்ஸ் மற்றும் அவரின் மனைவி மெலின்டா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தவறான முடிவு, தவறான திசையில் எடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்க மருத்துவ சபையின் தலைவர் வைத்தியர் பற்றிஸ் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

உங்கள் தீர்மானங்களை கொண்டுவருவதற்கு இது சரியான நேரமல்ல என ஜோன் கொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் ஆய்வாளர் கலாநிதி அமேஸ் அடல்ஜா தெரிவித்துள்ளார்.

வைரஸ்களுக்கு கடவுச்சீட்டு தேவையில்லை அவை விரைவாக பரவிவிடும் எனவே கூட்டு முயற்சியின் மூலமே அதனை முறியடிக்க முடியும் என வன்டெர்பிற் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி வில்லியம் செப்னர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்கள் பொய்களை நம்புவதை நிறுத்த வேண்டும், விஞ்ஞானிகளையும் ஏனைய நிபுணர்களின் கருத்துக்களை கேட்கவேண்டும். நாம் உண்மைகளை உணரத் தவறினால் அதிக இழப்புக்களை மேலும் சந்திப்போம் என அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் பேச்சாளர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.