Home Blog Page 1884

வரலாற்றை திரிபுபடுத்துவதும் துரோகமே!- தயாளன்

எதிரிக்கு தன் இனத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டும் துரோகமல்ல;இனத்தின் வரலாற்றை சில தனிநபர்களினதோ, ஊர்களினதோ, எதிரியின் தேவைக்கேற்றவாறோ, அரசியல்வாதிகளின் நோக்கத்திற்காகவோ மாற்றியோ ; திரித்தோ வெளியிடுவதும் மகா துரோகமே. அடுத்த சந்ததியினரைத் தவறாக வழிநடத்தும் முயற்சி இது. இத்தகைய புல்லுருவிகளைச் சரியாக அடையாளம் காணாவிட்டால் வரலாற்றைத் தொலைத்தவர்களாகி விடுவோம். இந்த வரலாற்றுப் புரட்டு இணையத்தின் துணையுடன் புலம்பெயர் தேசங்களிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றது. பொதுத் தேர்தலொன்றுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தருணத்தில் கற்பனைகளை வரலாறாக்கும் முயற்சியும் நடைபெறுகிறது.

இன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்பது இரவலாக அல்லது கடனாகப் பெற்ற பெயரே. உண்மையான ரெலோவின் தலைவரின் பெயர் தம்பித்துரை முத்துக்குமாரசாமி. இவர்  , திருநெல்வேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்

தற்போது இவர் உயிருடன்தான் புலம்பெயர் தேசமொன்றில் வாழ்கிறார் .

ஆயுதப் போராட்டம் என்றால் அதன் வரலாறு கிழக்கு மாகாணத்தில் இருந்தே வெளிப்பட்டது. 1958 இல் குடியேற்றவாசிகளான சிங்களவர்களுக்குச் சார்பாக தமிழர் மீது தாக்குதல் நடத்த இராணுவத்தினர் வந்தனர். இவர்களை ஷொட்கன் துப்பாக்கியால் சுட்டு விரட்டியதுடன் அவர்கள் வந்த ஜீப்பையும் எரித்தனர் துறைநீலாவனை இன உணர்வாளர்கள். இவ்வாறு விரட்டியேரில் ஒருவரான கனகசூரியம் என்பவரும் அவரது துணைவியாரும் பின்னர் கல்முனை பட்டின சபையாக விளங்கியபோது அதன் உறுப்பினர்களாக விளங்கினர். இவர்களது மகன்தான் அம்பாறை மாவட்டத் தளபதியாக விளங்கிய மேஜர் அன்ரனி.

எம்.ஜீ.ஆரை மட்டந்தட்ட கருணாநிதி பயன்படுத்துவது அவர் மலையாளி என்று. அதனால்தான் பாதிக்கப்படும் தமிழர் தொடர்பாக எம்.ஜீ.ஆர். அக்கறை காட்டுவதில்லை என்ற சாரப்படப் பேசி வந்தார். பொறுமை இழந்த எம்.ஜீ.ஆர். ஒரு கட்டத்தில் ‘குட்டிமணியை இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர்தானே கருணாநிதி”, என்றார். இந்தப் பீரங்கித் தாக்குதலில் நிலைகுலைந்து விட்டார் கருணாநிதி. எப்படியோ ஓடித் திரிந்து குட்டிமணி குழுவில் எஞ்சியோரில் சிறீசபாரத்தினத்தைத் தொடர்பு கொண்டனர் தி.மு.கவினர். ‘குட்டிமணி தீவிரவாதி என்ற விடயம் கருணாநிதிக்குத் தெரியாது. வேறு வழக்கு விடயமாகக் கைதாகியிருந்தவர் என்ற அடிப்படையில்தான் இலங்கையிடம் அவரை ஒப்படைத்தார் அப்போதைய முதல்வர்” என்று ஓர் அறிக்கை விடுத்தார்.

அப்போதுதான் தன்னை செயலதிபர் எனப் பிரகடனப்படுத்திக் கொண்ட சிறீசபாரத்தினம். அந்த அறிக்கையில்தான் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் வெளியுலகுக்குத் தெரிந்தது. இந்த அறிக்கைக்கு முன்னதாக பந்தண்ணா என்றழைக்கப்படும் ராசப்பிள்ளையே இதனை வழிநடத்தி வந்தார்.
இதற்கு முன்னதாக இக்குழு இயங்கிய விதம் குறித்து ஐயர் தனது புத்தகத்தின்33,34 ஆம் பக்கங்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்களது தொடர்புகளும் எமக்கு மறுபடி கிடைக்கிறது. அவர்கள் எமக்கு வெளியில் தாமே திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவையெல்லாம் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் அவர்களுடைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கோடு அவர்களில் இருவருக்கு துப்பாக்கி சுடக் கற்றுக் கொடுப்பது என்ற முடிவுக்கு வருகிறோம்.

இந்த முடிவின் அடிப்படையில் எமது புளியங்குளம் முகாமில் தங்கதுரை மற்றும் ராசப்பிள்ளை ஆகியோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குகிறோம். இவர்கள் புதிய புலிகள் அமைப்பில் இல்லாதிருந்தாலும் நட்பு சக்தி என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகின்றது. அவர்கள் அப்போது ரெலோ (TELO) என்ற அமைப்பை உருவாக்காவிட்டாலும் தனியான ஒரு குழுவாகச் செயற்பட்டனர்.

பிரபாகரனோ அல்லது புதிய புலிகள் அமைப்பில் இருந்த எவருமே அவர்களை எம்முடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்பினோம். தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் பிரதானமாக கடத்தல் தொழிலையும், வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பகுதி நேரமாகவும் மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் அவர்களை உள்வாங்காமல் நட்பு சக்தி என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவிகள் வழங்கினோம்.”

இதே பெருந்தன்மை குட்டிமணி அண்ணா, தங்கண்ணா ஆகியோரிடமும் இருந்தது. தம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு உரிமை கோரி இலச்சினையுடனான அறிக்கையை ஊடகங்களுக்கு (வீரகேசரி உட்பட) வெளியிட்டனர் புலிகள். இதில் மொத்தம் 11 பேரின் மீதான நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ஆறாவது பெயரான தங்கராசா (முன்னாள் எம்.பி. அருளம்பலத்தின் செயலாளர்) மீதான நடவடிக்கையை குட்டிமணி குழுவினரே மேற்கொண்டிருந்தனர்.

இவ்வாறு ஒரு அறிக்கையை தாங்கள் வெளியிடப் போவதாகவும் எனவே தங்கராஜாவின் சம்பவம் குறித்து என்ன செய்வது என குட்டிமணி, தங்கத்துரையிடம் கேட்டபோது,’ நாங்கள் உங்களைப் போல கட்டுப்பாடாக இருப்பது சிரமம். எங்களின் தொழிலுடன் (கடத்தல்) உணர்வு ரீதியாக செய்யக்கூடியவற்றையே செய்யப் போகிறோம். எனவே அதனையும் புலிகளின் பேரிலேயே உரிமை கோருங்கள்”, எனக் குறிப்பிட்டதாக ஒரு சந்திப்பில் இளங்குமரன் தெரிவித்தார்.

இதனையே ஐயரும் தனது நூலில், ‘தங்கராஜா கொலை முயற்சி புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை. அப்போது ஒரு குழுவாக சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட குட்டிமணி, தங்கதுரை சார்ந்த குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அப்போதும் இந்தியா – இலங்கைக்கு இடையிலான கடத்தல் வியாபரத்தை மேற்கொண்டிருந்தனர். அக்குழுவினர் தமது நடவடிக்கைகளையும் புலிகள் பெயரிலேயே உரிமை கோருமாறு ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையிலேயே தங்கராசாவின் பெயரும் எமது பிரசுரத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது.” (பக். 117) எனக் குறிப்பிடுகிறார்.WhatsApp Image 2020 02 22 at 08.57.07 வரலாற்றை திரிபுபடுத்துவதும் துரோகமே!- தயாளன்

புலிகள் – குட்டிமணி குழு ஒன்றாக இணைந்து செயற்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட’துரோகத்துக்குப் பரிசு” (சுந்தரம் மீதான சாவொறுப்புக் காரணங்கள்)நாடு கடத்தப்பட்ட நிலையில் தமிழீழ அரசு (கிருஷ்ணா வைகுந்தவாசனின் 1982 தைப்பொங்கலன்று தமிழீழப் பிரகடனத்துக்கு எதிரான நிலைப்பாடு) என்ற தலைப்பிலான பிரசுரங்களும் புலிகளின் இலச்சினையுடனேயே வெளியிடப்பட்டன.

சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் விளைவால் இனி தனித்தனியாக இயங்குவோம் எனப் பிரபாகரன் முடிவெடுத்தபோது இரு பகுதியினரும் இணைந்து மேற்கொண்ட நீர்வேலி மக்கள் வங்கி வாகனத் தொடரணியை மறித்துக் கையகப்படுத்திய பணத்தின் மீதியையும், வாங்கிய ஆயுதங்களையும் இவர்களிடம் ஒப்படைத்தார். இம்முடிவுக்கு ஆட்சேபனை தெரிவித்த சீலனிடம்,’எனக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. இதைப் போல பல விடயங்களை உங்களால் செய்ய முடியும்.

குட்டிமணி அண்ணா, தங்கண்ணா இல்லாத நிலையில் அவர்களால் இது போன்ற ஒன்றைச் செய்வது சாத்தியமற்றது”, எனக் கூறினார். ஏற்கெனவே தங்கண்ணா, குட்டிமணி அண்ணா முதலானோரை தற்கொலைத் தாக்குதல் மூலமேனும் விடுவிப்போம் என்று தான் சொன்ன கருத்துத் தொடர்பாக மௌனமாக இருந்தவர்களிடம் ‘நாங்கள் தனித்தனியாகச் செயற்பட்டாலும் இவர்களின் விடுதலை தொடர்பாக நீங்கள் ஏதாவது முயற்சி மேற்கொண்டால் எமது உச்சக்கட்டப் பங்களிப்பை வழங்குவோம்”, எனத் தெரிவித்திருந்தார் பிரபாகரன்.
இதெல்லாம் நடந்தது இந்தியாவில். அப்போது செல்வம் இலங்கையில் இருந்தார். (அன்று அக்குழுவில் இருந்தவர்களில் இவர் மட்டுமே நாட்டில் எஞ்சியிருக்கிறார்.) 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் உருவானது. தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கும் புதிய அரசியலமைப்பு உருவாக்கமே தமிழீழ விடுதலைப் போராட்டம் உருவாகக் காரணமானது. தரப்படுத்தல் சட்டம் மாணவர்களுக்கு பாதகமாகக் கொண்டு வரப்பட்டபோது இந்தக் கருத்து வலுவானது.

வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் ‘எண்ணிக்கை தெரியாத குற்றம்”, என்றொரு வசனத்தை சிவாஜி பேசுவார். அதுதான் செல்வத்தின் நிலையும். 1969 இல் ரெலோ உருவானதாக சொல்கிறார். பொதுவாழ்வில் ஈடுபடுவது என்பது சில வரைமுறைகளுக்கு உட்பட்டது. இதன் அடுத்த கட்டம் தமிழீழக் கோரிக்கை முன்வைத்த பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியது. வரலாற்றைத் தவறாகப் பதியக்கூடாது. ஒரு சட்டவிரோத கடத்தல் தொழில் செய்பவர்களுக்கும் பொலிஸ_க்கும் இடையே முரண்பாடு ஏதாவது ஏற்பட்டிருக்கலாம்.

அதனை விடுதலைப் போராட்ட நடவடிக்கை என நிறுவ முற்படுவது வரலாற்றுத் தவறு. அடுத்த தேர்தலிலும் தனது எம்.பி. பதவியை உறுதிப்படுத்தவே 50 வருடக் கதை விடுகிறார் செல்வம். அப்போது இவருக்கு என்ன வயதாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். எதிர்வரும் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ரிஷாட் பதியுதீன், சாள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன் போன்றோர் தெரிவாவது உறுதியாகி விட்டது. ஏற்கனவே கட்சியில் முதலாவது எம்.பியாகத் தெரிவு செய்யப்பட்ட செல்வம் அந்த நிலையை இழந்து விட்டார். எம்.பி. பதவியையேனும் தக்கவைக்கவே இந்த வரலாற்றுப் புரட்டு.

மீண்டும் வலியுறுத்துகிறோம். தமிழரின் எதிர்ப்பு ஆயுத முனையில் முதலில் புரிய வைக்கப்பட்டது துறைநீலாவணையில். பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டமாக ஆயுதவழியில் ஆரம்பித்தது 1972 இல். அது சரி மாவைக்குமா வரலாறு தெரியாது? காசி ஆனந்தனின் ‘அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்” என்ற பாடல் ஒலிக்கும்போது யார் யாருக்கு பிரபாகரன் சுட்டுக் காட்டினார் என்று சுட்டிக் காட்ட வேண்டுமா?

ஐயரின் நூலில் 56 ஆம் பக்கத்தில் ‘சேனாதிராசா, காசி ஆனந்தன், பிரபாகரன் மூவரும் கலைஞர் கருணாநிதியை மெரீனா பீச்சில் சந்திக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கும்போது ரெலோவின் பொன்விழகுறித்த அழைப்பு விடுக்கும்போது வரலாற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் மௌனமாக இருந்தது ஏன்?

சுதுமலை முற்றுகையின்போது கிட்டு உட்பட புலிகளுக்கு இழப்பு நேராமல் முற்றுகையை முறியடித்தது தானே என்று (இச்சமரில் மேஜர் அல்பேட் வீரச்சாவு) கதை விட்ட ஜனா இப்போதும் 50 வருடக் கதை சொல்கிறார்.
உண்மை இப்படி இருக்கப் புதிய வரலாற்றுப் புனை கதைகளைக் கூற செல்வம், ஜனா, போன்றோர் முற்படுகின்றனர்.வரலாற்றை மறந்தவர்களுக்கு வரலாற்றில் இடமில்லாமல் போகலாம்.

வல்வெட்டித்துறைக்கெனத் தனியான வரலாறு உண்டு. பெருமைக்குரிய விடயங்களில் தலையானது பிரபாகரன் பிறந்த மண் என்பது. அன்னபூரணி என்ற பாய்மரக் கப்பலினை அமெரிக்காவுக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையே ஓட்டிச் சென்ற கடலோடிகளைக் கொண்டது. இராட்சதப் புகைக்கூண்டுகளை இலங்கை மண்ணுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் இந்தக் கடலோடிகள், பர்மாவுக்கான வணிகப் பயணத்தின்போது பறந்து சென்ற புகைக்கூண்டு ஒன்று இந்தப் பாய் மரக் கப்பலுக்கு அகே வந்தபோது அதனை எட்டிப் பிடித்து அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து இலங்கை மண்ணில் இதனை உருவாக்கினர். பட்டத் திருவிழா வல்வையின் தனித்துவம், யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற சாத்வீகப் போராட்டங்களில் முன்னணியில் நின்ற இராசலட்சுமி என்ற துணிச்சல்காரி பிறந்த மண்.

புலிக்குப் பிறந்தது பூனையாகாது எனக் களமுனையில் நிரூபித்தவர் இவரது மகன் கிட்டு என்ற சதாசிவம் கிருஷ்ணகுமார். முன்னுக்குப் போ என்ற வார்த்தையை விட எனக்குப் பின்னே வா என்றே போராளிகளை வழிநடத்திய தளபதி இவர். போராளிகள் மட்டுமல்ல பொதுமக்களும் இவரது படை நடத்தும் ஆற்றலையும் துணிச்சலையும் வான் வழியாக சுதுமலையில் களமிறங்கிய சிறப்புப் பயிற்சி பெற்ற படையினரின் முற்றுகையை முறியடித்த விதத்தை நேரடியாகக் கண்டு வியப்புற்றனர்.

இதன் பின்னர் சுதுமலை முகாமை விட்டுப் புலிகள் விலகத் தீர்மானித்தபோது, ‘போராளிகளே உங்களது ஆற்றலை, அர்ப்பணிப்பை, வீரத்தை நேரடியாகப் பார்த்தோம். தயவு செய்து எங்கள் ஊரை விட்டுப் போய்விடாதீர்கள்”, எனத் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். இத்தகைய வரலாறு தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் உதித்த 36 இயக்கங்களுள் வேறு எவற்றுக்கும் இல்லை. அத்தகைய தளபதி தனது சாவின் போதும் சரித்திரம் படைத்தான். இத்தகைய பெருமைகள் கொண்ட வல்வெட்டித்துறையின் சாதனைப் பட்டியல் மிக நீண்டது. உபசரிப்பிலும் இந்த மக்கள் தனித்துவமானவர்கள். போராளிகளோ மற்ற எவரோ சாப்பாட்டுக்காகக் காத்திருக்கையில் பார்சலிலோ, கிண்ணத்திலோ கறி வரும். இங்கோ தூக்கு வாளியில் கொண்டு வந்து தமது அன்பை வெளிப்படுத்துவர்.

இத்தகைய ஊருக்குப் பலம் சேர்க்கிறோம் என்றெண்ணி கற்பனைகளை வரலாறாக்கவோ, அதற்குத் துணை போகவோ தேவையில்லை. இன்று ச.ச.முத்து என்பவர் மூத்தபோராளி என்ற பெயரில் புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் சக்கைப் போடுபோட்டு வருகிறார். 1980 இற்குப் பின் இயக்கத்துடன் தொடர்பு வைத்த – இணைந்து கொண்ட எவருக்குமே இந்த முகம் பரிச்சயமற்றது. தான் மட்டுமே தலைவர் மீது விசுவாசம் கொண்டவராக நடிக்கும் நடிப்புக்கு சிவாஜி, கமல் போன்றோரெல்லாம் பிச்சை வாங்க வேண்டும். ‘ஒரு விளக்குக் கொழுத்த ஆசைப்படுகிறார்கள்”, என்று தலைவரின் இழப்பை ஒத்துக்கொள்வோரைச் சாடுகிறார்.

1979 இல் சுமார் இரு வார காலம் வீரவாகு என்ற பெயரில் விபத்தாக இயக்கத்தில் இணைந்து கொண்டவர்தான் இந்த ச.ச.முத்து. இவர் குறித்து ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்” என்ற தலைப்பில் கணேசன் (ஐயர்) எழுதிய நூலில் பின்வருமாறு காணப்படுகின்றது.
சில நாட்களின் பின்னர் மாணவனாகக் கற்றுக் கொண்டிருந்த சிறுவனான வீரவாகு இயக்கத்தில் இணைந்து தலைமறைவாக வாழ்வதாக அவரது குடும்பத்தினர் அறிந்து கொள்கின்றனர். இது தெரிய வரவே குமரப்பா, மாத்தையா போன்றோரூடாகப் புலிகளைத் தொடர்பு கொள்ளும் அவரது குடும்பத்தினர் வீரவாகுவை வீட்டுக்கு அனுப்பி விடுமாறு கோருகின்றனர். வீரவாகும் வீட்டுக்குச் செல்ல விரும்பியதால் பிரபாகரன் அவரை அனுப்பி வைக்கிறார்.

வீட்டுக்குச் சென்ற அவர் பொலிஸில் சரணடைந்து விடுகிறார்.”இத்தகைய வரலாற்றைக் கொண்ட ச.ச.முத்து பிரான்ஸில் இருந்து வெளிவரும் ஈழமுரசு ஆசிரியர் குழுமத்தில் இடம்பெற்றுள்ளார். எங்கள் மண்ணின் வரலாற்றை நா.யோகேந்திரநாதன், சாந்திநேசக்கரம் போன்றோர் தத்ரூபமாக எழுதினாலும் இவர்கள் என்றும் போராளிகளாக இருந்ததில்லை. போராளி என்று பொதுவெளியில் சொல்லிக் கொண்டதுமில்லை. அவ்வாறு மற்றவர்கள் அறிவிக்கவும் அனுமதித்ததில்லை. 2016 மாவீரர் நாளன்று பிரான்ஸில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக வெளிவந்த குறிப்பில் ஈழமுரசு ஆசிரியர் குழுமத்தைச் சேர்ந்தவரும் – சமர்களப் போராளியும் – பெருந் தளபதிகளின் நண்பரும் – தேசியத் தலைவருடன் ஆரம்ப காலத்திலிருந்து செயற்பட்டவரும் – வரலாற்று ஆய்வாளருமான ச.ச. முத்து அவர்கள் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களினதும் மாவீரர்களினதும் ஒப்பற்ற தியாகங்களை நினவு கூர்ந்ததுடன் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டு நூல் வடிவில் ஆவணமாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்” எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐயரின் குறிப்பை வாசித்தபின் சமர்க்களப் போராளி என்று குறிப்பிடுவது எவ்வளவு பெரிய வரலாற்றுப் புரளி என்பது புலனாகிறது. யாழ்ப்பாணத்தில் கிட்டுவிடம் ஒரு பத்திரிகையாளர், இயக்கத்தில் வல்வெட்டித்துறையின் முக்கியத்துவம் பற்றிக் கேட்டார். அதற்குக் கிட்டு, ‘புலிகள் ஒரு தலைமறைவு இயக்கம். இதற்கு இரகசியம் பேணப்பட வேண்டும். அதனைத் தலைவர் ஆரம்பிக்கும்போது தனது பாடசாலை சகாக்கள், நண்பர்கள் போல நம்பிக்கைக்குரியவர்களை இணைத்துத்தான் ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அந்த வகையில்தான் மாத்தையா, குமரப்பா, ரகு, பண்டிதர், சங்கர் போன்றோர் படிப்படியாக அவருடன் இணைந்து கொண்டோம். இன்று அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்பில் உருவாகி வருகின்றனர். உதாரணத்திற்கு மன்னாரில் விக்ரர், இனி மட்டக்களப்பு, திருமலை போன்ற இடங்களைச் சேர்ந்தோர் பொறுப்பெடுப்பர். வன்னியிலும் மாத்தையா இனங்காணப்பட்டவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்.” எனக் கூறினார். இதுதான் யதார்த்தம். கிட்டு குறிப்பிட்டவாறே வரலாறும் நடந்தது.

இந்த விடயத்தில் இரு முக்கிய விடயங்களைக் குறிப்பிட வேண்டும். 1983 ஏப்ரல் 07 அன்று கந்தர்மடம் வாக்குச் சாவடியில் நிகழ்ந்த தாக்குதலில் முதன்முறையாக ரி-56 ஆயுதம் கைப்பற்றப்பட்டது. கொக்குவிலில் புலிகள் இருந்த அறையொன்றுக்குள் இது கொண்டுவரப்பட்டது. பொன்னம்மான் அதனை தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கொண்டு சில நிமிடம் நடனமாடினார். அடுத்தடுத்த நாட்களில் இன்னொரு தாக்குதலை விரைவாக நடத்த வேண்டும் என தலைவரிடம் வலியுறுத்தினர் சில போராளிகள், ‘நான் இயக்கத்தை ஆரம்பித்த பின்னர் இந்தப் போராட்டத்தில் எத்தனையோ பேர் வந்து போய்விட்டார்கள். எனக்கு மிஞ்சி இருப்பது இந்த 30 பேரும்தான். ஆகவே அவசரப்படாமல் நிதானமாக நாங்கள் காலடி எடுத்து வைக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார். வந்து போனவர்களின் முகங்களில் எது எது அவரது ஞாபகத்துக்கு வந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

1983 இல் நிகழ்ந்த இன்னொரு நிகழ்வு பற்றியும் குறிப்பிட வேண்டும். பல்வேறு தொடர்புகள் மூலம் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் படகு மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் அங்குள்ள லொட்ஜ்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதில் இரு இளைஞர்களுக்கிடையே சிறு முரண்பாடு. அதில் ஒருவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். அவர் மற்றவரிடம், ‘றெயினிங் முடிச்சு வல்வெட்டித்துறைக்குள்ளாலதானை போவாய். அப்ப பார்த்துக் கொள்ளுறன்”, என்றார் மற்றவரிடம். இந்த விடயம் தலைவருக்குத் தெரிய வந்ததும் ‘அவரை அடுத்த வண்டியிலேயே (படகு) ஊருக்கு அனுப்பி வையுங்கள்.
இவ்வாறான சிந்தனையுள்ளவர்கள் இயக்கத்துக்குச் சரிவர மாட்டார்கள்”, என உத்தரவிட்டார்.

இவ்வாறு சொன்ன இளைஞனுக்கு 18 அல்லது 19 வயதுதான் இருக்கலாம், அவன் செய்த தவறுக்காக மட்டுமல்ல ; இயக்கத்தில் இனி எவருக்குமே இந்த மாதிரிச் சிந்தனைகள் வரக்கூடாது என்பதற்காகவே இந்நடவடிக்கையை அவர் மேற்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் ’30 பேர் கொண்ட இயக்கமாக இருந்த புலிகள் இயக்கம் சீலன், ஆனந்த், செல்லக்கிளி அம்மான், என மூவரை இழந்து நிற்கிறது. இந்திய அரசு 200 பேருக்கு பயிற்சி வழங்க முன் வந்துள்ளது. ஆனால், 250 பேரளவில் இப்போது வந்துவிட்டார்கள். திடீரெனப் பருத்து விட்டோம். இனித்தான் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துவதில் சவாலை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும். எல்லோரும் ஒரே காலகட்டத்தவர் என்றவகையில் இந்தச் சவால் சாமானியமானதல்ல” என்று பண்டிதரும் குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாவது விடயம் புலேந்திரன் – குமரப்பா தொடர்பானது. 1983 என்றொரு எல்லையை (திருநெல்வேலித் தாக்குதல்) தலைவர் கணிப்பிட்டிருந்தார். உண்மையில் குமரப்பா இயக்கத்தில் பிரிவு ஏற்படுவதற்கு முன்னரே அங்கம் வகித்திருந்தார். (அதிலும், புலேந்திரன் இயக்கத்துக்கு வருவதற்கு முன்னரே.) இருவருமே மாவட்டத் தளபதிகளாக விளங்கியவர்கள். எனினும் இயக்கத்தில் பிரிவு ஏற்பட்டபோது குமரப்பா, காந்தன், சாள்ஸ் போன்றோர் விலகியிருந்தனர். இவர்கள் திருநெல்வேலித் தாக்குதலுக்குப் பின்னர் மீண்டும் இணைந்து கொண்டனர். செல்லக்கிளி அம்மான், யோகன் பாதர் போன்றோர் திருநெல்வேலித் தாக்குதலுக்கு முன்பாகவே மீண்டும் இணைந்து கொண்டனர். புலேந்திரன் மத்தியகுழு உறுப்பினர் என்று அறிவிக்கப்பட்டாலும் குமரப்பாவுக்கு இந்த நிலை வழங்கப்படவில்லை. ஒட்டுமொத்த இனத்தின் தலைவனாகத்தான் பிரபாகரன் நடந்து கொண்டார். தான் வகுத்த விதியை அவர் மீறவில்லை. இந்த விடயத்தைத் தேவர் அண்ணா போன்றோர் புரிந்து கொள்ளாமல் ச.ச. முத்து தொடர்பான விடயங்களில் நெகிழ்ச்சிப் போக்கினால் வரலாற்றைத் திரிக்க முயல்வது கவலைக்குரியது.

தேங்காய், மாங்காய் வியாபாரிகள் என்ற சாக்கில் வீடெடுத்தார்கள் அப்பையா அண்ணன், சீலன் என்று கதை விடுவதும் ச.ச.முத்துவின் அழகான கற்பனை. திருநெல்வேலி தாக்குதலுக்கு முன்பாக தலைவர் சொன்னதாகவே சில விடயங்களைக் குறிப்பிட்டு தான் அந்தக் காலத்தில் இருந்ததாக நிறுவ முயல்வதும் மோசடியானது. இவற்றுக்கெல்லாம் 800 – 900 என்று Like வேறு. வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டு பரவலாக்கப்படுகின்றது என்று தெரிந்தும் ஊரவன் என்ற ஒன்றுக்காக மோசடிக்கு துணைபோவது சரியானதல்ல.

தேசத்தின் பாலம்”, என்ற அமைப்பு போராட்டத்தின் பங்காளர்களாக விளங்கிய மற்றும் யுத்தத்தால் பாதிப்புற்ற மக்களுக்குப் பல்வேறு வகையில் உதவி வருகிறது. குறிப்பாக மூதூர் மற்றும் வாகரைப் பகுதிகளில் கல்வியைத் தொடரச் சிரமப்படும் பொருளாதார நெருக்கடியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன், விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மட்டக்களப்பு நகர் போன்ற இடங்களிலிருந்து பயிற்சியாளர்களை வரவழைத்தல், தேவையான குடும்பங்களுக்கு குழாய்க் கிணறு அமைத்தல் போன்ற பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. இதனை ஒருங்கிணைத்துச் செயற்படுத்துபவர் முன்னாள் போராளியான லூக்காஸ் அம்மான். அரசியற்துறைப் பொறுப்பாளராக விளங்கிய பா.நடேசனின் சகோதரர் இவர். தான் பிறந்த வல்வை மண்ணுக்கும் உதவத் தவறுவதில்லை இவர்.

2002 இல் தலைவரைச் சந்தித்தபோது போராட்டத்திலிருந்து விலகிய உங்களைப் போன்றோர் பொருளாதார ரீதியில் நலிவுற்றோருக்கு இம்மாதிரி உதவலாமே என அறிவுறுத்தியதுடன் உதவி தேவைப்படுவோர் பட்டியலையும் இவரிடம் வழங்கியுள்ளார். வரலாற்றைத் திரிபுபடுத்துபவர்கள் லூக்காஸ் அம்மானைப் பின்பற்றி உருப்படியாக பணியாற்றுவதுதானே வல்வை மண்ணுக்குப் பெருமை சேர்க்கும்.

நன்றி – ஈழநாடு

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில், மஹா சிவராத்திரி நிகழ்வானது மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்வில், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக யாழ்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளில் இருந்தும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

அதேவேளை சிங்கள பகுதிகளில் இருந்தும் அனேக பக்தர்கள் சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்திருந்தனர்.

நேற்று காலை தொடக்கம் பல்வேறுபட்ட சமய நிகழ்வுகள் பூஜைகள் இடம்பெற்றதுடன் பல்வேறு சொற்பொழிவுகள், மதம்சார் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் இரவு பூசையும் இடம்பெற்றது.

மஹா சிவராத்திரி நிகழ்வுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு, நிகழ்வு இடம்பெறும் பிரதேசம் முழுவதும் சுமார் 300 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
t2 திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு

t3 திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு

இந்திய முறையிலான தீர்வே பொருத்தமானது- ஆனந்தசங்கரி

இனப்பிரச்சினை விவகாரத்தில் பெரும்பான்மை மக்கள் ஆதரிக்க கூடிய வகையில் இந்திய முறையிலான தீர்வே பொருத்தமானதென தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமை காரியாலயத்தில், நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் ஆனந்தசங்கரி மேலும் கூறியுள்ளதாவது, “நான் தனிப்பட்ட காரணங்களுக்காக கூட்டணியில் சேரவில்லை.

வடக்கு கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கிய இந்த அமைப்பு இயன்றளவு செயற்படும். அதேவேளை மிகப் பெரும் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை கடந்த காலத்தில் சிலர் தங்கள் தேவைக்காக உபயோகித்து பொய் பிரச்சாரங்கள் செய்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி திட்டமிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒரு குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தஞ்சம் புகுந்து தங்களுக்கு சந்தோசமானவைகளைச் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் என்ன இலச்சியத்துக்காக கட்சியை உருவாக்கினோமோ அந்த இலச்சியத்தை அடையும்வரை நான் எந்தவிதமான தனிப்பட்ட ஆசைகளுக்கு இடம்கொடுக்க மாட்டேன்.

இன்று ஆரம்பித்த கூட்டு ஒரு முறையான கூட்டாக தெரிகின்றது. கடந்த பல வருடங்களாக தம்மை வளர்த்த ஒரு கூட்டும் இருக்கின்றது. இன்று எமது முதலாவது எதிரி அந்த கூட்டுத்தான்.

பெரியவர்களினால் உருவாக்கப்பட்ட கட்சியை சின்னா பின்னப்படுத்தி தங்கள் தேவைக்காக அந்த கட்சியை விற்பனை செய்து பிழைத்தவர்கள் இன்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரிலே செயற்படுகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நான். ஆனால் என்னைச் சுற்றி பல சதிதிட்டம் நடந்தது. காலையில் எழுந்து பார்த்தபோது என்னுடைய கதிரையில் இன்னொருவர் இருக்கின்றார். அவர் இன்றும் தொடர்ந்து இருந்து வருகின்றார் அது இப்போதுதான் மக்களுக்கு புரிந்துள்ளது.

எங்களை வித்து பிழைக்கும் ஒரு கூட்டம்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் போல செயற்பட்டு வருகின்றனர். என்னை பொறுத்த வரையில்எங்களுடைய மக்கள் மட்டக்களப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்,கொழும்பில் வாழ்ந்தால் என்ன நாடளாவிய ரீதியில் சகல தமிழ் மக்களுக்கும் ஓரே பிரச்சினைதான். ஏனைய இடங்களில் பேசுவதற்கு ஆட்களில்லை. ஆனால் மட்டக்களப்பில் பேசுவதற்கு இருக்கின்றனர்.

மட்டக்களப்பில் ஒலிக்கும் குரல் வட.மாகாணத்தில் ஒலிக்கவேண்டும். இந்த செயற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தை மட்டும் மையப்படுத்தி இருக்காமல் நாடளாவிய ரீதியாக எமது இனத்தின் நலன் கருதி செயற்பட வேண்டும்

ஒரு இலச்சியத்துக்காக உருவாக்கப்பட்டது. மேலும் இனப் பிரச்சனையை வைத்து 50 ஆண்டுகள் அரசியல் ஓட்டி விட்டனர். இன்னும் தீர்வில்லை. ஆனால் பெரும்பான்மை மக்கள் ஆதரிக்க கூடிய வகையில் ஒரு தீர்வை 15 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் சிங்கள மக்கள் மத்தியில் முன்வைத்தேன் அது இந்திய முறையிலான தீர்வு.

ஏன் என்றால் 60 மில்லியன் மக்கள் அவர்கள்தான் எமது பிரச்சனையை பற்றி பேசியவர்கள் அக்கறை கொண்டவர்கள். எனது ஒரே ஒரு வேண்டுகோள் இந்திய முறையை பரிசீலத்துப் பாருங்கள்

எனவே ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி இருந்தது போல ஒரே அமைப்பாக இந்த தீர்வை முன்வைப்போமாக இருந்தால் எந்த அரசும் தட்டிக்கழிக முடியாது. 50 ஆண்டுகள் பட்ட துன்பங்கள் கஷட்டங்களுக்கு ஒரு விடிவு பிறக்கும்” என்றார்.

தாய்மொழி மனித உரிமைகளின் படிக்கல்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

               < அனைத்துலகத் தாய்மொழித் தினம் பெப்ருவரி 21>
ஒருவரின் ‘தாய்மொழி’ அல்லது ‘நாவின் தாய்’ என்பதை ஐக்கிய நாடுகள் சபை அவர் தனது மிக இளமைக்காலத்தில் பேசத் தொடங்கிய மொழி என்று இரத்தினச் சுருக்கமாக விளக்குகிறது. தாய்மொழி என்பது ஒரு மொழியாகவே தொன்மை முதல் கருதப்பட்டு வந்தாலும் பன்மொழிகள் பேசும் பல்கலாச்சார குடும்பப் பின்னணியில் வளரும் குழந்தைகள் இரு மொழிகளைத் தம் இளமை மொழியாக அகப்படுத்திக் கொள்ளுதல் இயல்பு நிலையாக உள்ளது.

இதனால் இரண்டு மொழிகள் தாய்மொழிகளாக மாறிவிடும் நிலையில் எந்த மொழி அந்தக் குடும்பத்தால் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ அதில் குழந்தை பெருவளர்ச்சி பெற்று மற்றைய மொழி வழக்கிறந்து போய்விடும் அபாயம் இயல்பாகிறது.

ஒருமொழி அழியும் பொழுது வெறுமனே அம்மொழியின் சொற்களும் அச்சொற்களுக்கான பொருள்களும் மட்டும் அழியவில்லை அந்த மொழி பேசிய இனத்தின் அடையாளம்,தொன்மை மிகு வரலாறு,பெருமைமிகு மனிதக் கலாச்சாரம் அனைத்தும் அதனுடன் சேர்ந்து அழிகின்றன.

இதனாலேயே தேச இனங்களை ஆக்கிரமிப்புச் செய்யும் மேலாண்மைகள் தங்கள் நாடுகளில் ஒரு மொழிக் கொள்கையைக் கொண்டு வந்து அத்தேச இனத்தின் இருப்பினையே அழித்து அம்மக்களையும் அவர்களின் மண்ணையும் அடிமை கொள்கின்றன.

இதனால் தாய்மொழி என்பது ஒரு மனிதனின் மனித உரிமைகளின் படிக்கல்லாகிறது.

ஒரு குழந்தை வளரும் நாட்டில் ஒரு மொழிக் கொள்கையை அரசு முன்னெடுக்கும் போக்கு இருப்பின் அரசின் ஆட்சி மொழியே குழந்தையின் வழக்கு மொழியாகப் புறத்தேவைகளாலும் புறக்கவர்ச்சிகளாலும் மாற மாற குழந்தையின் தாய் வழி மொழி அந்தக் குழந்தைக்கு வழக்கிறந்த மொழியாகி விடும். இதனை ஒரு மொழியின் அழிவுக்கான புறக்காரணியாக ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத்திற்கான அனைத்துலக அமைப்புச் சுட்டிக் காட்டியுள்ளது.DWSFGrHU0AEv1L3 1 தாய்மொழி மனித உரிமைகளின் படிக்கல்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

அதே வேளை இவ் அமைப்பு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தாய்மொழியினைப் பேசுவதில், எழுதுவதில், வாசிப்பதில் காட்டி வரும் எதிர்மறையான போக்கே ஒரு தாய் மொழியின் அழிவுக்கான உட்காரணியாகத் தொடர்கிறது எனவும் எச்சரிப்பு செய்துள்ளது.

உலகெங்கும் ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில், குறிப்பாக ஆங்கில காலனித்துவ ஆட்சி நிலவிய நாடுகளில் ஆங்கிலம் ஆட்சிமொழியாக்கப்பட்டதின் விளைவாகவும் வர்த்தகமொழியாக, அறிவியல், தொழில்நுட்ப மொழியாக ஊக்குவிக்கப்பட்டதன் விளைவாகவும் ஒருமொழிக் கொள்கை நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆசிய,ஆபிரிக்க,அமெரிக்க, அவுஸ்திரேலிய தாய் மொழிகள் பல்லாயிரக்கணக்கில் வழக்கிறந்த வரலாற்றை உலகு பதிவு செய்துள்ளது.

காலனித்துவ காலத்தின் பின்னரும் ஒருமொழிக்கொள்கையைப் புதிய காலனித்துவமாகத் தனது மக்கள் மேல் திணித்த இலங்கை போன்ற பல நாடுகளில் இன்றும் அந்த நாடுகளின் பெரும்பான்மையினர் அல்லாத தேசமக்களின் தாய்மொழிகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று உலகில் 7000 முதல் 8000 வரையான மொழிகள் காணப்பட்டாலும் 200க்கு உட்பட்ட மொழிகளே நாடுகளில் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சில நூறு மொழிகளே மக்களால் நாளாந்த வாழ்வில் அவர்களால் விளங்கிப் பேசப்பட்டு வருகின்றன.

இதன் விளைவாகக் கடந்த முன்னூறு ஆண்டுகளில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் உலகில் இருந்து மறைந்து விட்ட வரலாற்றையும்,இன்றுள்ள மொழிகளிலும் அரைவாசி மொழிகள் அழிந்து கொண்டு போகின்ற சமகால வரலாற்றையும், 2010ம் ஆண்டின் உலகமொழிகளின் வரைபடத்தின் படி 1950 முதல் 2010க்கு இடையான 60 ஆண்டு காலத்தில் 2500 மொழிகள் இறந்து கொண்டும் 230 மொழிகள் இறந்து விட்டதுமான வரலாற்றையும், தற்பொழுது இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி அழிவுறும் வேகத்தையும் யுனெஸ்கோ பதிவுசெய்துள்ளது.

இந்நிலையில் உலகில் தாய்மொழிகள் அழிந்து வரும் அபாயத்தை நீக்குவதற்கான அனைத்துலகக் கடப்பாட்டின் வெளிப்பாடாகவே உலகத் தாய்மொழித்தினத்தை ஐக்கிய நாடுகள் சபை 21ம் நூற்றாண்டின் தொடக்கமாக 2000ம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.

1952ம் ஆண்டு பெப்ருவரி 21ம் நாள் பாக்கிஸ்தானின் ஆட்சியில் இருந்த வங்களாப் பிரதேசத்தின் டாக்காப் பல்கலைக்கழகத்தில் வங்காள மொழிக்கான உரிமையினைக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பார்ட்டம் செய்த பொழுது 4 மாணவர்கள் கொன்றழிக்கப்பட்ட துயர வரலாற்றை மீள்நினைவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தை உலக தாய்மொழித் தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தி கொண்டாடி வருகிறது.busts of language movement 134564 தாய்மொழி மனித உரிமைகளின் படிக்கல்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

16.05.2007 இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் A/RES/61/266 இலக்கத் தீர்மானம் உலகில் உள்ள மக்களால் பயன்படுத்தப்படும் மொழிகளை நிலைப்படுத்தவும் பாதுகாக்கவும் வேண்டுமென உலக நாடுகளுக்கு அறிவித்தது.
இன்று உலகத்தாய்மொழி தினத்தை தமிழர்களாகிய நாமும் கொண்டாடும் இவ்வேளையில், இறந்து கொண்டிருக்கும் மொழிகளில், தமிழ்மொழியையும் உலகின் மொழிகளின் வரைப்படம் சுட்டிக்காட்டியுள்ளமையை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

எவ்வளவுதான் மின்எண்ணியலில் தமிழ்மொழி சிறப்புற்றாலும், உலகெங்கும் ஈழத்தமிழர்கள் உலகின் முக்கிய நகரங்களில் எல்லாம் அரசியல் புகலிட வாழ்வின் வழி பரந்து வாழ்ந்து அந்த அந்த நாடுகளின் இனத்துவச் சிறுபான்மைக் குடிகளாகி இன்று தமிழ் உலகமொழியாகப் பரிணாமம் அடைந்து வந்தாலும்,

தமிழ்ப் பெற்றோர்கள் தங்கள் மொழியைத் தங்கள் பிள்ளைகளின் மிகஇளமைக்காலப் பேச்சு மொழியாகவும் இளமைக்கால வழக்கு மொழியாகவும் ஈழத்திலும், தமிழகத்திலும்,தாங்கள் வாழும் நாடுகளிலும் வழக்கு மொழியாகத் தொடராது வாழும்வரை தமிழ்மொழி உலகில் அழிந்து விடக்கூடிய மொழிகளின் பட்டியலில் இடம்பெற்றுக் கொண்டே இருக்கும்.

மேலும் ஈழத்தமிழர்களுக்குத், தங்கள் தாய் மொழியின் அழிவுக்கு 1956 முதல் இன்று வரை ஈழத்தில் சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கள் ஒருமொழிக் கொள்கை மூலம்; திட்டமிட்டுச் செய்து வரும் செயற்பாடுகளை உலகுக்கு எடுத்துரைக்கும் பெரும் பொறுப்பும் கடமையும் இன்றைய தினத்தில் உண்டு சிங்கள பௌத்த பேரினவாதம் 1956ம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டம் என்னும் ஒரு மொழிக்கொள்கையைப்பிரகடனம் செய்து ஈழத்தமிழர்களின் தாய்மொழி அழிப்புச் செயற்திட்டத்தை தொடங்கியது.Cartoon Sinhala Only தாய்மொழி மனித உரிமைகளின் படிக்கல்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

64 ஆண்டுகளாகத் தொடரும் அந்த ஈழத்தமிழர் தாய்மொழி அழிப்புத் திட்டத்தின் உச்சமாக இன்று கோட்டபாய இராஜபக்ச அரசு வெளிப்படையாகவே “ அபே ரட்ட (எங்களுடைய நாடு), அபே ஜாதிய (எங்களுடைய இனம்), அபே ஆகமய (எங்கள் மதம்) ” என்று சிங்கள பௌத்த நாடாக இலங்கையை அறிவித்துள்ளது.

அத்துடன் தமிழ் மக்களின் சனநாயகத்தினை மறுத்து சிங்கள பௌத்த பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா என்பதனால்,எந்த அரசியல் அதிகாரப் பரவலாக்கலையும் தமிழர்களுக்குச் செய்ய இயலாது என இந்திய மத்திய அரசுக்குத் தன் அரச அதிபர் மூலமும் தன் பிரதமர் மூலமும் உறுதியாக எடுத்துரைத்துள்ளது.

தொடர்ந்து அமெரிக்காவோ ஐக்கியநாடுகள் மனிதஉரிமை ஆணையகமோ மனித உரிமைகளை மீளப் பேணுதல், யுத்தத்தின் பின்னரான மாற்று நீதியை உருவாக்கல் என்பனவற்றின் அடிப்படையில் சிறிலங்கா இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோருக்கான பொறுப்புக்கூறல், நீதி வழங்கல், அவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களின் புனர்வாழ்வு என்பனவற்றுக்கான வழிகாட்டல்களைச் செய்ய இயலாது எனவும் துணிகரமாகச் சிறிலங்காவுக்கான ஐக்கியநாடுகள் சபையின் பிரதிநிதி மூலம் எடுத்துச் சொல்லி, நீதியானதும் பாராபட்டசமற்றதுமான சட்டத்தின் ஆட்சியை சிறிலங்காவில் அனுமதிக்க முடியாதெனச் செயற்பட்டு வருகிறது.

இச் சூழலில், சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய செயல்களால் அரசற்ற தேசஇனமாகத் தவிக்கும் ஈழத்தமிழர்களின் தாய்மொழி சிறிலங்காவால் அழிக்கப்பட்டு வருவதைத் தடுத்து, காக்கும் பொறுப்பு உலக நாடுகளதும் உலக அமைப்புக்களதும் கடமை என்பதை இந்தத் தாய்மொழித் தினத்தில் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் மக்களுக்கும் அரசுக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்.

அதே நேரத்தில் 1956 முதல் இன்று வரை ஈழத்தில் தாய்மொழியைப் பாதுகாப்பதற்காக உயிரிழந்த நூற்றியெழுபத்தாறாயிரத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களையும், பல இலட்சக்கணக்கில் உடமைகளையும் வாழ்வையும் வாழ்ந்த இடத்தையும் இழந்து தவிக்கும் ஈழத்தமிழ் மக்களையும் நினைவு கூறுவதும் ஐக்கிய நாடுகள் சபையின் கடமையும் பொறுப்பும் என்பதை இந்நாளில் சுட்டிக் காட்டுவதும் அவசிமாகிறது.tamil ins தாய்மொழி மனித உரிமைகளின் படிக்கல்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

மேலும் ஈழத்தமிழரின் தாய்மொழியை இறக்கவைக்கும் இந்தப் புறக்காரணிகளை மாற்றியமைக்கக் கூடிய வழியில் அகக்காரணிகளையும் முன்னெத்தல் அவசிமாகிறது. உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ்மொழியில் அவர்களைச் சிந்திக்கப் பழக்குதல் இதன் முதல் தேவையாகிறது. ஒருவர் எந்த மொழியில் சிந்திக்கின்றாரோ அந்த மொழியே அவரால் தன் மொழி என முன்னெடுக்கப்படும்.

எனவே தமிழ் மொழியை நாளாந்த வாழ்வில் பேச எழுத வாசிக்க இயலாத சூழலில் வாழும் பிள்ளைகளுக்கு அவர்களின் சிந்தனை தமிழ் வழி அமைந்தாலே அவர்களிடை தாங்கள் தமிழர்கள் என்ற இனத்துவ அடையாளத் தனித்துவம் தொடரும். தமிழ் பேச எழுதத் தெரியாத தமிழ் இளையவர்களையே பெரும்பான்மையாகக் கொண்ட உலகத் தமிழர்களிடை தமிழ்த்தன்மை தொடர்கிறது எனவும் இதுவே அவர்களின் இனத்துவத்தினை மற்றவர்கள் தனித்துவமாகப் பார்க்க வைக்கின்றது எனவும் ஆய்வாளர்கள் ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுவே தமிழினம் உலகில் அழியாது தொடரும் என்பதற்கான அறிவார்ந்த விளக்கமாகவும் உள்ளது.மேலும் மொழி தொடர்பாடலுக்கான ஒன்று என்று அதனையும் வர்த்தகப்படுத்தும் நோக்கில் இலக்கிய இலக்கண அறிவில்லாத தமிழ் கற்பித்தலை அதுவும் வேற்று மொழிகள் வழி செய்தல் என்னும் புதிய போக்கு சிலரிடை வேகம் பெற்று வருகிறது.

பல நாடுகளுக்குச் சென்ற அனுபவத்தில் தனிநாயகம் அடிகள் தமிழ் இலக்கியத்தை தமிழ்மொழி வழியாக கற்கும் திறன் பிள்ளைக்கு ஊட்டப்பட வேண்டும் என ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

அத்துடன் அவரின் வேண்டுகோளாலும் பின்னர் தமிழக முதலமைச்சர்களின் நிதி அளிப்புகளுடனும் தொடங்கப் பெற்ற ஐரோப்பிய பல்கலைகழகத் தமிழ்ப்படிப்புக்கள் மாணவர்கள் இடை தமிழ் படிக்கும் ஆர்வமின்மையால் மூடப்பட்டமையும் வரலாறு. எனவே தமிழ்க்கல்வி தமிழ்மொழி தமிழ் இலக்கியத்துடன் இணைந்து தமிழ்த்துறையில் படித்துத் தேர்ச்சி பெற்றவர்களால் முன்னெடுக்கப்படும் பொழுதே தமிழின் உயர்கல்வியும் வளர்ச்சி பெறும் என்பது அனுபவ உண்மையாக உள்ளது.swiss kalvesevai 9 5 2015 1 தாய்மொழி மனித உரிமைகளின் படிக்கல்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

கல்வியியலில் டிலிட் என்னும் உலகின் அதிஉயர் பட்டம் பெற்றவரான தனிநாயக அடிகளின் வழிகாட்டலை நடைமுறைப்படுத்த ஒவ்வொரு ஈழத்துப் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் இனத்துவ வரலாற்றை கலாச்சார வரலாற்றைஎடுத்துக் கூறி வளர்த்தல் முதல் நிலையாகிறது.

இரண்டாவது நிலையாகச் சாதிமதஇனநிற பேதமற்ற மனிதாயத்தைப் பேணவைக்கும் அவர்களின் தொன்மைப்பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அந்த வடிவில் அறிமுகம் செய்வதும்,இதற்கு எதிரான சாதி,தீட்டு, துடக்கு ஆசாரமுறைமைகள் வழியான வடமொழியே சிறந்தது என்ற சமக்கிருதவாக்க மனநிலையை மாற்றியமைத்தலும்,இந்த உயர்நிலையாக்கக் கனவின் தொடர்ச்சியாக அமையும் ஐரோப்பிய மொழிகளை பிறகலாச்சாரங்களை உயர்ந்தன என எண்ண வைக்கும் ஐரோப்பியவாக்கத்தில் இருந்து விடுபடுதலும்,இவற்றையே தமிழ்ப்பண்பாடு தமிழ்க்கலாச்சாரம் என வளர்க்கும் அறியாமையை மாற்றுவதும் ஆன தொடர்செயற்பாடுகளைச் செய்யத் தமிழ்ப்பெற்றோர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

இத்தகைய மாற்றங்கள் மூலம் உலகமெங்கும் சிறப்பாக ஈழத்தில் தமிழ் மொழியைக்காக்கவும் வளர்க்கவும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என உலகத் தாய்மொழித்தினமான இன்று உறுதி எடுப்போம்.

தாய்மொழி அழிதலுக்கான புறக்காரணி அரசின் ஒருமொழிக் கொள்கை
 அகக்காரணி பெற்றோர்களது தாய்மொழி மேலான அலட்சியம்
உறுதிமொழி : தமிழைக் காக்க வளர்க்க இயன்றதை நாம் செய்வோம்

-ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் –

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் வெகு விரைவில் சட்டத்தின் முன்; அஜித் ரோஹண

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் 80 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளன எனச் சட்டம் மற்றும் ஒழுக்காற்று பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“குண்டுத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஈர்க்கப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை நல்வழிப்படுத்த இந்தியாவில் சிறப்புப் பயிற்சிப் பெற்ற குழுவினரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இலங்கையில் இஸ்லாமிய மற்றும் ஏனைய மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள், தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மக்கள் தந்த ஆணையின் படியே ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேற்றம்: மஹிந்த சமரசிங்க

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அளித்த ஆணையின்படியே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களிலிருந்தும் விலகுவதற்கு கோட்டாபய அரசு தீர்மானித்துள்ளது என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் முன்னைய அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களிலிருந்தும் விலகுவதற்கு கோட்டாபய அரசு தீர்மானித்திருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. மாறாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சமான எதிர்காலம்’ என்ற தொனிப் பொருளிலான தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் ஏற்கனவே கூறப்பட்டிருக்கின்றது. அதற்கு அமையவே இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது” என்றார்.

அரசின் முடிவு பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்: மங்கள சமரவீர கடும் எச்சரிக்கை

“ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகுவது என்ற அரசின் முடிவு முற்றிலும் முரண்பாடான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்” என ஐ.தே.க. எம்.பி.யும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் முடிவு தொடர்பாக அவர் கூறுகையில், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் முற்றிலும் தவறானதாகும்.

சர்வதேசத்தில் இலங்கை இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கம் காட்டிக்கொடுக்கவில்லை. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பிறகு அப்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் செயலாளர் நாயகம் பன்கீ மூனிடம் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யுத்தக் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அவை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டு ஆவணங்களில் கைச்சாத்திட்டுள்ளார்கள். இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பாளியாகக் காணப்பட்டார்.

யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்சம் எவ்விதமான முன்னேற்றகர நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும் இல்லை. இதன்காரணமாகவே நாட்டுத் தலைவரும், இராணுவ அதிகாரிகளும் மின்சாரக் கதிரைக்குச் செல்லவேண்டிய நிலை தோற்றம்பெறும் என்ற கருத்தும் அப்போது குறிப்பிடப்பட்டன. சர்வதேச பொறிமுறையிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஜெனிவாவின் அழுத்தமான நிலைப்பாடாக இருந்தது.”

அரசாங்கத்தின் முடிவால் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும்: பாராளுமன்றத்தில் மாவை

47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில் இருந்து அரசு விலக எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேசத்தை நாட்டுக்குள் வலிந்து அழைக்கும் நிலை ஏற்படும். அதன்மூலம் தமிழ் மக்களின் இனப்பிச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்க இடமிருக்கின்றது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்-

இலங்கை தொடர்பான ஐ.நா.வின் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளது. பொறுப்புக்கூறல், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல், நிலங்களை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்றவற்றுக்கே அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து விலகியுள்ளது. அரசின் இந்தமுடிவை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

அத்துடன் அரசின் இந்த விலகல் அறிவிப்பால் தமிழ் மக்களுக்கு நன்மையும் உண்டு. ஏனெனில் ஐ.நா.வின் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசின் இந்தத் தீர்மானத்தினால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கப் போகின்றன. அரசு சர்வதேசத்தை வலிந்து அழைத்துக்கொள்ளப் போகின்றது.

அத்துடன் அரசு விலகப்போகும் தீர்மானமானது மனித உரிமைகள் சபையின் 47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகும். அதனால் எதிர்காலத்தில் சர்வதேச நாடுகள் இங்கை தொடர்பாகக் கூடுதல் கவனம் செலுத்தும் வாய்ப்பு இருக்கின்றது. சர்வதேச நாடுகளின் இலங்கை மீதான தலையீடுகள் மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்கக்கூடும்-என்றார்.

அரசியல் சித்து விளையாட்டில் மருதூர் மக்களின் சந்தோசம் தொலைந்து போனது-மனோ

சாய்ந்தமருது நகரசபையை அங்கீகரித்து வர்த்தமானி பிரகடனம் செய்து, மருதூர் மக்களை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பகிர்ந்து கொண்டாட விட்டு, சில தினங்களில் அதை இடை நிறுத்த அமைச்சரவையில் தீர்மானிப்பது அந்த ஊர் மக்களை அவமானப்படுத்தும் அகோர செயல்.

இதற்கு பதில் இப்படி அவசரப்பட்டு கொடுக்காமலேயே இருந்திருக்கலாம்.

இந்த இடை நிறுத்தலுக்கு உள்ளே இனவாத ஓட்டம் இருப்பது நன்கு புலனாகிறது. பல ஆளும் கட்சி அரசியல் அரசியல்வாதிகளும், அரசு சார்பு பெளத்த துறவிகளும் கச்சை கட்டிக்கொண்டு, “இதை ஏன் செய்தீர்கள்” என அரசு தலைவரை மொய்த்தது எங்களுக்கு தெரியும்.

அதேபோல் ஐ.தே.கட்சியை சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களும் முட்டாள்தனமான கருத்துகளை வெளியிட்டார்கள். இவர்களை நேரில் அழைத்து இப்படி பேசாதீர்கள் என நான் கூறினேன்.

எது எப்படி இருந்தாலும், ஒரு அரசாங்கம் என்கின்ற போது அதற்கு பொறுப்பு அதிகம். “எடுத்தேன், கவிழ்த்தேன்” என அரசாங்கம் காரியமாற்ற முடியாது. தமிழ், முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. எனவே அவர்களை நாம் கணக்கில் எடுக்க மாட்டோம் என இந்த அரசு கூறமுடியாது.

யார் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும், பதவிக்கு வந்த உடன் அது நாட்டு மக்கள் அனைவரது அரசாங்கம்தான். அப்படித்தானே, சுதந்திர தின உரையில் ஜனாதிபதி சொன்னார் என பல திடீர் தேசபக்தர்கள் குதூகலமாக சொல்லி, பட்டாசு கொளுத்தி கொண்டாடினார்கள்.

இதன்மூலம் இந்த அரசு ஒரு சிங்கள பெளத்த அரசு நிறுவனம் மட்டுமே என மீண்டும் ஊர்ஜிதம் ஆகியுள்ளது. நான் இருந்த அரசு அல்லது நமது கூட்டணி ரொம்ப சுத்தமானது என நான் சொல்ல வரவில்லை. ஆனால், கேள்வி கேட்கும் சுதந்திரம் இங்கே இருக்கிறது என்பது கேள்வி கேட்கும் முதுகெலும்புள்ள எனக்கு நன்கு தெரியும்.

இதனால்தான் தம்மை மாற்றிக்கொள்ளாதவரைக்கும் இத்தகைய பெரும் இனவாதிகளுடன் எனக்கு எப்போதும் “செட்” ஆவதில்லை.

இந்த அரசுக்கு இனியும் வெள்ளை அடிக்கும் சிறுபான்மை மேதாவிகளுக்குதான் இது வெளிச்சம். இதற்கும் ஒரு நகைச்சுவை காரணத்தை கண்டு பிடித்து சொல்லுங்கள், மேன்மக்களே!

இந்த இனவாத, அரசியல் சித்து விளையாட்டில் அப்பாவி மருதூர் மக்களின் சந்தோசம் தொலைந்து போனது. இதையிட்டு மனம் வருந்துகிறேன்

அதேபோல் நல்லவேளை நுவரேலியா மாவட்டத்தின் புதிய ஆறு உள்ளுராட்சி மன்றங்களை, விட்டுக்கொடுக்காமல், தடைகளை மீறி அப்போதே செய்து முடித்தோம் என நிம்மதியடைகிறேன்.

“இந்த நாடு, நம்ம நாடு இல்லை” என்ற எண்ணம் இன, மத, மொழி சிறுபான்மை மக்களுக்கு ஏற்படா வண்ணம், ஆட்சி செய்பவர்தான் உண்மை தலைவன் அல்லது தலைவி. அப்படிதான், நெல்சன் மண்டேலா, லீ குவான் யிவ் ஆகியோர் தம் நாடுகளை ஆண்டார்கள்.

இங்கே தலைவர் இல்லை. மதம் பிடித்த தேர்தல் அரசியல் நடிகர்கள்தான் இருக்கிறார்கள்.

வடக்கு கிழக்கை பிரித்த பேரினவாதம் கிழக்கையும் துண்டாடாத் துடிக்கிறது

கடந்த காலத்தில் தமிழர்களை பலவீனப்படுத்துவதற்காக வடக்கு கிழக்கை துண்டாடி இப்போது கிழக்கையும் துண்டாடி மாவட்டத்திலுள்ள வாக்குகளை பிரிப்பதற்காக இனவாதக் கட்சிகள் பல செயல்வடிவங்களை கொடுத்திருக்கின்றன. அதன்கீழ் சமூகத்துடன் எந்த சம்பந்தமும் இல்லாத தமிழர்களின் வலியை உணராத சிலர் போராட்டம் தொடர்பில் எந்த தெளிவும் இல்லாத சிலர் சொந்த நலன்களிற்காகவும் வாக்குகளை பிரிப்பதற்காகவும் மட்டக்களப்பு,அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் முகவர்களாக செயற்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தலா ஒரு தமிழ் பிரதிநிதியையாவது பெறுவதற்கு மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர். மக்களின் விருப்பத்தை குழப்புவதற்கு முயற்சிக்காமல் முகவர்களாக செயற்படுபவர்கள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையை பொறுத்தவரை தேர்தல் தொடர்பான அறிவித்தல்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதிருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்த நிலையில் வடக்கு கிழக்கில் தேர்தல் நிலவரங்கள் சூடுபிடித்திருக்கின்றன.

எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழர்கள் 40வீதம்,முஸ்லிம்கள் 37வீதம், சிங்களவர்கள் 23வீதம் இருக்கின்ற கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை நான்கு தமிழ் பிரதிநிதிகள் உருவாக்கப்பட வேண்டும். அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தலா இரண்டு பிரதிநிதிகளை உருவாக்க முடியும்.

கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதி வந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதிநிதிகளை இரண்டு தடவைகள் மக்கள் பெற்றிருக்கின்றனர். இந்த தேர்தலிலும் நான்கு பிரதிநிதிகளை பெற வேண்டும் என்பது மட்டக்களப்பு மக்களின் ஆசையாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 76வீதம் தமிழர்களும் 23வீதம் முஸ்லிம்களும் ஏனைய இனத்தவர்கள் 1வீதமும் உள்ள நிலையில் நானடகு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்தேயாக வேண்டும்.

கடந்த காலங்களில் 76வீத தமிழர்களுக்கு 3பாராளுமன்ற உறுப்பினர்களும் 23வீத முஸ்லிம்களுக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டதற்கு தமிழ் சமூகத்திலுள்ள ஒருசிலரின் தனிப்பட்ட நலன்தொடர்பான செயற்பாடுகளே காரணமாகும்.

இந்தத் தேர்தலில் தமிழ் சமூகம் விழிப்படைந்திருப்பதால் 76வீத தமிழர்களுக்கு 4பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு தமிழர்கள் தயாராக இருக்கின்றனர்.

கடந்த காலத்தில் தமிழர்களை பலவீனப்படுத்துவதற்காக வடக்கு கிழக்கை துண்டாடி இப்போது கிழக்கையும் துண்டாடி மாவட்டத்திலுள்ள வாக்குகளை பிரிப்பதற்காக இனவாதக் கட்சிகள் பல செயல்வடிவங்களை கொடுத்திருக்கின்றன. அதன்கீழ் சமூகத்துடன் எந்த சம்பந்தமும் இல்லாத தமிழர்களின் வலியை உணராத சிலர் போராட்டம் தொடர்பில் எந்த தெளிவும் இல்லாத சிலர் சொந்த நலன்களிற்காகவும் வாக்குகளை பிரிப்பதற்காகவும் மட்டக்களப்பு,அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் முகவர்களாக செயற்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்

எமது சமூகம் எதிர்வரும் தேர்தல்களில் அவர்களை நிராகரிப்பார்கள். அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தலா ஒரு தமிழ் பிரதிநிதியையாவது பெறுவதற்கு மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர். மக்களின் விருப்பத்தை குழப்புவதற்கு முயற்சிக்காமல் முகவர்களாக செயற்படுபவர்கள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

தேசிய பட்டியலுக்காக வாக்கெடுப்பதற்கும் கட்சிச் சின்னத்தை அறிமுகப்படுத்துவதற்கும் கட்சிக் கொள்கைகளை சொல்வதற்கும் பாராளுமன்றத் தேர்தல் களம் உகந்ததல்ல.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தை நடத்திய தமிழ் சமூகம் அரசியல் அதிகாரங்களிலிருந்து உரிமையா சலுகையா என்ற விடயத்தில் உரிமைக்காக தங்களை அர்ப்பணித்தவர்களாவர். அப்படிப்பட்ட தமிழ் சமூகம் விகிதாசாரத்திற்கு ஏற்றாற்போல தங்கள் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக பாராளுமன்ற தேர்தலில் மிகவும் விழிப்படைந்த நிலையில் உள்ளனர்.

அதை பெறுவதற்காக கட்சிகள் பொது உடன்பாட்டிற்கு வரவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் தங்களை தங்களுக்குள் சுயபரிசோதனை செய்துகொண்டு அனைவரையும் அரவணைத்து பொது உடன்பாட்டிற்கு வரவேண்டும். ஒரு மனிதனைப் பொறுத்தவரை சமூகத்திற்காக உழைப்பதும் பேசுவதும் செயற்படுவதும் தன்னை அர்ப்பணிப்பதும் அவனது உரிமையாகும். அந்த உரிமையை மதித்து எதிர்காலத்தில் ஒரு வலுவான அதிகாரமுள்ள தலைமைகளை மாற்றுவதற்கு செயற்படவேண்டும்.

கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் வாக்குகளை பிரித்துவிடக்கூடாது என்பதற்காக பிரிபடுவதற்கு உடந்தையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக எனது கட்சியிலிருந்து தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற செயற்றிட்டங்களில் நான் என்னை இணைத்துக்கொள்ள மாட்டேன் என்ற விடயத்தை தெளிவாக கூறியிருக்கின்றேன்.

இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலை இயக்கம்,தமிழீழ விடுதலைக் கழகம் ஆகிய மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற பிரதிநிதிகளிடம் இரா.துரைரெட்ணமாகிய எனது தலைமையை அங்கீகரிக்க வேண்டும், இணைந்து செயற்பட வைப்பதற்கான உத்தரவாதத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைத்திருக்கின்றேன். இது தொடர்பில் மூன்று கட்சிகளும் ஆராய்ந்து மிகவிரைவில் முடிவுகளை அறிவிப்பார்கள் என நான் நம்புகின்றேன். இதற்கேற்ற வகையில் எனது செயற்பாடுகள் அமையும்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் வாக்குகளை பிரிப்பவர்களுடன் நான் கூட்டு சேர்ந்து தேர்தலில் களமிறங்க மாட்டேன் என்ற உத்தரவாதத்தை வழங்குவதோடு எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கான ஆர்வத்தை நான் வெளிப்படுத்தியிருக்கின்றேன். அதற்கான உறுதிமொழியை அவர்கள் வழங்க வேண்டும்.

இந்த தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் பல விடயங்களை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டியிடுவதற்கு நான் தீர்மானித்திருக்கின்றேன்.

தமிழ் வாக்குகள் பிரித்துவிடக்கூடாது,இன ஐக்கியம் பேணப்படவேண்டும் என்பதற்காக மாவட்டத்திலிருக்கின்ற பத்திரிகையாளர்கள் உட்பட பல நல்ல உள்ளம் கொண்டவர்கள் மேற்கொள்கின்ற முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு இலட்சம் வாக்குகளில் மூன்று இலட்சம் வாக்குகள் தமிழர்களுடையதாகும். கடந்த பத்து ஆண்டுகளை பார்க்கின்றபோது தமிழர்கள் வாக்களிக்கின்ற வீதமானது அதிகரித்துச்செல்கின்றது. உரிமையா சலுகையா என்ற கேள்விக்கு கிழக்கு மாகாண மக்கள் இரண்டும் தேவை அதிகாரப்பரவலாக்கலும் அவசியம், அபிவிருத்தியும் அவசியம் என்ற முடிவிற்கு வந்திருக்கின்றனர்.

அந்தவகையில் இம்முறை நடக்கவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோல் கட்சிகளுக்கு வாக்களிக்கின்ற வீதமும் அதிகரிக்கும். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 1140கிராமங்கள் இருக்கின்றன,340கிராம சேவையாளர் பிரிவுகள் இருக்கின்றன.இப்பிரிவுகளில் இருக்கின்ற மூன்று இலட்சம் வாக்காளர்களில் 75வீதமானோர் வாக்களித்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

மூன்று நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து கட்சிகளை உருவாக்கியிருக்கின்றன.பல சின்னங்கள் அவர்களிடம் இருக்கின்றன. அவர்கள் கூட்டு சேர்ந்த கட்சிகள்தான் இங்கு போட்டியிடாது என்று கூறியிருக்கின்றனர்.அவர்களிடம் பல கட்சிகளும் சின்னங்களும் கைவசம் இருக்கின்றன. தமிழர்களின் வாக்குகளை சிதைத்து தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதே அவர்களின் நோக்கமாகும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பிரிந்து தேர்தல் கேட்கக்கூடாது என்ற அடிப்படையில் இருப்பவன் நான். ஆனால் கிழக்கு மாகாணத்தில் தற்போது ஆளுமையிலுள்ள அதிகாரத்திலுள்ள கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது பத்து வருடங்களுக்கு முன்னர் விடயங்களை பார்த்தது போன்று இப்போது பார்க்கக்கூடாது. போட்டித்தன்மைக்கு ஏற்றவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய செயற்றிட்டங்களை முன்வைக்க வேண்டும். மாவட்டத்தில் வாக்குகள் பிரிந்துபோகாமல் பார்த்துக்கொள்வதற்காக பேசாமல் இருப்பதென்பது செயல் வடிவமல்ல, செயற்திறனுமல்ல. வாக்குகளை மொத்தமாக பெற்று நான்கு பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு அனைத்துக் கட்சிகளுடனும் பேசி பொது உடன்பாட்டிற்கு வரவேண்டும். இதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டும். தீர்மானிக்கும் பட்சத்தில் அது ஆரோக்கியமானதாக இருக்கும்.

புதிய கட்சிகள் கிழக்கு மாகாணத்தில் போட்டியிடுவதானது அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் பிரதநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் செயற்றிட்டமாகும். மட்டக்களப்பில் தமிழ் பிரதநிதித்துவத்தை குறைக்கின்ற செயற்றிட்டமாகும்.

கடந்த காலங்களில் 76வீத தமிழர்களுக்கு 3பாராளுமன்ற உறுப்பினர்களும் 23வீத முஸ்லிம்களுக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டமைக்குரிய முழுப்பொறுப்பும் வாக்குகளை பிரிப்பதற்கு முன்னின்றவர்களே பொறுப்பேற்க வேண்டும். இந்த தவறை எதிர்வரவிருக்கும் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் செய்ய மாட்டார்கள் என நான் நம்புகின்றேன்.

நான்கு பிரதிநிதிகளை பெறுவதற்கான செயல்வடிவங்களை மக்கள் ஏற்கனவே ஆரம்பித்திருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் தமிழர்வாக்குகளை பிரிப்பதற்கு எதிராக குரல்கொடுப்பதற்கும் அடிப்படை விடயங்களை பேசுவதற்கும் தலைமை தாங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதற்கெதிராக போராடுவதற்கு அணிதிரளுமாறு மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நான் அறைகூவல் விடுக்கின்றேன்.