வடக்கு கிழக்கை பிரித்த பேரினவாதம் கிழக்கையும் துண்டாடாத் துடிக்கிறது

கடந்த காலத்தில் தமிழர்களை பலவீனப்படுத்துவதற்காக வடக்கு கிழக்கை துண்டாடி இப்போது கிழக்கையும் துண்டாடி மாவட்டத்திலுள்ள வாக்குகளை பிரிப்பதற்காக இனவாதக் கட்சிகள் பல செயல்வடிவங்களை கொடுத்திருக்கின்றன. அதன்கீழ் சமூகத்துடன் எந்த சம்பந்தமும் இல்லாத தமிழர்களின் வலியை உணராத சிலர் போராட்டம் தொடர்பில் எந்த தெளிவும் இல்லாத சிலர் சொந்த நலன்களிற்காகவும் வாக்குகளை பிரிப்பதற்காகவும் மட்டக்களப்பு,அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் முகவர்களாக செயற்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தலா ஒரு தமிழ் பிரதிநிதியையாவது பெறுவதற்கு மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர். மக்களின் விருப்பத்தை குழப்புவதற்கு முயற்சிக்காமல் முகவர்களாக செயற்படுபவர்கள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையை பொறுத்தவரை தேர்தல் தொடர்பான அறிவித்தல்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதிருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்த நிலையில் வடக்கு கிழக்கில் தேர்தல் நிலவரங்கள் சூடுபிடித்திருக்கின்றன.

எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழர்கள் 40வீதம்,முஸ்லிம்கள் 37வீதம், சிங்களவர்கள் 23வீதம் இருக்கின்ற கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை நான்கு தமிழ் பிரதிநிதிகள் உருவாக்கப்பட வேண்டும். அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தலா இரண்டு பிரதிநிதிகளை உருவாக்க முடியும்.

கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதி வந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதிநிதிகளை இரண்டு தடவைகள் மக்கள் பெற்றிருக்கின்றனர். இந்த தேர்தலிலும் நான்கு பிரதிநிதிகளை பெற வேண்டும் என்பது மட்டக்களப்பு மக்களின் ஆசையாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 76வீதம் தமிழர்களும் 23வீதம் முஸ்லிம்களும் ஏனைய இனத்தவர்கள் 1வீதமும் உள்ள நிலையில் நானடகு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்தேயாக வேண்டும்.

கடந்த காலங்களில் 76வீத தமிழர்களுக்கு 3பாராளுமன்ற உறுப்பினர்களும் 23வீத முஸ்லிம்களுக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டதற்கு தமிழ் சமூகத்திலுள்ள ஒருசிலரின் தனிப்பட்ட நலன்தொடர்பான செயற்பாடுகளே காரணமாகும்.

இந்தத் தேர்தலில் தமிழ் சமூகம் விழிப்படைந்திருப்பதால் 76வீத தமிழர்களுக்கு 4பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு தமிழர்கள் தயாராக இருக்கின்றனர்.

கடந்த காலத்தில் தமிழர்களை பலவீனப்படுத்துவதற்காக வடக்கு கிழக்கை துண்டாடி இப்போது கிழக்கையும் துண்டாடி மாவட்டத்திலுள்ள வாக்குகளை பிரிப்பதற்காக இனவாதக் கட்சிகள் பல செயல்வடிவங்களை கொடுத்திருக்கின்றன. அதன்கீழ் சமூகத்துடன் எந்த சம்பந்தமும் இல்லாத தமிழர்களின் வலியை உணராத சிலர் போராட்டம் தொடர்பில் எந்த தெளிவும் இல்லாத சிலர் சொந்த நலன்களிற்காகவும் வாக்குகளை பிரிப்பதற்காகவும் மட்டக்களப்பு,அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் முகவர்களாக செயற்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்

எமது சமூகம் எதிர்வரும் தேர்தல்களில் அவர்களை நிராகரிப்பார்கள். அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தலா ஒரு தமிழ் பிரதிநிதியையாவது பெறுவதற்கு மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர். மக்களின் விருப்பத்தை குழப்புவதற்கு முயற்சிக்காமல் முகவர்களாக செயற்படுபவர்கள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

தேசிய பட்டியலுக்காக வாக்கெடுப்பதற்கும் கட்சிச் சின்னத்தை அறிமுகப்படுத்துவதற்கும் கட்சிக் கொள்கைகளை சொல்வதற்கும் பாராளுமன்றத் தேர்தல் களம் உகந்ததல்ல.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தை நடத்திய தமிழ் சமூகம் அரசியல் அதிகாரங்களிலிருந்து உரிமையா சலுகையா என்ற விடயத்தில் உரிமைக்காக தங்களை அர்ப்பணித்தவர்களாவர். அப்படிப்பட்ட தமிழ் சமூகம் விகிதாசாரத்திற்கு ஏற்றாற்போல தங்கள் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக பாராளுமன்ற தேர்தலில் மிகவும் விழிப்படைந்த நிலையில் உள்ளனர்.

அதை பெறுவதற்காக கட்சிகள் பொது உடன்பாட்டிற்கு வரவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் தங்களை தங்களுக்குள் சுயபரிசோதனை செய்துகொண்டு அனைவரையும் அரவணைத்து பொது உடன்பாட்டிற்கு வரவேண்டும். ஒரு மனிதனைப் பொறுத்தவரை சமூகத்திற்காக உழைப்பதும் பேசுவதும் செயற்படுவதும் தன்னை அர்ப்பணிப்பதும் அவனது உரிமையாகும். அந்த உரிமையை மதித்து எதிர்காலத்தில் ஒரு வலுவான அதிகாரமுள்ள தலைமைகளை மாற்றுவதற்கு செயற்படவேண்டும்.

கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் வாக்குகளை பிரித்துவிடக்கூடாது என்பதற்காக பிரிபடுவதற்கு உடந்தையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக எனது கட்சியிலிருந்து தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற செயற்றிட்டங்களில் நான் என்னை இணைத்துக்கொள்ள மாட்டேன் என்ற விடயத்தை தெளிவாக கூறியிருக்கின்றேன்.

இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலை இயக்கம்,தமிழீழ விடுதலைக் கழகம் ஆகிய மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற பிரதிநிதிகளிடம் இரா.துரைரெட்ணமாகிய எனது தலைமையை அங்கீகரிக்க வேண்டும், இணைந்து செயற்பட வைப்பதற்கான உத்தரவாதத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைத்திருக்கின்றேன். இது தொடர்பில் மூன்று கட்சிகளும் ஆராய்ந்து மிகவிரைவில் முடிவுகளை அறிவிப்பார்கள் என நான் நம்புகின்றேன். இதற்கேற்ற வகையில் எனது செயற்பாடுகள் அமையும்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் வாக்குகளை பிரிப்பவர்களுடன் நான் கூட்டு சேர்ந்து தேர்தலில் களமிறங்க மாட்டேன் என்ற உத்தரவாதத்தை வழங்குவதோடு எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கான ஆர்வத்தை நான் வெளிப்படுத்தியிருக்கின்றேன். அதற்கான உறுதிமொழியை அவர்கள் வழங்க வேண்டும்.

இந்த தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் பல விடயங்களை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டியிடுவதற்கு நான் தீர்மானித்திருக்கின்றேன்.

தமிழ் வாக்குகள் பிரித்துவிடக்கூடாது,இன ஐக்கியம் பேணப்படவேண்டும் என்பதற்காக மாவட்டத்திலிருக்கின்ற பத்திரிகையாளர்கள் உட்பட பல நல்ல உள்ளம் கொண்டவர்கள் மேற்கொள்கின்ற முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு இலட்சம் வாக்குகளில் மூன்று இலட்சம் வாக்குகள் தமிழர்களுடையதாகும். கடந்த பத்து ஆண்டுகளை பார்க்கின்றபோது தமிழர்கள் வாக்களிக்கின்ற வீதமானது அதிகரித்துச்செல்கின்றது. உரிமையா சலுகையா என்ற கேள்விக்கு கிழக்கு மாகாண மக்கள் இரண்டும் தேவை அதிகாரப்பரவலாக்கலும் அவசியம், அபிவிருத்தியும் அவசியம் என்ற முடிவிற்கு வந்திருக்கின்றனர்.

அந்தவகையில் இம்முறை நடக்கவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோல் கட்சிகளுக்கு வாக்களிக்கின்ற வீதமும் அதிகரிக்கும். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 1140கிராமங்கள் இருக்கின்றன,340கிராம சேவையாளர் பிரிவுகள் இருக்கின்றன.இப்பிரிவுகளில் இருக்கின்ற மூன்று இலட்சம் வாக்காளர்களில் 75வீதமானோர் வாக்களித்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

மூன்று நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து கட்சிகளை உருவாக்கியிருக்கின்றன.பல சின்னங்கள் அவர்களிடம் இருக்கின்றன. அவர்கள் கூட்டு சேர்ந்த கட்சிகள்தான் இங்கு போட்டியிடாது என்று கூறியிருக்கின்றனர்.அவர்களிடம் பல கட்சிகளும் சின்னங்களும் கைவசம் இருக்கின்றன. தமிழர்களின் வாக்குகளை சிதைத்து தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதே அவர்களின் நோக்கமாகும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பிரிந்து தேர்தல் கேட்கக்கூடாது என்ற அடிப்படையில் இருப்பவன் நான். ஆனால் கிழக்கு மாகாணத்தில் தற்போது ஆளுமையிலுள்ள அதிகாரத்திலுள்ள கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது பத்து வருடங்களுக்கு முன்னர் விடயங்களை பார்த்தது போன்று இப்போது பார்க்கக்கூடாது. போட்டித்தன்மைக்கு ஏற்றவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய செயற்றிட்டங்களை முன்வைக்க வேண்டும். மாவட்டத்தில் வாக்குகள் பிரிந்துபோகாமல் பார்த்துக்கொள்வதற்காக பேசாமல் இருப்பதென்பது செயல் வடிவமல்ல, செயற்திறனுமல்ல. வாக்குகளை மொத்தமாக பெற்று நான்கு பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு அனைத்துக் கட்சிகளுடனும் பேசி பொது உடன்பாட்டிற்கு வரவேண்டும். இதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டும். தீர்மானிக்கும் பட்சத்தில் அது ஆரோக்கியமானதாக இருக்கும்.

புதிய கட்சிகள் கிழக்கு மாகாணத்தில் போட்டியிடுவதானது அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் பிரதநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் செயற்றிட்டமாகும். மட்டக்களப்பில் தமிழ் பிரதநிதித்துவத்தை குறைக்கின்ற செயற்றிட்டமாகும்.

கடந்த காலங்களில் 76வீத தமிழர்களுக்கு 3பாராளுமன்ற உறுப்பினர்களும் 23வீத முஸ்லிம்களுக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டமைக்குரிய முழுப்பொறுப்பும் வாக்குகளை பிரிப்பதற்கு முன்னின்றவர்களே பொறுப்பேற்க வேண்டும். இந்த தவறை எதிர்வரவிருக்கும் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் செய்ய மாட்டார்கள் என நான் நம்புகின்றேன்.

நான்கு பிரதிநிதிகளை பெறுவதற்கான செயல்வடிவங்களை மக்கள் ஏற்கனவே ஆரம்பித்திருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் தமிழர்வாக்குகளை பிரிப்பதற்கு எதிராக குரல்கொடுப்பதற்கும் அடிப்படை விடயங்களை பேசுவதற்கும் தலைமை தாங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதற்கெதிராக போராடுவதற்கு அணிதிரளுமாறு மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நான் அறைகூவல் விடுக்கின்றேன்.