இந்திய முறையிலான தீர்வே பொருத்தமானது- ஆனந்தசங்கரி

இனப்பிரச்சினை விவகாரத்தில் பெரும்பான்மை மக்கள் ஆதரிக்க கூடிய வகையில் இந்திய முறையிலான தீர்வே பொருத்தமானதென தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமை காரியாலயத்தில், நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் ஆனந்தசங்கரி மேலும் கூறியுள்ளதாவது, “நான் தனிப்பட்ட காரணங்களுக்காக கூட்டணியில் சேரவில்லை.

வடக்கு கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கிய இந்த அமைப்பு இயன்றளவு செயற்படும். அதேவேளை மிகப் பெரும் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை கடந்த காலத்தில் சிலர் தங்கள் தேவைக்காக உபயோகித்து பொய் பிரச்சாரங்கள் செய்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி திட்டமிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒரு குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தஞ்சம் புகுந்து தங்களுக்கு சந்தோசமானவைகளைச் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் என்ன இலச்சியத்துக்காக கட்சியை உருவாக்கினோமோ அந்த இலச்சியத்தை அடையும்வரை நான் எந்தவிதமான தனிப்பட்ட ஆசைகளுக்கு இடம்கொடுக்க மாட்டேன்.

இன்று ஆரம்பித்த கூட்டு ஒரு முறையான கூட்டாக தெரிகின்றது. கடந்த பல வருடங்களாக தம்மை வளர்த்த ஒரு கூட்டும் இருக்கின்றது. இன்று எமது முதலாவது எதிரி அந்த கூட்டுத்தான்.

பெரியவர்களினால் உருவாக்கப்பட்ட கட்சியை சின்னா பின்னப்படுத்தி தங்கள் தேவைக்காக அந்த கட்சியை விற்பனை செய்து பிழைத்தவர்கள் இன்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரிலே செயற்படுகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நான். ஆனால் என்னைச் சுற்றி பல சதிதிட்டம் நடந்தது. காலையில் எழுந்து பார்த்தபோது என்னுடைய கதிரையில் இன்னொருவர் இருக்கின்றார். அவர் இன்றும் தொடர்ந்து இருந்து வருகின்றார் அது இப்போதுதான் மக்களுக்கு புரிந்துள்ளது.

எங்களை வித்து பிழைக்கும் ஒரு கூட்டம்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் போல செயற்பட்டு வருகின்றனர். என்னை பொறுத்த வரையில்எங்களுடைய மக்கள் மட்டக்களப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்,கொழும்பில் வாழ்ந்தால் என்ன நாடளாவிய ரீதியில் சகல தமிழ் மக்களுக்கும் ஓரே பிரச்சினைதான். ஏனைய இடங்களில் பேசுவதற்கு ஆட்களில்லை. ஆனால் மட்டக்களப்பில் பேசுவதற்கு இருக்கின்றனர்.

மட்டக்களப்பில் ஒலிக்கும் குரல் வட.மாகாணத்தில் ஒலிக்கவேண்டும். இந்த செயற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தை மட்டும் மையப்படுத்தி இருக்காமல் நாடளாவிய ரீதியாக எமது இனத்தின் நலன் கருதி செயற்பட வேண்டும்

ஒரு இலச்சியத்துக்காக உருவாக்கப்பட்டது. மேலும் இனப் பிரச்சனையை வைத்து 50 ஆண்டுகள் அரசியல் ஓட்டி விட்டனர். இன்னும் தீர்வில்லை. ஆனால் பெரும்பான்மை மக்கள் ஆதரிக்க கூடிய வகையில் ஒரு தீர்வை 15 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் சிங்கள மக்கள் மத்தியில் முன்வைத்தேன் அது இந்திய முறையிலான தீர்வு.

ஏன் என்றால் 60 மில்லியன் மக்கள் அவர்கள்தான் எமது பிரச்சனையை பற்றி பேசியவர்கள் அக்கறை கொண்டவர்கள். எனது ஒரே ஒரு வேண்டுகோள் இந்திய முறையை பரிசீலத்துப் பாருங்கள்

எனவே ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி இருந்தது போல ஒரே அமைப்பாக இந்த தீர்வை முன்வைப்போமாக இருந்தால் எந்த அரசும் தட்டிக்கழிக முடியாது. 50 ஆண்டுகள் பட்ட துன்பங்கள் கஷட்டங்களுக்கு ஒரு விடிவு பிறக்கும்” என்றார்.