Home Blog Page 15

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது – ஐ.நா. குற்றச்சாட்டு

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

“கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி, காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல், காசா மீதான தாக்குதலை ஆரம்பித்தது. இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாக்குதல் தொடங்கிய கடந்த 22 மாதத்தில் பாலஸ்தீனர்கள் குறைந்தது 64,905 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு சார்பில் சுதந்திரமான மனித உரிமை ஆணையக் குழு அமைக்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவின் தலைவராக முன்னாள் மனித உரிமை ஆணையத் தலைவர் நவி பிள்ளை நியமிக்கப்பட்டார். இக்குழு தனது விசாரணையை முடித்து 72 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை என வரையறுக்கப்பட்ட 5 செயல்களில் 4 காசாவில் நடந்துள்ளது. அதாவது, ஒரு குழுவின் (ஹமாஸ்) உறுப்பினர்களைக் கொல்வது, உடல் மற்றும் மன ரீதியில் கடுமையான தீங்கை விளைவிப்பது, குழுவை அழிக்கும் நோக்கில் நிபந்தனைகளை ஏற்படுத்துவது, பிறப்புகளைத் தடுப்பது ஆகியவை நிகழ்த்தப்பட்டுள்ளன.

இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள், ராணுவத்தின் நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், மருத்துவர்கள் ஆகியோருடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள், சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள், போர் தொடங்கியதில் இருந்து தொகுக்கப்பட்ட செயற்கைக்கோள் பட பகுப்பாய்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை பேரவையின் இந்த அறிக்கையை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ஜெனிவாவில் உள்ள இஸ்ரேல் தூதுவர் கூறுகையில், “ஐ.நா. மனித உரிமை ஆணையம் இஸ்ரேலுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவுக்கு இஸ்ரேல் ஒத்துழைக்காது” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால,சீனத் தூதுவர் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹோங் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவைச் சந்திப்பதற்கு முன்னர்  கொழும்பில் உள்ள சீனத் தூதுவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சந்தித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலத்துக்கமைய, உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

இதற்கு இணங்க, தேவையான ஆவணங்கள் கிடைத்தவுடன் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைப்பதாக முன்னாள் ஜனாதிபதி சிறிசேன அண்மையில் தெரிவித்தார்.

நாமலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு திங்கட்கிழமை (15) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான  இருதரப்பு  இராஜதந்திர உறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தமை குறித்து நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில்,

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்று கொழும்பில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவுடனான எங்கள் நீண்டகால நட்பையும், வலுவான இருதரப்பு உறவுகளையும் பொதுஜன பெரமுன பெரிதும் மதிக்கிறது. இந்தப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

திலீபனின் 38ஆவது நினைவேந்தல் திருகோணமலையில் அனுஷ்டிப்பு

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை (16)  நடைபெற்றது.

இதன்போது வாகனப் பேரணியுடன் திலீபனின் திருவுருவப்படங்கள் பொறிக்கப்பட்டு, உணர்வுபூர்வமாக அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் மாவட்ட கிளை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

உலக வங்கி பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்துள்ள கோரிக்கை

ஊழலற்ற இலங்கையின் தற்போதைய திட்டமங்கள் குறித்து சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அதன் ஊடாக இலங்கைக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உலக வங்கி பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள  உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய  வலய உப தலைவர் ஜொஹன்னஸ் சட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி பிரதிநிதிகள் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் எதிர்கால வளர்ச்சி இலக்குகளை அடைவதில் உலக வங்கி குழுமம் எவ்வாறு ஆதரவை வழங்க முடியும் என்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

இலங்கையின் தற்போதைய பொருளாதாரத் திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த உலக வங்கி பிரதிநிதிகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தனர்.

டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட குறுங்கால நன்மைகள் பெறக் கூடிய துறைகளை அடையாளங் கண்டு அதன் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி வடக்கு மற்றும் கிழக்கின் வளர்ச்சி குறித்தும்  விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தினால் உலக வங்கிக்கு  சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான சட்ட கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தற்பொழுது எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான  அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் குறித்தும்  இதன் போது ஆராயப்பட்டது.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணி பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி,சர்வதேச அளவில் ஊழல் நிறைந்த நாடு என்று முத்திரை குத்தப்பட்ட இலங்கை, தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வெளிப்படையான திட்டத்தின் காரணமாக  பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் படிப்படியாக ஸ்திரமடைந்து  வருவதாகவும்  குறிப்பிட்டார்.

உலக வங்கியின் சார்பில், இலங்கை, நேபாளம் மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் துறைசார் பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் (David Sislen)மற்றும் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின்  பணிப்பாளர் கெவோர்க் சர்க்கிசியன் (Gevorg Sargsyan)  ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, தொழில்  அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அபொன்சு உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இங்கிலாந்து பிரதமர் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை

1 66 இங்கிலாந்து பிரதமர் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை

இங்கிலாந்தில் வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களுக்கு எதிராக, தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ரொபின்சன் தலைமையில் லண்டனில் ஒரு பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பேரணியின் போது, போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 26 பொலிஸார் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் அமைதியாகப் பேரணியை நடத்தாமல் வன்முறையில் ஈடுபட்டதாக அந்நாட்டுப்  காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், போராட்டக்காரர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், இங்கிலாந்து சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு என்பதை மறந்துவிடக் கூடாது. நமது நாட்டின் கொடி நமது பன்முகத்தன்மையைக் குறிக்கிறது. அதை மதிக்காமல், இன ரீதியான மிரட்டலை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஏனையவர்களை அச்சுறுத்துவதன் மூலமாகவோ அல்லது பணியில் இருக்கும் அதிகாரிகளைத் தாக்குவதன் மூலமாகவோ அவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இடம்பெற்ற போராட்டத்தால் புலம்பெயர்ந்தோர் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

தமிழக மீனவர்கள் விவகாரம்: அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் – கடற்படை

தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்ட விரோத மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாகவுள்ளது.

கடற்படையினர் என்ற ரீதியில் இந்த பிரச்சினை தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியான இராஜதந்திர தீர்வொன்று காணப்பட வேண்டும் என கடற்படை வலியுறுத்தியுள்ளது. கடந்த சகல அரசாங்கங்களிடமும் இது வலியுறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் பிரதானி ரியர் அத்மிரல் டேர்டமியன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பு கோட்டையிலுள்ள கலங்கரை விளக்கம் உணவக வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்ட விரோத மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது எமது வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகவுள்ளது. கடற்படையினர் என்ற ரீதியில் இந்த பிரச்சினை தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம்.

இது தொடர்பான தரவுகளையும் நாம் அவ்வப்போது ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்று காணப்பட வேண்டும் என்பதை கடந்த சகல அரசாங்கங்களிடம் நாம் வலியுறுத்தியிருக்கின்றோம்.

இந்திய கடற்படை மற்றும் இந்திய கரையோர பாதுகாப்பு படையுடன் எமது நட்புறவு தொடர்ந்தும் சுமூகமாகப் பேணப்படுகிறது. இது குறித்த புதிய வழிமுறைகளை நாம் அரசாங்கத்திடம் யோசனைகளாக முன்வைத்திருக்கின்றோம். அதற்கமைய வடக்கு மீனவ சமூகங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த பிரச்சினை காலி கலந்துரையாடலில் முக்கிய விடயமாகப் பேசப்படும். நாமும் அதில் அவதானமாக இருக்கின்றோம்.

அத்தோடு எமது கடற்பரப்பின் ஊடாக இடம்பெறும் போதைப்பொருள் உள்ளிட்ட ஏனைய சட்ட விரோத பொருட்கள் கடத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. சகல நாடுகளுடனும் இணைந்து கடல் வழியூடான போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறிருப்பினும் நூறு சதவீதம் அவை கட்டுப்படுத்தப்படவில்லை. எவ்வாறிருப்பினும் சட்ட ரீதியாக புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

இது தொடர்பில் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அத்மிரல் புத்திக லியனகமகே தெரிவிக்கையில்,

வடக்கு கடற்பகுதியே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. எவ்வாறிருப்பினும் அண்மைக்காலமாக இலங்கை கடற்படை மற்றும் அரசாங்கத்தின் செய்தி அவர்களை சரியாக சென்றடைந்திருக்கிறது என்று நம்புகின்றோம். கடந்த 3 வாரங்களாக இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கவில்லை. எமது கடற்படை படகுகளை அணுப்பி நாம் இந்த எல்லையிலிருக்கின்றோம் என்பதை அவர்களுக்கு காண்பிக்கின்றோம்.

உள்ளக மீனவர்களும் பெருமளவில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மீன்பிடிப் படகுகளை விட எமது மீன் பிடிப்படகுகளின் எண்ணிக்கை அதிகமாகும். தமிழக மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பம் குறைவடைந்துள்ளமைக்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகும். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் சற்று குறைவடைந்துள்ளன என்றார்.

இரண்டு வருடங்ளுக்கு ஆணையை நீடியுங்கள்: ஐ.நாவில் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள்!

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளிடம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச பேரவை ஆகிய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான புதிய பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் உங்களால் ஆரம்பிக்கபட்டிருக்கும் நிலையில், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கக்கூடிய வகையில் வலுவானதொரு பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடு வரவேற்கத்தக்கது எனினும், அத்தகைய கட்டமைப்பொன்றை ஸ்தாபித்து, அதனை முழுமையாக இயங்கச்செய்வதற்கு மாதங்களோ அல்லது வருடங்களோ ஆகலாம்.

அதுமாத்திரமன்றி அதனைச் செய்வதற்கான போதுமான அரசியல் தன்முனைப்பு வெளிக்காட்டப்படவேண்டும். அத்தோடு சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் எனக் கூறுவது மாத்திரம் போதுமானதன்று. மாறாக அதுகுறித்து நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இதுவரையில் குறைந்தபட்சம் சுமார் 10 வெவ்வேறு ஆணைக்குழுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரும் கூட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் உள்ளகப்பொறிமுறைகள் மீது பாதிக்கப்பட்ட தரப்பினரும், அவர்களது குடும்பத்தினரும், இழப்புக்களுக்கு முகங்கொடுத்த சமூகத்தினரும் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துடன் தொடர்புகளைப்பேணி வந்திருக்கிறார்கள்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவிகளுடன் உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரையில் அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் எவையும் அடையப்படாத நிலையில், இம்முன்மொழிவு மீண்டுமொரு தோல்விக்கே வழிவகுக்கும்.

அதுமாத்திரமன்றி பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்பு என்பன நம்பத்தகுந்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு மிக அவசியமானவையாகும். எனினும் அவரை தற்போது நடைமுறையில் இல்லை.

மாறாக நீதியைக்கோரிப் போராடுபவர்கள் அரசாங்கத்தினதும், பாதுகாப்புத்தரப்பினரதும் தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவருகின்றனர்.  எனவே 2015 ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட செயற்திறன்மிக்க சர்வதேச பங்கேற்பின்றி, தனித்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையினால் பாதிக்கப்பட்ட தரப்பினரின் ஆதரவையும், பங்கேற்பையும் உறுதிப்படுத்தமுடியாது.

கடந்த 2024 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில், கடந்தகால மீறல்கள் தொடர்பிலும், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. இலங்கையில் சர்வதேச மனிதாபிமானச்சட்டத்துக்கு எதிரான மிகமோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகள் ஊடாகக் கண்டறியப்பட்டன.

இருப்பினும் உள்ளக நிலைமாறுகால நீதிப்பொறிமுறைக்கான நம்பத்தன்மையை சிறுபான்மையின மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் தவறிவிட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் மேன்முறையீட்டை விசாரிக்க தீர்மானம்!

2008ஆம் ஆண்டு கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்து நீக்குவதற்கான சட்டமா அதிபரின் முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்படட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (15) தீர்மானித்துள்ளது.

பாதிக்கப்பட்டோர் தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீடு, நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
அதற்கமைய, குறித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதியரசர்கள் ஆயம் திகதியிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு கொழும்பில் தங்களது பிள்ளைகளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவின் 14 உறுப்பினர்களுக்கு எதிராக மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தின் முன் 2019ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்ததாக மனுதாரர் தரப்பு மேன்முறையீட்டில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்து நீக்க சட்டமா அதிபர் முடிவு செய்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சட்டமா அதிபரின் இந்த முடிவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாகவும், ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்ததாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.
வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருந்ததாலேயே, சட்டமா அதிபர் அவரை பிரதிவாதியாக பெயரிட்டு வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்ததாக சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், அதனையும் மீறி வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்து நீக்க சட்டமா அதிபர் எடுத்த முடிவு சட்டத்துக்கு முரணானது என்றும் கூறுகின்றனர்.

சட்டமா அதிபரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை சட்டத்துக்கு முரணானது என்றும், சட்டமா அதிபர் எடுத்த முடிவை வலுவற்றதாக்கி உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை கோருகின்றனர்.

அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு!

தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு உணர்வுபூர்வமாக இருந்ததாகவும் அரசியல் கைதிகளை சந்தித்துவிட்டு கனத்த இதயத்துடன் அவர்களின் உறவுகள் வெளியே வந்ததாகவும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை கண்டி – போகம்பரை சிறையில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  குறுகிய நேரத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் மகளை தந்தையான ஆனந்த சுதாகரன் தொட்டு உணவூட்டிய அந்த நிகழ்ச்சி சம்பவம் மனதை ரணமாக்கியது என்று அவர் விபரித்துள்ளார்.

இந்த சந்திப்பானது நிரந்தரமாக இந்த பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டுமென இந்த நாட்டின் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு கைதிகள் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படுவது வழமை. ஆனால் இந்த ஆண்டு கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.

தாங்கள் விடுதலை செய்யப்படுவோம் என்று கைதிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
மீதமாக உள்ள அரசியல் கைதிகளும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதாகவும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.