Home Blog Page 14

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்து: ஜெனிவாவில் போராட்டம்

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக்கோரி புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து திங்கட்கிழமை (15) ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்புப்பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.

nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. தொடக்கநாள் அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து அவ்வறிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது.

அதேவேளை பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் திருத்தங்கள் உள்வாங்கப்படாத 60ஃஎல்.1 எனும் முதல் வரைவு குறித்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வலியுறுத்தி திங்கட்கிழமை (15) சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் மாபெரும் கவனயீர்ப்புப்பேரணியொன்ற நடாத்தப்பட்டது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக்கோரி நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்பாகக் கூடினர்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைப் பிரதிபலிக்கும் வகையில் பதாதைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், சர்வதேச நீதிப்பொறிமுறையைக்கோரி பேரணியாகச் சென்றனர்.

முறைமை மாற்றமே தேர்தல் தாமதத்துக்கு காரணம் என்கிறார் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் .

“விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாண சபை முறைமையை விகிதாசார முறைமையாக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே தேர்தல் காலம் தாழ்த்திச் செல்லக் காரணமாகும்.” என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த அவர் யாழ். ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டார். எல்லை நிர்ணய வரையறைகள் சீர்திருத்தம் குறித்த பிரச்சினை இருக்கின்றது.
இது தீர்க்கப்பட்டால் உடனடியாகத் தேர்தல் நடைபெறும். அதற்குத் திணைக்களம் தயாராக இருக்கின்றது.
அல்லது பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையூடாக தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் பழைய முறைமையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் பழைய முறைமையில் தேர்தலை நடத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஏற்ற கால அவகாசமும் உள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டவர்கள் கடற்படையினரால் மீட்பு

தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

வட மத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, தலைமன்னாரின் ஏழாம் மணல்திட்டில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆறு பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களை சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வருவதாகக் கூறிய ஆட்கடத்தல்காரர்கள், அங்கு கைவிட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது. இவர்கள், 8 முதல் 56 வயதுக்குட்பட்ட வவுனியா, மடு மற்றும் கொக்கடிச்சோலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் தலைமன்னார் பொலினஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர், எந்த சந்தர்ப்பத்திலும் முறைப்பாடு செய்ய முடியும்!

மட்டக்களப்பு, குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர், எந்த சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, முறைப்பாடு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதவான் இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடளிக்க நேற்று (15) மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த போதும், அதற்கு எவரும் முன்வரவில்லை.  கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள், குருக்கள்மடம் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்து இதுவரையில் 35 பேர் நீதிமன்றில் முன்னிலையாகி முறைப்பாட அளித்துள்ளனர்.

இந்தநிலையில் குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்விற்கு 2,850,000 ரூபாய் தேவைப்படுவதாக ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பின்னர் மண் பகுப்பாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் குரலற்றவர்கள் இயக்கத்தின் சட்டத்தரணி ராஷி மொஹமட் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையை எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைத்து, களுவாஞ்சிக்குடி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் வாக்களிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யத் திட்டம்

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்க ஏதுவாக சட்டத் திருத்தங்களைச் மேற்கொள்ள அல்லது புதிய சட்டங்களை உருவாக்குவது குறித்து ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தற்போதைய தேர்தல் சட்டத்தின் கீழ், இலங்கையில் வசிக்கும் மற்றும் வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்யப்பட்ட குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை குடிமக்களுக்கு அத்தகைய வசதிகள் இல்லை.

இருப்பினும், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள், வெளிநாடுகளில் வசிக்கும் தங்களது பிரஜைகள் வாக்களிக்க அனுமதிக்கும் சட்ட வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன என்றும், அத்தகைய சட்டத் திருத்தம் இலங்கையிலும் காலத்தின் தேவையாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தேர்தல் ஆணைக்குழு, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்டவற்றின் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குழுவுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் வாக்களிக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சட்டங்களைத் திருத்துவது அல்லது புதிய சட்டங்களை உருவாக்குவது தொடர்பான சிக்கல்களை ஆய்வு செய்வதற்கான பொறுப்பு வழங்கப்படவுள்ளது.

திருகோணமலை: முத்து நகர் விவசாய காணிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கள பயணம்!

திருகோணமலை முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை சூரிய மின்சக்தி உற்பத்திக்காக இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதால் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களோடு கலந்துரையாடினர்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் திடீர் கள விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்  காணி அபகரிப்பு தொடர்பிலும் விவசாயிகளிடம் கேட்டறிந்துகொண்டார்.

இதில் கிண்ணியா மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

நிலாவெளிப் படுகொலை: இன்று 40, வது ஆண்டு நினைவேந்தல்: பா.அரியநேத்திரன்

1 69 நிலாவெளிப் படுகொலை: இன்று 40, வது ஆண்டு நினைவேந்தல்: பா.அரியநேத்திரன்

இலங்கையின்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ஜே.ஆர்.ஜெயவர்தனவின்  தமிழினப்படுகொலை இது.!

தமிழர் தாயகமான திருகோணமலை மாவட்டத்தின்  குச்சவெளிப் பிரதேசசெயலர் பிரிவிற்குற்பட்ட நிலாவெளிப் பிரதேசமானது, திருகோணமலை நகரிலிருந்து பத்து கி.மீ தூரத்திலுள்ளது. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு நிலாவெளி அகதி முகாம் மக்களால் நிறைந்து காணப்பட்டது.

16.09.1985 அன்று நிலாவெளியில் நிலைகொண்டிருந்த இராணுவமும், ஊர்காவற்படையினரும் சேர்ந்து அகதி முகாமைச் சுற்றிவளைத்தனர். அங்கிருந்த முப்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கைதுசெய்து, அவ்விடத்திலேயே நிறுத்தி வைத்துச் சுட்டதில் அனைவருமே உயிரிழந்தனர்.
16.09.1985 அன்று நிலாவெளிப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:
1. முருகேசு தங்கராசா (வயது 46 – விவசாயம்)
2. கச்சுமுகைதீன் முகம்மதுகாலித் (வயது 33 – வியாபாரம்)
3. வேலு சிவசுந்தரம் (வயது 24 – வியாபாரம்)
4. வேலு சிதம்பரநாதன் (வயது 25 – வியாபாரம்)
5. செல்லத்தம்பி நிர்மலானந்தன் (வயது 26 – வியாபாரம்)
6. சோசுந்தரலிங்கம் அருட்குமரன் (வயது 20 – வியாபாரம்)
7. அந்தோனிப்பிள்ளை கபிரியேல்
8. இராஜேந்திரன் (வயது 29 – வியாபாரம்)
9. செய்யதுபுகாரி அப்துரசாக் (வயது 32 – வியாபாரம்)
10. கந்தையா கந்தசாமி (வயது 28 – சாரதி)
11. கணபதிப்பிள்ளை சௌந்தரராஜன் (வயது 28 – சாரதி)
12. செல்லத்தம்பி ரட்ணராஜா (வயது 41 – மெக்கானிக்)
13. நேசதுரை ரெறன்ஸ் (வயது 19 – மெக்கானிக்)
14. கதிர்காமத்தம்பி கனகசபை (வயது 39 – தொழிலாளி)
15. முகமட் காசிம் முகமட்ராசிக் (வயது 31 – தொழிலாளி)
16. தாமோதரம்பிள்ளை நேமிநாதன் (வயது 19 – மாணவன்)
17. வல்லிபுரம் தருமலிங்கம் (வயது 18 – மாணவன்)
18. தர்மதாஸ் உதயநேசன் (வயது 19 – கடற்தொழில்)
19. சுப்பிரமணியம் காளிராஜா (வயது 20 – கடற்தொழில்)
20. செல்வவினாயகம் ஜெயகோபன் (வயது 26 – கடற்தொழில்)
21. இராசையா துரைநாயகம் (வயது 36 – கமம்)
22. தாமோதரம்பிள்ளை சண்முகதாசன் (வயது 24 – கமம்)
23. மாமாங்கம் ரஞ்சநேசன் (வயது 21 – கமம்)
24. அபுசாலிபு அப்துல்நாயீர் (வயது 28 – கமம்)
25. சித்திரவேல் மாரிமுத்து (வயது 53 – காவலாளி)
26. சிங்கராயர் கிலீற்றஸ் பிரேமதாஸ் (வயது 20 – ஊழியர்)
27. சிவபாலன் கெங்காதரன் (வயது 34 – இலிகிதர்)
28. பொன்னுத்துரை பார்த்தீபன் (வயது 27 – தொழிலாளி)
29. யோகராசா (வயது 23 – தொழிலாளி)
30. இரத்தினசாமி பார்வதி (வயது 30 – வீட்டுப்பணி)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது – ஐ.நா. குற்றச்சாட்டு

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

“கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி, காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல், காசா மீதான தாக்குதலை ஆரம்பித்தது. இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாக்குதல் தொடங்கிய கடந்த 22 மாதத்தில் பாலஸ்தீனர்கள் குறைந்தது 64,905 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு சார்பில் சுதந்திரமான மனித உரிமை ஆணையக் குழு அமைக்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவின் தலைவராக முன்னாள் மனித உரிமை ஆணையத் தலைவர் நவி பிள்ளை நியமிக்கப்பட்டார். இக்குழு தனது விசாரணையை முடித்து 72 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை என வரையறுக்கப்பட்ட 5 செயல்களில் 4 காசாவில் நடந்துள்ளது. அதாவது, ஒரு குழுவின் (ஹமாஸ்) உறுப்பினர்களைக் கொல்வது, உடல் மற்றும் மன ரீதியில் கடுமையான தீங்கை விளைவிப்பது, குழுவை அழிக்கும் நோக்கில் நிபந்தனைகளை ஏற்படுத்துவது, பிறப்புகளைத் தடுப்பது ஆகியவை நிகழ்த்தப்பட்டுள்ளன.

இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள், ராணுவத்தின் நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், மருத்துவர்கள் ஆகியோருடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள், சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள், போர் தொடங்கியதில் இருந்து தொகுக்கப்பட்ட செயற்கைக்கோள் பட பகுப்பாய்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை பேரவையின் இந்த அறிக்கையை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ஜெனிவாவில் உள்ள இஸ்ரேல் தூதுவர் கூறுகையில், “ஐ.நா. மனித உரிமை ஆணையம் இஸ்ரேலுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவுக்கு இஸ்ரேல் ஒத்துழைக்காது” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால,சீனத் தூதுவர் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹோங் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவைச் சந்திப்பதற்கு முன்னர்  கொழும்பில் உள்ள சீனத் தூதுவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சந்தித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலத்துக்கமைய, உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

இதற்கு இணங்க, தேவையான ஆவணங்கள் கிடைத்தவுடன் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைப்பதாக முன்னாள் ஜனாதிபதி சிறிசேன அண்மையில் தெரிவித்தார்.

நாமலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு திங்கட்கிழமை (15) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான  இருதரப்பு  இராஜதந்திர உறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தமை குறித்து நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில்,

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்று கொழும்பில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவுடனான எங்கள் நீண்டகால நட்பையும், வலுவான இருதரப்பு உறவுகளையும் பொதுஜன பெரமுன பெரிதும் மதிக்கிறது. இந்தப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.