Home Blog Page 16

திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் இருந்து ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது இன்றைய தினம் (15) திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பமாகியுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஊர்திப் பயண ஆரம்ப நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள்,மக்கள் கலந்து கொண்டனர்.

திலீபனின் திருவுருவப்படத்திற்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய வாகனம் தன் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த ஊர்தியானது மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி நகரவுள்ளதுடன் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயணம் மேற்கொண்டு இறுதியாக திலீபனின் நினைவேந்தல் தினத்தன்று யாழ். நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் பயணத்தை நிறைவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்துவரும் இரு ஆண்டுகளுக்கு ஐ.நா. கண்காணிப்பில் இலங்கை!

இலங்கை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் வரைவுத்தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் முறைமையை மாற்றும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தா லும், எல்லை நிர்ணய அறிக்கை நாடா ளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால் பழைய முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கும், அதற்குரிய சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என்றும் தெரியவருகின்றது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட கூட்டத்தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. டிசெம்பர் மாத இறுதியில் பாதீட்டு கூட்டத்தொடர் முடிவடையும். அதன்பின்னர் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலவேளை மார்ச் மாதத்துக்குள் தேர்தலை நடத்துவதற்கு ஏதேனும் சிக்கல்கள் இருப்பினர் தமிழ்- சிங்கள புத்தாண்டு முடிவடைந்த பின்னர் ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, மாகாணசபைத் தேர்தலை இலங்கை விரைவில் நடத்தவேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரிலும் இது தொடர்பான வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மகிந்த குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்!

விளையாட்டு அமைச்சுக்காக வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து, ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்த பரிவர்த்தனையால் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதற்கான கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சம்பவம் தொடர்பான விசாரணைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் செயலாளர் ஒருவரிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஷிரந்தி ராஜபக்ஷவின் தலைமையில் செயல்படுத்தப்பட்ட சிரிலிய திட்டம் தொடர்பான விசாரணைகள் முன்னர் கவனத்தை ஈர்த்திருந்தது. குறித்த பேருந்து பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்த நிலையில், புலனாய்வாளர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்துள்ளனர்.

அதற்கமைய, இது தொடர்பாக வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக லலித் வீரதுங்கவையும் முன்னாள் கூடுதல் செயலாளரையும் வரவழைக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இப்போது உத்தரவுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழில் கையெழுத்துப் போராட்டம்

செம்மணி உட்பட வடக்கு, கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகள் மற்றும் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (15) கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கையெழுத்துப் போராட்டம் மாற்றத்துக்கான இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணம் மருதனார் மடம் பகுதியில் நடத்தப்பட்டது.

இதில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள், யாழ் மருதனார்மடம் வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு நாள் நிகழ்வுகள் யாழில் ஆரம்பம்…

2ffe2514 a1b1 45b0 b305 5fd94a196db3 தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு நாள் நிகழ்வுகள் யாழில் ஆரம்பம்...

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த “தியாக தீபம்” திலீபன் அவர்களின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாணம், நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில், அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாயின.

இந்த நினைவேந்தலின்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

திலீபன் முன்வைத்த கோரிக்கைகளான

1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2) சிறைக்கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் உயிர்நீத்தமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை குறித்து பி.பி. சிவப்பிரகாசம் கருத்து

பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை உட்பட  அடிப்படை உரிமைகளை பாதுகாக்க  தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்பாட்டு குழு உறுப்பினரும்,  பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும், ஆலோசகருமான கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

கண்டி, ஹந்தான தோட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (14) விஜயம் செய்த அவர், அங்கு கூடியிருந்த இளைஞர்களுக்கு மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரவித்தார்.

அப்பகுதியில் உள்ள  விளையாட்டு மைதானம், மற்றும் மயானம் போன்றவற்றுக்கு பிரச்சினைகள் ஏட்பட்டு வருவதாக,  ஹந்தான தோட்டம் மூன்றாம் கட்டை தொழிற்சாலை பிரிவில் உள்ள இளைஞர்கள்  சிவப்பிரகாசம் அவர்களிடம் குறிப்பிட்ட  போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி இளைஞர்கள் அங்கு மேலும் தெரவிக்கையில்,

மலையக தோட்டப் பிரதேசங்களில் பல்வேறு தோட்டங்களிலும் குறிப்பாக அரச நிர்வகங்களால்  நிறுவகிக்கப்படுகின்ற பல தோட்டங்களில் இன்று காணி அபகரிப்பு   என்பது ஒரு மாபெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது.

குறிப்பாக மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை அரச பெருந்தோட்ட யாக்கம் போன்ற தோட்டங்களிலே இந்த காணிய அபகரிப்பு அல்லது கையகப்படுத்தல் அரசியல் பின்புலத்தோடு கடந்த காலங்களில் நடைபெற்று வந்திருக்கின்றமை தெரிய வருகின்றது. இந்த நிலைமையே கண்டி மாவட்டத்தில் உள்ள பல தோட்டங்களில் காணப்படுகின்றது என்றனர்.

இதனை அடுத்து கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறான கானிகள் வாங்குதல், அல்லது கையகப்படுத்தல் விடயத்தை கவனிக்கும்போது, தோட்டங்களில் வாழும் மக்கள் சிறுசிறு காணிகளை விவசாயம்,  வீடுகளை விரிவாக்க அல்லது வாழ்வாதார வசதிக்காக பயன்படுத்துவதில்  இடர் படுகின்றனர்.

ஆனால் அதே நேரம்  தோட்ட அபிவிருத்தி சபை தோட்டங்கள் மற்றும் அரசு பெருந்தோட்ட யாக்கத்திற்கு சொந்தமான தோட்டங்களில் காணிகள் வெளியார்களுக்கு பல ஏக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது எவ்வாறு எப்படி நடைபெற்றது என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட போதும், தேயிலை காணிகள் அழிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் மக்களுடைய பொதுத் தேவைகள், மயான வசதி, பாதைகள்,  விளையாட்டு மைதானம் என்பவற்றுக்கான உரிமைகள்  மறுக்கப்பட்டு வருகின்ற நிலைமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு வழங்கப்பட்ட அல்லது கையகப்படுத்தப்பட்ட காணிகளில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள், சுற்றுலா அபிவிருத்தி, விவசாயம் என்பவை நடைபெற்றாலும் கூட பல பெருந்தோட்டங்களில் வழங்கப்பட்ட, அல்லது கையகப்படுத்தப்பட்ட காணிகளில் எந்தவித அபிவிருத்தி செயல்பாடுகளும் செய்யப்படாமல் காணப்படுகின்றமை அவதானிக்க தக்கதாகும்.

இதேவேளை கடந்த அரசாங்க காலங்களில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, மக்களை பயமுறுத்தி காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலைமையையும் மக்கள் விஷனத்தோடு தெரிவிக்கின்றனர்.

இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.  குறிப்பாக அரசுக்கு சொந்தமான பெருந்தோட்டங்களில் காணி சம்பந்தமான பல்வேறு குளறுபடிகளும் காணப்படுகின்றன.

இது பற்றி முறை பாடுகள் கிடைக்கின்றன. இவற்றை சீர்திருத்தி நாட்டின் பொருளாதாரத்தை விருத்தி செய்யவும், பெருந்தோட்டத்துறை உற்பத்தியை விருத்தி செய்யவும், பெருந்தோட்டத்திலே வாழுகின்ற மக்களுடைய உரிமைகளை நிலைநாட்டவும், அதேவேளை அரசியல் ரீதியாக காணிகள் சட்டத்துக்கு முரணாக வழங்கப்பட்டிருந்தால் அவை குறித்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் பெரிதும்  நம்புவதாக கலாநிதி சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.

நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்கிறது…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது.

இந்த குழுவில் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மற்றும் பிரதி அமைச்சர் உட்பட நீதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் உள்ளடங்குவதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு ஜெனிவா சென்று, இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்ததன் பின்னர் நாடு திரும்பியுள்ளது. ஐ.நா. உயர்ஸ்தானிகர் ஒரு உறுதியான சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் அதே வேளையில், இலங்கை அரசு உள்நாட்டு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி சர்வதேச சமூகத்தின் தலையீட்டைத் தவிர்க்க முயல்கிறது.

இந்த முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலேயே நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்கிறது.

ஏமாற்றத்தின் தொடர்கதை – விதுரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் 8ம் திகதி ஆரம்பித்து எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி வரையில் நடைபெறுகின்றது.
இந்நிலையில், 60ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாளிலேயே இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான தனது அலு வலகத்தினால் தயாரிக்கப்பட்ட எழுத்து மூல அறிக் கையின் உள்ளடக்கம் குறித்து உரையாற்றினார்.
அவரது உரையின் சாரம்சமும், அறிக்கை யின் உள்ளடக்கமும் இலங்கையின் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த விவகாரங்களில் மனித உரிமைகள் பேரவையின் வகிபாகம் தொடர் பிலான எதிர்பார்ப்புகளில்மீண்டும் ஒரு முறை ஏமாற்றத்தையும், நம்பிக்கையின்மையையும் ஏற் படுத்தியுள்ளது.
ஐ.நா. உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தனது உரையில், கடந்த கால மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதுதான் நல்லிணக் கத்திற்கான ஒரேவழி என்று தெளிவாக வலியுறுத் தியுள்ளார். ஆனால், தற்போதைய அநுர அரசாங்கம், வழமைபோல, உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கப்போவதாகக் கூறி, சர்வதேச தலையீடுகளை நிராகரிக்கும் போக்கையே வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிலைப்பாடு, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தினருக்கு மிகுந்த மனவேதனையையும், ஏமாற்றத்தையும் நிறைவாக அளித்துள்ளது.
இலங்கையில் போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மக் களுக்கு நீதி கிடைப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஒவ்வொரு முறை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போதும் இலங்கை அரசாங்கம் புதிய புதிய வாக்கு றுதிகளை ‘காலங்கடத்தும்’ அல்லது ‘ஏமாற்றும்’ நோக்கங் களுடன் வாக்குறுதிகளை அளிக்கிறது.
அந்த வகையில் இம்முறை, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், நாட்டில் ஒரு ‘புதிய அரசியல் கலாசாரம்’ உருவாகி வருவதாகவும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், இந்த வாக்குறுதிகள் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் எவ்வித நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை.
ஏனென்றால், இதற்கு முன்னர் ஆட்சியில் அமர்ந்திருந்த அனைத்து அரசாங்கங்களும் இதே போன்ற வாக்குறுதிகளை அளித்துவிட்டு அவற்றை நிறைவேற்றத் தவறிவிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த மனித உரிமைகள் பேரவையையும் ஏமாற்றியும் இருந்தன. அதிலும் 2015ஆம் ஆண்டு, மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கம் அல்லது நல்லாட்சி அரசாங்கம் என்று அடையாளப்படுத்தப்பட்ட தமிழ்த் தரப்பின் ஆதரவினையும் பெற்றுக்கொண்ட அரசாங்கம் கலப்பு விசாரணைப் பொறிமுறைக்கு இணை அனுசரணை வழங்கியது.
நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை அமுல்படுத்தப்போவதாகவும் அறிவித்தது. ஆனால் அதே அரசாங்கம் அதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தது. இந்தச் செயற்பாடொன்றே இலங்கையின் ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் எவ்வளவு உறுதியற்றவர்கள் என்பதை உறுதியாக வெளிப்படுத்துவதற்கான சான்றாகும்.
அவ்வாறான நிலையில் தான் தற் போதைய அநுர அரசாங்கமும் நல்லாட்சி அர சாங்கத்தின் அதே தந்திரோபாயத்தையே பயன் படுத்தி வருகின்றார்கள் என்பது மிகத் தெளி வாக புலனாகியிருக்கின்றது. இந்நிலையில் தற் போதைய அரசாங்கத்தின் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியதன் அவசியம் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் காணப்படப்போவதில்லை.
அதேநேரம் ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அலுவ லக அறிக்கையில், இலங்கை அரசாங்கம் அளித்த முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருகின்றன. குறிப்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு வதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், அது இன்னமும் நீக்கப்படவில்லை. மாறாக, அதற்குப் பதிலாக ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இது, ஒரு சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக, அதே அடக்குமுறைக்கான இன்னொரு சட்டத்தை மாற்றிவைப்பதாகும்.
மேலும், மனித உரிமைச் செயற்பாட்டாளர் கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட் டோர் மீதான கண்காணிப்பும் அச்சுறுத்தல்களும் தொடர்வதாகவும், வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கல் மற்றும் சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் நீடிப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் பார்க்கின்றபோது, அநுர அரசாங்கத்தின் இந்தப்போக்கு, அதன் நல்லி ணக்க உரைகளுக்கு முற்றிலும் முரணானவை. உண்மையாகவே நல்லிணக்கத்தை விரும்பும் ஒரு அரசாங்கமாக இருந்தால், பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளையும், அச்சமற்ற வாழ்க் கையையும் உறுதி செய்ய வேண்டியது ஆகக் குறைந்த கடப்பாடாகும். ஆனால், இலங்கையில் அதற்கு நேர்மாறான நிலைமையே காணப்படுகிறது. செம்மணி மனிதப் புதைகுழி, காணாமல் போனோர் போன்ற மிக முக்கியமான விவகாரங்கள் குறித்து உயர்தானிகருக்கு பதிலளித்து உரையாற்றிய வெளி விவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தின் உரையில் எந்தவிதமான உறுதியான தகவல்களும் இல்லை.
இலங்கை அரசாங்கம் உள்நாட்டுப் பொறி முறையைக் கொண்டுவரப்போவதாகக் கூறியதை, ஐ.நா. உறுப்பு நாடுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டன. ஆனால், அந்தப் பொறிமுறை என்ன, அது எப்போது அமைக்கப்படும், என்ன காலக் கெடுவுக்குள் அது நீதியை வழங்கும் போன்ற எந்தக் கேள்விகளையும் அவை எழுப்பவில்லை.
உறுப்புநாடுகளின் இந்தப்போக்கானது, சர்வதேச சமூகம் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்குக் கால அவகாசத்தை வழங்குவதன் மூலம் மீண்டும் ஒருமுறை தவறிழைக்கப்போகின்றது என்பதை தெளிவாக உணர்த்துவதாக இருக்கின்றது.
பாதிக்கப்பட்ட தமிழ் சமூகங்கள், உள் நாட்டுப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக் கின்றன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச நீதிமன்றம் போன்ற வெளியகப் பொறிமுறைகளின் மூலமே நீதியைப் பெற முடியும் என்பதில் அவர்கள் உறுதியான நம்பிக்கையை கொண்டிருக்கின்றார்கள்.
உள்நாட்டில் காணப்பட்ட கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, இது ஒரு நியாயமான நிலைப்பாடாகும். போரின் போது இடம்பெற்ற இனவழிப்பு, போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற பாரிய மீறல்களுக்கு இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் ஒரு நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறையால் நீதி வழங்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினால் சிறுகுழந்தையும் சிந்திக்கும்.
ஏனென்றால் ஆட்சிப்பீடங்களில் இருந்த எந்த இலங்கை அரசாங்கங்களும் இந்த விடயத்தில் இதயசுத்தியோடு நடந்து கொண்டிருக்கவில்லை.  காலத்துக்குக் காலம் தனது வாக்குறுதிகளை மாற்றிக்கொண்டுள்ளன.
ஒரு அரசாங்கம் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உறுதியளித்தால், அடுத்த அர சாங்கம் அதை நிராகரிக்கிறது. இந்தச் சுழற்சி தொடர்கிறது. இந்நிலைமை தொடர்ந்தும் நீடித் தால் நீதியைக் கோரும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இன்னும் சொற்ப காலத்தில் உயிரோடு இருக்க மாட்டார்கள். ஆகவே நீதிக்கோரிக்கை மெல்லச்சாகும் என்பது அரசாங்கங்களின் வியூக மாக இருக்கலாம்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இந்த விவகாரத்தில் ஒரு தீர்க்கமான தீர்மானத்தை எடுக்காவிட்டால், இலங்கை ஆட்சியாளர்கள் இதேதந்திரத்தை அடுத்தடுத்த தசாப்தங்களுக் கும் பயன்படுத்துவார்கள் என்பதை மறுதலிக்க முடியாது.
அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தமது அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரப்பகிர்வுடனான சுயநிர்ணய அரசியல் உரிமைகளைக் கோரிவருகின்றார்கள்.
இந்த விடயம் பற்றி ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அலுவலக அறிக்கையோ உயர்ஸ்தானிகரோ வாய்திறக்கவே இல்லை. அவ்வாறாக இருந்தால் குறித்த கோரிக்கையை சர்வதேச சமூகம் எவ்வாறு பார்க்கின்றது என்ற கேள்வி இங்கே எழுகின்றது.
இலங்கை அரசாங்கத்தின் ‘இலங்கையர் தினம்’ இனங்களுக்கு இடையிலான பிரச்சினைக ளுக்கு தீர்வை அளிக்கும் என்று கருதுகின்றதா?என்ற கேள்வியை இங்கே இயல்பாக எழுப்பு வதற்கும் வித்திட்டிருக்கின்றது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையும், உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கும், சர்வதேச சமூகமும் ஒரு விடயத்தினை புரிந்து கொள்வது சாலச்சிறந்தது. அதாவது, பாதிக்கப்பட்ட மக்களின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட அபிலாசைகள் நிறைவேற்றப்படாத வரை, இலங்கையில் நிரந்தரமான நல்லிணக்கம், அமைதியும் ஏற்படப்போவதில்லை.
இந்தச் சூழலில் பிரித்தானியா தலைமையில் கனடா, மாலாவி, மொன்டேனெக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் மனித நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ எனும்  கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணை எப்படியிருக்கப்போகின்றது என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் : சுரேஸ் வலியுறுத்தல்

பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர யுத்த குற்றங்களில் ஈடுபட்டாரா? என்பதை அறிவதற்கு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலே உண்மைகள் வெளிவரும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை. போரின் போது நிகழக்கூடாத சில விடயங்கள் நடந்திருக்கலாம்” என பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றங்கள் இலங்கையில் நடக்கவில்லை என கூறுவது ஒரு அப்பட்டமான பொய். செம்மணிப் புதைகுழி விவகாரம் என்பதுவே ஒரு யுத்தக் குற்றமாகும்.

அங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதுவே ஒரு யுத்த குற்றம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதுபோல வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்கள் பல நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

யுத்தத்தினுடைய இறுதி நாட்களில் பாதுகாப்பு வலயம் எனக் கூறிவிட்டு மக்களை அந்த பாதுகாப்பு இடத்திற்கு செல்லுங்கள் என கூறிவிட்டு அங்கு மோட்டார் குண்டு மூலம் தாக்கியும், வேறு பல்வேறு விதமான முறைகளில் தாக்கியும் அந்த மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

இது சர்வதேச ரீதியாக எல்லோரும் ஏற்றுக் கொண்ட விடயம். அதுவே மிகவும் பாரதூரமான ஒரு யுத்த குற்றம் என்று அவர் தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் அருண ஜயசேகர முதலில் இராணுவத்தில் இருந்ததனால் அவர் யுத்த குற்றம் இடம்பெறவில்லை என்றுதான் கூறுவார். அவரைப் பொறுத்தவரை அவர் இராணுவத்தை பாதுகாக்க வேண்டும், முப்படையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே உள்ளார்.

அவர் ஏற்கனவே இராணுவத்தில் இருந்ததனால் அவருக்கும் இப்படியான தொடர்புகள் இருக்குமோ இல்லையோ எமக்கு தெரியாது. ஆகவே அது குறித்து அவரிடம் முழுமையான விசாரணை செய்தால்தான் உண்மை வெளிப்படும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

யுத்தக்குற்றம் புரிந்தவர்களே அந்த விசாரணையை செய்யக்கூடாது. அப்படி அவர்களே அந்த விசாரணையை செய்தால் நிச்சயமாக மக்களுக்கு நீதி கிட்டாது என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்னாசியாவில் மூன்றாவது நாடும் வீழ்த்தப்பட்டது…

இந்த வார தொடக்கத்தில் சிறிய இமயமலை தேசமான நேபாளத்தை  ‘ஜெனரல்-இசட்’ போராட்டங்கள் உலுக்கியதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை(11) நேபாளம் நாடு தழுவிய ஊரட ங்கு உத்தரவின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.  தலைநகர் காத் மாண்டுவில், போராட்டக்காரர் கள் கட்டிடங்களுக்கு தீ வைத்த தால் அங்கு ஏற்பட்ட அமைதியின் மையைத் தடுக்க இராணுவம் நாட்டை தனது பொறுப்பில் எடுத்ததுடன்,  மக்களை வீட்டி லேயே இருக்குமாறு இராணுவம் உத்தரவிட்டிருந்தது.
அதேசமயம், வன்முறை போராட்டங்களின் போது நேபாளத் தின் 77 மாவட்டங்களிலும் உள்ள சிறைகளில் இருந்து குறைந்தது 13,000 கைதிகள் தப்பியேபடியுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.
அதேசமயம் போராட்டக் காரர்களின் பிரதிநிதிகள் காத் மாண்டுவில் உள்ள இராணுவ தலை மையகத்தில் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து ஒரு இடைக்காலத் தலைவரைப் பற்றி விவாதித் ததுடன், அவர்களில் சிலர் பிரபல முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை நியமிக்க வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (8) சமூக ஊடகங்கள் மீதான அரசின் குறுகிய கால  தடையால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களின் அரசுக்கு எதிரான போராட்டங்களை மேற் கொண்டிருந்தனர், அவர்களை நோக்கி காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் பின்னர் போராட்டங்கள் தீவிரமடைந்து அரசு கட்டிடங்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்ப மாகியிருந்தன. வன்முறையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 25 ஐ எட்டியுள்ளது என்றும், 633 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அங்கு இடம்பெற்ற போராட்டங்களின் போது மிகவும் பழமைவாய்ந்த அரண்மனை மற்றும் நாடாளுமன்ற கட்டிடம் என்பன உட்பட பெருமளவான அரசுச் சொத்துக்கள் அழிக்கப் பட்டுள்ளன. போராட்டக்காரர்களின் இந்த நடவடிக்கையால் 5 பில்லியன் டொலர்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல் கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் பிரதமர் உட்பட பெருமளவான அரசியல் வாதிகள் சிறப்பு படை உலங்குவார்திகள் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் பல அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் போராட்டக்காரர்களால் கடுமையாக தாக்கப் பட்டுள்ளனர்.