நாட்டு மக்களின் தனிப்பட்ட விடயங்கள் மற்றும் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு தொடர்பில் பேசுவற்கு இந்த அரசாங்கத்துக்கு தார்மீக உரிமை உள்ளதா, தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக தரவுகள் இந்தியாவுக்கு செல்வதாக கடந்த காலங்களில் குறிப்பிட்டீர்கள். தற்போதும் இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளீர்கள். அல்லது ஆட்சிக்கு வந்தவுடன் கொள்கையை மாற்றிக் கொண்டீர்களா என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆளும் தரப்பிடம் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்துக்கு திருத்தம் கொண்டு வருவது மிகவும் முக்கியமானது. தரவு பாதுகாப்பு முகவராண்மையை பல மாதங்களுக்கு முன்னர் நிறுவியிருக்க வேண்டும். இருப்பினும் துரதிஷ்டவசமாக இன்றும் இந்த முகவராண்மை நிறுவப்படவில்லை.
இந்த முகவர் நிறுவனத்துக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் மந்தகரமான நிலையில் செயற்படுகிறது.
இதனால் அரச டிஜிட்டல் கட்டமைப்பு பின்னடைவையே எதிர்கொள்கிறது. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான இந்த அரசாங்கம் இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
தரவு பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தை நான் ஆரம்பத்தில் கொண்டு வந்த போது மக்கள் விடுதலை முன்னணியினர் அந்த சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை ஆராயாமல் கடுமையாக விமர்சித்தார்கள்.
ஆனால் இன்று அவர்களே சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளார்கள். நாட்டு மக்களின் தனிப்பட்ட விடயங்கள் மற்றும் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு தொடர்பில் பேசுவற்கு இந்த அரசாங்கத்துக்கு தார்மீக உரிமை உள்ளதா,
தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட விடயங்கள் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிரயாணிகள் என அனைத்து விடயங்களையும் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினீர்கள். ஜனாதிபதி நிதியத்தின் நிதி பெற்றுக்கொண்டவர்களின் தனிப்பட்ட விடயங்கள் பற்றி பேசுனீர்கள்.
தனிப்பட்ட தரவுகள் முறையாக ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தனிப்பட்ட தரவுகளை தமது விருப்பத்துக்கு அமைய நிர்வகிக்க முடியாது.
டிஜிட்டல் அடையாள அட்டை பற்றி பேசப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்தோம். இருப்பினும் ஆட்சி மாற்றத்தால் அந்த திட்டம் நிறைவேறவில்லை. டிஜிட்டல் அடையாள அட்டை உருவாக்கத்துக்கு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்.
அரச சேவையாளர்களை திருடர்கள் என்றும் விமர்சிக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளியுள்ளது. விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்காமல் டிஜிட்டல் மயமாக்கலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் அதற்கான ஒத்துழைப்பை நாங்கள் வழங்குகிறோம்.
தரவு பாதுகாப்பு சட்டத்தால் தனிப்பட்ட தரவுகள் இந்தியாவுக்கு செல்லும் என்று கடந்த காலங்களில் குறிப்பிட்டீர்கள்.இந்த குற்றச்சாட்டை தற்போது உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்றார்.