Home Blog Page 139

தென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் லீ ஜே-மியுங் வெற்றி!

தென் கொரிய ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் லீ ஜே-மியுங் சுமார் 50 சதவீத வாக்குகளுடன் வெற்றிப்பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் அரசியல் கொந்தளிப்புக்கு, மக்களின் வாழ்க்கைக்காக உழைக்க விருப்பமற்ற அரசியல் பிரிவுகளே காரணம் என கூறிய லீ ஜே-மியுங் மக்களை ஒன்றிணைக்க பாடுபடுவதாக தனது பதவியேற்பு உரையில் தெரிவித்தார். பிளவு அரசியலை முடிவுக்குக் கொண்டுவரும் ஜனாதிபதியாக மாறுவேன் என்றும் அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

மேலும், அவசரகால பொருளாதார பணிக்குழு உடனடியாக செயற்படுத்தப்படும் என்றும் அறிவித்த அவர், போராட வேண்டியது உள்நாட்டுப் பிரச்சினைகள் மட்டுமல்ல. புதிய ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க-கொரிய கூட்டணியை வழிநடத்தல், சீனாவுடனான அதன் உறவுகளை சமநிலைப்படுத்தல் மற்றும் அதன் நெருங்கிய அண்டை நாடான வட கொரியாவை கையாளுதல் போன்ற அவசர வெளிநாட்டு சவால்களையும் லீ எதிர்கொள்கிறார். தென்கொரியாவில் இராணுவ அவசர நிலையை செயற்படுத்தியதற்காக அப்போதைய ஜனாதிபதி யூன் சுக்-இயோலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனையடுத்து அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தென்கொரிய அரசியலமைப்பின்படி ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டால் அடுத்த 02 மாதங்களுக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து ஜூன் 03 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால ஜனாதிபதி ஹான் டக்-சூ அறிவித்தற்கமைய அந்நாட்டில் தேர்தல் இடம்பெற்றது.

பழைய கதைகளையே பேசிக்கொண்டிருக்காது, வேலைத்திட்டங்களுக்கான பொறுப்புக் கூறலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் : கஜேந்திரகுமார்

அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொடர்பில் கடந்த  அரசாங்கங்கள் மீது குற்றம் சுமத்திக்கொண்டு, பழைய கதைகளையே பேசிக்கொண்டிருக்காது, தமது வேலைத்திட்டங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை அரசாங்கம் உருவாக்க வேண்டும். பொருளாதார மீட்சிக்கு எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்போம் என்று  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்   புதன்கிழமை (04) நடைபெற்ற  2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

சபையில் எனக்கு முன்னர் உரையாற்றிய உறுப்பினர் ஒருவர், இந்த அரசாங்கம்  நாட்டின் முஸ்லிம் மக்களுடனும்,  பலஸ்தீன மக்களுடனும்  உறுதியாக இருப்பதாக கூறினார்.

இவ்விடத்தில் நான் ஒருவிடயத்தை சுட்டிக்காட்டுகின்றேன். அதாவது தமிழ் மக்களும் பலஸ்தீன மக்களுக்கு எதிரான இனவழிப்புக்கு எதிராக அவர்களுடன் ஒன்றாக இருக்கின்றோம் என்பதனை கூறுகின்றோம்.

இதனை கூறுவதால் நாங்கள் யுதர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களுக்கு எதிராகவும் இனப்படுகொலை நடந்துள்ளது. அவர்களுக்கும் நியாயம், நீதி மற்றும் பாதுகாப்பு அவசியமாகும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

ஆனால் யூதர்கள் என்ற பெயரில் இன்று இஸ்ரேல் அரசாங்கம் பலஸ்தீன மக்களுக்கு எதிராக முன்னெடுக்கும் இனவழிப்பை எதிர்க்க வேண்டிய கடமை நீதி நியாயத்தை விரும்பும் எந்தவொரு இனத்திற்கும் மனிதர்களுக்கும் இருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்டுகின்றேன்.

ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஒழுங்குவிதிகள் தொடர்பில்  கவனம்  செலுத்தப்பட்டுள்ளது.தற்போது அரசாங்கத்தின் பிரதான கட்சியாக ஜே.வி.பி உள்ளது. ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் பல்வேறுபட்ட செயற்றிட்டங்கள் தொடர்பில் ஜே.வி.பி அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்பது தொடர்பில் நாங்கள் ஆராய வேண்டும்.

எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அம்பாந்தோட்டை செயற்றிட்டமே ஆகும். இதனை முன்னெடுப்பதாக இடை நிறுத்துவதா? என்று அரசாங்கம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இந்த செயற்றிட்டத்தின் நிலையியல் தன்மை தொடர்பில் ஆராய வேண்டும். இவ்வாறான செயற்றிட்டங்கள் கடன்களால் நிரம்பியே இருந்தது.

இவ்வாறான திட்டங்கள் பொருளாதார விடயங்களில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்று ஆராய வேண்டும். இது ஊழல் மிக்கதாக இருக்கின்றது.

2022ஆம் ஆண்டில் குறிப்பிட்ட அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது எந்தளவுக்கு அந்த செயற்றிட்டங்கள் நாட்டின் பொருளதாரத்தை பாதித்தது என்பதனை புரிந்துகொள்ள முடியுமாக இருந்தது.

இதனால் சில விடயங்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதுடன், இவ்வாறான செயற்றிட்டங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உருவாக்க வேண்டும்.

இந்நிலையில் நீங்களும் பொறுப்புக் கூறுபவர்களாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தரப்பினால் சில உடன்படிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்படுகின்றது. நாட்டின் நலனை கருத்திற்கொண்டு அவற்றை வெளியிட முடியுமா என்று ஆராயலாம்.

அதேபோன்று செயற்றிட்டங்கள் தொடர்பில் முன்னைய அரசாங்கங்களை குற்றஞ்சுமத்திக்கொண்டிருக்காது. பழைய கதைகளை பேசிக்கொண்டிருக்காது அரசாங்கம் தமது செயற்பாடுகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் போராட்டம்!

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் இன்று வியாழக்கிழமை (05) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சு தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காததால் முன்னெடுக்கப்படும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை  8.00 மணிக்கு ஆரம்பமாகும் என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் (JCPSM) பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

இருப்பினும், புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு மற்றும் சிறுவர்கள் வைத்தியசாலைகள், சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் மத்திய இரத்த வங்கி (CBB) ஆகியன இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடாது என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ ஆய்வக சேவைகள், மருந்தகத் துறைகள் மற்றும் பிற துணை மருத்துவ சேவையைச் சேர்ந்த ஐந்து தொழில்கள் இன்றைய தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்து கொள்ளும் என என சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

இனத்தைக் குறிவைத்துக் கொல்வது  இனப்படுகொலையா,,,,,,,!  (பகுதி-01) – வல்வை ந.அனந்தராஜ்

இனப்படுகொலை என்றால் என்ன என் பதற்கான சரியான விளக்கத்தைப் பெற் றுக் கொள்ளாதவர்களால் இலங்கையில் இனப் படுகொலை என்பது இடம்பெறவே இல்லை என்று வரட்டுத் தனமான வேதாந்தத்தைப் பேசி வருகின்றனர். அண்மையில் கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்
கால் நினைவுத்தூபியால் கொதித்தெழுந்த சிங்கள பேரினவாதிகள் வாய்க்கு வந்தபடி உளறப்போய் பிரம்டன் நகர மேயரினாலும் கனேடியப் பிரதமரினாலும் வாங்கிக் கட்டிக்கொண்ட பின்னரும் அவர்கள் திருந்துவதாக இல்லை.இனப் படுகொலை என்றால் என்ன… என்பதற்கான சரியான கருத்து, ஐக்கிய நாடுகள் ஸ்தாப னத்தினால் விளக்கப்பட்டுள்ளதை இன்று ஈழத்தில் சிங்கள இனவாதிகள் புரிந்து கொள்ளவேண்டும்.
இனப்படுகொலை அல்லது இனவழிப்பு  (GENOCIDE)  என்றால் என்ன?
“ஒரு இனத்தை முழுமையாகவோ, பகுதி பகுதியாகவோ, சமயம் மற்றும் அதன் இன வேறுபாடுகளின் நிமித்தம், தேசிய இனம் என்ற காரணங்களின் நிமித்தம் கொல்ல நினைப்பதும் அழிப்பதும் அந்த இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இனப்படுகொலை யாகும் என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. 1948இல் ஐ.நா சட்ட விதி 2 இன்படி ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இனப்படுகொலை எங்கு நடந்தாலும் அதனைத் தடை செய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறைச் செயலாக அறிவித்தது. ஆனால் அதனைப் பின்பற்றவும் நடைமுறைப்படுத்தவும் இந்த உலகம் தவறியமை காரணமாக உலகத்தின் பல பகுதிகளிலும்
இலங்கையிலும் இனவாத அரசுகளினால், இனப்படுகொலைகள் சுதந்திரமாக அரங்கேறுகின் றன. இனஅழிப்பு என்பது ஓர் இனத்தைப் போரில் அழித்து விடுவது, அவர்களை அடித்துச் சி;த்திரவதைசெய்து வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றுவது என்பது மட்டுமல்லாது, அவ்வினத்திற்கு எதிராக உடல் மற்றும் உள ரீதியாக புரியப்படும் கொடூரமான அல்லது கொடுமையான தாக்குதல்கள், கலாசாரத்தை அழித்தல், மத வழிபாட்டிடங்களை அழித்துப் பேரினவாதிக ளின் மத அடையாளங்களை நிறுவுதல், தமிழர்களின் தொல்பொருட் சின்னங்களை அழித்தல், பெரும்பான்மை இனங்களைக் கொண்டு குடியேற் றங்களை மேற்கொள்ளுதல், சிறுபான்மை மக்களின் மொழிஉரிமையைத் தடுத்து, அவர்களின் பூர்வீக நிலங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு, பல தமிழ்க்கிராமங்களும், வீதிகளும் காலப்போக்கில் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன. கல்விகற்றல், வேலைவாய்ப்புக்களில் பாரபட்சம் காட்டுதல், ஓர் இனத்தின் பிறப்பையும் பரம்பலையும் கட்டுப்படுத்துதல் அல்லது தடுத்தல், பலாத் காரமாக, ஒரு சிறுபான்மை இனக்குழுவை, வேறு இனக்குழுவோடு சேர்ப்பது, மதமாற்றங்களைப் பணம் கொடுத்தோ   அல்லது   பலாத்காரமாகவோ   மேற்கொள்ளல்   போன்ற  கொடூரங்களும் இன அழிப்புக்கள் தான் என்பதை 1948இல் இனப் படுகொலை குறித்த ஐநாவின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.”
ஐக்கிய நாடுகள் அமையத்தின் இந்தத் தீர்மானம் 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னரே இலங்கையில் இவைபோன்ற இனஅழிப்புக்கள் எல்லாமே, அரசின்  ஆதரவுடன்  நடந்தேறி  வருகின்றன.  ஈழத்தமிழர்கள் மீதான இத்தகைய இனஅழிப்பு அல்லது இனப்படுகொலை (Genocide) நடவடிக்கைகள் 1949இல் ஆரம்பித்து 2009 மே மாதம் வரையும், அதற்குப் பின்னரும் நீண்டுகொண்டே செல்கின்றது. ஆனால் அந்த வகையான இனஅழிப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எவ்வித அறிகுறிகளுமே இல்லை. இந்த விடயத்தில் இதைப் போன்ற மனித அவலங்களைத் தடுப் பதற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ஐ.நா போன்ற பொது அமைப்புக்களும்  இந்த இனப் படுகொலைகளுக்குத் துணைபோவது போலவே தெரிகின்றது.
இனஅழிப்பு என்பது மனிதப் படு கொலையைமட்டும் குறிப்பது அன்று. உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ  துன்புறுத்துவது,  கொலை  செய்யத்  திட்டமிடுவது  அல்லது    அழிப்பது, இனவேறுபாட்டைக்காரணங்காட்டி குழந்தை பிறப்பைத் தடுப்பது, குழந்தைகளை இடம்பெயரச் செய்வது, ஓரினத்தின் பாரம்பரியக் கலைகள், கலாசார விழுமியங்கள்,அந்த இனத்தின் அடையாளமாக விளங்கும் தொல்பொருட் சின்னங்களை அழித்தல், பண்பாட்டு நடைமுறைகள், சமய வழிபாடுகள்,   பண்டிகை கள், குடியிருப்புகள், தொழில் வளங்கள்   போன்ற வைகளை இல்லாததொழித்தல் மற்றும் வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறைச் செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச் சட்டத்தின்படி குற்றச்செயலாகும் என வரையறுக்கப்படுகிறது. இவற்றுள் ஏதாவதொன் றைக் குறிவைத்து ஒரு இனத்தை அழிப்பதாக இருந்தாலும் அது இனஅழிப்புத்தான்.
இதற்கான முள்ளிவாய்க்காலின் அத்தனை சாட்சியங்களும் வாக்குமூலங்களும் காணொளிக் காட்சிகளும் உலகமெங்கும் அம்பலப்படுத்தப்பட்ட போதும், இலங்கை அரசின் நீலிக் கண்ணீரைநம்பி, ஈழத்தில் நிகழ்ந்த தமிழ் இனப்படு கொலையை ஏற்றுக்கொள்வதில் உலகப் பொது அமைப்புக்களும், உலக நாடுகளும் பின்நிற்கின்ற மைதான் ஏனென்று புரியவில்லை…..!
இனப்படுகொலை (Genocide) என்ற வார்த் தையை முதன் முதலில் ரபேல் லேம்கின் என்பவர் 1944ல் வெளிவந்த “Axis Rule in Occupied Europe” என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார். உலகில் நாஜிக்களால் யூதர்களுக்கு எதிராக ஹிட்லரால் மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்புதான் கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய இன அழிப்பு எனக் கருதப்படுகின்றது. அன்று, யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் புரிந்த இனஅழிப்பு பெரும் அச்சத்தையும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சம்பவங்களாகவும் இன்றைக்கும் இலங்கை யின் தமிழினப் படுகொலைகள் நினைவு படுத்து கின்றன. அந்த வகையில் உலகின் பல நாடுகளிலும்இடம்பெறும் இன அழிப்பை இன்று உலக நாடகள் ஏற்றுக் கொண்டுவருகின்றன.
தொடரும்…

வடக்கில் மூடப்பட்டு வரும் பாடசாலைகள்: ஆளுநர் நா.வேதநாயகன் தகவல்

வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. தரம் 1 அனுமதிக்காக வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இது எமக்கு ஆபத்தான நிலைமை. அனைவரும் இதனைக் கவனத்திலெடுக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  கோரிக்கைவிடுத்தார்.

குரும்பசிட்டி பொன்.பரமானந்தர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், ‘பரமானந்தம்’ மலர் வெளியீடும் பாடசாலை அதிபர் க.வசந்தரூபன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பரமானந்தம் நூலை வெளியிட்டு வைத்த ஆளுநர், முன்னாள் அதிபர்களுக்கு நினைவுப்பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார். அத்துடன் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், ”போரால் இந்தப் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டது மாத்திரமல்ல இந்தப் பாடசாலையும் பாதிக்கப்பட்டது. பல குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமையும் ஏற்பட்டது. மீள்குடியமர்ந்த பின்னர் இந்தப் பாடசாலையை முன்னேற்றுவதென்பது கடினமானதுதான். ஆனால் அதைச் செய்துள்ளார்கள்.

பாடசாலைகளின் வளர்ச்சி அந்தப் பாடசாலையின் அதிபரின் கையில்தான் தங்கியிருக்கின்றது. பாடசாலை அதிபரின் தலைமைத்துவத்துக்கு பழைய மாணவர்கள், புலம்பெயர்ந்துள்ள பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எல்லோரும் ஒத்துழைப்புக் கொடுத்திருக்கின்றீர்கள். அவர்களைப் பாராட்டுகின்றேன். அதேபோல பாடசாலையின் தலைமைத்துவமும் ஏனையோர் நம்பிக்கைகொள்ளும்படியாக வெளிப்படைத்தன்மையுடன் இருந்தமையால்தான் இவ்வளவும் சாத்தியமாகியிருக்கின்றது.

ஒரு பாடசாலையின் வளர்ச்சி என்பது கல்வியின் தரத்தை உயர்த்துவது மாத்திரமல்ல, மாணவர்களின் பண்புகளையும் மேம்படுத்துவதில்தான் தங்கியிருக்கின்றது. இங்கு கற்கின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக பங்காற்றவேண்டும்.

இன்றும் எங்கள் இளம் சமூகத்திடம் வெளிநாட்டு மோகம் தொடர்ந்தும் இருக்கின்றது. இங்கிருந்து முன்னேறுவோம் என்ற எண்ணம் இல்லை. வடக்கில் உள்ளதைப்போன்று வளங்கள் வேறு எங்கும் இல்லை. இப்படியான வளங்கள் இருந்தும் நாம் அதனைப் பயன்படுத்தவில்லை. முல்லைத்தீவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை அண்மையில் நான் கௌரவித்திருந்தேன். அவர்கள் விவசாயத்தில் சாதித்தவர்கள். அவர்கள் இங்கிருந்து தம்மால் மிகச் சிறந்த தொழில்முனைவோராக வரமுடியும் என்று கூறினார்கள். அப்படி இங்கிருந்து சாதிக்க இளையோர் எதிர்காலத்தில் முனையவேண்டும், என்றார் ஆளுநர்.

2026 ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்பை ஆரம்பிக்க நடவடிக்கை: பிரதமர் ஹரிணி

நவீன உலகத்துடன் இணையக்கூடியவாறு எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக சகல பிரிவுகளையும் உள்ளடக்கியவாறு 2026ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்பை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தற்போது  பயன்படுத்தப்படும் பாடப்புத்தகங்களுக்கு பதிலாக தற்காலத்திற்கு ஏற்றவாறு மிகவும் அபிவிருத்தி அபிவிருத்தியடைந்த நவீன முறைகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறாேம் என கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (04)  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தினன் போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன, கல்வி மறுசீரமைப்பு திட்டங்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு: உணவு ஒவ்வாமையால் 78 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பில் உள்ள 3 பாடசாலைகளைச் சேர்ந்த 78 மாணவர்கள் திடீர் நோய் நிலைமையினால் இன்று (04) பாதிக்கப்பட்டனர்.  குறித்த மாணவர்களுக்கு பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

குறித்த 3 பாடசாலைகளுக்கும் ஒரே நபரே உணவு வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார்.
இந்தநிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 78 மாணவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரிகளை பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அத்துடன் குறித்த பாடசாலைகளுக்கான உணவு தயாரிக்கப்பட்ட இடத்தையும் பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன் அதன் உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் சிகிச்சைகளுக்காக சில மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சிந்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் : பாராளுமன்றில் வலியுறுத்தல்

யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் நீதியமைச்சரிடம் இன்று (04) இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், இது முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும் என்று தெரிவித்தார்.  செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் இருந்து மூன்றுக்கும் மேற்பட்ட முழுமையான மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.  எனவே, சர்வதேச சட்டங்களுக்கு அமைய, குறித்த இடம் மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் அங்கு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

அதேநேரம், அங்கு ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான உரிய நிதியும் ஒதுக்கப்படவில்லை.
ஏற்கனவே அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் போதுமானதாக இல்லை என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

அடுத்த கட்ட நிதி ஒதுக்கீடு கிடைக்காவிட்டால் அவர்கள் அந்த பணியை இடைநிறுத்தி விடுவார்கள்.
தேவையாயின் சர்வதேச சமூகத்திடம் இருந்தும் ஆய்வு பணிகளுக்கான நிதியுதவியை பெற்று தர முடியும்.
எனவே, குறித்த இடத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்துவதுடன் தேவையான ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும் என்றும் போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கோருவதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இந்த விடயத்தில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும். இவ்வாறான பணிகளுக்காக நீதியமைச்சு ஏற்கனவே நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த நிதியில் பற்றாக்குறை ஏற்படுமாயின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பதிலளித்தார்.

கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மீனவர் காயமடைந்த விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்

திருகோணமலை குச்சவெளி பகுதியில் மீனவர் ஒருவர் மீது கடற்படையினரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் கடற்படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குச்சவெளி – பள்ளிமுனை பகுதியில் கடற்படையினரால் நேற்றைய தினம் (03) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த கடற்படை பேச்சாளர் சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட சில தரப்பினரை கைதுசெய்து, கரைக்கு அழைத்துவர முற்பட்டபோது, அவர்கள் கடற்படையினரின்; பிடியிலிருந்து தங்களின் படகை விடுவித்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

கடற்படையினர் எச்சரித்ததுடன், எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும் அவர்கள் தொடர்ந்தும் தப்பிச் செல்ல முற்பட்டதால் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினர் முயன்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, குழப்பம் ஏற்பட்டு, தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றதால் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் மீனவர் ஒருவர் காயமடைந்ததாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியின்போது, கடற்படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்ததாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.  இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள கடற்றொழில் அமைச்சு, சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடற்படைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே சம்பவம் தொடர்பில் முடிவொன்றுக்கு வர முடியும் என்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என்றும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘சட்டவிரோத மீன்பிடி முறையானது கடலுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிக்கும்’. ‘ஒரு சில மீனவர்களின் வருமானத்துக்காக பெரும்பாலானவர்களின் வருமானம் இழக்கப்படுகின்றது’. ‘அதனாலேயே சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுக்குமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றும் கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குச்சவெளி துப்பாக்கிச்சூடு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் ஏற்பட்டதெனக் கூறப்படுகின்றது. விசாரணைகளின் பின்னரே உண்மை என்னவென்பது தெரியவரும் என்றும் கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை இன்று (04) பாராளுமன்றில் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அத்துடன் கடற்றொழில் திணைக்களத்தின் அனுமதியுடனேயே குறித்த தரப்பினர் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
இதற்கு பதிலளித்த பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அது தொடர்பில் பாராளுமன்றில் தகவல் வெளியிடுவதாக குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நிதி தொடர்பில் கோடீஸ்வரன் விசாரணைக்கு கோரிக்கை!

அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கப் பெறும் நிதி தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.  பாராளுமன்றில் இன்று (04) கருத்துரைத்த அவர், இதற்காக சட்டமூலம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அவ்வாறு கிடைக்கப் பெறும் நிதியே நாட்டில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும் பொருளாதார பிரச்சினையை ஏற்படுத்துவதற்காகவும் அவ்வாறான நிதிகள் பயன்படுத்தப்படுகின்றன.  ஊழலில் ஈடுபடும் நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கம் கோருகிறது. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கப் பெறும் நிதி தொடர்பில் எவ்வித பரிசோதனைகளும் இடம்பெறுவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நிதி மற்றும் எங்கிருந்து அவ்வாறான நிதி கிடைத்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்