தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்பாக இருந்தும் கூட, குறித்த விவகாரத்தில் அரசாங்கம் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாக காணாமல் போனோர் குடும்ப ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் இயங்கி வரும் காணாமல் போனோர் குடும்ப ஒன்றியம் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணக் கொடுப்பனவாக தலா 2 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கும், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்பதாக அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் குறித்த கடிதத்தின் ஊடாக நீதியமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்புப் பிரேரணையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணக் கொடுப்பனவை வழங்கல் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் செயற்திறனை மேம்படுத்தல் என்பவற்றுக்காக 14 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதி பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் வழங்குவதற்குப் போதுமானது எனினும், கடந்த 6 மாதகாலத்தில் இடைக்கால நிவாரணக் கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தவறியிருக்கின்றது என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கடந்த 6 மாதகாலத்தில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஒரு விசாரணையைக் கூட மேற்கொள்ளவில்லை. இவ்விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான செயன்முறை தொடர்பில் நீதியமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஒப்புதல் அளிப்பதை அமைச்சரவை தாமதப்படுத்தியிருப்பதே இதற்குரிய பிரதான காரணமாகும் என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.