Home Blog Page 100

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கைது!

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நாட்டில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்த சந்தேக நபர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

33, 34 மற்றும் 44 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சந்தேகநபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் செப்டம்பரில் நீக்கம்: நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி

இலங்கையில் 1979 ஆம் ஆண்டுகாலப்பகுதி முதல் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“1979 ஆம் ஆண்டில் தற்காலிக ஏற்பாட்டு சட்டமாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும், அது இன்றளவிலும் நீடிக்கின்றது.

இந்நிலையில் குறித்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழு தற்போது அனைத்து கருத்துகள் – யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றது. பொதுமக்களின் கருத்துகளும் கோரப்பட்டன.

அந்தவகையில் செப்டம்பர் மாதமளவில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இரத்து செய்யப்படும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். கருத்து சுதந்திரம், அரசியல் சுதந்திரம், அடையாளம் என்பவற்றை பாதுகாக்கும் வகையிலும் சர்வதேச நியமனங்களுக்கு அமையவும், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையிலுமே புதிய சட்டத்தை இயற்ற எதிர்பார்க்கின்றோம்.

பழைய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் இருந்த விமர்சனங்கள் எல்லாம் நிவர்த்தி செய்யப்படும்.
அதேவேளை, நூதன பூகோல பயங்கரவாதத்துக்கு முகங்கொடுப்பதற்குரிய சட்ட பாதுகாப்பு கவசமும் அவசியம். அதற்குரிய ஏற்பாடும் செய்யப்படும்.” – என நீதி அமைச்சர் மேலும் கூறினார்.

40 எலும்புக்கூடுகள் செம்மணி புதைகுழியில் மேலும் கண்டுபிடிப்பு

இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் ஒவ்வொரு நாளும் புதிய மனித எலும்புக்கூடுகள், குழந்தைகளின் எலும்புகள், உடைகள், வளையல்கள், பொம்மை உள்ளிட்ட பொருட்கள்  தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், அகழ்வுப் பிரதேசம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மனித எலும்புகள் காணப்படலாம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்ததை அடுத்து, நேற்றுமுன்தினம் (ஜூன் 2) முதல் அந்த பகுதியிலும் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக செம்மணி புதைகுழித் தொடர்பில் அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்த இடத்தில் துப்புரவுப் பணிகளை, கடந்த ஜூன் 1ஆம் முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் மேற்கொள்கின்றனர்.

நீதிமன்றத்தால் குற்றச் சம்பவம் இடம்பெற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இன்றுவரை (ஜூன் 8) கண்டறியப்பட்டுள்ள 40 எலும்புக்கூடுகளில்  குறைந்தது பத்து சிறுவர்களின் எலும்புக்கூடுகள் இருப்பதாக அகழ்வாய்வாளர்கள் கூறுகின்றனர்.

புதைகுழி அகழ்வாய்வாளர்களான பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோர் சிறுவர்களுடையது என நம்பப்படும் 2 எலும்புக்கூடுகளை இன்று கண்டறிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் அகழ்வுப் பணியை மேற்பார்வை செய்யும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.

நிதியியல் அறிவு செயற்திட்டத்தொகுப்பு வெளியீடு – இலங்கை மத்திய வங்கி

நிதியியல் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார நிர்வாகம் என்பன தொடர்பில் பொதுமக்களின் புரிதலை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் நாட்டின் முதலாவது தேசிய நிதியியல் அறிவு முறைமை உள்ளிட்ட நிதியியல் அறிவு செயற்திட்டத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் களனி பல்கலைக்கழகத்துடன் கூட்டிணைந்து மத்திய வங்கியினால் தயாரிக்கப்பட்ட இந்த செயற்திட்டத்தொகுப்பின் உத்தியோகபூர்வ வெளியீட்டு நிகழ்வு வியாழக்கிழமை (3) மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் தேசிய நிதியியல் அறிவு முறைமை உள்ளடங்கலாக நாட்டின் முதலாவது நிதியியல் அறிவு செயற்திட்டத்தை வெளியிட்டு உரையாற்றிய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இச்செயற்திட்டத்தொகுப்பின் ஊடாக சகலரும் நிதியியல் தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும், அத்தகவல்கள் தனிநபர் ஒருவர் அவரது நிதியை உரியவாறு முகாமை செய்வதற்கும், நிதிசார் எதிர்காலம் குறித்துத் திட்டமிடுவதற்கும், அவரது பொருளாதார நலனை மேம்படுத்திக்கொள்வதற்கும் உதவும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேபோன்று ‘இதனூடாக தனிநபர்கள் சரியான புரிதலுடன் நிதியியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், தம்மை நிதி மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்புச்செய்வதற்கும் ஏதுவான வகையில் நிதியியல் கட்டமைப்பு நிலைமாற்றம் இடம்பெறும்’ எனச் சுட்டிக்காட்டிய அவர், அனைவரினதும் பங்களிப்பு என்பது மிக அவசியமானது எனவும், வறுமையை ஒழிப்பதில் அது நேர்மறைத்தாக்கத்தை செலுத்தும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா, இலங்கையின் மொத்த சனத்தொகையில் 33.4 சதவீதமானோர் கடனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் பலர் உணவு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு கடன் நிதியிலேயே தங்கியிருப்பதாகவும் கவலை வெளியிட்டார்.

அத்தோடு நிதியியல் விடயங்களின் போதிய அறிவு அல்லது தெளிவின்மை இதற்குப் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அதன் விளைவாக பலர் தவறான நிதியியல் தீர்மானங்களை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். மேலும் இவ்வாறானதொரு பின்னணியில் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிதியியல் அறிவு தொடர்பான இச்செயற்திட்டத்தொகுப்பு பெரிதும் பயனுடையதாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை ; 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கை“ யாழ்ப்பாணத்தில் வெளியீடு

“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை” இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக ஐக்கியத்துவம் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில்  வியாழக்கிழமை (03) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் கொட்பிறி யோகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புரையினை யாழ்.பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் நிகழ்த்தினார்.

அதனைத்தொடர்ந்து அறிக்கை தொடர்பான அறிமுகவுரையை குறித்த நிறுவனத்தின் வடக்கு பிராந்திய முகாமையாளர் அன்றூ நிகழ்த்தினார்.

தொடர்ந்து குழு கலந்தாய்வு இடம்பெற்றது. இக்கலந்தாய்வில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், சட்டத்தரணிகளான ரனித்தா மயூரன், ஐங்கரன் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர் ஜனார்த்தனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் காலமானார்

கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக வியாழக்கிழமை (03) காலை உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியை சேர்ந்த  நடராசா கிருஸ்ணகுமார் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரையும் புலிகளின் குரல் வானொலி வர்த்தக சேவையான தமிழீழ வானொலி ஆகியவற்றின் அலுவலக செய்தியாளராகவும் நிகழ்சிகள் பலவற்றுக்கு குரல் வழங்குபவராகவும் பல்வேறு நெருக்கடிகள் விமானக் குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்கள் என்பன வற்றுக்கு  மத்தியில் செய்தி  செய்தியாளராக பணியாற்றியவர்.

குறிப்பாக பல்வேறு பட்டவர்களுடைய உறவினையும் தொடர்புகளையும் பேணிய நல்ல ஒரு செய்தி தொடர்பாளராகவும் 2010ம் ஆண்டு முதல் தினக்குரல், வலம்புரி, தினகரன், தமிழ்மிரர் உள்ளிட்ட ஊடகங்களின் கிளிநொச்சி செய்தியாளராக பணியாற்றியுள்ளார்.

செம்மணியில் மனித புதைகுழி: பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து

செம்மணியில் ஒரு  மனித புதைகுழி    தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறதுஎன பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சியோபைன் மெக்டோனா எம்.பிதெரிவித்துள்ளார்.

செம்மணியில் ஒரு  புதைகுழி தோண்டப்படுதல்தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது – மேலும் சர்வதேச சமூகம் இறுதியாக உண்மை பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்க செயல்பட வேண்டும் என்று கோருகிறதுஎன அவர் தெரிவித்துள்ளார்

ஜூலை 1998 இல் தமிழ் பள்ளி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை அவரைத் தேடி வந்த மேலும் நான்கு பேரின் கொலைகள் ஆகியவற்றில் ஈடுபட்டதற்காக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டார். அவரது விசாரணையின் போது செம்மணிக்கு அருகிலுள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் சுமார் நானூறு பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ததில் தனக்கு தொடர்பு இருப்பதாக ராஜபக்ஷ வெளிப்படுத்தினார்.என அவர் தெரிவித்துள்ளார்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செம்மணிப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் இரண்டாம் கட்டத்தின் 4வது நாளின் போது, குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்று யுனிசெஃப் விநியோகித்த வகையைச் சேர்ந்த தனித்துவமான நீல நிறப் பள்ளிப் பையுடன் புதைக்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்ததுஎன அவர் தெரிவித்துள்ளார்

இதுவரை, அகழ்வாராய்ச்சியில் 33 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவை அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு அரசு நீதித்துறை மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மனித உரிமை ஆர்வலர்கள் சாட்சியங்களை சிதைத்து இந்த எலும்புக்கூடுகள் அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. தீர்மானம் 46/1 இன் படி, இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிக்க, ஒருங்கிணைக்க, பகுப்பாய்வு செய்ய மற்றும் பாதுகாக்க சர்வதேச சமூகத்திற்கு அதிகாரம் உள்ளது. ஐ.நா. தான் கொண்டுள்ள ஆணையைப் பின்பற்ற வேண்டிய நேரம் இது. 1998 ஆம் ஆண்டு ராஜபக்சேவின் சாட்சியத்தை பல செய்தி நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைகள் அரசு சாரா நிறுவனங்கள் செய்தி வெளியிட்டதிலிருந்து, செம்மணியில் ஒரு பெரிய புதைகுழி இருப்பதை உலகம் அறிந்திருக்கிறது. இருப்பினும், இப்போதுதான் அது தோண்டப்படுகிறது. இப்போதும் கூட, சான்றுகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதுஎன அவர் தெரிவித்துள்ளார்.

. இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகம், 46/1 தீர்மானத்தின் கட்டளைக்குள் சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் முறையாக சேகரிக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.என அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் 46/1 இன் இணை அனுசரணையாளராகவும், இலங்கையில் நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வரலாற்றுப் பொறுப்பைக் கொண்ட நாடாகவும், ஐக்கிய இராச்சியம் இந்த பிரச்சினையில் முன்னிலை வகிக்க வேண்டும்.

செம்மணி படுகொலையின் குற்றவாளிகள் மற்றும் அதைப் போன்றவர்கள் அடையாளம் காணப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய இப்போது ஒரு சர்வதேச விசாரணை தொடங்கப்பட வேண்டும். இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் உள்ளபடி, இது சர்வதேச சமூகத்தின் பொறுப்பாகும்என அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா: ஓமந்தையில் தனியாரின் காணியை கையகப்படுத்த முயன்ற காவல்துறை நடவடிக்கை

வவுனியா – ஓமந்தை  காவல் நிலையத்துக்கு அருகில், தனிநபர் ஒருவரின் காணியை, காவல்துறை கையகப்படுத்த எடுத்த நடவடிக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழுவால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். இதன்போது காவல்துறையினர் மற்றும் அபிவிருத்திக்குழு தலைவரிடம் அவர் இந்த விடயம் தொடர்பில் கேள்வியெழுப்பினார்.

‘ஏ9 வீதியில் ஓமந்தை காவல் நிலையத்திற்கு அருகாமையில் குறித்த காணி அமைந்துள்ளது’.
‘காணிக்கு சொந்தம் கோரும் நபர் குறித்த காணி தனக்குரியது என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்’.

இந்தநிலையில் இதுவரை அவருக்கு காணிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படாத நிலையிலேயே காவல்துறையினர் காணியை கையகப்படுத்த முயன்றுள்ளனர். தற்போதுள்ள காணியில் இருந்து காவல்துறையினர் இன்னும் வெளியேறாத நிலையில் புதிதாக இன்னுமொரு காணியையும் அடாத்தாக கையகப்படுத்தும் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து காணி கையகப்படுத்தப்படும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச ஒருங்கினைப்புக்குழுவால் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

தமிழரசு கட்சியின் மன்னார் கிளையில் குழப்பம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக கட்சியின் பொதுச் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

‘தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர், முன்னாள் மாவட்டத் தலைவர், நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் என்ற வகையில் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத் தலைமை, கடந்த தேர்தலில் தன்னிச்சையாகச் செயற்பட்டதுடன், உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அலட்சியமாகச் செயற்பட்டமை, கட்சிக்கும் மன்னார் மாவட்டத்திற்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தற்போதைய மாவட்ட தலைமையுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் மத்தியில் பல்வேறு வகையான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதால், தோல்வி மற்றும் பின்னடைவுக்கு தார்மீக பொறுப்பேற்று, பொருளாளர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தி.பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் தலைவராக செயல்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்து பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள்  வெளியாகி உள்ளன.
இவ்விடயம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை தொடர்புகொண்டு வினவிய போது தான் மாவட்ட கிளை தலைமை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள் நாடு கடத்தல்!

இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படும் நிலையில், இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் நேற்று (02) கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அவர்கள் இன்று (03) பிற்பகல் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

அதேநேரம், குறித்த மூவரும் எப்போது இந்தியாவுக்கு சென்றவர்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த வாரமும் இரண்டு சிங்களவர்கள் மற்றும் ஒரு தமிழர் ஆகியோர், தமிழகம் தனுஸ்கோடி கரைக்கு படகு மூலம் சென்றபோது கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.