சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுர குமர திசநாயக்காவின் இவ்வார யாழ்ப்பாண வருகையின் பொழுது வல்வெட்டித்துறையில் கூறியுள்ள “நாம் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். கடந்த காலங்களில் இனவாதத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்தார்கள். நாட்டில் இனவாதம் மதவாதம் தோன்ற ஒருபொழுதும் அனுமதிக்க மாட்டோம். இனவாதத்தைக் கையில் எடுக்கும் தரப்பினர்க்கு எதிராகக் கடுமையான சட்டத்தை நாம் நடைமுறைப்படுத்துவோம்.” என்ற பேச்சு கேட்கும் பொழுது எந்தத் தமிழருக்கும் உற்சாகம் தருகிறது. அவரது ஆட்சியில் நடக்க இருக்கும் முதலாவது சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கான “அனைவரும் தேச மறுமலர்ச்சிக்காக இணைவோம்” என்னும் அழைப்பும் மேலெழுந்தவராரியாகப் பார்த்தால் மகிழ்ச்சி தரும் மொழிகள்தான். ஆனால் அடிப்படையில் சிங்களப் பெரும்பான்மை ஆட்சி தன்னை ஈழத்தமிழின அழிப்பு மூலம் ஈழத்தமிழர் தாயக மண்ணில் படைபலத்தால் நிறுவிக் கொண்ட பின்னணியில் அந்த ஆட்சியில் யாரும் இனஉரிமை கேட்டால் அந்த இனவாதம் ஏற்படாதவாறு அந்த ஆட்சியில் அனைவரும் இணைந்து பெரும் சமுகத்துடன் ஒன்றாதல் வேண்டும் என்பதற்கான அழைப்பாகவே இவை உள்ளன. அதாவது அனைவரும் என்பது சிறிலங்கன் என்கிற ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கமாகவும் இணைவோம் என்பது ஈழத்தமிழர் தேசிய ஒடுக்கமாகவும் உள்ளது என்பது தான் கவலைக்குரிய விடயம்.
அது மட்டுமல்ல வடக்கு, கிழக்கு என்று சிறிலங்காவின் மாகாணமாகவே அவர் ஈழத்தமிழர் தாயகத்தைப் பேசுவது தமிழர்கள் வாழும் பகுதிகள் அவை என்பதை ஏற்காத அப்பட்டமான பௌத்த சிங்கள பேரினவாதமாக உள்ளது. மேலும் மகிந்த சிந்தனையான சிறிலங்காவில் இனப்பிரச்சினை என்பது இல்லை., கோத்தபாயாவின் சிந்தனையான அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை, ரணிலின் சிந்தனையான சிறிலங்காவின் வடக்கு கிழக்கு. இவற்றை எல்லாம் உள்ளடக்கி அதனை விட ஒருபடி மேலாக இனி யாராவது தங்கள் இனம்சார் உரிமைக்குக் குரல் எழுப்பின் அதுவே இனவாதம் என்கிற வரைவிலக்கணத்தை, சிங்கள பௌத்த மேலாண்மைக்கான உத்தரவாதமாகவும், அது மட்டுமல்லாது அவ்வாறு எழுப்பப்டும் உரிமைக்குரல் சட்டத்தால் நசுக்கப்படும் என்கிற எச்சரிப்பாகவும் அநுரவின் சிந்தனை அமைகிறது. இப்பொழுது பயங்கரவாதத் தடைச் சட்டம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வரும்வரை அப்படியே தொடரும் என்பது எதற்காக என்பதை ஊகிக்கக் கூடியதாக உள்ளது.
மேலும் இவைகளின் பின்னணியில் பார்க்கும் போது “அனைவரும் தேச மறுமலர்ச்சிக்காக இணைவோ மென” ஈழத்தமிழர் இறைமை நீக்கத்தையே 77வது சுதந்திர நாளாக முன்னெடுக்கும் சிறிலங்கா அரசாகவே அநுரவின் அரசும் செயற்படுகிறது என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும் என்பது இலக்கின் கருத்தாக உள்ளது.
“ஒவ்வொரு சமூகமும் அது பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வகைசெய்தல். இலங்கையில் சுவிட்சுலாந்து போன்ற பல்லின மற்றும் பன்முகச் சமுதாயங்கள் வாழும் நாடுகளில் இருப்பது போல அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். அம்மாகாணத்தில் ஒரு இனம் பெரும்பான்மை இனமாக இருந்தாலும் அதன் கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் சிறுபான்மையினங்கள் மீது அவற்றின் நலன்களுக்கு பாதகமான முறையில் திணிப்பதை அதிகாரப் பரவலாக்கம் தடுக்கும்.”என சிங்கள ஆய்வாளராகிய முனைவர் ஜெகான் பெரேரா “மாகாண ஆட்சிமுறையில் அதிகாரங்களைப் பகிர்தல்” என்னும் வீரகேசரியின் 29.01. 25ம் திகதிய ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். “மாகாணசபைகள் வெறுமனே மத்திய அரசாங்கத்தினால் நிருவகிக்கப்படுவதற்கான பன் முகப்படுத்தப்பட்ட அமைப்பு அல்ல அரசியலமைப்பின் 13 வது திருத்தம் சனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட சபையாகவே மாகாணசபையை வெளிப்படுத்துகிறது. ஆதலால் அதற்குப் பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.” எனத் தனது கருத்தையும் முனைவர் ஜெகன் பெரேரா எடுத்துரைத்துள்ளார். இவை தமிழர்களுக்கான சிங்கள ஆய்வாளரான ஜெகன் பெரேராவின் தீர்வு அணுகுமுறை. இவரும் ஈழத்தமிழரின் இறைமையுள்ள வடக்கு கிழக்கு தாயகத்தை நிராகரித்து அதனை சிறிலங்காவின் நிர்வாக மாகாணங்களாகவே தாம் கொண்டுள்ள கருத்தை உறுதிப்படுத்துகிறார். இவ்வாறு இன்றைய சிங்கள ஆட்சியாளர்களும் ஆய்வாளர்களும் என எல்லோருமே ஈழத்தமிழர்களின் தாயகம் சிங்களவர்களின் தாயகம் என்கிற இருதாயகங்களின் தீவு இலங்கை என்பதை ஏற்காத நிலையில் இந்த ஆட்சியிலும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான அமைதி வாழ்வும் வளரச்சிகளும் கேள்விக்குறியாகவே அமையும் என்பது இலக்கின் எண்ணம். இதனை உறுதி செய்யக் கூடிய வகையில் சிங்களவரான முனைவர் தயான் ஜயதிலகா “அநுர குமர திசநாயக்காவின் ஆட்சியில் தமிழ் மக்களின் அரசியல் விருப்புக்களை அடைவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவடைகின்றன” என்று கூறியுள்ளார்.
இவ்விடத்தில் இந்திய மார்க்சியக் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. இராமகிருஸ்ணன், தமிழகத்தில் விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாட்டில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வைக் காணுமாறும் கல்வி வீட்டு வசதி சுகாதாரம் நிலம் காவல்துறை அதிகாரம் மாகாண அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் சிறிலங்காவின் தேசிய மக்கள் சக்தி ஆட்சியாளரைக் கோருகின்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை எழுதியுள்ளார். இதுவே அனைத்துலக இடதுசாரி அமைப்புக்களில் இருந்து இலங்கைத் தமிழர்கள் சார்பாக எழுந்துள்ள முதலாவது கோரிக்கையாக உள்ளது. இவர் “அரசியல் நிர்வாக அதிகாரிகளை மாகாணங்களுக்கு வழங்கல் மூலம் அரசநிர்வாகத்தில் மக்களைப் பங்கேற்க வைத்தல் என்பதையே ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கான தேசிய மக்கள் சக்தியின் நடைமுறைத் தீர்வாக உள்ளது.” எனவும் கூறியுள்ளார். அதே நேரம் இந்திய மாரக்சிஸ்ட் கட்சியின் இலங்கைத் தமிழர் மேலான அக்கறை உலகெங்கும் உள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு உலகில் உள்ள மாரக்சிய அமைப்புக்களுடனும் ஈழத்தமிழர் நிலைப்பாட்டை பகிர்வதன் மூலம் அநுர அரசை நெறிப்படுத்த அழைக்கிறது.
மேலும் இம்முறைச் சிறிலங்காவின் 77வது சுதந்திரநாள் அமைகின்ற பொழுது இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு இந்திய இறையாண்மையுடனும் சிங்களவர்களின் தாயகப் பகுதிகளான அம்பாந்தோட்டை உள்ளிட்ட தென்மாகாணம் சீனாவின் இறையாண்மையுடனும் இலங்கை முழுவதும் அமெரிக்காவினதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் பங்காண்மையுடனும் கட்டமைக்கப்பட்ட இறைமைப் பகிர்வுள்ள அரசாகவே இன்றைய சிறிலங்கா அரசு விளங்குகிறது. இந்நேரத்திலாவது சிங்கள அரசாங்கங்களின் ஈழத்தமிழர்களின் இறைமை ஒடுக்க முயற்சிகளும் தேசிய நீக்க முயற்சிகளும்தான் இலங்கைத் தீவின் தனித்துவமான இரு இறையாண்மைகளை இன்று பல நாடுகளின் இறையாண்மைய் பகிர்வு நாடாக மாற்றியுள்ளது என்ற உண்மையை இன்றைய அநுர அரசு உணர வேண்டும் என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது. பல பில்லியன் டொலர் முதலாளிகளதும் சில டிரில்லியன் டொலர் முதலாளிகளதும் பிரதிநிதிகளைத் சனநாயகத் தேர்தலில் தாம் தேர்ந்தெடுத்த தங்களின் பிரதிநிதிகளை விடச் சிறந்த தங்களின் பிரதிநிதியாகக் கொள்வது மேலானது என்று இன்றைய ‘z’ (இஸட்) இளம் தலைமுறையினர் கருதுகின்ற நேரத்தில் இந்த பிரதிநிதிகளின் குழுநிலை ஆட்சியின் உலகத் தலைவராக அமெரிக்க அரசத்தலைவர் டிரம்ப் “அள்ளித்தா முதலீட்டை அல்லது வரியாய் கிள்ளி எடுப்பேன்” உன் உற்பத்தியை எனச் சண்டப்பிரசண்டம் செய்யும் காலத்தில், ஈழத்தமிழர்களும் தங்களின் ஆற்றலும் அறிவும் உள்ள குழுக்களாகத் தம்மைக் கட்டமைத்துச் செயற்பட்டாலே ஈழத்தமிழர்களின் தாயக இறைமையும் தேசியமும் நிலைபெற வைக்க முடியும் என்பதே இலக்கின் உறுதியான கருத்து.
ஆசிரியர்