அட்லீ கால தொழிற்கட்சி ஆட்சியில் இறைமையிழப்புக்குள்ளாகிய ஈழத்தமிழர் ஸ்ராமர் கால தொழிற்கட்சி ஆட்சியில் இறைமை மீட்புக்கு உள்ளாகட்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 323

கனடாவின் உலகளாவிய விவகாரங்களின் பிரிவின் தெற்காசியத் தொடர்புகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் மேரி லூயிஸ் ஹனன் கொழும்பில் வைத்து அமெரிக்க அரசத்தலைவர் ட்ரம்பின் ஐக்கிய நாடுகளின் அமைப்பான உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் பாரிஸ் காலநிலைச் சீர்குலைவுக்கான அமைப்பு என்பவற்றில் இருந்து விலகுவது ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைத்தீவில் நடாத்தப்பெற்ற யுத்தக்குற்றங்கள், மனிதாயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் வன்முறைகள் தொடர்பாகச் சாட்சியங்களைத் தரவுகளைச் சேர்க்க இலங்கைக்கான மனித உரிமைகள் கண்காணிப்பு நாடுகளின் நெறிப்படுத்தலில் செயற்பட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் செயற்பாடுகள் நிச்சயமற்றதன்மையை எதிர்நோக்குகிறது என்ற எச்சரிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் இந்த இலங்கைக்கான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் முக்கிய நாடான பிரித்தானியாவை தங்கள் பக்கம் இழுக்கும் சிறிலங்காவின் முயற்சிகள் வேகம் பெற்று வருகின்றன. சிறிலங்காவின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா ஐக்கிய இராச்சிய நட்புறவுச் சங்கத்தை மீளுருவாக்குவதற்காகச் சபாநாயகர் ஜகத்விக்கிரமரத்ன தலைமையில் கூடி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹரின் நாணயக்காரவைத் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கத்தைச் செயலாளராகவும் தெரிவு செய்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் பல அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றிய இக்கூட்டத்திற்கு விசேட விருந்தினராக இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் அன்ட்ரூ பற்றிக் கலந்து கொண்டார். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இக் கூட்டத்தில் உரையாற்றுகையில் கடந்த ஏழு தசாப்தங்களாக இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான உறவு வலுவடைந்து வந்துள்ளதை இந்த நட்புறவுச் சங்க மீளுருவாக்கம் உறுதிப்படுத்தியுள்ளது. சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடியின் பொழுது ஐக்கிய இராச்சியம் வழங்கிய ஆதரவு மற்றும் பரிஸ் கழக உறுப்பினராக கடன் மறுசீரமைப்புக்கு அளித்த பங்களிப்புகளுக்கு நன்றி கூறினார். இங்கு உரையாற்றிய பிரித்தானியாவின் தூதுவர் அன்ட்ரூ பற்றிக் “50000 இலங்கை மாணவர்கள் பிரித்தானியாவில் படிக்கின்றார்கள். கல்வித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் வளர்ப்பதை ஐக்கிய இராச்சியம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக் கணிப்புக்களின்படி இந்தப் பிராந்தியம் அதிகளவான செல்வாக்குமிக்கதாக மாறும். பிரகாசமான எதிர்காலத்துக்கு இலங்கை ஒரு நல்ல நிலையில் இருக்கிறது” என எடுத்துரைத்துள்ளார்.
இந்நிலையில் 04.02. 2025இல் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் 1796 கி. பி முதல் 1948 கி.பி வரை 152 ஆண்டுகள் தாங்கள் கைப்பற்றி வைத்திருந்த ஈழத்தமிழர்களின் இறைமையை ஈழத்தமிழர்களின் விருப்பின்றி சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமையில் சிங்களவர்களின் இறைமையுடன் இணைத்துச் சுதந்திரம் வழங்கிய 77வது ஆண்டு வருகிறது. பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்தின் ஈழத்தமிழர்கள் குறித்த பொறுப்பற்ற இந்தச் செயலாலேயே கடந்த 77 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்களால் இனஅழிப்பு இனத்துடைப்புப் பண்பாட்டு இனஅழிப்பு அரசியலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கைக்குப் பிரித்தானியா சுதந்திரம் கொடுத்த நாளை கடந்த 77 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் துக்க தினமாகக் கருதி அன்றைய தினத்தில் தங்களுடைய இறைமையுடன் கூடிய தாயக தேசிய தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியுடன் கூடிய வளர்ச்சிகளைக் கொண்ட தன்னாட்சி வாழ்வை வாழ அனுமதிக்கும் படி தங்களுடைய வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் உலக நாடுகளிடம் கோரி வருவது வழமை. அந்த வகையில் இவ்வாண்டும் பிரித்தானியாவில் இலண்டனில் பெப்ரவரி 4ம் நாள் சிறிலங்காத் தூதுவராலயத்தின் முன்பிருந்து காலை 11 மணிக்குப் புறப்பட்டு பிரித்தானியப் பிரதமரிடம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக் குரல் எழுப்பி ஈழத்தமிழர்கள் தேசமாகவே பேரணியாகச் செல்வதற்குப் பிரித்தானியா வாழ் அனைத்து ஈழத்தமிழரையும் மற்றும் ஈழத்தமிழரின் மனித உரிமைகளுக்கும் அமைதிக்கும் உழைக்கும் அனைவரையும் ஈழத்தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையும், தமிழீழத்தின் அனைத்துலக இராஜதந்திரக் கவுன்சிலும் அழைத்துள்ளது. “எமது உரிமைக்குரலை உரத்துக் கூறுவோம். இனமான உணர்வோடு ஒன்றாகுவோம்” என்னும் மையப்பொருளுடன் இந்த ஈழத்தமிழர் தன்னாட்சிக்கான உரிமைக் குரல் போராட்டம் நடைபெறவுள்ளது.
ஒருவகையில் எந்த பிரித்தானியத் தொழிற்கட்சியின் பிரதமர் கிளமென்ட் அட்லியின் ஆட்சிக்காலமான 1945 முதல் 1948 க்கு இடையில் அக்கால ஈழத்தமிழர்களின் அரசியல் தலைவரும் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரசின் தலைவரும் சட்டமாமேதையுமான ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் சோல்பரி ஆணைக்குழுவின் அறிக்கையின் இலங்கைத் தமிழர்களின் தேசிய நீக்க இறைமை நீக்க பகுதிகளுக்கு எதிரான கண்டனங்களையும் சீர்திருத்த விதந்துரைப்புக்களையும் செய்த பொழுது அதனைக் கவனத்தில் எடுக்காது அதனையே அடிப்படையாகக் கொண்ட வெள்ளை அறிக்கையை பிரதமர் அட்லி அவர்களின் பாராளுமன்றம் சிலோனுக்கான அரசியலமைப்பாகவே பிரகடனப்படுத்தி 77 ஆண்டுகளாக ஈழத்தமிழரின மேலான சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சி அரசாங்கங்களின் பாராளமன்றக் கொடுங்கோன்மை மூலம் ஈழத்தமிழர்களை இனஅழிப்புக்களுக்கும் இனத்துடைப்புக்களுக்கும் பண்பாட்டு இனஅழிப்புக்கும் உள்ளாக வைத்து வருகிறதோ, அந்த நிலையை இன்றைய பிரித்தானியத் தொழிற்கட்சியின் பிரதமர் சேர். கெயர் ஸ்ராமர் கவனத்தில் எடுத்து ஈழத்தமிழர்களுக்கான பாதுகாப்பான அமைதியுடன் கூடிய வளர்ச்சிகளை அவர்கள் தங்களின் இறைமையின் அடிப்படையில் தங்களின் தாயகத்தில் தங்களின் தேசியத்தைப் பேணி தங்களுக்கான தன்னாட்சி வாழ்வில் பெற உதவி ஈழத்தமிழர்களுக்கும் தொழிற்கட்சியின் நற்பெயருக்கும் ஓரே நேரத்தில் உதவ இந்த ஈழத்தமிழர் தன்னாட்சிக்கான உரிமைக் குரல் பேரெழுச்சிப் பேரணி வழிகாட்ட ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒன்று இணைந்து செயற்பட வேண்டும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது. இதன் வழி ஈழத்தமிழரின் தாயகத்தின் இந்துமாக்கடலின் பாதுகாப்பும் உறுதி பெற்று உலகின் பாதுகாப்பும் அமைதியும் சிறக்கும் என்பதையும் இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

ஆசிரியர்

Tamil News