இறைமையில் உறுதியாகச் செயற்படும் மக்களை படைபலத்தால் வெல்ல இயலாது இதுவே இஸ்ரேலிய – யுத்தநிறுத்தம் தரும் செய்தி | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 322 | இலக்கு இதழ் 322 ஜனவரி 18, 2025

பதினைந்து மாதங்கள் பலஸ்தீனிய மக்களை வெளிப்படையாக இனஅழிப்பு செய்த இஸ்ரேயல் அமெரிக்காவில் ஏற்படும் அரசியல் மாற்றத்தின் பின்னணியில் ஜனவரி 19ம் நாள் முதல் ஹமாஸ் உடன் போர்நிறுத்தம் செய்வதுடன் இவ்வாரம் தொடங்குகிறது. இதில் வென்றவர்கள் ஹமாஸ்தான். இறைமையின் மேல் உறுதியுள்ள மக்களை படைபல ஆக்கிரமிப்பால் வெல்ல இயலாது என்பது மீளவும் வரலாறாகியுள்ளது. கைதிகள் விடுவிப்பு முதல் காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைவிலகல் ஈறாக காசாவில் மீளவும் பலஸ்தீனிய மக்கள் குடியமர்தல் வரை பலஸ்தீனியர்களுக்கே சாதகமாக உள்ளது. ஆனால் ஆறு ஏழு வருடங்களில் இஸ்ரேயல் பலஸ்தீனியத்தைத் தேசமாக அங்கீகரிப்பதில் உறுதியாக இருப்பார்களா? பலஸ்தீனியர்கள் தங்களின் மண்ணின் மேலான இறைமையை இஸ்ரேலிய இறைமையுள் அடக்க அனுமதிப்பார்களா? இந்நேரத்தில் “அலைகள் ஓய்ந்து நீராடுவது ஆகக் கூடிய காரியமா” என்ற தமிழ் சினிமாப்பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது. இந்தச் சிக்கல்களை எல்லாம் கவனத்தில் கொள்ளாது ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கும் இருதேசத் தீர்வே வழியென்று வாயளவில் கதையளக்கும் ஈழத்து அரசியல்வாதிகள் பேசத் தொடங்கு முன்னரே ஈழத்தில் ஈழத்தமிழர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் ஆதலால் ஈழத்தமிழர் இறைமையின் அடிப்படையிலான தாயக தேசிய தன்னாட்சி மீளுறுதி பெறலே ஈழத்தமிழருக்கான ஒரே தீர்வு என்பதை ‘இலக்கு’ இவ்விடத்தில் எடுத்துரைக்க விரும்புகிறது. 24 ஆண்டுகளுக்கு முன்பு 17.01. 2001 இல் பொங்கு தமிழ் முடிவில் மரபுவழித்தாயகம், தேசியம், தன்னாட்சி என்பது பல இலட்சம் மக்களால் பிரகடனப்படுத்தப்பட்டதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
மறுநாள் ஜனவரி 20ம் நாள் உலகத்தை வரிவிதிப்புக்களாலும் தந்திரோபாய உறவாடலாலும் ஆட்சிப்படுத்த வல்லவரான அமெரிக்க ஜனாதிபதியாக மீளவும் டொனால்ட் டிரம்ப் சம்பிரதாய பூர்வமாகப் பதவியேற்கின்றார். இது உலக நாடுகள் அனைத்தையும் பொருளாதாரத்தில் தடுமாற வைக்கும் வகையில் வழங்கல் சங்கிலிகள் அனைத்தும் சிக்கல்படுமென்று அனைத்துலக நாணய நிதியமே எதிர்வு கூறியுள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு டிரம்பின் ஆட்சியில் தமக்கான ஒருமைப்பாடுடைய ஈழத்தமிழர்களுக்கான பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி எதிர்கொள்ளாவிடில் பலத்த பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரம் என்பதை இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது.
மேலும் 5வீதமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை வெளிப்படுத்தியுள்ள சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு சிறிலங்காவுடனான தனது பங்காண்மையைக் கூட்டாண்மையாக வலுப்படுத்தக் கூடிய வகையில் சிறிலங்கா அரசத்தலைவரின் சீனாவுக்கான அணுகு முறைப் பயணம் அமைந்துள்ளது.
இதன் மகிழ்வு விருந்துக்குச் சீன அரசத்தலைவரைச் சிறிலங்காவுக்கு வரும்படியான அழைப்பையும் சிறிலங்கா அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்கா உத்தியோக பூர்வமாக விடுத்துள்ளார்.
அதே வேளை பாரத் சிறிலங்கா கூட்டாண்மை ஏற்கனவே சிறிலங்காவில் உள்ளதால் அதனை மேலும் வலுப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் சிறிலங்காவுக்கான வருகை சீன அரசத்தலைவர் உடைய வருகைக்கு முன்னர் இடம்பெறும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கிடை தைவானை சீனாவின் மாகாணம் என வெளிப்படையாகவே ஏற்று சீனா சென்ற சிறிலங்காவின் ஜனாதிபதி அநுர குமர திசநாயக்கா அமெரிக்காவை அதுவும் டிரம்பின் ஆட்சியில் எப்படி எதிர்கொள்வார் என்பதைப் பொறுத்தே சிறிலங்காவின் பொருளாதாரச் சிக்கலுக்கான எதிர்காலம் உள்ளது.
இந்நேரத்தில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்கவெனப் பல்வேறு நாடுகளிடம் மண்டியிட்டு நாட்டின் இறைமையை, அரசியலை, வளங்களைத் தாரைவார்த்து சமரசம்பேசி பல்வேறு நாடுகளுடன்
(அண்மையில் இந்தியாவுடனும் தற்போது சீனாவுடனும் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் உட்பட) ஒப்பந்தங்கள் செய்யும் அரசாங்கம், இந்நாட்டில் மிக நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்ட தேசிய இனமான தமிழர்களோடு அரசியல் ஒப்பந்தம் செய்யத் தயங்குவது ஏன்? என்ற நியாயமான கேள்வியை சமுகநீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சக்திவேல் ஊடக அறிக்கை வழியாக எழுப்பியுள்ளார். கடந்த கால அரசாங்கங்களைப் போலவே இந்த அரசாங்கமும் தமிழர்களின் அரசியலைப் பயங்கரவாதத்துள் முடக்கி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுக் கொடுத்துச் சிங்கள பௌத்த பேரினவாதத்தை மகிழ்விக்கவே முன்நிற்கிறது என்பதும் தெளிவாகிறது. தற்போது சிறையில் உள்ள 10 அரசியல் கைதிகளில் மரணதண்டனைக் கைதிகளும் உள்ளனர். இவர்களைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு வெளியே எடுத்து விடுதலை செய்யக் கூடாதென்பதில் பேரினவாத ஆட்சியாளர்கள் உறுதியாகச் செயற்பட்டுத் தண்டனைக் காலத்தைக் கடந்தும் சிறையில் வாடும் இவர்களின் வாழ்வைச் சிறைக்குள்ளேயே கொலைசெய்வதற்கு முயற்சிப்பதாகவே தெரிகிறது. தமிழர் அரசியல் விடுதலைக்கான செயற்பாட்டினை போராளிகளும், மாவீர்களும், அரசியல் கைதிகளும் உயிர்ப்புடன் வைத்திருந்தனர். இன்றும் (சோரம் போனவர்களைத் தவிர ஏனையோர்) வைத்திருக்கின்றனர் என்பதை மறக்க முடியாது. இவர்களைத் தவிர்த்து அல்லது மறந்து விடுதலை அரசியல் செய்வது என்பது அரசியல் கொலைக்கு ஒப்பாகும். எனவே அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வடக்குக் கிழக்கில் நடைபெறும் கையெழுத்துப்போராட்டம் மேலும் வலுப்பெற வேண்டும். இது குறுகிய அரசியல் நோக்குகளுக்கு அப்பால் ஈழத்தமிழ் மக்களின் தேசிய பேராட்டமாக மேலேழ வேண்டும் என்பது ஈழத்தமிழ் மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு. இதனை உணர்ந்து வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசத்தலைவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழுத்தம் கொடுத்து இந்த அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்தாது தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டாம் எனவும் அருட்தந்தை சக்திவேல் அவரது ஊடக அறிக்கையில் நெறிப்படுத்தியுள்ளார். ‘இலக்கு’ம் இதனை பாராட்டி வரவேற்கின்றது. கூடவே இந்த விடயத்திலும் 2890 நாட்களாகத் தெருவில் மழையிலும் குளிரிலும் வெய்யிலிலும் வாடி வதங்கித் தங்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதற்காக நீதி கோரிப் போராடும் தமிழ்த் தாய்மார் தந்தைமார் தங்களை அமெரிக்கா வாசிங்டனுக்கு அல்லது நியூயோர்க்கு அழைத்து தமது இந்த நிலையை உலகுக்கு தாங்கள் வெளிப்படுத்த உதவவேண்டுமென்று கடந்த வாரத்தில் விடுத்துள்ள கோரிக்கைக்கும், அனைத்து உலகிலும் வாழும் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இவ்விடயத்தில் தமிழினத்தன்மையுடன் செயற்பட்டு தங்கள் மதியாலும் நிதியாலும் தாராளமாக உதவித் தாங்கள் வாழும் நாடுகளின் மக்களதும் அரசாங்கங்களதும் ஆதரவையும் வழிகாட்டலையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் ‘இலக்கு’ வேண்டிநிற்கிறது. உலகில் உள்ள தமிழர்களின் ஊடகவியலாளர்கள் சமுக வலைத்தளங்கள் இந்த விடயத்திலாவது ஒன்றுபட்டு உடனடியாகச் செயற்பட வேண்டும் என்பதையும் ‘இலக்கு’ வலியுறுத்துகிறது. இவ்விடத்தில் ஐரோப்பிய ஒன்றிய சிறிலங்கா அரசத்தலைவர் தேர்தல் கண்காணிப்புத் தூதுக்குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர் 17ம் திகதி வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கையில் நிகழ்நிலை காப்புச் சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாட்டுச் சட்டங்களை ரத்து செய்து கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும், நெறிப்படுத்தியுள்ளதை ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் முன்னிலைப்படுத்தி அவற்றை நீக்குவிப்பதற்கான அழுத்தங்களை தாங்கள் வாழும் நாடுகளின் அரசாங்கங்கள் மூலம் செயற்படுத்த வேண்டுமெனவும் இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.

Tamil News