முப்பத்தேழு ஆண்டுகளாக செப்டெம்பர் மாதம் என்றாலே ஈழத்தமிழர்கள் தியாகி திலீபனின் அறவழிப்போராட்ட உறுதியையும் தேசமாக ஒன்றுபட்டெழுந்து போராட வேண்டுமென்ற அழைப்பையும் நெஞ்சிருத்தி தியாகி திலீபனுக்கு வீரவணக்கம் செய்வது வழமை. ஆனால் இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் 9ம் நாளும் செப்டெம்பர் 21ம் நாளும் ஈழத்தமிழர்கள் தியாகி திலீபனின் அதே அறவழிப்போராட்ட உறுதியுடன் தேசமாக எழுந்து போராடுவதற்கான இரண்டு சனநாயகக் களங்கள். ஒன்று அனைத்துலக நிலையிலும் மற்றது தாயக நிலையிலும் தோன்றியுள்ளன. இவ்வாண்டு செப்டெம்பர் 9ம் நாள் தொடங்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வில் 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் வழி தொடங்கப்பெற்ற சிறிலங்காவின் பொறுப்புக்கூறல், நல்லாட்சி, மனித உரிமைகள் தொடர்பான நெறிப்படுத்தல்களுக்கான கால எல்லை நீடிப்பு மீளவும் நிறைவு பெறுவதால் இதனைக் கொண்டு வந்த நாடுகள் மீளவும் காலநீடிப்புச் செய்ய வேண்டும் அல்லது புதிய நெறிப்படுத்தலை வெளியிட வேண்டும்.
இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரே சுட்டிக்காட்டியுள்ளார். இந்நேரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்த நெறிப்படுத்தல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் 60/251 இல் விதந்துரைக்கப்பட்டிருக்கும் இயற்கை நீதிக்கோட்பாடுகள், நடுநிலைமை, மற்றும் சகலரும் சமத்துவம் என்பவற்றுக்கு எதிரானதென்ற வாதத்தைத் தொடங்கியுள்ள சிறிலங்கா இந்த நெறிப்படுத்தல்களைத் தடுத்து நிறுத்துவதற்குச் சட்டரீதியாகவும் தனக்கு ஆதரவான நாடுகளின் செல்வாக்குப் பிரயோகத்தாலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும் தொடங்கிச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனைத்துலகிலும் இத்துறையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தங்கள் பங்களிப்பைச் செய்யும் அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து சிறிலங்காவுக்கு எதிர்வினையான பலமான பொதுக்களமொன்றை மிகவிரைவாகக் கட்டமைக்க வேண்டுமென்பது இலக்கின் இவ்வார முதல் எண்ணமாகவுள்ளது.
அடுத்தது இலங்கைக்கான முதல் பொதுத்தேர்தல் 1947 இல் ஆகஸ்ட் 15 முதல் செப்டெம்பர் 20 வரை நடைபெற்று செப்டெம்பர் 24 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் டி. எஸ். சேனநாயக்கா இலங்கையின் பிரதமராகி ஈழத் தமிழர்களின் இறைமையைச் சிங்களப்பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறை மூலம் ஒடுக்கத் தொடங்கிய வரலாற்றுக்குச் சமாந்தரமாக 77 ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய தலைவராகவும் சிறிலங்கா அரசுத்தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் இரட்டை வேடத்தில் உள்ள இன்றைய சிறிலங்கா அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா இவ்வாண்டு செப்டெம்பர் 21ம் நாள் சிறிலங்காவின் 9வது அரசுத்தலைவர் தெரிவுக்கான தேர்தலை நடாத்துகின்றார்.
இதனை பொருளாதார மீளுறுதிப்பாட்டுக்கான தேர்தலெனச் சிறிலங்கா ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்தாலும் 1924ம் ஆண்டு மன்னிங் அரசியல் சீர்திருத்தத்தால் பிரித்தானியக் காலனித்தவ அரசு தொடக்கி வைத்த பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் ஆட்சியை உறுதிப்படுத்தும் உத்தியின் உச்சமாக 100 ஆண்டுகளின் பின்னரும், யாழ்ப்பாண வன்னி அரசுகளின் நிலப்பரப்பான இலங்கையின் வடக்கு கிழக்கைச் பௌத்த சிங்கள நாடான சிறிலங்காவின் வடக்கு கிழக்கு எனவும் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கையில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழரை சிங்கள நாடான சிறிலங்காவில் வாழும் சமுகமெனவும் தான் வெளிப்படுத்தி நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை ஈழத்தமிழரும் ஏற்கிறார்கள். இதற்குச் சான்றாக இந்த அரசுத்தலைவர் முறைமைக்கு இத்தனை வாக்குகள் அளித்தார்கள் என உலகுக்கு உறுதிப்படுத்தும் தேர்தலாகவே முன்னெடுக்கின்றார். அத்துடன் முக்கிய நான்கு வேட்பாளர்களும் ஏகமனதாக சிங்கள நாடு சிங்களச் சட்டம் அதில் வாழும் சமுகமாக ஈழத்தமிழரைக் கருதுவோமெனத் தங்களின் தேர்தல் கொள்கை விளக்கத்தில் தெளிவாக்கியுள்ளனர்.
1931இல் பிரித்தானிய காலனித்துவ அரசு வழங்கிய 21 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வாக்குரிமையென்ற டொனமூர் அரசியல் சீர்திருத்தம் மூலமான இலங்கையர்க்கான பொறுப்பாட்சி முறைமை அரசாங்கம் ஈழத்தமிழர்களின் தேச இனம் என்ற வரலாற்று நிலையைத் திரிபுபடுத்தி இலங்கையின் சிறுபான்மையினர் என்ற புதிய அரசியலடையாளத்தைப் பெறவைத்தது. அதனை 93 ஆண்டுகளின் பின்னரும் நாம் தனியான தேச இனம் என்று அடையாளப்படுத்த வேண்டிய தேர்தலாக இத்தேர்தலை பொதுவேட்பாளர் மூலம் ஈழத்தமிழர் முன்னெடுக்க வேண்டிய நிலை. 1931 பொதுத்தேர்தலை யாழ்ப்பாணத் தொகுதியில் புறக்கணித்ததன் மூலம் இலங்கைத் தமிழர்கள் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் போராட்டத்தை 93 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கினர். ஆயினும் எதிர்பார்த்த எந்தப் பலனையும் தராதநிலையில் 1934 முதல் பருத்தித்துறைச் சட்டவாக்கசபை உறுப்பினராக தெரிவான ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் தேர்தலில் பங்கெடுத்துப் போராடும் அரசியல் போராட்ட வடிவை முன்னிலைப்படுத்தினார். 1938 முதல் 1944 வரை சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிக் கொடுங்கோன்மையை, இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லீம்களுக்கு 50 வீதமும் சிங்களவர்களுக்கு 50 வீதமும் என்ற உறுப்புரிமை மூலம் சட்டவாக்க சமத்துவத்தால் தவிர்க்க முயன்று வந்தவர் பொன்னம்பலம் அவர்கள். ஆனால் சிங்களத் தலைமையான டி. எஸ் சேனநாயக்காவுடன் இணைந்து அதனை முழுஅளவில் எதிர்த்த பிரித்தானிய ஆளுனர் அன்ரூ கோல்டிகொட் 1944 அக்டோபர் 07இல் விலகிச் செல்லும் வரை 50க்கு 50 ஐ ஏற்க மறுத்தார். இத்தகைய நேரங்களில் புதிய முறைமையொன்று இயல்பாகத் தேவைப்படும். இதுவே 1944 அக்டோபர் 29 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசைத் தொடங்கி 1947ம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றத்திற்கான முதல் தேர்தலில் பங்குபற்றியதன் மூலம் தமிழர் தமக்கான கட்சி மூலம் பாராளுமன்றத்தின் வழி போராடும் முறைமையை சரியாக 80 ஆண்டுகளுக்கு முன்னர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் தொடக்கி வைத்தது வரலாறு. இன்று மீளவும் ஈழத்தமிழர்கள் பொதுவேட்பாளர் முறைமையைத் தொடக்கப்புள்ளியாகக் கொண்டு தேசியப் பொதுக்கட்டமைப்பு மூலமான பாராளமன்றப் போராட்ட முறைமையை மீளவும் தொடங்குவது இன்றைய வரலாற்றின் தேவையாகவுள்ளது.
22.05. 1972 முதல் இலங்கைத் தமிழர்களை ஆளும் அரசியலமைப்புத் தகுதியை இழந்து விட்ட சிறிலங்காவின் தேர்தல்கள் எல்லாவற்றையும் புறக்கணித்து ஈழத்தமிழர்கள் 1978 முதல் 2009 வரை 31 ஆண்டுகள் தங்களுக்கான நடைமுறையரசை நிறுவி வாழ்ந்தனர். பின்னர் 2009 சிறிலங்காவின் முள்ளிவாய்க்காலில் 176000 ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ஈழத்தமிழின அழிப்பின் மூலம் தோற்றுவித்த சமகால சிறிலங்கா அரசையும் பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் தமது அரசாகவோ தமக்கான ஆட்சி முறைமையாகவோ மனம் விரும்பி ஏற்கவில்லை. இதனைத் தேர்தலைப் புறக்கணித்தல் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக வெளிப்படுத்தியும் வருகின்றனர். இருந்த போதிலும் ஈழத்தமிழர்கள் சனநாயகவழிகளில் தங்கள் உரிமைகளைப் பெற மறுக்கிறார்கள் என்ற சிறிலங்காவின் கூற்றையே உலக நாடுகளும் உலக அமைப்புக்களும் தமது கருத்தாகவும் வெளிப்படுத்தி நிற்கின்றன. இதனால் இவ்வாண்டில் வாக்களியாது விடும் புறக்கணிப்புப் போராட்டத்தாலும், பொதுவேட்பாளரான அரியநேத்திரனை தமிழ்த்தேசியப் பொதுவேட்பாளராக நிறுத்தி “நமக்கு நாமே வாக்களித்தல்” என அவருக்கு வாக்களித்துச் சிறிலங்காவின் அரசியல் முறைமையைப் புறக்கணிக்கும் போராட்டத்தாலும் ஒரே இலக்கை இரு வழிகளில் ஈழத்தமிழர் அணுகுகின்றனர். ஈழத்தமிழரின் இன்றைய விருப்பும் 1977 ம் ஆண்டின் மக்களாணையான எங்களின் இறைமையை மீளுறுதி செய்தல் என்பதை பொதுவேட்பாளர் உறுதியாக மீள்பிரகடனம் செய்தாக வேண்டும். இது பிரிவினையல்ல. பயங்கரவாதமல்ல. தாயக தேசிய தன்னாட்சி உரிமையுடன் உலகின் மக்களினமொன்று வாழ எடுக்கும் அரசியல் முயற்சியென்பதை அனைவருக்கும் மீள்தெளிவாக்கவேண்டும் என்பது இலக்கின் வேண்டுகோளாகவுள்ளது.
அத்துடன் இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல் இலங்கை வந்து வீதி இணைப்பு ரயில் இணைப்பு மின்னிணைப்பு, எரிபொருள் இணைப்பு என்னும் நான்கு தளங்களில் இலங்கை இந்தியாவை இணைக்கும் உத்தேச திட்ட அறிக்கையை இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் மிலிந்த மொரகொடவிடம் கையளித்ததும் அல்லாமல் சிறிலங்காப் பிரதமரையும் மலையகத் தமிழர்களின் தலைமைகளையும் சந்தித்துள்ளார். கூடவே கிழக்கில் இந்தியத்துணைத்தூதரகம் வேண்டுமென்ற கோரிக்கையும் மட்டக்களப்பிலிருந்து எழுப்பப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்ல சீனா, அமெரிக்க உட்பட உலகநாடுகள் பலவும் ஈழத்தமிழரின் தாயகத்தில் தங்கள் நலன்களை உறுதி செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளமை தெளிவான விடயம். இந்நேரத்தில் ஈழத்தமிழர்கள் தேசியப்பொதுக்கட்டமைப்பு ஒன்றில் தம்மை வெளிப்படுத்த வேண்டியது மிகத்தேவையான விடயமாகிறது. எனவே உள்வேறுபாடுகளை மதித்து அவை ஈழத்தமிழர்களின் தேசமாக எழும் தன்மைக்குப் புதிய ஆற்றலை அளிக்கக் கூடிய முறையில் கூட்டாண்மைகள் பங்காண்மைகள் கொண்ட தேசமாக எமது தேசம் உள்ளதாக மாற இந்தப் பொதுவேட்பாளருக்கு அளிக்கும் வாக்குகள் பலமளிக்குமென்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
- பொருளாதார யுத்தப் பிரகடனத்திலிருந்து ஈழத்தமிழர் தாயக இறைமையைக் காக்க பொதுவேட்பாளர்க்கு வாக்களிக்குக – ஆசிரியர் தலையங்கம்
- Ilakku Weekly ePaper 302 | இலக்கு-இதழ்-302-ஆகஸ்ட் 31, 2024