ஈழத்தமிழர் இறைமையைப் பேணுவதற்கான அழுத்தக் குழுவாக ஈழத்தமிழர்கள் மாறுவதற்கு பிரித்தானியத் தேர்தல் முடிவுகள் வழிகாட்டட்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 294

ஸ்டர்ட்போர்ட் அன்ட் பௌ தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 44.1 வீதமான 19145 வாக்குகளைப் பெற்று அவருக்கு அடுத்தபடியாக வந்த 17.5 வீதமான வாக்குகளைப் பெற்ற கிறீன் கட்சியைச் சேர்ந்த ஜோ கட்சன் சுமோல் பெற்ற 7511 வாக்குகளை விட 11634 மேலதிக வாக்குகளால் லேபர் கட்சியின் உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார். இதன்வழி வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றத்து வரலாற்றிலேயே பிரித்தானியத் தமிழர் என்கின்ற இனத்துவச் சிறுபான்மையினத்தின் முதல் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்
என்கிற வரலாற்றுப் பெருமையை லேபர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் பெற்றுள்ளார். உமா குமரன் அவர்கள் “14 ஆண்டுகால டோரி சித்திபெறத் தவறிவிட்டது. இப்பொழுது மாற்றத்துக்கான நேரம். நாம் ஒன்று சேர்ந்து ஸ்டார்ட்போர்ட் அன்ட் பௌக்கான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம். நான் உங்கள் குரலாக வெஸ்ட் மினிஸ்டரில் ஒலிப்பேன். அத்துடன் உங்களுக்காகப் போராடுவேன்” என்றே அவரது தேர்தல் கொள்கை விளக்கத் துண்டுப்பிரசுரத்தில் பதிவு செய்திருந்தார். இந்த வகையில் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கடமைப்பொறுப்பு என்னவென்பதை அவர் தனது தொகுதி மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களின் வாக்குகளால் தெரிவாகியுள்ளார். இதனாலேயே அவர் இந்தக்கடமைப் பொறுப்புடன் லேபர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அதே வேளையில் அவரது ஈழத்தமிழினத்தன்மையின் அடிப்படையில் பிரித்தானியத் தமிழர்களின் தேசியத்தன்மைக்காகப் பொதுவாகவும் ஈழத்தமிழர்களின் தேசியத்தன்மைக்காகச் சிறப்பாகவும் போராட வேண்டும் என்பதையும் இலக்கு இவ்விடத்தில் எடுத்துக் கூறவிரும்புகிறது. இந்த மும்முனைப்பட்ட மக்கள் பணிகளின் இணைப்புப் பாலமாக அவர் பணியாற்றிச் சிறப்புகள் பல பெற்றிட ‘இலக்கு’ தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. அதுவும் உலகில் ஈகத்தில் தன்னிகரில்லாத உரிமைக்காகப் போராடுவதில் ஈடிணையில்லாத ஈழத்தமிழ்ப் பெண்களின் தொன்மையும் தொடர்ச்சியுமான உறுதியையும் அர்ப்பணிப்புக்களையும் தனது மரபணுவாகக் கொண்டுள்ள மாண்பமை உமா குமரன் அவர்களுக்கு அந்த மரபணுவே அவருக்கான வெற்றிகளுக்கான அடித்தளமாக விளங்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை என்பது இலக்கின் உறுதியான எண்ணம்.
மேலும் “ஸ்டர்ட்போர்ட் அன்ட் பௌ” தேர்தல் தொகுதியில் மூன்றாவது இடத்தில் பிரித்தானிய வேர்க்கர்ஸ் கட்சியைச் சேர்ந்த கலிமா கான் 7.5 வீதமான வாக்குகளான 3274 ஐப்பெற்றார். நான்காவது இடத்தில் கொன்சர்வேடிவ் கட்சியின் கேன் பிளக்வெல் 7.2 வீதமான வாக்குகளான 3114 ஐப் பெற்றார். ஐந்தாவது இடத்தில் கட்சிசார்பற்ற வேட்பாளராகப் போட்டியிட்ட நிசாம் அலி 5.5 வீதமான வாக்குகளான 2380 ஐப் பெற்றார். ஆறாவது இடத்தில் றிவோர்ம் யூகே கட்சியைச் சேர்ந்த ஜெவ் ஈவான்ஸ் 4.8 வீதமான வாக்குகளான 2093 ஐப்பெற்றார் ஏழாவது இடத்தில் லிபரல் டெமொகிரெடி கட்சியைச் சேர்ந்த ஜெனி லிட்டில் 4.4 வீதமான வாக்குகளான 1926 ஐப் பெற்றார். எட்டாவது இடத்தில் கட்சி சார்பற்ற வேட்பாளரான ஒமார் பாரூக் 4.2 வீதமான வாக்குகளான 1826 ஐப் பெற்றார். ஒன்பதாவது இடத்தில் கட்சி சார்பற்ற வேட்பாளரான பியோனா லலி 4.1 வீதமான வாக்குகளான 1791ஐப் பெற்றார். பத்தாவது இடத்தில் கட்சி சார்பற்ற வேட்பாளரான ஸ்டீவ் கெட்லி 0.9 வீதமான வாக்குகளான 375 ஐப் பெற்றார். இது பிரித்தானிய மக்கள் தங்களின் இருகட்சிக்குள் ஆட்சியாளரைத் தெரிவு செய்தல் என்கிற தேர்தல் வழமையிலிருந்து விடுபட்டு தங்கள் தேவைகளைக் குறைகளை வெளிப்படுத்தத் தேர்தல் மேடையை (The Husting) மட்டுமல்ல தேர்தலில் போட்டியிடுவதையும் வழக்காக்குகின்றார்கள் என்பதைத் தெளிவாக்கியுள்ளது. காலத்தோடும் உலகத்தோடும் பரிணாமம் பெறும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப மக்களின் தேர்தல் மரபுகளும் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும் இதையே பரிணாம வளர்ச்சி பெறும் ஈழத்தமிழர்களின் அரசியல் வாழ்வுக்கு ஏற்ப தாயகத்தில் பொதுவேட்பாளர் முறைமை வழியாகவும், புகலிட வாழ்வு பெற்றுள்ள நாடுகளில் புலம்பெயர் ஈழத்தமிழருக்கானச் சொந்த அரசியல் கட்சிகளை அமைத்தும், ஈழத்தமிழ் மக்களின் தேவைகளைக் குறைகளை வெளிப்படுத்தத் தேர்தல் மேடையையும் தேர்தலில் வாக்குகள் சிதறிப் பலமிழப்பதைத் தவிர்க்க ஓரணியில் போட்டியிடுவதையும் உறுதி செய்யுமாறு ‘இலக்கு’ எடுத்துரைத்து வருகிறது.
2019ம் ஆண்டுத் தேர்தலில் இத்தொகுதியில் லேபர் கட்சிக்கு கிடைத்த வாக்கை விட 26.3 வீதமான வாக்குகள் குறைவாகவே பெற்றுள்ளது. அதே வேளை கிறீன் கட்சி 13.5 வீதம் அதிகமாக வாக்குளைப் பெற்றுள்ளது. அவ்வாறே லேபர் கட்சியிலும் கொன்சர்வேடிவ் கட்சியிலும் தொழிலாளர் நலன்கள் மறுக்கப்படுகின்றன என நிறுவப்பட்ட பிரித்தானிய வேர்க்கர்ஸ் கட்சி 7.5 வீதமும் பல்லின பல்பண்பாட்டு மக்களான நிறமக்களுக்கு (Colour People) எதிரான அதீத வலதுசாரிக் கட்சியான றிவோர்ம் யூ.கே. கட்சி 2.5 வீதமும் அதிக வாக்குகளைப் பெற்றமை பிரித்தானியாவில் காலநிலை மாற்றத்துக்குக் காரணமான இயற்கையைச் சீரழிப்பதற்கு எதிரான முயற்சிகளுக்கும், தொழிலாளர் நலன்பேணு முயற்சிகளுக்கும், பிரித்தானியாவில் குடிவரவு பெற்றவர்களுக்கு எதிராக பிரித்தானியாவைப் பிரித்தானியர்களுடையதாகவே மாற்ற வேண்டும் என்ற முயற்சிகளுக்கும் மக்கள் ஆதரவு பெருகி வருவதை உலகுக்கு உணர்த்தியுள்ளது. அவ்வாறே 14 ஆண்டுகளாகப் பிரித்தானியாவை ஆட்சி செய்த கொன்சர்வேடிவ் கட்சிக்கு 7.3 வீத வாக்குகளும் மற்றும் லிபரல் கட்சிக்கு 4.6 வீத வாக்குகளும் 2019ம் ஆண்டுத் தேர்தலை விடக் குறைவாக இத்தொகுதியில் பதிவாகின. இந்த மாற்றத்துக்கான முக்கிய காரணம் குறைந்த வீத வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மக்களின் கருத்துக்களைக் கேட்கவும் அதற்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்திச் செயற்படவும் தவறினமையே ஆகும்.
இன்று சமகால உலகில் சிவில் அமைப்புக்கள் ஊடகங்கள் என்கிற இரு கட்டமைப்புக்களே மக்களின் எண்ணங்களையும் தேவைகளையும் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப வெளிப்படுத்தும் முக்கிய தளங்களாக உள்ளன. இதனாலேயே இலக்கு, தாயகத்திலும் புகலிடம் பெற்று வாழும் நாடுகளிலும் சிவில் அமைப்புக்களுக்கு உரிய மதிப்பளியுங்கள் ஊடகத்துக்கு உரிய இடமளியுங்கள், இவையே சமகாலத்தில் மக்களின் குரலாக வெளிப்படும் ஆற்றல்கள் என்பதை மீளவும் மீளவும் வலியுறுத்திக் கூறி வருகிறது. மேலும் லெஸ்ரர் தொகுதியில் லேபர் கட்சியின் நிழல் அமைச்சர்கள் அலுவலக அமைச்சர் ஜோனாத்தன் அஸ்வேர்த் (13760 வாக்குகள்) “இது காசாவுக்கான வெற்றி” எனப் போட்டியிட்ட சொக்கட் அடம் (14739 வாக்குகள்) அவர்களிடம் 1069 வாக்குகளால் தோல்வியடைந்ததும், லேபர் கட்சியின் முன்னாள் ஹோம்செகரட்டரி ஜக்ஸ் ஸ்ரோவின் தொகுதியாக விளங்கிய பிளக்பேர்னில் லேபர் கட்சியின் கேட் கொலர்ன் (10386 வாக்குகள்) முஸ்லீம் வேட்பாளரான அடனன் குசைன் (10518 வாக்குள்) அவர்களிடம் 132 வாக்குகளால் தோல்வி கண்டதும், டுவஸ்பெரி அன்ட் பட்லியில் லேபர் கட்சியின் நிழல் சன்சிலர் ரேச்சல் ரீவ்ஸின் முன்னாள் ஆலோசகர் கீத்தர் இக்பால் (8707 வாக்குகள்) அவர்கள் (15641 வாக்குகள்) அவர்களிடம் 6934 வாக்குளால் தோல்வி கண்டதும், பேர்மிங்காம் பெரி பாரில் லேபர்கடச்யின் பாராளுமன்ற உறுப்பினர் கலித் மொகமட் (12796) முஸ்லீம் வேட்பாளரான அயூப்கான் (13303) அவர்களிடம் 507 வாக்குகளால் தோற்றதும் இன்னும் பல தொகுதிகளில் முஸ்லீம் வேட்பாளர்கள் போட்டியிட்டதால் எல்லாக்கட்சியினரும் வாக்குகள் சிதறுண்டு திணறியதும் முஸ்லீம் மக்கள் தங்களுக்கான கட்சியை உருவாக்கித் தங்களின் தேவைகளை குறைகளை அடைவதற்கான அழுத்தக்குழுவாகச் செயற்படத் தொடங்கியதன் எடுத்துக்காட்டு. இவ்வாறே ஈழத்தமிழர்கள் தங்களுக்கான பிரித்தானியத் தமிழர் கட்சியொன்றை உருவாக்கினாலே கட்சிகளில் தங்கிவாழாது சுதந்திரமான முறையில் தங்களின் தேவைகளை குறைகளை தீர்ப்பதற்கான அழுத்தக் குழுவாக மாறமுடியும் என்பது இலக்கின் உறுதியான கருத்து. ஈழத்தமிழர் இறைமையைப் பேணுவதற்கான அழுத்தக் குழுவாக ஈழத்தமிழர்கள் மாறுவதற்கு பிரித்தானியத் தேர்தல் முடிவுகள் வழிகாட்டட்டும்.

Tamil News