ஈழத்தமிழர்களின் நிதியியல் தன்னாட்சி வளர்ச்சியே ஈழத்தமிழர் இறைமையைப் பாதுகாக்க ஒரேவழி | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 245
அமெரிக்க சீனாவின் உலகின் மீதான அதிகாரப் போட்டியாலான இரு முனைவாக்கத்தால் மீண்டும் காலனித்துவ பேரரசுருவாக்கம் தோன்றக்கூடிய புதிய உலக ஒழுங்குமுறையாக மாறக்கூடிய பேரபாயம் தோன்றியுள்ளதை இந்து பசுபிக் பெருங்கடல் கரைகளில் உள்ள சிறுதேசங்களின் இறைமை இழப்பு வெளிப்படுத்துகிறது என்று பிரான்சிய அரசத்தலைவர் மக்ரோன் கடந்த வாரத்தில் பசுபிக் மாக்கடலில் சீனா அமெரிக்கா அவுஸ்திரேலியா என்பவற்றுக்கு இடையில் அமைந்துள்ள பசுபிக் தீவுகளுக்கு சென்ற பின்னணியில் உலகுக்கு எச்சரிப்புச் செய்துள்ளார். அமெரிக்கா சீனா அவுஸ்திரேலியாவுக்கு இடையில் உள்ள பசுபிக் மாக்கடல் தீவுகளில் அமெரிக்கா செலுத்தி வந்த மேலாண்மை மூலமான காலனித்துவபாணி ஆட்சிப்படுத்தலுக்கு எதிராகச் சீனா அந்த நாடுகளுக்கான உதவிகளை அதிகரித்தல் பொருளாதார வளர்ச்சிகளை உருவாக்கல் ராஜதந்திரத்தொடர்புகளைக் கட்டமைத்தல், பாதுகாப்பு ஓத்துழைப்புக்களை ஏற்படுத்தல் என்கின்ற நால்வகையான முயற்சிகள் வழியாக தனது மேலாண்மையைப் பலப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அவுஸ்திரேலியா பிரான்சுக்கு 90 பில்லியன் டொலர்கள் நட்டத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் 2021இல் அதனுடான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையினை விலக்கி அமெரிக்காவுடனும் பிரித்தானியாவுடனுமான உடன்படிக்கையின் வழி அணுவாயுத நீர்மூழ்கிக்கப்பலை பெற எடுத்த செயற்பாடுகள் பிரான்சுக்கு மீளவும் ஆங்கிலம் பேசும் காலனித்துவப் பேரரசு ஒன்றுக்கான தொடக்கமாகிறது என்ற பலத்த சந்தேகத்தை விளைவித்தது. இது அவுஸ்திரேலிய பிரான்சு உறவில் நம்பிக்கையீனங்களை தோற்றுவித்த நிலையில் ஆசியநாடுகளின் இந்துமாக்கடல் வலயம் என்பது புதிய காலனித்துவ பேரரசுக்கள் பசுபிக் இந்துமாக்கடல்களில் தோன்றுவதைத் தடுக்கும் உலகப்பாதுகாப்பாக அமையும் என்ற நம்பிக்கையை உலகநாடுகளிடை வேகமாக வளர்ச்சியடையச் செய்கிறது. இந்த எதிர்பார்ப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் சிறிலங்கா ஜனாதிபதி அவரது பிரித்தானியா வருகையைத் தொடர்ந்து பிரான்சுக்கும் சென்று இருநாடுகளுக்கும் சிறிலங்கா அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப உதவும் என்ற உறுதிப்பாட்டைத் தோற்றுவித்தார். இந்த சிங்கள ராஜதந்திரத்தின் தொடர்ச்சியாக சிறிலங்காவுக்கு அதன் வரலாற்றில் முதன்முதல் வருகைபுரிந்த பிரான்சிய ஜனாதிபதியாக பிரான்சிய ஜனாதிபதி மக்ரோன் கடந்த வெள்ளிக்கிழமை வருகை புரிந்துள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி இந்தியாவுக்கு கடந்த வாரத்தில் சென்று, மாக்கடல்களை மையப்படுத்திய புதிய அரசியல் சூழ்நிலையை எதிர்கொள்ள இந்தியா எடுக்கும் முற்பாதுகாப்புச் செயற்திட்டங்களில் தன்னையும் இணைத்து தான் இந்தியாவின் பங்காளியாகவும் பயணிக்க உறுதியளித்ததும் அல்லாமல் இந்தியாவின் ரூபாவில் சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தகத்தை முன்னெடுக்கச் சிறிலங்காவை ஊக்குவிக்கும் இந்தியாவின் தீர்மானங்களையும் ஏற்றுக்கொண்டார். அதற்காக இந்தியாவிடம் இருந்து தான் பெறக்கூடிய உச்சக்கட்டப் பயன்களைப் பெறுவதற்கான அடித்தளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளவும் செய்தார். இந்நிலையில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் கனவாக இருந்த இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த ரணில் விக்கிரமசிங்காவுக்கு அழுத்தம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு வெறுமனே வாயளவில் 13ம் திருத்தத்தின் அடிப்படையில் மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடாத்தி இலங்கைத் தமிழர்களுக்கான கண்ணியமான வாழ்வை கொடுங்கள் என்ற இந்தியப் பிரதமரின் வேண்டுகோளாக முடிந்தது. அதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல் ரணில் விக்கிரமசிங்கா தனது உரையை நிகழ்த்தி இந்தியாவுக்குச் சிறிலங்காவின் உள்நாட்டு விடயங்களில் தலையிடும் உரிமை இல்லையென ராஜதந்திரமுறையில் வெளிப்படுத்திக் கொண்டார். இதனை “நிறைவேறாத நிலையில்” என்ற ஆசிரிய தலையங்கத்தின் மூலம் ‘த இந்து’ உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா இலங்கைத் தமிழர்கள் மேல் காட்டும் அக்கறைகளை சிறிலங்கா அலட்சிப்படுத்துகிறது என்ற அரசியல் எதார்த்தத்தை இந்துப்பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. அதனை உறுதிசெய்யும் வகையில் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டாலே இந்தியாவில் தீர்மானங்களாகச் சிறிலங்கா ஏற்ற எதையும் நடைமுறைப்படுத்தும் என அனைத்துக்கட்சி மாநாட்டில் தெரிவித்த சிறிலங்கா ஜனாதிபதி எல்லாமே ஒன்பது மாகாணங்களுக்கும் பொதுவானது என்ற நிபந்தனையையும் அறிவித்து 13ம் திருத்தத்தைத் தொடக்கப்புள்ளியாகக் கொண்டு முன்னேறுங்கள் என்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் சு. ஜெயசங்கரின் கூற்றை அர்த்தமற்றதாக்கவும் செய்துள்ளார்.
அதேவேளை இவ்வாரத்தில் யப்பானிய வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்கா வருகை யப்பானை வடக்கில் பெருநில விவசாயத்துள் பங்கேற்க வைத்து சிறிலங்கா தனது தேவைகளுக்காகப் பயன்படுத்தும் உறவை வளர்ச்சி பெறவைக்கும் ரணிலின் திட்டமாகியுள்ளது. கூடவே ஆகஸ்ட் மாதத்தில் நேரடியாகச் சீனாவுக்குச் சென்று, சீனாவின் உலக வல்லாண்மை வளர்ச்சிக்குச் சிறிலங்கா எவ்வாறு பக்கத்துணையாக இந்தியாவைப் பொருட்படுத்தாமல் தொடரும் என்பதை உறுதிப்படுத்திச் சிறிலங்காவில் அதன் முதலீடுகளையும் சிறிலங்காவுக்கான அதன் உதவிகளையும் உறுதிப்படுத்தவுள்ளார். இந்த ராஜதந்திர விளையாட்டுத்தான் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் அறிவியல் வளர்ச்சி பெற்ற தகவல் சமுதாயமாக உள்ள இன்றைய உலகில் தரவுகளும் தகவல்களும் உடன் பரிமாறப்படும் நிலைகள் படுவேகமாக உள்ள சூழலிலும் ஈழத்தமிழர்களை இனத்துடைப்பு இனஅழிப்பு பண்பாட்டு இனஅழிப்புக்கு துணிந்து உள்ளாக்க வைக்கிறது. உலகநாடுகள் குறிப்பாக அமெரிக்கா சீனா ரஸ்யா பிரேசில் தென்னாபிரிக்கா என்பன பிரிக்ஸ் என்ற கூட்டொருங்கு கட்டமைப்பின் மூலம் தங்கள் நிதியியல் தன்னாட்சியை உலகநாடுகளிடை நிலைப்படுத்தி தங்களின் நாணயத்தில் இருதரப்பு வர்த்தகங்களையும் அனைத்துலக வர்த்தகங்களையும் முன்னெடுப்பதன் மூலம் டொலரே அனைத்துலக வர்த்தக இருப்புநிதியென்ற 1944 இல் பிரிட்டன்வுட்ஸ் அனைத்துலக நாணயநிதியத்தின் தோற்றம் முதலாக 79 ஆண்டுகள் தொடரும் நிலையை மாற்ற முயன்று வருகின்றன.
இதனால் அமெரிக்காவும் சீனாவும் இந்தியாவும் இலங்கையில் தங்கள் தங்கள் நாணயத்தில் சிறிலங்காவை அனைத்துலக வர்த்தகத்தை மேற்கொள்ளுமாறு செய்து தமக்கு வலிமை சேர்ப்பதற்கு போட்டியிடுகின்றன. கூடவே பசுபிக் இந்து மாக்கடல் பாதுகாப்புக்கும் இந்நாடுகளுக்குச் சிறிலங்காவுடன் தாங்களும் பங்காளர்களாக இருப்பது தவிர்க்க இயலாத தேவையாக உள்ளது. இதுதான் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையைச் சிறிலங்கா தீர்க்காது ஈழத்தமிழரின் இறைமையை மோசமாக்கி ஈழத்தமிழர்களின் தாயகத்தையும் ஈழத்தமிழர்களையும் இறைமை இழப்புக்கு மேலும் மேலும் உள்ளாக்கி தங்களின் அடிமைகளாக மாற்றச் சிறிலங்காவுக்கு உதவுகிறது.இதற்கு எதிர்வினை செய்வதாக இருந்தால் ஈழத்தமிழர்களின் நிதியியில் தன்னாட்சியை உலகத் தமிழர்களாக உள்ள ஈழத்தமிழர்கள் வலுப்படுத்திப் பலப்படுத்துவதன் மூலமே ஈழத்தமிழர்களின் இறைமையை முன்னெடுக்க முடியும். ஈழத்தமிழர்கள் தங்களுக்கான வங்கிக்கட்டமைப்பினை உருவாக்கி அதன்வழி தங்களின் உழைப்பின் நிதியாக்கத்தை கூட்டொருங்குப் படுத்தினால் நிச்சயம் ஈழத்தமிழர்களுடனும் தங்களின் நிதியியல் தன்னாட்சியை உறுதிப்படுத்த தங்கள் நாணயங்களில் வர்த்தகத்தை முன்னெடுக்கக் கூடிய உரையாடல்களை உலக நாடுகள் முன்னெடுப்பர்.இதனை கவர்ச்சிப்படுத்தக் கூடிய முறையில் உலக ஈழத்தமிழர்களுக்கான வர்த்தகத்தை கூட்டொருங்குபடுத்தக் கூடிய ஈழத்தமிழர் உலக வர்த்தக பேரவையும் உலக ஈழத்தமிழர்களுக்கான சமுக பொருளாதார அரசியல் ஆன்மிகக் கொள்கைகளை பொதுமைப்படுத்தி ஈழத்தமிழர்களின் பலத்தையும் வளத்தையும் உலகுக்கு உணர்த்தி அவர்களின் தேவைகளை ஒரே குரலில் ஒரே அணியில் உலகின் முன்வைக்கக் கூடிய ஈழத்தமிழர் உலகப்பேரவையின் உருவாக்கலே சமகாலத்தின் தேவை என்பது இலக்கின் உறுதியான எண்ணமாக உள்ளது.