இந்தோ சிறிலங்கா அதிகாரப் பகிர்வால் மேலும் ஒடுக்கப்படும் ஈழத்தமிழர் இறைமை | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 244
இந்திய அரசும் இலங்கை அரசும் தமது இறைமை அதிகாரங்களை வளர்ந்து வரும் புதிய உலக அரசியல் ஒழுங்குமுறைமையிலும் தமது நாடுகளின் பொருளாதாரக் கூட்டு முயற்சிகளிலும் பகிர்ந்து கொள்வதற்கான ஐந்து புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை புதுடில்லிக்கு அழைத்து 21.07.23இல் கைச்சாத்திட வைத்துள்ளார்.
இந்த ஐந்து உடன்படிக்கைகளில் கால்நடைகளின் வளர்ச்சியை இந்தியா கிழக்கில் மேற்கொள்தல் என்ற உடன்படிக்கை மிக முக்கியமானது. இந்தியா ஈழத்தமிழர்களின் தாயகத்தின் பொருளாதார வளம் மிக்க தென்தமிழீழத்தில் தன்னை கால்நடைப் பண்ணைகள் வழி நிலைநிறுத்தி இஸ்லாமியப் பயங்கரவாதம் தென்னிந்தியக் கடல் எல்லைகள் வழி உள்நாட்டுக்குள் நுழையாது தடுப்பதற்கும் சிறிலங்கா அரசு இந்தியா அல்லாத வேறு எந்த நாட்டையும் பொருளாதார வளர்ச்சியென்ற பெயரில் திருகோணமலை முதல் கல்குடா வரையிலான இந்து மாக்கடல் பகுதிகளில் நிலைநிறுத்துவதைத் தடுப்பதற்கும் உதவுவதால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கான தேவைக்கு இது அதி முக்கியமானதாக அமைகிறது. அத்துடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் தலைமையில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக்குழுவினர் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்சாவைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கையில் சிறிலங்காவின் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுடனான இந்த முற்பாதுகாப்பு உடன்படிக்கைகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தன என்பது ஈழத்தமிழர்களுக்கும் தெரியும் என்பதால் இந்தியாவின் இந்த முயற்சிகளுக்கு அவர்கள் என்றுமே ஆதரவாகவே இருப்பர். இதனை இந்தியா உணர்ந்து ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான அமைதிக்கும் வளர்ச்சிக்கும் உதவுவதன் மூலம் ஈழத்தமிழர்களுடன் தன் நல்லுறவை வளர்ப்பது இந்த மாற்றப்படக் கூடிய உடன்படிக்கைகளை விட மாறாத பாதுகாப்பாக இந்தியாவுக்கு அமையும் என்பதையே உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல தமிழகத் தமிழர்களும் எடுத்துரைக்க வேண்டிய நேரமிது.
இந்தியாவின் அனைத்துலகப் பாதுகாப்புக்குச் சிறிலங்காவின் சீனச்சார்பு நிலையில் இருந்து அதனை வெளிக்கொணர அயலவர்களுக்கு முதலிடம் என்ற இந்திய வெளிவிவகாரக் கொள்கைக்கு கீழ் சிறிலங்காவை அரவணைக்க வேண்டிய நிலையில் இந்தியா இருப்பதைச் சிறிலங்கா பயன்படுத்தித் திருகோணமலை மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவை நிலைப்படுத்தி இந்தியத் துணையுடன் உருவாக்கப்படவுள்ள அனைத்து பொருளாதார முயற்சிகளிலும் சிங்களவர்களை குடியமர்த்தி தமிழீழத்தின் தலைநகராக முன்மொழியப்பட்ட திருகோணமலையைச் சிங்களமயமாக்கம் செய்து ஈழத்தமிழர்களின் இறைமையை என்றுமே செயல்படுத்த இயலாத நிலைக்குக் கொண்டு வரும் தனது ஈழத் தமிழர் இறைமை ஒடுக்க அரசியல் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதுவே திருகோணமலையில் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கான இந்திய சிறிலங்கா உடன்படிக்கையாக இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்தாகியுள்ளது.
அடுத்து தற்போது இந்திய ரூபாவை அனைத்துலக வர்த்தகத்திற்கான டொலருக்கு மாற்று அனைத்துலக நிதியாக தரம் உயர்த்த இந்தியா எடுத்து வரும் அனைத்துலக முயற்சிகளில் சிறிலங்காவிலும் அதன் அனைத்துலக வர்த்தகத்திற்கான நாணய பரிமாற்றத்திற்கு இந்திய ரூபாவை நிலைப்படுத்தும் தனது முயற்சியில் ஐ.பி. எஸ், லங்கா பே ஆகிய நிறுவனங்களுக்கு இடையில் நெட்வேர்க் டு நெட்வேர்க் தொடர்புகளை வலுப்படுத்தும் உடன்படிக்கையான ஒன்றுபட்ட பணம்செலுத்துகை முறைமைக்கான உள்முக உடன்படிக்கை (Unified Payments Interface) சிறிலங்காவாலும் இந்தியாவாலும் கைச்சாத்திடப்பட்டது.
அடுத்த உடன்படிக்கை தென்னிந்தியாவில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாய்களை யாழ்ப்பாணத்துக்கு அமைக்கும் உடன்படிக்கை. இது ரணில் விக்கிரமசிங்கா இந்தியாவுக்குச் சிறிலங்காவில் இருந்து வந்த எண்ணெய் முற்றுரிமை விற்பனையை சீனா அமெரிக்க அவுஸ்திரேலிய எண்ணெய்க் கம்பெனிகளிடை பிரித்து முறியடித்தமைக்கான மாற்று செயற்பாடாக இந்தியாவால் சிறிலங்காவுடன் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து புதுப்பிக்கத்தக்க சக்திகளை சிறிலங்கா பெறுவதற்கான அடுத்த உடன்படிக்கையை இந்தியா செய்து சிறிலங்காவில் எண்ணெய் மின்சாரம் எரிவாயு போன்றவற்றுக்கு அருந்தல் நிலைகள் ஏற்பட்டு இலங்கைத் தீவில்; மக்கள் பாதிப்படைவதைக் குறைக்க உதவியுள்ளது. மேலும் தமிழகத்தில் அமெரிக்காவின் கடற்படைத் தளநிலைப்பாடும் கூட சீன வல்லாண்மை தென்னிந்தியக் கரைவழியாக இந்தியப் பாதுகாப்புக்கு பிரச்சினையாகிவிடாது இருப்பதற்கான அமெரிக்கத் துணை பெறும் முன்னேற்பாடு என்ற வகையில் தமிழகத்துக்கும் ஈழத்தமிழர் தாயகத்துக்குமான தொடர்புகளைப் பலப்படுத்தல் இந்தியாவின் தவிர்க்க இயலாத சமகாலத் தேவையாக உள்ளதென்பதையும் ஈழத்தமிழர்கள் நன்கறிவர். இந்த அடிப்படையில் தான் பலாலி சென்னை திருச்சி மதுரை விமானச்சேவைகளின் விரிவாக்கங்களும் காங்கேசன்துறை நாகபட்டினம் கப்பல் போக்குவரத்து இணைப்பும் மன்னாருக்கான பாம்பன் புயலால் பாதிப்புற்ற கடல் வழிப் புகையிரதப் பாலத்தை முன்னர் இருந்தது போல் திரும்பவும் மீளமைப்பதும் வடக்கின் சந்தை விரிவாக்கத்துக்கு உதவும் புகையிரதப்பாதைக்கு மூவாயிரம் கோடி இலங்கை ரூபா செலவழிப்பும் உள்ளன.
மக்களுடன் மக்கள் இணைப்புத் தொடர்பு என்னும் அரசியல் தந்திரோபாயமும் தொழில்நுட்ப அறிவியல் சந்தை இணைப்புத் தொடர்புகள் என்ற பொருளாதாரத் தந்திரோபாயமும் இந்தியாவின் அயலவர்களுக்கு முதலிடம் என்ற வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படையில் இந்தியா தனது சமகாலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு நிறைவேற்றுகிறது. இதனைச் சில தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் தங்களால் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் நெறிப்படுத்தப்பட்டதன் பலன் எனப் பரப்புரை செய்து தங்களின் அரசியல் அறியாமையை உலகுக்கு வெளிப்படுத்தவும் செய்துள்ளனர்.
அவ்வாறே 36 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாது கிடப்பில் சிறிலங்காவின் ஆட்சியாளர்களால் வளர்த்தி வைக்கப்பட்டு செயற்பாட்டுக்கு கொண்டுவரப்படாத வகையில் சிறிலங்கா நீதிமன்றங்களால் முப்பது முறை அதற்கான பல்வேறு மதிப்புரைத் தீர்ப்புகள் பெற்று மகிந்த ஆட்சிக்காலத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைக்கப்பட்ட மாகாணசபை என்ற கட்டமைப்பும் கலைக்கப்பட்டு உருக்குலைந்த நிலையில் உள்ள இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் பொலிஸ் அதிகாரம் இல்லாத மாகாணசபைகளை ஏற்றல், தேர்தல் நடக்கும் வரை இடைக்கால சபையொன்றைப் பெறுதல் என்பதை ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு உதவமென ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் இந்தியப் பிரதமரை அழுத்தங்கள் கொடுக்குமாறு கேட்ட நிலையில் அதற்குரிய அழுத்தங்கள் கூட இந்தியப் பிரதமரால் கொடுக்கப்படாது சிறிலங்கா கண்ணியமான வாழ்வை தமிழர்க்கு அளிக்கும் என்னும் நம்பிக்கையை மட்டுமே அவர் வெளிப்படுத்தியுள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி இந்த நம்பிக்கை குறித்துக் கூட எதுவுமே பதிலளிக்கவில்லை. இந்நிலையில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் கையாலகாத்தனத்தால் இன்றைய இந்தோ சிறிலங்கா உடன்படிக்கைகளால் மேலும் ஒடுக்கப்படும் நிலையையே ஈழத்தமிழர் இறைமை அடைந்துள்ளது என்பதை இலக்கு எடுத்துரைத்து இனி ஈழத்தமிழ்மக்கள் தாயகத்திலும் புலத்திலும் ஒருங்கிணைந்து தமக்கான தீர்வுகளை உருவாக்கி இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்துக்கும் வெளிப்படுத்தியே தங்களுக்கான பாதுகாப்பான அமைதியையும் வளர்ச்சிகளையும் பெறலாமென்பதே இலக்கின் எண்ணமாக முன்வைக்கப்படுகிறது. ஈழமக்கள் சபைகள் மலரட்டும். ஈழமண்ணும் ஈழமக்களும் நலம்பெறட்டும்.