இறைமை பாதிப்புள்ளான நிலையில் வாழவியலாது தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு உலகே உடனுதவு | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 243
கும்பிடும் கடவுளுக்குப் பொங்கலிடவும் உரிமையற்ற நிலையில், வழிபாட்டுச் சுதந்திரம் ஒன்று கூடும் சுதந்திரம் என்பன மறுக்கப்பட்டுத், தங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான சொந்த மண்ணில், பாதுகாப்பான முறையில் தீமூட்டி அரிசி பொங்கும் நாளாந்த வாழ்வுக்கான மண்ணின் மேலான இறைமையும் கூட இல்லாத அடிமை நிலையை ஈழத்தமிழர்கள் அடைந்து விட்டனர்.
இதற்கு நேற்று வெள்ளிக்கிழமை 14.07.2023 அன்று குருந்தூர் மலையில் வெலிஓயா சம்புமல்தன்ன விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர், தமிழரின் இந்துமாக்கடல் நகரங்களில் ஒன்றான முல்லைத்தீவின் தண்ணீரூற்றுப் புகுதியில் அமைந்துள்ள தொன்மை மிகு முருகவழிபாட்டு மலையான குருந்தூர் மலையில், அதனை ஆக்கிரமித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற இடைக்காலத் தடையுத்தரவையும் மீறி வலுக்கட்டாயமாகத் தான் கட்டியுள்ள குருந்தி விகாரையின் விகாராதிபதியாகத் தன்னையே பிரகடனப்படுத்திப், பேருந்துகளில் சிங்களக் காடையர்களையும் மதவெறி இனவெறிப் பிக்குகளையும் கொண்டு வந்து இறக்கி, அங்கு வழமைபோல வெள்ளிக்கிழமைப் பொங்கலிட்டு முருகனை வழிபடச் சென்ற ஈழத்தமிழர்கள் மேல் நடாத்திய, பண்பாட்டு இனஅழிப்பினை மேற்கொள்ளும் நோக்கிலான, அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான மனித உரிமைகள் வன்முறைகள், உலகநாடுகளினதும் அனைத்துலக அமைப்புக்களதும் கவனத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டிய பாரதூரமான உலக அரசியல் விடயமாக உள்ளது.
அது மட்டுமல்ல சுவீடனில் புனித குரானின் பிரதியொன்றை இஸ்லாமிய மக்களின் மனதைப் புண்படுத்தக் கூடிய விதத்தில் தனிநபர் ஒருவரால் துருக்கித் தூதுவராலயத்துக்கு முன்னால் எரிக்கப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே, சைவத்தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகின் அனைத்து மததத்தினருக்கும் பொதுவான இயற்கை வடிவிலும், ஒளிவடிவில் இறைவைனைத் தொழுதிட பாதுகாப்பான முறையில் கொளுத்தப்பட்ட கற்பூர ஒளியைச் சிறிலங்காவின் பொலிஸ் அதிகாரி தனது சப்பாத்துக்காலால் மிதித்து தமிழரின் மனதைப் புண்படுத்தும் நோக்கில் அவமானப்படுத்தியமையையும் இந்தியா ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னெடுத்து அதனைக் கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றச் செய்ய வேண்டும். இந்தியா இதனைச் செய்யாத இடத்தில் தமிழர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளில் உள்ள உலகத் தமிழர்கள் இதனை உலக மக்கள் மயப்படுத்தி நாளாந்த வாழ்வை வாழ இயலாத அளவுக்கு தங்கள் வரலாற்றுக்கு முன்னான காலம் முதலான சொந்த மண்ணில் மண் மீதான இறைமைப் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஈழத்தமிழர்களுக்கு உடன் உதவுங்கள் எனக் கேட்க வேண்டிய தாயகக்கடமைப் பொறுப்பில் உள்ளனர் என்பதை வலியுறுத்திக் கூற வேண்டிய நேரமிது.
அதுமட்டுமல்ல 1983 இல் இதே யூலை மாதத்தில், எவ்வாறு அரசபயங்கரவாதத்தைச் சிறிலங்கா அரசாங்கம் தனது படையினர் மூலமாக முன்னெடுத்துச் சிங்கள இனவெறி மதவெறிக் கும்பல்களை வாகனங்களில் கொண்டு வந்து இறக்கி ஈழத்தமிழர்களின் சொத்துக்களைக் கொள்ளையிடவும் தொழில் மற்றும் வர்த்தக நிலையங்களை எரித்து அவர்களின் பொருளாதாரத்தை அழித்து அவர்களின் வாழ்வை வாழாதபடி வடக்கு கிழக்குக்குத் தான் உங்கள் மண் அங்கு போங்களென அகதிகளாக விரட்டி இனஅழிப்பின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களை இனப்படுகொலைகளைச் செய்து அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்டுத் தமதாக்கினரோ, அதே போல் நாற்பது ஆண்டுகளின் பின்னரும் அதே அரசபயங்கரவாதத்தின் மூலம் அவ்வாறே மதவெறி இனவெறிக் கும்பல்களைப் பேருந்துகளில் கொண்டு வந்து இறக்கி தமிழர்களின் தாயகமென அன்று அவர்களே ஈழத்தமிழர்களை விரட்டியடித்த அந்த ஈழத்தமிழர்களின் தமிழீழத் தாயகத்தின் உள்ளேயே, சிங்கள பௌத்த மரபுரிமைக்குரிய பகுதியென்ற வரலாற்றுத் திரிபுவாதத்தின் மூலம், தமிழர்களின் நாளாந்த வாழ்வை இனஅழிப்புக்கும் பண்பாட்டு இனஅழிப்புக்கும் உள்ளாக்கும் ரணில் ராசபக்ச கூட்டொருங்கு தலைமையிலான இன்றைய சிறிலங்கா ஆட்சியாளர்கள், ஈழத்தமிழர்களின் வழிபாடடுச் சுதந்திரத்தை மட்டுமல்ல உயிர் வாழும் உடைமைகளை வைத்திருக்கும் நாளாந்த வாழ்வை வாழும் அடிப்படை மனித உரிமைகளைக் கூட நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்யும் செயற்பாட்டால் குருந்தூர் மலை முதல் ஈழத்தமிழர் தாயகம் எங்கும் பண்பாட்டு இனஅழிப்பின் மூலம் இல்லாதொழிக்கும் தங்கள் இனஅழிப்பு அரசியலை வேகப்படுத்தி வருகின்றனர்.
இதனை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய பொறுப்புடைய இந்துமதப் பண்பாட்டுப் பாதுகாப்பாளராகவும், இலங்கையில் தமிழர்களின் கண்ணியமான வாழ்வுக்கு தனது இந்திய இலங்கை 1987ம் ஆண்டின் உடன்படிக்கையின் அடிப்படையில் 13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்தி உதவும் பொறுப்பைத் தமதாக்கி, ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக அமைப்புக்களதும் அனைத்துலக நாடுகளதும் ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையிலான தங்கள் அனைத்துலகச் சட்டக் கடமைகளைச் செய்ய விடாது தடுத்து நிற்கும், இந்திய துணைக்கண்ட பிராந்திய மேலாண்மையாகத் தன்னை முன்னிலைப்படுத்தும், பாரதிய ஜனதாக் கட்சியின் இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி அவர்களையும் இந்திய ஜனாதிபதி உட்பட இந்திய வெளிவிவகார அமைச்சர் நிதியமைச்சர் பாதுகாப்பு அமைச்சர்களையும் இவ்வாரத்தில் சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவும் அவரது பிரதமர் தினேஸ்குணவர்த்தனாவும் அவர்களது உயர்மட்டக் குழுவினருடன் சந்திக்க புதுடில்லிக்கு இந்திய அரசால் அழைக்கப்பட்டுச் செல்லுகையில் இந்தியா என்ன செயய்ப் போகிறது என்பது முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது.
மூவாயிரம் கோடி இலங்கை ரூபா செலவில் வடக்குக்கான புகையிரதப் பாதையைச் செப்பனிட்டு கடந்த வாரத்தில் வேகப்புகையிரதம் ஓட வழி செய்துள்ள இந்தியா ஈழத்தமிழர்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கான வீதிவரைபையும் அமைத்து ஈழத்தமிழர்களது தொன்மையையும் தொடர்ச்சியையும் பேணுவதன் மூலம் தமிழக ஈழ உறவாடலால் தனது பாதுகாப்பையும் வளர்ச்சிகளையும் மேலும் உறுதிப்படுத்த வேண்டுமென்பதே உலகத்தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாண்டு மார்ச் 18 இல் புதுடில்லியில் சிறிலங்காவின் கட்டிட வரைவுக் கலைஞர் ஜிவ்வொறி பாவாவின் வரைபடக்கலைக் கண்காட்சியினை தொடக்கி வைத்துப் பேசுகையில் “இரத்தம் தண்ணீரைவிடத் தடித்தது” என்பதற்கு உதாரணமாக இந்தியா அதன் பொருளாதார நெருக்கடி நேரத்தில் சிறிலங்காவுக்கு உதவிய முதல் நாடாகத் திழக்கிறது என உலகுக்கு எடுத்துரைத்தார். இந்த ஊக்கப்படுத்தல்கள் வழி இன்று இந்தியாவுக்கு அயலவர்களுக்கு முன்னுரிமை என்ற இந்திய வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படையில் தனக்கான பொருளாதார பாதுகாப்பு உதவிகளை பெறச் செல்லும் சிறிலங்காவின் தலைமைகளுக்கு தமிழ் அமைச்சர்களாகவும் சிவாச்சாரிய மரபில் இந்து மதத்தைக் காக்கும் மரபுரிமையுள்ளவர்களாகவும் உள்ள வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெயசங்கர் அவர்களும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் தங்கள் தமிழினத்துக்கு தங்கள் சைவமரபுக்குச் சிறிலங்கா எவ்வித அச்சமுமின்றி ஏற்படுத்தி வரும் பண்பாட்டு இனஅழிப்பு அவர்களது இரத்தம் தண்ணீரைவிடத் தடித்தது என்ற தமிழக ஈழத் தொப்புள் கொடியுறவை மீட்டுருச்செய்து சிங்களத் தலைமைகளுடன் இரத்த உறவாடல் எந்த அளவுக்கு அவர்கள் அதிகாரத்தில் இருப்பதால் இந்தியாவுக்கு முக்கியமானதாக உள்ளதோ அதைவிட ஈழத்தமிழர்களின் தமிழகத் தமிழர்களின் தொப்புள் கொடியுறவு போற்றப்படுவது இந்தியாவுக்கு அதிகாரம் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன அதன் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் பிரிக்க இயலாத சொத்தாக ஈழத்தமிழர் உள்ளனர் என்ற உண்மையை மத்திய அரசுக்குப் பலமாக எடுத்துரைக்க இரு தமிழமைச்சர்களையும் தூண்டும் என்பது இலக்கின் எதிர்பார்ப்பாகவுள்ளது. இந்திய சிறிலங்கா இரத்த உறவாடல் இரத்தம் சிந்தி உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள ஈழத்தமிழரின் இறைமைக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் அமையச் செயற்பட வேண்டிய பொறுப்புள்ளவர்களாக இந்த இருதமிழ் அமைச்சர்களும் உள்ளனர் என்பதும் இலக்கின் எண்ணமாக உள்ளது.