ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்கும் பண்பாட்டு இனஅழிப்பை பண்பாட்டு மீட்டுருவாக்க இயக்கத்தாலேயே தடுக்க முடியும் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 242

ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்கும் பண்பாட்டு இனஅழிப்பை
பண்பாட்டு மீட்டுருவாக்க இயக்கத்தாலேயே தடுக்க முடியும் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 242

இன்று ஈழத்தமிழர்கள் மேல் சிங்கள பௌத்த பண்பாட்டு மீட்டுருவாக்கம் என்ற பெயரில் சிறிலங்காவின் தொல்லியல் திணைக்களமும் பௌத்த பிக்குகளும் இணைந்து தொன்மையும் தொடர்ச்சியமான இறைமையுள்ள ஈழத்தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து தொல்லியல் ஆய்வுக்குரிய பகுதிகளாக மாற்றி ஈழத்தமிழர்களின் இறைமையை மூடிமறைக்க முயல்கின்றனர். அதே நேரத்தில் அந்நிலங்களில் பௌத்த விகாரங்களை அமைத்து அவற்றைப் பாதுகாப்பதன் மூலம் அந்நிலங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்து சிறிலங்காப் படையினர் ஈழத்தமிழர்களைக் கொத்துக் கொத்தாக இனஅழிப்புச் செய்து அந்நிலங்களில் புதைத்த மனிதப்புதைகுழிகளை உலகம் கண்டு கொள்ளாமல் செய்து சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பையும் மூடிமறைக்கவும் உதவுகின்றனர். இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான ஆற்றல் அற்றவர்களாக ஈழத்தமிழர்கள் காணப்படுவதற்குக் காரணம் ஒரு யுத்த அழிவின் பின் அப்பகுதிகளில் உடன் உருவாக்கப்பட வேண்டிய பண்பாட்டு மீட்டுருவாக்க முயற்சிகளை இதுவரை யாருமே முன்னெடுக்காதிருப்பதாக உள்ளது.
1977 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் ஈழத்தமிழர்கள் உருவாக்கிய தங்களுக்கான தன்னாட்சி உரிமையுள்ளவர்களாக வாழ்வதற்கான முயற்சிக்கு அனைத்துலகச் சட்டங்களின் கீழான ஒப்புதலை அளிக்குமாறு உலகநாடுகளையும் உலக அமைப்புக்களையும் தங்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சனநாயக வழிகளில் வேண்டி நிற்கின்றனர். இதனை பண்பாட்டு இனஅழிப்பின் மூலம் ஈழத்தமிழர்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் மாற்றியமைப்பதனால் தடுப்பதற்குச் சிறிலங்கா பாராளுமன்றக் கொடுங்கோன்மையுடன் கூடிய படைபல பிரயோகத்தைத் ஈழத்தமிழர்கள் மேல் நிலைநிறுத்தி வருவதில் இருந்து தப்பிப்பிழைத்து வாழ்வதே இன்றைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையாக உள்ளது.
இதன் உச்சக்கட்டமாகவே தொல்லியல் ஆய்வுக்கென ஈழத்தமிழர்களின் வளப்பகுதிகளையும் வனப்பகுதிகளையும் தமதாக்கி அங்கு பௌத்த விகாரங்களை அமைத்து வழிபாட்டாளர்களைப் பேருந்தில் கொண்டு வந்து இறக்கி அவ்விடத்தில் சிங்களக் குடியேற்றத்தை நிறுவி படைபல துணையுடன் அப்பட்டமான முறையில் அனைத்துலகச் சட்டங்களை முறைமைகளைச் சிறிலங்கா மீறி வருகிறது. அதனை சனநாயகவழிகளில் படைபல அச்சுறுத்தல்களுக்கு நடுவிலும் பிக்குகளின் சர்வாதிகாரப் பேச்சுக்களுக்கு மத்தியிலும் எதிர்க்க முயலும் ஈழத்தமிழர்களை அடிப்படைவாத அரசியல் நடத்துகிறார்கள் எனக் கிண்டல் செய்யும் சிங்களப் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் அமைச்சர்களும் தங்கள் செயற்பாட்டைச் சிங்கள பௌத்த பண்பாட்டு மீட்டுருவாக்கம் என்றே நியாயப்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் நீரிணைப்புக்கு நிலத்தை ஆழப்படுத்திய பொழுது வெளிவந்த மனிதப் புதைகுழிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண்புலிகளின் சீருடைகளையும் கொண்டதாக வெளிவந்து சிறிலங்காவின் இனஅழிப்புக்கு மேலுமொரு சான்றாகியது. 06.07.23இல் நீதிபதி முன்னிலையில் அகழ்வு காலை முதல் மாலை 3.30 மணிக்கு நிறுத்தப்படுவதற்கு இடையில் அங்கு 13 இடங்கள் மனித உடலங்களின் எச்சங்களுடன் கண்டறியப்பட்டுள்ளன. 1984 முதல் கொக்குத் தொடுவாய் மக்கள் வெளியேற்றப்பட்டு சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் சூனியப் பிரதேசம். கேப்பாப்புலவு வட்டுவாகல், பாரிய இராணுவ முகாங்கள் இருந்த பகுதிகளிலும் பெருமளவு நிலம் பௌத்த விகாரைக்கென ஒதுக்கப்பட்டமையும் மனிதப்புதைகுழிகளை மறைக்கும் சிறிலங்காவின் திட்டமா என்ற கேள்வியை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் எழுப்பியுள்ளார். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களும் இதனை வலியுறுத்தியுள்ளதுடன் மண்டை தீவில் புனித தோமையார் ஆலயக்கிணற்றுள் 60 இளைஞர்களைச் சிறிலங்கா இனஅழிப்புச் செய்து போட்டனர் என்ற தகவலையும் இன்றும் கடற்படையினர் மண்டைதீவில் 29 தனியாட்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலத்தைத் தமக்கானதாக ஆக்கிரமிப்புச் செய்ய முயல்வதாகவும் எடுத்துரைத்துள்ளார். இதற்கிடை பாராளுமன்றத்தில் பேசும் விடயத்திற்காக கைதாக்கி விசாரிக்க இயலாது என்ற சிறப் புரிமையை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர குருந்தூர் மலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற உத்தரவினை மீறி விகாரை கட்டி வழிபடும் பிக்குகளின் செயலைப் பார்வையிட நீதிபதி சென்ற பொழுது சரத்வீரசேகரா அங்கு சென்று நீதிவிசாரணையில் குறுக்கீடு செய்தமையைக் கண்டித்தமையைப் பாராளுமன்றத்தில் தமிழ் நீதிபதிகளுக்கான எச்சரிப்புக்கான நிகழ்வாக மாற்றி “இந்த நாடு சிங்கள பௌத்தநாடு என்பதைத் தமிழ் நீதிபதிகள் கவனத்தில் கொள்ள வேண்டுமென எச்சரித்துள்ளார். இதன்வழி இலங்கை சிங்கள நாடு பௌத்த நாடு என்ற சிங்கள பௌத்த பண்பாட்டு மீட்டுருவாக்கம் செய்தலையே சிறிலங்கா தனது ஈழத்தமிழின அழிப்புக்கான நியாயப்படுத்தலாக என்றுமே முன்னெடுப்பார்கள் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தங்கள் பண்பாட்டு மீட்டுருவாக்கத்தை முன்னெடுக்கக் கூடிய பண்பாட்டுப் பேரியக்கம் ஒன்றை உடன் உருவாக்கினாலே அவர்கள் மேல் சிறிலங்கா தொடர்சியாகத் தொடுத்து வரும் பண்பாட்டு இனஅழிப்புப் போருக்கு முகங்கொடுக்க முடியும்.
இதற்கிடை வடக்கில் மாணவர்களை சிறிலங்கா படைகளால் தேசிய மாணவர் படையணிக்குப் பயிற்றுவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தற்போது 40000 மாணவர்கள் தேசிய மாணவர் படையணியில் உள்ளனர் எனவும் இதில் 10000 பேரே வடக்கு கிழக்கில் உள்ளனர் எனவும் இதனால் இப்பகுதிகளில் தேசிய மாணவர் படையணியை அதிகரிக்கப்போவதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் ஜனாதிபதி ஊடகமையத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். இது தேசிய மாணவர் படையணிப் பயிற்சி என்ற பெயரில் ஈழத்தமிழர் பண்பாட்டில் வளர வேண்டிய ஈழத்தமிழ் இளையவரைச் சிறிலங்கா சிங்களப்பண்பாட்டுள் கொண்டு செல்வதற்கான முயற்சியின் தொடக்கமாக உள்ளது. இது ஈழத் தமிழர் தங்களுக்கான பண்பாட்டு பேரியக்கம் ஒன்றைத் தாயகத்தில் உலகத்தமிழர்களுடன் தொடர்புள்ளதாக உடன் தொடங்கி ஈழத்தமிழ் இளையவரை உரிய முறையில் வழிநடத்த வேண்டியதன் தேவையை தெளிவாக்குகிறது என்பதே இலக்கின் கருத்தாக உள்ளது. சமகால இளையவர் பிரச்சிளையான போதைக்கு அடிமையாதலில் இருந்து அவர்களை விடுவிக்கவும் பண்பாட்டுப் பேரியக்கம் பெரிதும் உதவும் என்பதும் இலக்கின் உறுதியான எண்ணம். உண்மையை
உறுதிப்படுத்தவும் நீதியை நிலைநாட்டவும் எதனையும் தாங்கி அமைதியுடன் வாழவும் உள்ளத்துக்குச் சக்தியளிப்பது பண்பாடேயாதலால் பண்பாட்டுப்பேரியக்கம் ஒன்று ஈழத்தமிழரின் சமூக பொருளாதார அரசியல் ஆன்மிக விடுதலைக்கான அடிப்படைத் தேவையாக உள்ளது என்பது இலக்கின் உறுதியான எண்ணமாகவுள்ளது.

Tamil News