ஈழத்தமிழர் இறைமை சமமாக மதிக்கப்படாதவரை
சிங்களவர் இறைமை தொடர்ந்து இழக்கப்படும் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 241
1983 முதல் இன்று வரை யூலை மாதம் என்றதுமே 40 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா தமிழர்களை இனஅழிப்பு செய்த கறுப்பு யூலை 83 என்னும் வரலாற்று நினைவுதான் ஒவ்வொரு ஈழத்தமிழர்க்கும் ஏற்படும்.
இந்த கறுப்பு யூலை ஈழத்மிழின அழிப்பினைச் சிறிலங்கா ஈழத்தமிழர்களின் சொத்துடைமைகளை அழித்து அவர்களது இறைமையை ஒடுக்கல் என்ற பொருளாதார நோக்கிலும், ஈழத்தமிழர்களை அவர்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்கை மட்டுமே அவர்களது தாயகமாக அவர்களுக்கு அடையாளப்படுத்தி வடக்குக் கிழக்குக்கு வெளியே வாழ்ந்த ஈழத்தமிழர்களின் நிலங்களையும் தொழில் வளங்களையும் வர்த்தக நிலையங்களையும் ஆக்கிரமிப்பின் மூலம் சிங்களவர்களுக்கு உரித்தாக்கும் போக்கிலும் நடாத்தியது.
ஈழத்தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கைத் தீவில் வரலாற்றுத் தாயகங்களைக் கொண்ட தேசமக்கள் என்ற உண்மையை திரிபுபடுத்தி இலங்கைத் தீவு சிங்கள நாடு பௌத்த ஆகமச் சட்டங்களுக்கு உரிய பௌத்த நாடு சிங்கள மொழி பேசுகிறவர்களுக்கு மட்டுமே உரிய நாடு என்கின்ற இனவெறி மதவெறி மொழிவெறி அரசியலை 1958ம் ஆண்டின் ஈழத்தமிழின அழிப்பின் 25வது ஆண்டு இனப்படுகொலை விழாவாகச் சிறிலங்கா 1983 ஆடியில் வெளிப்படுத்தியது.
ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்காவின் இந்த இனஅழிப்பின் மூலம் ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்கல் என்கின்ற சிறிலங்காவின் அரசியல் கொள்கை கோட்பாடுகளை அனைத்துலகச் சட்டங்களின் கீழ் தண்டிக்காமலும் கண்டிக்காமலும் விட்டதன் விளைவாகவே 2009 இல் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பை ஒரு தேசத்தையே இனஅழிப்புக்கு உள்ளாக்கிய உலக வரலாறாக 146000 ஈழத்தமிழ்க்குடிகளை இனப்படுகொலை செய்து 31 ஆண்டுகளாக நடைமுறையரசாக வளர்ந்து சட்டரீதியான அரசாக உலகநாடுகளின் ஏற்புடைமை பெறும் நிலைக்கு முன்னேறிக் கொண்டிருந்த ஈழத்தமிழர்களின் நடைமுறையரசை சிறிலங்கா படைபல ஆக்கிரமிப்புச் செய்து இன்று வரை ஈழத்தமிழர்களை படைபலத்தின் மூலம் ஆட்சிபுரியும் பாராளுமன்றக் கொடுங்கோன்மையரசாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இன்று சிறிலங்காவின் யூலை ஈழத்தமிழின ஆடிஇனஅழிப்பின் 40வது ஆண்டில் ஈழத்தமிழ் மக்கள் வாழ்கின்ற நிலையிலும் அதே இனவெறி மதவெறி மொழிவெறிப்போக்கில் எந்த ஒரு சிறு மாறுதலும் கூட இல்லாமல் ஒரே நாடு சிங்கள நாடு ஒரே சட்டம் பௌத்த ஆகமச் சட்டம் என்ற ராசபக்ச குடும்பத்தினரின் ஈழத்தமிழின இறைமை மறுப்பு அரசியலை அவர்களின் கைப்பொம்மை அரசின் அரசத்தலைவராக உள்ள ரணில் விக்கிரமசிங்கா சிறிலங்காவுக்கான புதிய அரசியலமைப்பை வடிவமைக்கும் முயற்சி ஊடாக வெற்றிகரமாகச் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
சிறிலங்கா ஈழத்தமிழர்களின் இறைமையை மதிக்காது தனக்கு பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் ஈழத்தமிழர்களின் விருப்பினைப் பெறாது அவர்களின் இறைமையைச் சிங்களப் பெரும்பான்மையினரின் இறைமையுடன் இணைத்து ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சிக்கு உட்படுத்தியதால் உருவான காலனித்துவ காலப் பிரச்சினையாகச் சிங்களப் பெரும்பான்மை பாராளுமன்றக் கொடுங்கோன்மை ஆட்சி இன்றுவரை ஈழத்தமிழர்களை இனஅழிப்புக்கு உட்படுத்தி அவர்களின் இறைமையை ஒடுக்க முனைந்து வருகிறது. இதற்குப் பலவழிகளிலும் துணைநின்று சிறிலங்காவின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து வரும் இந்தியா தற்போது அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிராக ஈழத்தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி அவர்களை அவர்களுக்கான அரசியல் எதிர்காலத்தை உருவாக்க விடாது தனது 36 ஆண்டுகளுக்கு முன்னதான இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 13வது திருத்தம் என்கின்ற நிர்வாகப் பரவலாக்கல் தீர்வு முறையினை தமிழர்களின் கண்ணியமான வாழ்வுக்கான தனது தீர்வாக இன்று வெளிப்படுத்தி நிற்கிறது. சிறிலங்கா தனது 1978ம் ஆண்டின் இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 17 வது அத்தியாயமான நிதி என்னும் அத்தியாயத்திற்கு ஆ பிரிவை இணைத்து அதில் நிதிப்பரவலாக்கத்தைத் தனது ஒன்பது மகாணங்களுக்கும் செய்வதற்கான மாகாணசபைகளை நிறுவும் முறைகளை அமைத்துக்கொண்டது. பின்னர் ஒன்பதாம் அட்டவணை மூலம் நிரல் I இல் மாகாணசபை நிரலில் மாகாணசபைக்கான பொலிசும் பொது ஒழுங்கும், சட்டமும் ஒழுங்கும், காணியும் காணிக்குடியேற்றமும், கல்வி என்பவற்றை மாகாணசபை எந்த அளவுக்கு தனதாகச் செயற்படுத்தலாம் என்பதை வரையறுத்தது. பின்னர் நிரல் II இல் ஒதுக்கிய நிரலால் பாதுகாப்பும் தேசிய பாதுகாப்பும் உள்நாட்டுப் பாதுகாப்புக் குறித்தும் நிரல் III இல் திட்டமிடலுக்கான ஒருங்கியை நிரலையும் கட்டமைத்து நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் நேரடி நிர்வாகத்தில் அவரால் நியமிக்கப்படும் மாகாண ஆளுநர்களின் கீழ் செயற்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாகாணசபை மூலம் அந்த அந்த மாகாணங்களுக்கான
நிர்வாகத்தை மேற்கொள்வதற்கான நிர்வாகப் பரவலாக்க முறைமைகளையும் சட்ட ஒழுங்குகளையும் எடுத்து விளக்கியது. இந்த 13வது திருத்தம் 1987இல் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரே நிர்வாக அலகாகக் கட்டமைத்தது. ஆயினும் இன்று அந்தநிலை இல்லை. இந்த 13வது திருத்தத்தைத்தான் இந்தியா இன்று சிறிலங்காவின் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கான பரிகாரநீதி யையும் தண்டனை நீதியையும் எதிர்பார்த்து நிற்கும் இலங்கைத் தமிழர்களின் கண்ணியமான வாழ்வுக்கான தொடக்கமாக இந்தியா முன்னெடுப்பது எந்த அளவுக்கு ஈழத்தமிழர்களுக்கு நியாயமானதும் நீதியானதுமான தீர்வாக அமையும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
இவ்வாறாக ஈழத்தமிழர்களின் இறைமையினைச் சமத்துவமாக மதியாது சிறிலங்கா தனது அரசியலைத் தொடரும் வரை சிறிலங்காவின் இறைமையும் உலக மட்டத்தில் வீழ்ச்சியுற்று இன்று கடன் மறுசீரமைப்புக்கள் மூலம் உள்ளும் புறமும், தனது இறைமையை இழந்து 51 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்களுக்கு கடன் மறுசீரமைப்பை செய்ய முயலும் சிறிலங்கா 14 டிரில்லியன் இலங்கை ரூபாக்களுக்கான உள்நாட்டு கடன் மறுசீரமைப்பில் 17.1 பில்லியன் கடன் மறுசீரமைப்பை தான் மத்திய வங்கியிலும் வர்த்தக வங்கிகளிலும் சேமஇலாபநிதிகளிலும் மற்றும் தனது பிணைமுறிகளை மீளப்பெற்று குறைந்த வட்டியில் வழங்குவது மூலமும் தனியாகவோ கூட்டாகவோ இந்த முறைகளைக் கையாண்டு நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. இவை ஏதோ ஒருவகையில் இவற்றில் வைப்பிட்ட பொதுமக்களை மேலும் பொருளாதாரத்தில் பலவீனப்படுத்தும் செயற்பாடாகவே தொடரும். இந்நிலையில் ஈழத்தமிழரின் இறைமையைச் சிங்களவர்கள் சமமாக மதிக்கின்ற காலத்தை உருவாக்கும் வரை சிங்களவர்களின்
இறைமையும் வீழ்ச்சியடைந்து கொண்டே செல்லும் என்னும் எச்சரிக்கையை இலக்கு சிறிலங்காவுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதே வேளை 13வது திருத்தத்திற்கு ஆதரவு அளித்து ஊக்குவிக்க பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை லண்டனுக்குக் கூப்பிட்டு வாழ்த்தியது போன்ற விடயங்களைச் செய்கையில் புலம்பெயர் தமிழர்கள் தங்களை அறியாமலே ஈழத்தமிழர்களின் இறைமையை ஒடுக்கும் செயலைச் செய்கின்றனர் என்பதையும் இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது.