இலங்கைத் தீவில் இறைமைகள் நல்லிணக்கத்தின் மூலமே இன நல்லிணக்கம் நடைமுறைச்சாத்தியமாகும் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 240

இலங்கைத் தீவில் இறைமைகள் நல்லிணக்கத்தின் மூலமே இன நல்லிணக்கம் நடைமுறைச்சாத்தியமாகும் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 240

சிறிலங்காவில் வெளியகப் பொறிமுறைகள் பயன்படுத்தப்படுவதற்கான சூழல் பலமடைந்து வருவதை 53வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் அதன் மனித உரிமைகள் துணை ஆணையாளர் நடா அல் நசிவ் அவர்களின் சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் என்பனவற்றின் முன்னேற்றங்கள் குறித்த கடந்த வார வாய்மொழி அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
“எது எப்படியிருப்பினும் பொறுப்புக்கூறல் பற்றாக்குறை சிறிலங்காவில் தொடருமானால் அனைத்துலக சமூகம் கண்டிப்பாக கட்டாய வழிகளில் அனைத்துலகச் சட்டமுறைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வெளியக நீதிவிசாரணை முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் குற்றமிழைத்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்கும். அத்துடன் குற்றமிழைத்தவர்கள் என நம்பகத்தன்மையாக அறியப்படுபவர்களுக்கு எதிராக மூன்றாவது தரப்பினரான அரசுக்கள் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்த எடுக்கும் நீதியான செயற்பாடான தடைவிதித்தல்களையும் அனைத்துலக சமூகம் ஆதரிக்கும்” என ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் துணை ஆணையாளர் நடா அல் நசிவ் அவர்கள் தனது வாய்மொழி அறிக்கையில் எச் சரித்துள்ளமை அனைத்துலக மட்டத்தில் சிறிலங்கா மீதான வெளியகப் பொறிமுறை விசாரணை வேகம் பெற்று வருவதை வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத் தரணியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்ட மூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான உரையில் ஐக்கியநாடுகள் சபையில் நடை பெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடரில் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் இலங்கை மீது நம்பிக்கை கொள்ள முடியாத தன்மை காணப்படுவதாக ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் துணை ஆணையாளர் உடைய அறிக்கை சுட்டிக்காட்டியிருப்பதை எடுத்துரைத்து “பொறுப்புக் கூறல் விவகாரத்தில் இலங்கை மந்தகரமாகவே செயற்படுகிறது. சுதந்திரமான விசாரணை முன்னெடுக்கப்படுவது சந்தேகத்துக்குரியதென உலகநாடுகளும் இன்று ஏற்றுக் கொண்டுள்ளன. உள்ளக விசாரணையில் ஒரு பொழுதும் நீதி கிடைக்காது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்” எனப் பேசியுள்ளமை வெளியக விசாரணைகளை தாமதியாது உடன் அனைத்துலக சமூகம் நடைமுறைப்படுத்தத் தாயகத்திலும் உலகிலும் ஈழத்தமிழர்கள் பொதுவெளியில் கூட்டொருங்கு இயக்கத் தலைமையினை உடன் உருவாக்கிச் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை மீளவும் உணர்த்தியுள்ளது. ஏனெனில் எந்தவொரு ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கக்கூடிய அனைத்துலகச் செயன்முறைகளையும் வல்லாண்மைகளதும் பிராந்திய மேலாண்மைகளதும் சிறிலங்காவுக்கான தற்சார்பு அரசியல் செயற்பாடுகள் தடுத்துவிடுவது வரலாறாக உள்ளது. எனவே ஈழத் தமிழர்களின் கூட்டொருங்குத் தலைமைத்துவ அமைப்பு ஒன்றாலேயே இந்தப் பிரச்சினையைச் சூழலுக்கு ஏற்ப எதிர்கொள்ள முடியும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
அமெரிக்க இந்தியக் கூட்டொருங்குத் தலைமைத்துவச் செயற்பாட்டின் மூலம் சிறிலங்காவினுடைய இறைமையும் ஆட்புல ஒருமைப்பட்டையும் பாதுகாத்தல் மூலம் சீன இந்துமாக்கடல் மேலாதிக்கத்தை மட்டுப்படுத்தல் என்கின்ற இந்தோ அமெரிக்கச் செயற்திட்டம் வேகமாக இருநாடுகளின் ஒருங்கிணைவுடன் நடைமுறைப்படுத்தப்படத் தொடங்கியுள்ளதை புதுடில்லியிலும் வாசிங்டனிலும் தங்கள் உரையாடலுக்கான ஈழத்தமிழர் பிரதிநிதிகளாகச் சிலரை வடிவமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவது உணர்த்துகிறது. இருநாடுகளதும் வெளிவிவகாரச் செயற்பாடுகள் இந்நாடுகளின் புலனாய்வுத் துறைகளாலும் வெளிநாட்டுக் கொள்கை வகுப்புக் குழுவினராலும் நாட்டின் கட்சி அரசியலுக்கு அப்பால் செயற்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் உலகறிந்த உண்மை.
அந்த வகையில் உலகத்தமிழர் பேரவையினர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பெயரில் அதன் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, உலகளாவிய குற்றவியல் நீதிக்கான துணைச்செயலாளர் பெத்வான், தேசிய பாதுகாப்புச் சபையின் இலங்கை, நேபாளம், மற்றம் மாலைதீவுக்கான பணிப்பாளர், செனட்டின் அயலுறவுத்துறைக் குழு அலுவலகத்தின் மூத்த பணிநிலைப் பணிப்பாளர் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். உலகத்தமிழர் பேரவையினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாட்டு நிகழ்ச்சிநிரலில் இருந்து இலங்கை குறித்த அக்கறை நீக்கப்படாதவாறு அமெரிக்கா பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்ததாகவும் அதற்கு உலகளாவிய குற்றவியல் நீதிக்கான துணைச் செயலர் அம்பெத்வான் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் ஒதுக்கப்படுவதை அமெரிக்கா அனுமதிக்காது என உறுதிமொழியளித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கூடவே அவர் இலங்கை மேலான கண்காணிப்புப் பொறிமுறைகள் ஐ.நா.வில் தொடரும் எனவும் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அச்செய்திகள் கூறியுள்ளன. சிறிலங்காவின் பொருளாதார மீட்சிக்கு அங்கு அரசியல் நிலைமை சீராக வேண்டுமெனவும் இதற்கு ஈழத்தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென உலகத் தமிழர் பேரவை கோரிக்கை விடுத்த பொழுது “இலங்கையில் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்குமான எந்தவொரு முயற்சிக்கும் அமெரிக்கா தனது முழுமையான ஆதரவை வழங்கும்” என்று உலகளாவிய குற்றவியல் நீதிக்கான துணைச் செயலர் அம்பெத்வான் மேலும் உறுதியளித்துள்ளார்.
இவ்விடத்தில் இன நல்லிணக்கம் என்பது மொழி மத இனசமத்துவத்தால் இலங்கைத் தீவில் உருவாக்கப்பட முடியாத அரசியல் பண்பாடு நிலவுகிறது என்பதை வல்லாண்மைகளுக்கும் பிராந்திய மேலாண்மைகளுக்கும் எடுத்து விளக்கி வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக, இலங்கைத்தீவில் தொன்மையும் தொடர்ச்சியுமுள்ள இறைமையுடன் ஈழத்தமிழ் மக்கள் உள்ளனர். இதன் அடிப்படையில் அவர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையை வல்லாண்மைகளும் பிராந்திய மேலாண்மைகளும் ஏற்பதன் வழியாக தமிழர் சிங்களவர் இறைமைகளுக்கு இடை நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதன் வழியாகவே நல்லிணக்க அரசியல் நடைமுறைச் சாத்தியமாகும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார விதந்துரைப்பாக உள்ளது.
இறுதியாக இந்தியாவால் ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தான் அணுகும் முகவர்களாக உருவாக்கப்பட்டு வருபவர்களுக்கும், பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்களின் பிரித்தானியா வாழ் இந்திய இலங்கைத் தமிழர்களைச் சந்திக்க இலண்டனுக்கு மேற்கொண்டுள்ள ஆறுநாள் அரசியற் செயற்திட்டத்தில் பங்கெடுக்கும் ஈழத்தமிழர் அமைப்புக்களைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு முக்கிய பொறுப்பு உண்டு என்பதை இலக்கு நினைவுறுத்த விரும்புகிறது. 36 ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 13வது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாணசபைகளுக்கான சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வழங்கப்படக்கூடிய வரிவருமானப் பகிர்வுகளின் சிறுகுற்றங்களைக் கையாள்வதற்கான மாகாணசபைப் பொலிஸ் கட்டமைப்பு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தலைமை நோக்கான சிறிலங்காவின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க மட்டுமே உதவும். ஈழத்தமிழர்களின் வெளியகத்தன்னாட்சி உரிமையை இந்தியா எப்பொழுது ஏற்கின்றதோ அப்பபொழுதுதான் இந்தியாவால் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான நீதியான தீர்வை முன்னெடுக்க முடியும். இதனை இந்தியாவுக்கு தெளிவுபடுத்துவதே உங்கள் பொறுப்பு என்பது இலக்கின் எண்ணம்.

Tamil News