தூதரகங்களின் ஆட்சியில் இலங்கை! சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தோல்வி | இலக்கு மின்னிதழ் 186 ஆசிரியர் தலையங்கம்

466 Views

இலக்கு மின்னிதழ் 186 ஆசிரியர் தலையங்கம்இலக்கு மின்னிதழ் 186 ஆசிரியர் தலையங்கம்

தூதரகங்களின் ஆட்சியில் இலங்கை! சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தோல்வி

இலங்கைத் தீவில் எல்லா மக்களும் நாளாந்த வாழ்வை வாழ இயலாத நிலையில் பெரும் துன்பங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், உடன் தேவையான பொருளாதார உறுதிப்பாட்டையும், தொடர் தேவையான பொருளாதார மீட்டெடுப்பு என்பதையும் முன்னெடுக்க பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சிறிலங்காவின்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் வரவு செலவுத்திட்ட அழைப்பு, காலத்தின் தேவையை வெளிப்படுத்துகிறது.

ஆனால் உடன்தேவை பொருளாதார உறுதிப்படுத்தல் என்ற நிலையில், அதற்கான அர்ப்பணிப்புக்களையும் உழைப்பையும் வழங்க வேண்டிய இலங்கையின் அனைத்து மக்களதும் தேசிய ஒருமைப்பாடு எதனால் சீர்குலைக்கப்பட்டதோ அதனை மாற்றியமைக்க வேண்டும் என்கிற எண்ணம் கூட அவரால் வெளிப்படுத்தப்படாது,  விலையுயர்வுகள், வரிகள் வழி வருமானத்தைப் பெற்று கடன் தருபவர்களுக்கு நம்பிக்கையளித்தலும், முதலீட்டாளர்கள் இலங்கையைச் சுரண்டுவதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவதும் இவ்வரவுசெலவுத் திட்டத்தின் செயல் நோக்காக உள்ளது.  மக்களுக்கான வரவுசெலவுத் திட்டத்தை அமைத்து, தேசிய உற்பத்தியை ஏற்றுமதி வர்த்தகத்தை பெருக்காது  தூதரங்களின் இலங்கை மீதான ஆட்சி அதிகாரத்தை மேலோங்கச் செய்வதன் மூலம் கடன் மற்றும் நிதி உதவிகள் வழியாக இன்றைய அரச தலைவர் கோட்டாபயவின் ஆட்சிக்கான நாட்டு மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்வதே அவரின் உரையின் உள்நோக்காக உள்ளது.

தொடர் தேவையான பொருளாதார மீட்டெடுப்பு என்பது இலங்கை மக்கள் அனைவரதும் சமூக பொருளாதார அரசியல் ஆன்மிக விடுதலையை உறுதிப்படுத்தி, அனைவருக்குமான தேசிய பாதுகாப்புடன் கூடிய  தேச உருவாக்கத்தை  கட்டியெழுப்புவதன் வழியாகவே நடைமுறைச் சாத்தியமாகும் என்பதை அவரின் உரை தொட்டுக்கூடக் காட்டவில்லை. இதனால் அவரின் அரசாங்கம் தேசிய அரசாங்கமல்ல, கோட்டாபயவின் ஆட்சியைக் காக்க அமைக்கப்பட்ட கோட்டாபயவின் இடைக்கால அரசாங்கம் என்பதை அவர் உறதிப்படுத்தியுள்ளார். தன்னைப் பிரதமராக நியமித்த கோட்டாபயவின் அனைத்துலக சட்டங்களுக்கோ முறைமைகளுக்கோ கட்டுப்படாத ‘ஒருநாடு ஒருசட்டம்’ என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உச்சத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே ரணில் தனது உரையைக் கட்டமைத்தார். கோட்டாபயவுக்கும் அனைத்துலக நாடுகளுக்கும் இடையில் மீளவும் இழக்கப்பட்டுள்ள நல்லுறவுகளை வளர்ப்பதை நோக்காகக் கொண்ட அவரின் உரை ராசபக்ச குடும்ப ஆட்சியின் தொடர்ச்சிக்கான அத்தனை நுணுக்கங்களையும் வெளிப்படுத்தியது.

ஆனால் பொருளாதார உறுதிப்பாட்டை சீர்குலைத்த ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினையான ஈழத்தமிழர்களின் இறைமையின் பாதுகாப்பு குறித்த பிரச்சினைக்கோ அல்லது முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கோ தீர்வு தரக்கூடிய ஒரு இணக்கப்பாட்டு உரையைக் கூட வெளிப்படுத்தாது, “பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை குறுகிய காலத்துக்கு ஒதுக்கி வைத்து விட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என நாட்டின் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக உள்ளது. இங்கு குறுகிய காலம் எனப் பிரதமர் ரணிலால் அழுத்தம் கொடுக்கப்பட்டமை, நாட்டின் பொருளாதார நிலைமை சீரானதும் சிங்கள பௌத்த பேரினவாதமே சிறிலங்காவின் தொடர்ச்சியான அரசியல் கோட்பாடாகத் தொடரும் என்பதைத் தெளிவாக்கியுள்ளது.

அடுத்த ஆறு மாதங்களில் இலங்கையின் வாழ்க்கையைச் சாதாரணமாக வைத்திருக்க 5 பில்லியன் டொலர்கள், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இணையாக ரூபாவை வலுப்படுத்த மற்றொரு 5 பில்லியன் டொலர்கள், நாட்டை மிதக்க வைக்க மற்றொரு  6 பில்லியன் டொலர்கள் என ஆறு மாதத்திற்கு 16 பில்லியன் டொலர்கள் தேவையில் சிறிலங்கா அரசாங்கம் உள்ளது. இதனை விட படுகடன் கட்டுவதற்கான பில்லியன் டொலர்களின் தேவை வேறு. இது சிங்கள பௌத்த பேரினவாதம், இனஅழிப்பு அரசியலை அரசியற் கோட்பாடாக்கி, 22.05.1972 இல் சிங்கள பௌத்த சிறிலங்கா ஆட்சியைப் பிரகடனப்படுத்திய 50 வது ஆண்டான இவ்வாண்டில் அதன் பொருளாதார நிலையாக உள்ளது.

சிறிலங்காவால் 22.05.1972 முதல் அரசற்ற தேசஇனமாக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் தங்களின் அரசியல் எதிர் காலத்திற்காக 146000க்கு மேற்பட்ட தமிழர்களை சிறிலங்கா அரசாங்கத்தின் இனஅழிப்பால் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வரை இழந்த நிலையில், துப்பாக்கிகளை மௌனிக்க வைத்து இன்று வரை சனநாயக ரீதியில் தங்களின் உயிர் வாழ்தலுக்கு உள்ள இனங்காணக் கூடிய அச்சத்தில் இருந்து விடுபடப் போரடிக்கொண்டிருக்கிறது.  ஈழத்தமிழர்களை அடக்கி ஒடுக்கி இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தும் இந்த இராணுவப் பொறிமுறைக்குத் தொடர்ந்து கொட்டப்படும் பில்லியன் டொலர்களைக் கட்டுப்படுத்தினாலே பொருளாதாரம் உறுதிப்படும் என்கிற உண்மையைச் சிறிலங்கா கடன் கேட்டுள்ள உலக நாடுகளும் அமைப்புக்களும் சிறிலங்காவுக்கு எடுத்துச் சொல்லப் புலம்பெயர் தமிழர்கள் செயலாற்ற வேண்டும்.

அதே நேரத்தில் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஈழத்தமிழர்களின் இறைமைப் பாதுகாப்பாக மட்டுமல்லாது, இலங்கைத் தீவை பிறநாடுகளோ அமைப்புக்களோ சீரழிக்க அனுமதிக்காத இலங்கைத் தீவுக்கான பொருளாதாரப் பாதுகாப்புக் கவசமாகவும் திகழ்ந்தது. இதனாலே உலக வங்கியும், அனைத்துலக நாணய நிதியமும் ஈழத்தமிழினத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கும்படி தங்களது சார்பு நாடுகளை வழிப்படுத்தின. இந்நிலையில் ஈழத் தமிழினத்தின் போராட்ட வலுவைச் சிறிலங்கா பின்தள்ளிய பின்னரே இலங்கைத் தீவுக்கு இந்த பொருளாதார அவலநிலை தோன்றியது என்பதைச் சிங்களவர்களுக்குப் புலம்பெயர் தமிழர்கள் விளக்க வேண்டிய நேரமிது.

இந்நிலையில் தூதரகங்களின் ஆட்சி மையமாக இலங்கையை மாற்றி நிதியினைக் கடனாகவும் உதவியாகவும் பெறுவதற்கான முயற்சியாக இந்த வரவுசெலவுத் திட்டத்தைச் சிறிலங்காவின் பிரதமர் ரணில் அமைத்துள்ளமை, மக்களின் இறைமை இழப்பின் வழியாகத்தான் சிறிலங்கா வாழ வேண்டும் என்கிற களஎதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் 50 ஆண்டுகால ஆட்சியின் பெருந்தோல்வி. இனியாவது ஈழத்தமிழர்களின் இறைமையுடன் கூடிய தேசஇனத் தன்மையையும் முஸ்லீம்கள், மலையக மக்களின் அரசியல் உரிமைகளையும் ஏற்று, அவர்களின் பொருளாதாரப் பங்களிப்புக்களைப் பெற்று, இலங்கையின் உடன் தேவையான பொருளாதார உறுதிப்பாட்டிலும், தொடர் தேவையான பொருளாதார மீட்டெடுப்பிலும் பலம்பெற சிங்களத் தலைமைகள் தகுந்தவாறு சிந்திக்க வேண்டும் என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது.

 

Tamil News

Leave a Reply