“ஒரு இனம் தனது அடையாளத்தை பாதுகாக்கவேண்டுமானால் முதலில்  தன் நிலத்தை பாதுகாக்கவேண்டும்“-மட்டு.நகரான்

ஒரு இனம் தனது அடையாளத்தை பாதுகாக்கவேண்டுமானால் முதலில் அந்த இனம் தான்சார்ந்த நிலத்தை பாதுகாக்கவேண்டும். ஒரு இனத்தின் இருப்பு என்பது நிலத்தின் அளவிலேயே தங்கியுள்ளது.

இந்த உலகில் தமிழர்கள் வாழாத நாடு இல்லை, ஆனால் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லையென்பது இன்று உலக தமிழர்களின் நீண்டகால ஏக்கமாகயிருந்துவருகின்றது.

தங்களது பூர்விக நிலங்களை மாற்றான் கைப்பற்றி அல்லது மாற்றானுக்கு தாரைவார்த்து வழங்கி இன்று ஒரு நாடற்ற சமூகமாக தமிழர் சமூகம் காணப்படுகின்றது. இந்த நிலையானது பலவழிகளில் பல வலிகளை ஏற்படுத்தினாலும் தமிழர்கள் தங்கள் நிலத்தை தக்கவைப்பதற்கு இன்றும் போராடியே வருகின்றனர்.

தங்களுக்கு நாடு இல்லாவிட்டாலும் இருக்கும் காணிகளையாவது பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இன்று தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் நிலங்களை பாதுகாக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இன்று தமிழ் தேசியத்தின் மீது விடப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ் தேசியத்தின் பரப்பில் உள்ளவர்கள் காணிகளை பாதுகாப்பதற்கான எந்த பொறிமுறையினையும் ஏற்படுத்தாமல் தமது அரசியல் எதிர்காலத்தினை மட்டுமே நோக்காக செயற்படுகின்றார்களே தவிர தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்கு எந்தவித செயற்பாடுகளையும் காணமுடியவில்லை.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக அத்துமீறிய வகையில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகள் என்பது பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதை நாங்கள் கடந்த காலத்தில் எழுதியுள்ளோம்.

இலங்கையில் ஆட்சிக்கு வரும் பெரும்பான்மை சிங்களத் தலைவர்கள் கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழ் பேசும் மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தமை தொடர்ச்சியான வரலாறாகயிருந்து வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள மேய்ச்சல்தரை காணிகளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அபகரிப்பதனால் அப்பிரதேச கால்நடை வளர்ப்போரின் ஜீபனோபாயத் தொழிலான பால்பண்ணைத்தொழில் பாதிப்படைந்துள்ளது.

இதேபோன்று பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியின் கெவிழியாமடு, தாந்தாமலைபோன்ற பகுதிகளிலும் இவ்வாறான அத்துமீறிய காணி அபகரிப்புகளும் அத்துமீறிய குடியேற்றங்களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

ஊர்காவல் படையினரால் காணிகள் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டு முந்திரிகை செய்கை முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் கால்நடைவளர்ப்போர் தமது கால்நடைகளை மேய்ச்சல் தரைக்கு கொண்டுசெல்லும் வீதிகைளயும் மறித்து வைத்து அட்டகாசங்களை முன்னெடுப்பதாக பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.

“40வட்டை என்னும் பகுதியிலிருந்து கெவிழியாமடு பகுதி வரையான காத்தமுத்து,அல்லிமுத்து சேனை என்கின்ற தமிழர்களின் வயல்கள் ஊடாக வீதியொன்றை அமைத்திருந்தோம்.இன்று அந்த வீதியை தமிழ் மக்கள் பயன்படுத்தமுடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

அந்தளவுக்கு எமது நிலங்களை அபகரித்து அராஜகம் செய்கின்றனர்.இவை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலோ,பிரதேச அபிவிருத்தி கூட்டத்திலோ  பேசும் போது எந்த தீர்வும் முன்னெடுக்கப்படுவதில்லை.அவ்வாறு தீர்வு எடுத்தாலும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

பட்டிப்பளை பகுதியில் தொடர்ச்சியான வகையில் காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை நிறுத்தப்பட்டு அவை பாதுகாக்கப்படவேண்டுமானால் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கட்டாயமாக தேவைப்படுகின்றது“ என தவிசாளர் இதன்போது தெரிவித்தார்.

கடந்த 2020 ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றதன் பின்னர் இரு மாவட்டங்களையும் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் மேச்சல்தரை காணியை நோக்கி அத்துமீறிய படையெடுப்பை மேற்கொள்ளத் ஆரம்பித்தனர்.

அம்பாறை மாவட்டத்தின் தெஹித்தகண்டிய பிரதேசத்தில் இருந்து வந்த பௌத்த பிக்குவான மகாவன்வெலா ஆரியவன்ச தலைமையிலான குழுவில் 106 குடும்பங்களுக்கு 5 ஏக்கர் காணி வீதம் விவசாய செய்கைக்கு தர வேண்டும் என என கூறி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு,மாதவனை பகுதியில் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டன.

இதன் காரணமாக இப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை இப்பகுதியில் மேயவிடவேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டுசெல்லுமாறும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் அச்சுறுத்திவந்தனர். அதுமாத்திரமல்ல, கிழக்கு மாகாண ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தைப்பயன்படுத்தி இரு மாவட்டங்களையும் சேர்ந்த பெரும்பான்மை மக்களை குடியேற்ற முழுமையான நடவடிக்கை முன்னெடுத்திருந்தார்.

காணிகளை விவசாயத்திற்கு வழங்கினால் பண்ணையாளர்கள் முழுமையாக பாதிக்கப்படுவதுடன், மாவட்டத்தின் பால் உற்பத்தி இல்லாமல் போவதுடன் அது அரசாங்கத்தின் சுயதொழில் திட்டங்களை வெகுவாக பாதித்து, மொத்தத் தேசிய வருமானத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே உடனடியாக மேய்ச்சல் தரை காணிகளை விவசாயத்திற்கு வழங்குவதை தடுத்து நிறுத்தவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்ததுடன் அதற்கு எதிரான போராட்டங்களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்தது.

500 இற்கும் மேற்பட்ட பண்ணையாளர்களின் சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்துவரும் நிலையில், குடிநீர், போக்குவரது, காட்டுயானை தாக்கம் மற்றும் முறையான சந்தைவாய்ப்புயில்லை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவரும் நிலையில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களும் நிலங்களை அபகரிக்கும் போது பண்ணையாளர்களின் வாழ்வாதாரத் தொழில் முற்றுமுழுதாக பாதிக்கப்படுகிறது.

இது தொடர்பில் 2021ஆம் ஆண்டு கொழும்பு உச்சநீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் மனுவொன்று தாக்கப்பட்டது.அத்துமீறிய காணி அபகரிப்பாளர்களை அகற்றி கால்நடை பண்ணையாளர்கள் தமது தொழிலை சுதந்திரமாக முன்னெடுக்க வழியேற்படுத்துமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற நிலையில் அத்துமீறிய குடியேற்ற வாசிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அதனை ஏற்றுக்கொண்டு காணிகளை விட்டுச்செல்வதாக நீதிமன்றில் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் அங்கு காணிகளை அபகரித்திருந்த நூற்றுக்கணக்கானோர் அங்கிருந்து சென்ற நிலையில் சுமார் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு நீதிமன்றத்தில் வழங்கிய உறுதிமொழிகளையும் மீறி தொடர்ந்து இருந்துவருகின்றது.
இவ்வாறான நிலையில் மீண்டும் அப்பகுதியில் அம்பாறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களிலிருந்து வருவோர் காடுகளை வெட்டி காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அப்பகுதியில் செயற்படும் கமநல அபிவிருத்தி கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் சி.நிர்மலன் தெரிவித்தார்.

இப்பகுதியில் முன்னெடுக்கும் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக பல கால்நடை பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளை விற்பனைசெய்துவிட்டு சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தமது வாழ்வாதாரத்திற்காக கால்நடைகளை வளர்க்கும்போது இங்கு தாங்கள் சிங்களவர்களுடன் சண்டைசெய்யவேண்டிய நிலையேஉள்ளதாகவும் கடந்த காலத்தில் நீதிமன்றத்தில் வெளியேறுவதாக உறுதியளித்து சென்றவர்கள் மீண்டும் இன்றுவந்து காடுகளை வெட்டி பயிர்ச்செய்கைகக்கு ஆயத்தங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கால்நடைகள் மேயும்போது கால்நடைகள் கொல்லப்படுவதற்கும் பண்ணையாளர்கள் தாக்கப்படுவதற்குமான சந்தர்ப்பங்கள் உள்ளன. தற்போது 60பேருக்கு மேல் அப்பகுதியில் அத்துமீறிய காணி அபகரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இப்பகுதியை மேய்ச்சல் தரை பகுதியென அடையாளப்படுத்தப்பட்டு வர்த்தமானிப்படுத்திதருமாறு சுமார் 20வருடமாக கூறிவருகின்றபோதிலும் யாரும் கவனம் செலுத்தவில்லை.இன்றைய சூழ்நிலையில் அதனை மேய்ச்சல் தரை காணியாக வர்த்தமானிபடுத்தும்போதே தொடர்ச்சியாக அச்சமின்றிய சூழ்நிலையில் எங்களால் தொழில்செய்யமுடியும் என தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பில் மிகவும் பழமைவாய்ந்த தொல்பொருட்கள் நிறைந்த நூறுவீதம் தமிழர்கள் வாழும் சித்தாண்டி,வோலோடும் மாலை பகுதியில் அண்மையில் பௌத்த தேரர்களும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் வந்துசென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவொரு ஆபத்தான விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளது.இங்குள்ள கல்வெட்டுகள் நாகர் மன்னண் ஆட்சிக்காலத்தினை சேர்ந்தவையென தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ள நிலையில் இவற்றின்மீது தேரர்களின் கவனம் திரும்பியுள்ளமை ஆபத்தான விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளது.