இலங்கையின் அகதி அரசியல்…

65 Views

இந்தியாவில் உள்ள ஈழ தமிழ் ஏதிலியர்களை இலங்கைக்கு திருப்பி அழைத்துக் கொள்ள சிறப்பு குழு செப்டம்பர் 5 ஆம் தேதி உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் அதிகார பூர்வ செய்தி வெளிவந்துள்ளது.

இலங்கையின் அதிபர் ரனில் விக்ரமசிங்கே அவர்களின் அலுவலகத்தால் நியமிக்கப்பட்டுள்ள அதிபரின் முதன்மை செயலாளர், குடியுரிமை, வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை சார்ந்த முதன்மை அலுவலர்களை கொண்ட கூட்டத்தில் தமிழகத்தின் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சந்திரகாசன் அவர்களின் OFERR அமைப்பின் வேண்டுகோளுக்கு ஏற்று இந்தியாவிலுள்ள ஈழத் தமிழ் ஏதிலிகளை திரும்ப பெரும் குழுவை இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையில் இலங்கை அரசு உருவாக்கி உள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை நாம் மேம்போக்காக பார்க்கும் பொழுது இலங்கை அரசு இந்தியாவில் உள்ள ஈழ தமிழ் ஏதிலிகளின் நலனிற்காக அவர்களை திரும்ப பெற்று அவர்களுக்கு மறுவாழ்வை அளிப்பதாக  பார்க்கத் தோன்றும் ஆனால் இலங்கை அரசின் இந்த செயலானது வரலாற்று ரீதியாக நாம் பார்க்கும் பொழுது தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் இலங்கையின் சிங்கள பேரினவாத அரசுகள் இந்தியாவில் உள்ள ஈழ தமிழ் அகதிகளுக்கான சரியானதொரு தீர்வை இன்றளவும் வழங்காமல் சர்வதேச சமூகத்தின் முன்பு ஈழத் தமிழ் எதிலியருக்கு தாங்கள் ஆதரவாக இருக்கின்றோம் என்கின்ற ஒரு பொய் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான ஒரு முக்கிய செயலாகவே இவ்விடத்தில் நம் காண வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த விடயத்தை

1.நாம் இந்தியாவில் உள்ள ஈழத் தமிழர்களின் நிலைபாடு

  1. இந்திய அரசின் சட்டங்கள்

3.சர்வதேச அகதிகள் நலசட்டங்கள்

4.தமிழக அரசின் செயல்பாடுகள்

  1. OFERR அமைப்பின் உள்நோக்க செயல்பாடுகள்

6.சமகால இலங்கையின் அரசியல் பொருளாதார சூழ்நிலை

7.தமிழ் ஏதிலி மக்களை திரும்பப் பெற்றதில் இலங்கை அரசின் கடந்த கால                  செயல்பாடுகள்

8.சமூக பொருளாதார பிரச்சனைகள்.

என பல்வேறு கோணங்களில் இலங்கை அரசின் இந்த புதிய நடவடிக்கையை நாம் பிரித்து பார்க்க வேண்டியுள்ளது.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழ்நாடு அரசின் மறுவாழ்வு துறையால் நடத்தப்படும் 110 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ஐம்பத்தி ஒன்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் நான்கு கட்டங்களாக இந்தியாவிற்கு வந்தவர்கள் என மறுவாழ்வுத்துறை கூறுகிறது. இந்திய ஒன்றிய அரசின் உள்துறையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளாக ஈழ தமிழ் ஏதிலி மக்கள் உள்ளனர். இவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவதற்காக இந்திய ஒன்றிய அரசு மானிய தொகையை தமிழ்நாடு மாநில அரசுக்கு வழங்குகிறது மேலும் தமிழ்நாடு அரசானது பல்வேறு திட்டங்களை ஈழத் தமிழ் மக்களுக்கு வழங்கி வருகிறது.

மேலும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் முகாம்களில் இல்லாமல் வெளி பதிவில் வாழ்ந்து வருகின்றனர்.  குடியுரிமை இல்லாத காரணத்தினால் சரியானதொரு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில் ஈழத்தமிழ் மக்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இந்தியாவில் இருந்து வருகிறது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.

இவ்விடத்தில் தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகளை நாம் பார்க்கும் பொழுது தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் ஏதிலியர் மக்களின் மறுவாழ்வுக்காக தொகுப்பு வீடுகள் கட்டுதல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பணியை தமிழ்நாடு அரசின் மறுவாழ்வு துறை தற்போது முன்னெடுத்து உள்ளது. இது அந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இருப்பினும் அவர்களுக்கான அரசியல், கல்வி, பொருளாதாரம் போன்ற உரிமைகள் இன்றளவும் முழு அளவில் கிடைக்காமல் மக்கள் வாழ்வதும் நிதர்சனமான உண்மையே.

இந்தியாவில் உள்ள ஈழத்தமிழ் ஏதிலியர் மக்களுக்கு குடியுரிமை மற்றும் பிற உரிமைகளை வழங்க முடியாததற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது என்னவென்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியாவில் ஏதிலியர்கள் அங்கீகரிக்கப்படவில்லை அவர்கள் அனைவரும் வெளிநாட்டினர் ஆகவே கருதப்படுகின்றனர் அதனால் சட்டத்தின்படி ஏதிலியர் மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க முடியாத நிலை தொடர்ந்து கொண்டே வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஏதிலியர் மக்களுக்கு குடியுரிமைகள் வழங்கப்பட்ட நிகழ்வும் நடந்துள்ளது. தற்பொழுது இந்தியாவில் கொண்டுவரப்பட்ட 2019 குடியுரிமை திருத்தச் சட்டத்தில் கூட பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர், நேபாளம்,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருகின்ற இஸ்லாமியர் அல்லாத பிற மதம் சார்ந்த ஏதிலியர் மக்களுக்கு குடியுரிமை அந்தச் சட்டம் வழிவகுக்கிறது. ஆனால் அந்த சட்டத்தில் இலங்கை இல்லாத காரணத்தினால் இலங்கை தமிழ் ஏதிலியர் மக்களுக்கு குடியுரிமை இன்றளவும் கிடைக்கவில்லை இதனை சரி செய்ய தமிழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கட்சி பேதமின்றி கோரிக்கைகளை வைத்து வருவதும் இலங்கை தமிழ் ஏதிலியர்களுக்கு வருங்காலத்தில் குடியுரிமை சார்ந்த ஒரு நம்பிக்கை ஊட்டும் செயலாக இருக்கிறது.

மேலும் சர்வதேச அகதிகள் நல சட்டங்களை கையாளும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர் ஆணையரகத்தில் (UNHCR) இந்தியா உறுப்பினராக இல்லாத காரணத்தினால் சர்வதேச அகதிகள் நலச் சட்டத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்தவில்லை மேலும் மனிதாபிமானத்தின் அடிப்படையிலேயே இந்தியாவில் அகதிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதாக இந்திய அரசு தொடர்ச்சியாக கூறி வருகிறது. இந்தியாவில் இலங்கை தமிழர் மட்டுமின்றி பர்மா, திபெத், பாகிஸ்தான்,  ஆப்கானிஸ்தான், நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளிலிருந்தும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் எனவே இந்தியாவிற்கு என தனியானதொரு அகதிகள் நலச்சட்டம் உருவாக்கப்படும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த அகதி மக்களுக்கும் அது ஒரு தீர்வை உருவாக்கும்.

இவ்வாறான சூழ்நிலையில் தற்பொழுது இலங்கை அதிபர் உருவாக்கியுள்ள குழு இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர் ஏதிலியர்களை திருப்பி அழைக்கும் பணிகளை தொடங்கும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மற்றும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து பணிகளிலும் நிச்சயமாக தொய்வு  ஏற்படும்.

மேலும் இந்த குழுவின் நோக்கங்களை கூர்ந்து கவனிக்கும் பொழுது கடந்த காலங்களில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர் ஆணையரக ஊடாக விருப்பத்தின் பெயரில் இலங்கைக்கு திரும்பிச் சென்ற மக்களின் எண்ணிக்கை என்பது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையரக தகவல்படி 2002 முதல் 2019 வரை 17 ஆயிரத்து 492 பேர் ஆகும்.இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுய விருப்பத்தின் பெயரில்  திரும்பிச் செல்லும் ஏதிலியர் மக்களுக்கு சரியான மறுவாழ்வு பணிகளை செய்து கொடுப்பதற்காக மட்டுமே இந்தியாவில் சென்னை நகரில் UNHCR அமைப்புக்கு அலுவலகம் அமைக்க இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசுடன் இணைந்து விருப்பத்தின் பெயரில் நாடு திரும்பும் மக்களுக்கு UNHCR உதவி செய்து வருகிறது.ஆனால் இலங்கையை அடைந்த இந்த மக்களுக்கு சரியானதொரு மறு வாழ்வு என்பது அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை சரியாக கவனிக்க தவறி உள்ளதாகவே நாம் இவ்விடத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் உதாரணமாக நாடு திரும்பிய மக்களுக்கு அவர்களுக்கான இருப்பிட வசதி அவர்களின் காணி உரிமைகள் மற்றும் சமூக பொருளாதார உரிமைகள் போன்றவை இன்றளவிலும் சரியாக இலங்கை அரசால் செய்து கொடுக்கப்படாமல் உள்ளது மேலும் இந்தியாவில் படித்து இலங்கைக்கு திரும்பிய நபர்களது வேலைவாய்ப்பும் இன்றளவும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது ஏற்கனவே திரும்பிய நபர்களுக்கு இலங்கை அரசு எந்த ஒரு மறுவாழ்வு பணியையும் சரிவர செய்து கொடுக்காத நிலையில் புதிதாக இந்தியாவிலிருந்து ஈழத்தமிழர்களை தனது நாட்டிற்கு திரும்ப அழைக்கும் இந்த செயலானது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது குறிப்பாக சர்வதேச அளவில் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலை என்பது உறுதியற்ற நிலையாக உள்ளது.

இலங்கை அரசானது தனது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு உலக அமைப்புகளிடமிருந்து கடன்களை எதிர்பார்க்கும் இந்த நிலையில் இந்தியாவிலிருந்து திருப்பி அழைக்கப்படும் ஏதிலியர் மக்களுக்கு சரியானதொரு மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி அதற்கு பொருளாதாரம் மட்டுமின்றி அரசியல் காரணங்களும் மிக வலுவாக உள்ளது முன்னாள் போராளிகள் என தமிழகத்திலுள்ள ஏதிலியர் மக்களை சந்தேகித்து திரும்ப வரும் மக்களை சிறை படுத்தவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சிங்கள அரசு தயங்காது என்பதையும் இந்த இடத்தில் நாம் பார்க்கவேண்டும்.

வரலாற்று ரீதியாகவே இந்த மாதிரியான பல்வேறு நிகழ்வுகள் நடந்து உள்ளதையும் நாம் இந்த இடத்தில் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் தனது செயல் திட்டங்களாக இலங்கை அரசு தெளிவானதொரு முடிவை அறிவிக்க வரையிலும் மக்கள் திரும்பி செல்வதை விரும்ப மாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் கூறும் பொழுது 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழ் ஏதிலியர் மக்கள் தமிழகத்திலேயே வாழ விரும்புகின்றனர்.

தங்களின் தேவை என்பது குடியுரிமை ஆகவே இருக்கிறது என்பதை அவர்கள் தீர்க்கமாக கூறுகின்றனர். அப்படிப் பார்க்கும் பொழுது வெகு சில மக்களே இலங்கைக்கு திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் இலங்கை அரசிற்கு நட்பாக செயல்படுகின்ற அமைப்பு என ஏதிலியர் மக்களால் சமீப காலங்களாக விமர்சிக்க படுகின்ற

திரு. சந்திரகாசன் அவர்களின் தலைமையில் இயங்கும் OFERR (ஈழத் தமிழர் மறுவாழ்வு அமைப்பானது) 2011ஆம் ஆண்டு முதலே ஒரு செய்தியை மிக தீர்க்கமாக தமிழகத்தில் உள்ள செய்தி ஊடகங்களுக்கும் மக்களுக்கும் பரப்பி வருகிறது என்னவென்றால் தமிழகத்திலுள்ள ஏதிலியர் மக்கள் நூற்றுக்கு நூற்று பத்து சதவீதம் பேர் இலங்கைக்கு திரும்பி செல்ல விரும்புகின்றனர் என்ற ஒரு செய்தியை ஆனால் ஆய்வு முடிவுகளை பார்க்கும் பொழுது தமிழகத்திலுள்ள ஏதிலியர் மக்கள் இந்தியக் குடியுரிமையை பெரும்பான்மையானவர்கள் விரும்புகின்றனர் ஆனால் உண்மையை மறைத்து பொய்யாக 110% பேர் இலங்கை திரும்ப விருப்பம் படுகின்றனர் என்ற செய்தியைத் திரும்பத் திரும்ப 2011 முதல் இன்று வரை OFERR அமைப்பு கூறுவதின் நோக்கம் என்ன என்பதை நாம் இவ்விடத்தில் காணவேண்டும்.

அமைப்பை நடத்தும் முக்கியமான தலைவர்கள் இந்தியாவில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தை சார்ந்த நபர்களுக்கும் சொகுசான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டு ஏதிலியர் மக்களை எந்த ஒரு உத்தரவாதம் இல்லாமல் திருப்பி அனுப்பும் பிரச்சாரத்தை வேகமாக முன்னெடுப்பதில் உள்நோக்கங்களை நாம் ஆராய வேண்டிய தேவையும் இவ்விடத்தில் வெகுவாக எழுகிறது.

இவை ஒருபுறமிருக்க வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சார்ந்த பூர்வீக தமிழ் ஏதிலியர் திரும்பிச் சென்றால் அவர்களது உறவினர்கள் மற்றும் சில நிலங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது அவர்கள் அதனால் திரும்பவும் வாய்ப்புகள் இருக்கின்றது ஆனால் தெற்கு பகுதியை சார்ந்த மலையகத் தமிழ் ஏதிலியர் நாடு திரும்பும் பட்சத்தில் அவர்களுக்கான நில உரிமை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சார்ந்த பூர்வீக தமிழர்களின் நிலங்களை இலங்கை இராணுவம் வலுக்கட்டாயமாக அபகரித்து வைத்துள்ள நிலையில் நிலமற்ற பண்ணை தொழிலாளர்களாக இருந்த மலையகத் தமிழ் ஏதிலியர்களின் எதிர்கால வாழ்க்கை என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கும்.

மேலும் சமூக ரீதியாக பார்க்கும்பொழுது தமிழகத்திலுள்ள இலங்கை தமிழ் இளைஞர்கள் சாதிகளை கடந்து மத மற்றும் பூர்விக தமிழர் அல்லது மலையக தமிழர் என்ற வேறுபாடுகள் இன்றி தங்களுக்குள் திருமண உறவுகளை ஏற்படுத்தி ஒன்றாக வாழ்ந்து வரும் சூழலில் இவர்களை வெவ்வேறு பகுதிகளில் குடியமர்த்தும் பொழுது சமூக ரீதியான சில சிக்கல்களும் இவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது இதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சர்வதேச அளவில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு இடையில் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டுள்ள இலங்கை அதிபரின் இந்தக்குழு சர்வதேச அளவில் இலங்கைக்கு தேவையான பொருளாதாரத்தை ஓரளவுக்கு ஈடுகட்ட இந்த அகதி மக்களை காரணம் காட்டி சர்வதேச நிதி சார்ந்த அமைப்புகளில் இருந்தும் வங்கிகளில் இருந்தும் நிதி ஆதாரங்களை பெற ஒருவழியாக கூட இதனை இலங்கை அரசு செய்ய வாய்ப்புள்ளது.

இலங்கை அரசானது ஏற்கனவே இலங்கை திரும்பிய ஏதிலி மக்களுக்கு சரியானதொரு வாழ்க்கையை அமைத்து கொடுக்காத பட்சத்தில் புதிதாக இந்தியாவிலிருந்து இலங்கை தமிழர்களை பெறுவது மிகப்பெரிய கடினம் மேலும் மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை வர வாய்ப்பு என்பதில்லை.

மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே நாடு திரும்ப வேண்டுமே தவிர இந்த மாதிரியான புதிய குழுக்களை உருவாக்கி போலி பிரச்சாரங்கள் ஊடாக மக்களை நாட்டிற்கு திருப்பி கொண்டு செல்வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது சர்வதேச அகதிகள் நலனுக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையாகவே மக்களின் நலனில் அக்கறை கொண்டு இலங்கை அரசு இதனை செய்திருந்தால் அதனை வரவேற்கலாம் ஆனால் தனது சுய லாபத்திற்காக மக்களை பயன்படுத்த நினைத்தால் அவர்களின் கணக்குகள் பொய்க்கும் என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டே இருக்கும்.

சுனில்குமார்.வெ(முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்)

அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை 

சென்னைப் பல்கலைக்கழகம்.

Leave a Reply