இலங்கையின் இனவாதப்போக்கு-பௌத்த மதகுரு தொலஸ்பாகே உபாலி தேரருடன் ஒரு கலந்துரையாடல்…

WhatsApp Image 2022 09 15 at 10.01.10 AM 1 இலங்கையின் இனவாதப்போக்கு-பௌத்த மதகுரு தொலஸ்பாகே உபாலி தேரருடன் ஒரு கலந்துரையாடல்...

உரிமைக்காக போராடியவர்களை தண்டிப்பது  அநாகரிகமாகும் என பௌத்த மதகுரு தொலஸ்பாகே உபாலி தேரர் தெரிவித்துள்ளார். இலக்கு ஊடகத்திற்கு அவர் வழங்கிய சிறப்பு செவ்வி…

 கேள்வி :-

இலங்கையின் இனவாதப்போக்கு தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில் :-

இலங்கை பல்லின மக்களும் வாழும் ஒரு நாடாகும்..இதனடிப்படையில் பன்மைக் கலாசாரம் என்பது இலங்கையில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றது.வேற்றுமையில் ஒற்றுமை காண்பது மிகவும் முக்கியமாகும்.எனினும் இந்த விடயம் இங்கு சாத்தியப்படாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.இனவாதம் என்பது சாபக்கேடாகியுள்ள நிலையில் இதன் தீய விளைவுகள் அதிகமாகவே எதிரொலிப்பதனையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.கடந்த காலத்தில் இனவாதத்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடியபோதும் இன்னும் இனவாதிகள் திருந்துவதாக இல்லை என்பது வெட்கப்படக்கூடிய ஒரு விடயமாகும்.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள் அதிகளவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. 1928 காலப்பகுதியில் டொனமூர் குழுவினரால் வாக்குரிமை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது இந்திய வம்சாவளி மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என்பதில் இனவாதிகள் குறியாக இருந்தனர்.

இனவாத அரசியல்வாதிகள் இதன்போது கண்டனக் குரல்களையும் பாராளுமன்றத்தில் எழுப்பி இருந்தனர்.பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இம்மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டபோதும் 1948 இல் திட்டமிட்ட அடிப்படையில் இம்மக்களின வாக்குரிமை மற்றும் பிரசாவுரிமை என்பன பறித்தெடுக்கப்பட்டு இவர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர்.இதனால் இவர்கள் பல்வேறு துன்பதுயரங்களையும் அனுபவித்த நிலையில் மீண்டும் 1988 இலேயே பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பவற்றை பெற்றுக் கொள்ள கூடியதாக இருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற வடபகுதி யுத்தம் நாட்டின் ஆணிவேரையே அசைந்திருந்தது. சர்வதேசத்துக்கு மத்தியில் நாட்டின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருந்ததும் தெரிந்ததாகும். அரசியல், பொருளாதார, சமூக ரீதியான பல்வேறு புறக்கணிக்கப்புக்கள் இளைஞர்கள் ஆயுதமேந்துவதற்கு உந்துசக்தியாகி இருந்ததாக புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளமையும் இங்கு நோக்கத்தக்கதாகும்.

சிறுபான்மையினரின் கருத்துக்கள் காலம்காலமாக உரியவாறு உள்ளீர்க்கப்படவில்லை என்று ஒரு விமர்சனமும் இருந்து வருகின்றது.யுத்தத்தால் ஏற்பட்ட தழும்புகள் நாட்டின் தேகத்தில் இருந்தும் இன்னும் மறையவில்லை. தொடர்ந்தும் இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறுமானால் நாட்டில் அது பல்வேறு அதிர்வலைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பாகிவிடும் என்பதனை மறுப்பதற்கில்லை. ஊழல்வாத ஆட்சியாளர்களால் நாடு இன்று சின்னாப்பின்னமாகி இருக்கின்றது.

நாட்டின் வளங்கள் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக எதிர்ப்பலைகள் மேலோங்கி வருகின்றன.இதனால் இலங்கையின் இறைமை கேள்விக்குறியாகியுள்ளதோடு இலங்கையர்களின் மரபு ரீதியான உரிமைகளும் பறிபோவது ஒரு துர்ப்பாக்கியமான நிலையேயாகும். இந்நிலைமை தடுத்து நிறுத்தப்படுவது மிகவும் அவசியமாகும்.எமது நாடோ அல்லது மக்களோ அந்நிய நாட்டினரிடம் கைகட்டி, வாய்பொத்தி நிற்பதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

இந்த நாட்டு மக்களை கூறு போட்டு குளிர்காய்ந்தவர்களாக அரசியல்வாதிகளே விளங்குகின்றனர்.இவர்களே இனவாதத்திற்கு வித்திட்டு மக்களை பிரித்தாண்டனர். தமது அரசியல் இருப்பை உறுதிசெய்து கொள்வதற்காக இவர்கள் மேற்கொண்ட கைங்கரியம் இதுவாகும்.

இனவாத அரசியல்வாதிகளின் இத்தகைய பிற்போக்கு நடவடிக்கைகளால் நாடு யுத்ததேசமாகி இருக்கின்றது.மக்கள் கண்ணீர் சிந்திக்க கொண்டிருக்கின்றனர். சிறுபான்மைச் சமூகத்தினருக்குரிய உரிமைகளை வழங்குவதில் யாரும் பின்னடித்தல் கூடாது.

இந்நிலையில் அவர்களுக்கான உரிமைகளை அள்ளிக் கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது கொடுப்பதற்கு இனவாதிகள் தடையாக இருந்து வருவது கண்டிக்கத்தக்கதாகும். திறமைக்கு இடம் கொடுக்கும் கலாசாரம் பல்வேறு சாதக விளைவுகளுக்கும் உந்துசக்தியாக அமையும். என்றபோதும் இலங்கையில் இது எந்தளவுக்கு சாத்தியமாகியுள்ளது என்று சிந்திக்க வேண்டியுள்ளது. இனம், மதம், மொழிக்கு அப்பால் சாதிப் பிரச்சினைகளும் இங்கு தலைதூக்கி வருகின்றன.

முக்கிய பதவிகளுக்கு உரியவர்களை தெரிவு செய்கையில் சாதி ஆதிக்கம் செலுத்துவதை அறியமுடிகின்றது.இந்த இழிநிலை வேரறுக்கப்பட வேண்டும்.எல்லா மதத்தையும் நேசிக்குமாறும் எல்லா மதகுருமார்களுக்கும் மரியாதை செலுத்துமாறும் புத்தர் போதனை செய்தார்.ஆனால் நடைமுறையில் இது எந்தளவுக்கு சாத்தியமாகியுள்ளது? என்பதில் ஐயமுள்ளது.திறமைக்கு இடமளிப்பதை விடுத்து இனவாதத்துக்கு முக்கியத்துவமளித்தால் நல்லது கிடைக்காது.நாடு சீரழியும்.

ஒரு இனம் இன்னொரு இனத்தை அடக்கியாள முடியாது.அவ்வாறு அடங்கி, அடிமைப்பட்டு கிடக்க வேண்டிய அவசியமும் கிடையாது.இதனை எல்லா இனத்தவர்களும் விளங்கிச் செயற்பட வேண்டும்.

கேள்வி :-

நாட்டில் எரியும் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று கருதுகின்றீர்களா?

பதில் :-

ஆம்.இதில் எவ்விதமான சந்தேகமும் கிடையாது.வடபகுதி மக்களுக்கு அதிகளவில் பிரச்சினைகள் காணப்படுவதாக நாம் அறிகின்றோம்.இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாக இருந்து வருகின்றனர்.எனவே இவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அத்தோடு மலையக மக்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் ஏதேனும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இந்த பிரச்சினைகள் குறித்தும் நுணுகி ஆராயப்பட்டு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படுவது அவசியமாகும்.ஒவ்வொரு இன் மக்களும் தனித்துவமானவர்களாக விளங்குகின்றனர்.இவர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள்,அடையாளம் அனைத்தும் தனித்துவமானவை என்பதோடு பேணிப்பாதுகாக்க வேண்டியவையுமாகும்.

இதனை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.மனிதர்கள் என்ற ரீதியில்சகலரும் சகல உரிமைகளையும் அனுபவிக்க உரித்துடையவர்கள்.இந்தநிலையில் சகலரினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.மொழி, சமயம், இனம் என்பவற்றை மையப்படுத்தி யாரையும் குறைத்து மதிப்பிடவோ அல்லது புறந்தள்ளவோ முற்படுதல் கூடாது.

“நான் ” என்று சொல்லும்போது உதடு ஒட்டுவதில்லை.உறவு கொள்வதில்லை. “நாம் ” என்று சொல்லும்போதே உதடு  ஒட்டுகின்றது. உறவு கொள்கின்றது. எனவே அனைவரும் நாம் என்ற பரந்த நோக்குடன் செயற்படுதல் வேண்டும்.இதேவேளை இலங்கையில் சகல இன மக்களிடையேயும் நல்லெண்ணத்தை கட்டியெழுப்பும் முயற்சிகள் அவ்வப்போது முன்னெடுக்கப்படுகின்றபோதும் இதன் பூரண வெற்றி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

நாட்டு மக்களிடையே சந்தேகங்களும், முரண்பாடுகளும் இன்னும் ஓய்ந்ததாக இல்லை. எனவே நல்லிணக்க செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டு, இதய சுத்தியுடன் மேற்கொள்ளப்படுவது மிகவும் அவசியமாகின்றது.அரசியல் பிழைப்பு நடாத்துவதற்காக உதட்டளவில் நல்லெண்ண முன்னெடுப்புக்கள் இடம்பெறாது உள்ளத்தளவில் அது மேற்கொள்ளப்படுதல் அவசியம்.இதேவேளை இனரீதியான வேறுபாடுகள் களையப்பட்டு ” இலங்கையர் ” என்ற பொது வரையறைக்குள் சகல இனத்தவர்களும் உள்ளீர்க்கப்படவும் வேண்டும்.இதன் மூலம் சர்வதேசத்திற்கு மத்தியில் நாடு தலைகுனியாது தலை நிமிரும் நிலைமை உருவாவதோடு நாட்டின் அபிவிருத்தியும்  துரிதப்படுத்தப்படும்.

கேள்வி :-

” அரகலய ” போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் :-

இலங்கையின் வரலாற்றில் மட்டுமன்றி உலக வரலாற்றிலும் தடம் பதித்த ஒரு போராட்டமாக இது அமைந்துள்ளது.அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம், வருமானப் பற்றாக்குறை, பசி, பட்டினி, பொருட் கொள்வனவிற்காகவரிசைகளில் நிற்க வேண்டிய அவலம் என்பவற்றால் இளைஞர் உள்ளிட்டநாட்டு மக்களின் போராட்டம் மேலெழந்தது. ஆனால் இன்று  போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.இளைஞர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி அதனை மழுங்கடிக்கும் நோக்கில் அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.உரிமைகளை கேட்போர் தண்டிக்கப்படுகின்றனர்.திறைசேரியின் பணத்தை கொள்ளையடித்தவர்களும், நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கிய அரசியல்வாதிகளும் சுதந்திரமாகத் திரியும் நிலையில் வயிற்றுக்காகவும், தூய்மையான அரசியலை ஏற்படுத்தவும் போராடிய இளைஞர்கள் தண்டிக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாது.ஏழைகளுக்கு ஒரு நீதி.செல்வாக்குமிக்கவர்களுக்கு இன்னொரு நீதி என்றிருத்தல் கூடாது.பிரச்சினைகள் தோற்றம் பெறுவதற்கு இதுவே அடித்தளமாகும் என்பதை மறக்கக்கூடாது என்றார்.