ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு உலக ஒலிபரப்பாளர்கள் சங்கம் கண்டனம்

ஊடகவியலாளர்கள்  தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் வழங்குகின்ற பதிலை தொடர்ச்சியாக உன்னிப்பாக அவதானித்து வருவதாக உலக ஒலிபரப்பாளர்கள் சங்கம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

சர்வதேச ஒலிபரப்பாளர்களை ஒருங்கிணைக்கும் நிறுவனமாக 1922 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட உலக ஒலிபரப்பாளர்கள் சங்கம் தமது உறுப்பினர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு சர்வதேச ரீதியில் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தலையீடு செய்யும் ஒரு அமைப்பாகும்.

கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் ஊடகவியலாளர்கள் மீது நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதென உலக ஒலிபரப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஊடகங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி, அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் முன்னெடுக்கப்பட்ட செய்தி அறிக்கையிடல் மற்றும் அப்போதைய பிரதமரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் பணியாற்றும் MTV channel தனியார் நிறுவனத்தின் உயர்மட்ட முகாமைத்துவத்தின் சில உறுப்பினர்கள் வாக்குமூலம் பெறுவதற்காக ஏதேச்சையான முறையில் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பக்கசார்பற்ற பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ள அந்த அமைப்பு, குறித்த ஊடகவியலாளர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் பொலிஸார் அல்லது பாதுகாப்பு தரப்பினரால் ஏதேனுமொரு வகையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவோ, அச்சுறுத்தப்படவோ அல்லது தாக்குதலுக்கு இலக்காகவோ மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

ஆசிய பசுபிக் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினரான  MTV channel தனியார் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக கெப்பிட்டல் மகாராஜா குழுமம் சார்பில் நேரடியாகவே முன்னிற்பதாகவும் உலக ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய பசுபிக் ஒலிபரப்பாளர்கள் சங்கம் அரபு இராச்சிய ஒலிபரப்பாளர்கள் சங்கம், ஆபிரிக்க ஒலிபரப்பாளர்கள் சங்கம், கரீபியன் ஒலிபரப்பாளர்கள் சங்கம், ஐரோப்பிய ஒலிபரப்பாளர்கள் சங்கம், ஒலிபரப்பாளர்களின் சர்வதேச சங்கம் மற்றும் வட அமெரிக்க ஒலிபரப்பாளர்கள் சங்கம் என்பன சர்வதேச ஒலிபரப்பாளர்கள் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்றன.

வட  அமெரிக்க ஒலிபரப்பாளர்கள் சங்கம் தற்போது அந்த அமைப்பின் செயலாளர் பதவியை வகிக்கின்றது.